பாஸ்கர்

நினைத்து பாருங்கள். நாற்பது வருடங்களுக்கு முன் சுற்று புற சூழல் பாதிப்பில்லாத மயிலாப்பூர் மற்றும் அதன் மாட வீதிகள். அதுவும் நான் சொல்ல போவது அந்த எட்டாம் நம்பர் வடக்கு மாட வீதி. மூன்றடிக்கும் குறைவான அகலம் கொண்ட அந்த சந்தில் என் சினேக காலம் ஊன்றியது. அது நண்பர் மௌலியின் வீடு. நீளமான சந்து. அந்த பக்கம் போனால் பலா தோப்பு வந்து விடும் போல். அவ்வளவு நீளம். அதில் ஒரு அஞ்சடி மர பெஞ்ச். அதில் தான் அய்யாசாமி என்கிற மௌலியின் தாத்தா அமர்வார். கையில் ஒரு விசிறி. சுமார் ஆறடி உயரம். பார்த்தாலே பயம் வரும் ஒரு உருவம். எங்களை திட்டுவதே அவர் பொழுது போக்கு. ஆனால் மிக அன்பானவர். கட்டை குரலில் அவர் கத்துவது ஊரெல்லாம் எதிரொலிக்கும். ஒரு அலாதியான அன்பு அவருக்கு மௌலியிடம் உண்டு.

அப்போதெல்லாம் குறைவான போக்குவரத்து. நன்கு நீர் நிரம்பிய கோவில் குளம். அதிரடி வேகத்தில் எப்போதும் காற்று. அதுவும் அந்த சந்தில் முட்டி மோதி உள்ளே செல்கையில் அதன் வேகம் கூடும். வாழ்வில் கோபப்பட வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்கு விவரம் புரியாத சந்தோஷம். எல்லாம் இலவசம். மிதி வண்டியில் ஊர் சுற்றி வரும் எங்களுக்கு எல்லா தெருக்களும் அத்துப்படி. திரும்ப திரும்ப கொஞ்சம் சினிமா, காரம்போர்ட், அவ்வப்போது கிரிக்கெட். இரவு பொழுது தான் எல்லோர்க்கும் அவஸ்தை. வெளியே செல்ல கட்டுப்பாடு. அதனால் என்ன ? அடுத்த நாள் திட்டம் பின்னிரவே தயார். பசிக்கும்போது தான் எங்களுக்கு வீட்டு நினைப்பு.

அதுவும் மௌலியின் அம்மா எங்களுக்கு கொடுக்கும் தயிர் சாதம் ஒரு வரப்ரசாதம் – காற்றில் முடி பறக்கும் அந்த மதிய பொழுதில் சுமார் வெய்யிலில் அந்த ஜில்லென உணவு நிஜ தேவாம்ருதம். அந்த ஒரு சுவையை நான் இன்று வரை ருசித்ததில்லை. கமலா மாமியின் கை வண்ணம் அது – எத்தனை அன்பு இதயங்களை கடந்து வந்து இருக்கிறது இந்த வாழ்க்கை. எந்த முனையில் உறவுகள் முளை விடுகிறது என்றே புரிவதில்லை. அது எப்படி வீர்யம் அடைந்து பல்கி பெருகிறது என்றும் தெரிவதில்லை. வாழ்வின் வடிவமைப்பு புரிபடவில்லை. இது இப்படி என எண்ணும்போது வேறு ஏதோ ஒன்று வெளிப்படுகிறது. எதையும் ஒரு கட்டுக்குள் கொண்டு நிர்ணயம் செய்ய முடியவில்லை – இதோ எல்லோரும் அறுபதை தொட்டாகி விட்டது குளம் இருக்கிறது. நீர் இல்லை. மனம் இருக்கிறது. வயசு இல்லை. இன்றும் தயிர் அல்லது மோர் சாதம் நினைப்பு வந்தால் கமலா மாமி தான் நினைவுக்கு வருகிறார்கள்.. உணவின் சுவை கைப்பதத்தில் இல்லை. அது மனசில் இருக்கிறது. வாழ்க்கை தீராநதி.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கமலா மாமி

  1. Super about friends and school life think Kapiolani etc continue the journey best wishes may God bless you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *