செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(345)

அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

– திருக்குறள் -443 (பெரியாரைத் துணைக்கோடல்)

புதுக் கவிதையில்...

அறிவு மற்றும் ஒழுக்கங்களில்
சிறந்த பெரியவர்களை,
அவர்கள் விரும்புவனவற்றைத்
தெரிந்து செய்து
தமக்கு மிக உயர்ந்த
துணைவராக்கிக் கொள்ளுதல்,
அரசர்க்குக்
கிடைத்தற்கரிய பேறுகளில்
மிகவும் அரியதான ஒன்றாகும்…!

குறும்பாவில்...

பெரியோர்கள் விரும்புவன தெரிந்துசெய்து
அவர்களைத் தமக்கு உற்ற துணைவராக்கிக்கொள்ளுதல்,
அரசர்க்குப் பெறற்கரிய பேறுகளில் அரியதாம்…!

மரபுக் கவிதையில்...

அறிவுட னொழுக்கம் அனைத்திலுயர்
ஆற்றல் மிக்கப் பெரியோரை,
முறையா யவர்கள் மனமறிந்து
மூத்தோர் தேவை தெரிந்துசெய்தே
உறவா யவரை உறுதுணையாய்
உவந்தே கொள்ளும் மன்னவர்க்குச்
சிறந்த பேறாம் இதனைப்போல்
சிறப்பில் மேலாய் வேறிலையே…!

லிமரைக்கூ..

பெரியோர் துணைபெரும் பேறு,
அவர்தம் தேவையறிந்து செய்து துணையாக்கும்
அரசர்க்கிலை அதைவிட வேறு…!

கிராமிய பாணியில்...

வச்சிக்கணும் வச்சிக்கணும்
தொணைக்கி வச்சிக்கணும்,
தெறமயுள்ள பெரியவங்களத்
கூடத்
தொணக்கி வச்சிக்கணும்..

தெறமயும் கொணமும்
நெறஞ்ச பெரியவங்கள,
அவங்க விருப்பம்போலச் செய்து
கூடத் தொணயா வச்சிருந்தா,
ராசாவுக்கு
அதப்போல பெரிய குடுத்துவைப்பு
வேற எதுவுமில்ல..

அதால
வச்சிக்கணும் வச்சிக்கணும்
தொணைக்கி வச்சிக்கணும்,
தெறமயுள்ள பெரியவங்களத்
கூடத்
தொணக்கி வச்சிக்கணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *