நிர்மலா ராகவன்

பிறருடைய கருத்து

எல்லாரும் இருப்பதுபோல் நாமும் இருந்தால்தான் சரியானது, நம்மை ஏற்பார்கள் என்று எண்ணி நடப்பவர்கள் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. மனக் கிலேசமும் எழக்கூடும்.

கருத்து வேறுபாடு

குடும்பம்

திருமணமானதும், முதல்முறையாக மாமியார் வீட்டில் கூட்டுக்குடித்தனம் செய்ய ஆயத்தமானாள் மலர்விழி.

அவளுடைய தாய் வாய் ஓயாது உபதேசம் பண்ணி அனுப்பினாள். “எல்லாரிடமும் மரியாதையாகப் பழகு. பெரியவர்கள் சொல்வதைக்கேட்டு நட. உனக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, நீதான் விட்டுக்கொடுக்க வேண்டும்”.

இந்த ரீதியில் தொடர்ந்து பல நாட்கள், `அறிவுரை’ என்று தனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டதை கூறினாள் அந்த தாய். எல்லாம், `மகளை இப்படி வளர்த்திருக்கிறீர்களே!’ என்று ஏசிவிடுவார்களோ என்ற பயம்தான்!

மலர்விழி பெரிய படிப்பு படித்தவள். சுயமாகச் சிந்திக்கும் திறனைக் கொண்டவள். முதலில் தாய் சொன்னதைக் கடைப்பிடித்தவள், `நான் ஏன் மகிழ்ச்சியாகவே இல்லை?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

வெவ்வேறு குடும்பங்கள் ஆனதால், அவர்களது கலாசாரம் ஒத்துப்போகவில்லை. அதனால், மலர்விழி செய்வது, சொல்வது எல்லாம் பிறருக்குக் கேலியாக இருந்தது. `தன்மேல்தான் தவறோ?’ என்று இவள் ஓயாது விட்டுக்கொடுத்ததில், பிறரது அதிகாரம் கூடிப்போயிற்று.

சில வருடங்கள் கஷ்டப்பட்டபின் அவளுக்குப் புரிந்தது. எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி பெறவேண்டும், பிறர் கேலி செய்தாலும் அதைப் பொருட்படுத்தாது முனையவேண்டும் என்றெல்லாம் நடந்துகொண்டிருந்த தான் பிறரது வார்த்தைகளை அப்படியே ஏற்று நடந்தது தவறு என்று புரிந்துகொண்டாள்.

ஒரே வழி தனிக்குடித்தனம் போவதுதான் என்று முடிவெடுத்தாள். இழந்த உற்சாகமும் நிம்மதியும் மீண்டன.

எந்த உறவிலும், ஒருவரை அவர் இருக்கிறபடியே ஏற்றால் இரு தரப்பிலும் மரியாதை இருக்கும். அதைவிட்டு, `நீ சொல்வதெல்லாம் தவறு. என் சொற்படிதான் நடக்கவேண்டும்,’ என்ற வாதம் கசப்பில்தான் முடியும். குடும்பம் இரண்டாகும்.

திரைப்படங்கள்

பொதுப்பான்மையான கருத்துகளை வைத்துப் திரைப்படம் எடுத்தால்தான் பலரும் பார்ப்பார்கள், நிறைய லாபம் கிடைக்கும் என்று நினைத்துச் செயல்படுகிறவர்கள் வெகு சிலரே. ஆனால், இவர்கள்தாம் வெற்றி பெறுகிறார்கள். நிஜவாழ்க்கையில் எப்போதாவது நடக்கும் சம்பவங்களைக் கதையாகப் பின்னுகிறார்கள் இவர்கள்.

`இப்படியெல்லாமா நடக்கிறது!’ என்ற அதிர்ச்சியும் ஆச்சரியமும் எழ, அரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

விமர்சகர்கள்

திரைப்படங்களைப் பார்ப்பதற்குமுன் விமர்சகர்கள் அவற்றைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்பது பலருடைய வழக்கம், என்னுடையதும்தான்.

அது எவ்வளவு தவறு என்று பிறகுதான் புரிந்தது. ஏனெனில், கருத்து என்பது உணர்ச்சிபூர்வமாக ஏற்படுவது. அப்போது அறிவு குறிக்கிடுவதில்லை.

பிற மதத்தைச் சார்ந்த ஒருவரை இளம்பெண் ஒருத்தி காதலிக்கிறாள் என்று கதை அமைந்திருந்தால், கதை விறுவிறுப்பாக, உணர்ச்சிபூர்வமாக, நம்பத்தக்கதாக இருக்கிறதா என்றெல்லாம் கவனிக்க ஒரு விமர்சகர் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. அக்கருத்தை ஒத்துக்கொள்ளாது, அந்த திரைப்படத்தை எடுக்கத் துணிந்தவர்களைக் கண்டனம் செய்வார்.

குடும்பத்தில்

வேறு ஏதாவதொரு குடும்பத்தில் மதம், இனம் இவைகளில் வித்தியாசம் இருந்து, பெற்றோரைமீறி கல்யாணம் செய்துகொண்டவர்கள் கஷ்டப்பட்டிருப்பார்கள். அதைக் கண்டு பயந்து, தம் குழந்தைகளும் அவ்வாறு துன்பப்படக்கூடாது என்ற ஆதங்கத்துடன் பெற்றோர் மறுப்பார்கள்.

`பிறர் என்ன சொல்வார்கள்!’ என்ற அச்சத்தினாலும் மறுப்பு எழக்கூடும். இரு தரப்பிலும் இருக்கக்கூடிய உண்மையான அன்பும், நேர்மையும் அவர்கள் கண்களுக்குப் புலப்படுவதில்லை.

அவர்களுக்குத் தோன்றியதை ஆத்திரப்படாமல் எடுத்துச் சொன்னால், விவகாரம் சுமுகமாக முடிய வழி இருக்கிறது.

முரட்டுத்தனமும் வீரமும் ஒன்றுதான் என்று நினைப்பவர்களே சண்டையில் ஈடுபடுவார்கள்.

எழுபது, எண்பது வருடங்களுக்குமுன் பன்னிரண்டு வயதுக்குள் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து முடித்து, புக்ககத்திற்கு அனுப்பினார்கள். அப்போது அவளால் வளைந்துகொடுக்க முடிந்தது. அவளுக்குத் தனித்திறமைகள் இருந்தாலும் அவை வெளிப்படவில்லை. ஏனெனில், அவளுக்கே தன்னால் என்ன முடியும் என்ற தெரிந்திருக்காது. பிறர் சொற்படி கேட்டு நடந்து, நல்ல பெயர் வாங்கினாள்.

அப்படி ஒரு பெண்ணின் கதையைப் பார்ப்போமா?

கதை

மீனாட்சி நல்ல புத்திசாலி. எட்டு வயதிலேயே கல்யாணமாகி, கணவர் வீட்டுக்கு வந்தவள். பதின்மூன்று வயதிலிருந்து வருடத்திற்கு ஒரு பிள்ளை.

`பெண்’ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஏற்று நடந்தாலும், அவள் மனதில் ஏதோ வெறுமை. அவள் வளர்த்த குழந்தைகள் நன்கு படித்து, பெரிய உத்தியோகங்களில் அமர்ந்தபோது, தான் மட்டும் இப்படி வீடு, குடும்பம் என்று அடங்கிப்போய்விட்டோமே என்ற எண்ணமெழ, அது ஆத்திரமாக மருவியது.

`ஏன் கல்யாணம் செய்துகொண்டோம்?’ என்ற எரிச்சல் எழ, சாதுவான கணவரைப் பார்த்துக் கத்தினாள். கறிகாய் விற்பவன், பேரன் பேத்திகள் எல்லாருக்கும் காரணமில்லாமல் `அர்ச்சனை’ விழும்.

`பெண்களுக்கு என்ன இருக்கிறது, பாவம்!’ என்று புரிந்து, கணவரும் அடங்கிப்போனாராம்.

இது அந்தக் காலம். இன்றும் இப்படி நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் சண்டை, சச்சரவு என்ற நீண்டுகொண்டே போகாதா!

கதை

வித்யாவின் கணவனுக்கு அவளுடைய உறவினர்கள் தங்கள் வீட்டுக்கு வந்தாலே பிடிக்காது. ஆனால், தன் பெயர் கெடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பான். விருந்தினர்களிடம் அன்புடன் பழகுவதுபோல் நடிப்பான்.

ஓரிரு நாட்கள் கழிந்ததும், `அவர்களைத் திரும்பிப் போகச்சொல்,’ என்று தனிமையில் மனைவியிடம் கத்துவான்.

வித்யாவுக்குத்தான் தர்மசங்கடமாகிவிடும். என்றாவது, அவர்களையே, `வெளியே போங்கள்!’ என்று ஏடாகூடமாகச் சொல்லிவிட்டால் என்ன செய்வது!

அவளுக்கு ஒரு வழிதான் புலப்பட்டது. கணவனை அடக்க முயற்சித்து, தன் அதிகாரத்தைக் கூட்டிக்கொண்டாள்.

அதைப் பார்த்து அதிர்ந்த விருந்தினர் பெண்மணி, தன் வீட்டுக்குத் திரும்பியதும், “வித்யா ரொம்ப மோசமான மனைவி! கணவனிடம் மரியாதையே இல்லாமல் நடந்துகொள்கிறாள்!” என்று பிற உறவினர்களிடம் பரப்பினாள்.

உண்மையான நிலவரம் புரியாததால், “பாவம், அவர் எவ்வளவு நல்லவராக இருக்கிறார்! இவளிடம் மாட்டிக்கொண்டுவிட்டாரே!” என்று கணவருக்குத்தான் அனுதாபம் கிடைத்தது! எந்தத் தவறு நடந்தாலும், பெண்ணின்மேல்தானே குற்றம் சுமத்துவார்கள் நம் சமூகத்தில்!

வித்யாவுக்கு என்னவோ மகிழ்ச்சிதான் – கணவர் தன் உறவினர்களை விரட்டி அடிக்காமல் அவர்களைப் பாதுகாத்துவிட்டோமே என்று.

உன் இலக்கு நோக்கிச் செல்

சிலர் நல்ல வேலையை விட்டுவிட்டு, புதிதாக எதிலாவது ஈடுபடுவார்கள்.

உற்றார் உறவினர் அனைவரும் `மடத்தனம்!’ என்று அதிர்வார்கள்.

ஆனால், அவருக்குத்தான் தனது இலக்கு முக்கியம். பிறர் அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கவனிக்காது, அதை நோக்கிப் பயணிக்கத் துணிவார். வெற்றி கிடைக்கலாம், கிட்டாமலும் போகலாம். ஆனாலும், `அப்படிச் செய்திருக்கலாமே!’ என்று என்றாவது ஏங்க நேரிடாதே!

அனேகமாக எல்லாப் பெண்களுக்குமே எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. கூடவே, தயக்கமும் ஏற்படும்.

`பெண்கள் திரும்பத் திரும்ப குடும்பக் கதைகள்தாம் எழுதுகிறார்கள். எல்லாம் ஒரேமாதிரிதான் இருக்கின்றன!’ என்று ஆண்கள் என்னிடம் குறை கூறியிருக்கிறார்கள்.

`படிப்பவர்களுக்கு என்ன பிடிக்கும்? அத்துடன் நம் பெயர் கெடாமல் இருக்குமா?’ என்றெல்லாம் யோசனை செய்து எழுத ஆரம்பித்தால் வேறு எப்படி எழுத முடியும்?

“நல்ல இலக்கியம் என்பது அதிக விமரிசனத்துக்கு உள்ளாவது” (ஓர் இலக்கியவாதி).

நான் எழுதியவற்றைப் புகழ்ந்தவர்களைவிட அதில் குற்றம் கண்டுபிடித்தவர்கள் அதிகம்.

`பெண்களுக்கு உணர்ச்சிகளே கூடாது. அப்படியே இருந்தாலும், அவற்றை அடக்கியே வைத்திருக்கவேண்டும்,’ என்ற கருத்துகொண்ட ஆண் தன்னைப் பலசாலி என்று கருதுகிறான். அவனுடைய எதிர்பார்ப்பு பொய்க்கும்போது அதிர்ச்சி உண்டாகிறது. எழுத்தைவிட அதை எழுதியவள் கண்டனத்துக்கு ஆளாகிறாள்.

இது புரிந்து, ஆண்கள் பழிக்கும்போதெல்லாம் பெண்கள் அவர்களை எதிர்த்து பதில் கடிதம் எழுதிவிடுவார்கள், எனக்குப் பக்கபலமாக.

“என் பெயர் காதல்” என்ற தலைப்பில் நான் ஒரு கதை எழுதிவிட்டு, “எப்படிக் காதல் வயப்படுவது என்று அணு அணுவாக விவரித்திருக்கிறேன்,” என்று என் மகளிடம் பெருமையாகக் கூறினேன்.

“ஐயோ, அம்மா!” என்று அதிர்ந்தாள். “உன் REPUTATION (நல்ல பெயர்) என்ன ஆவது?”

“எனக்கா? நல்ல பெயர் இருக்கிறதா, என்ன!” என்று சிரித்தேன்.

தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டபின், சாண் போனாலென்ன, முழம் போனாலென்ன!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *