செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(346)

மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின்.

– திருக்குறள் – 280 (கூடாவொழுக்கம்)

புதுக் கவிதையில்...

உயர்ந்தோர் வெறுக்கும்
உலகம் பழிக்கும்
தீயொழுக்கத்தை
மனத்தால்
ஒதுக்கிவிட்டால்,
தவத்தோர்க்குத்
தாடி வளர்த்தல்
மொட்டை போடுதல் போன்ற
புறக்கோலம் எதுவும்
தேவையில்லை…!

குறும்பாவில்...

உலகும் உயர்ந்தோரும் பழிக்கும்
தீயொழுக்கத்தை விட்டுவிட்டால் தவத்தோர்க்கு மொட்டை
தாடி போன்ற புறவேடங்கள் வேண்டாம்…!

மரபுக் கவிதையில்...

உலகில் வாழும் மாந்தர்களும்
உத்தம மான சான்றோரும்
விலக்கிப் பழிக்கும் தீயொழுக்கம்
விட்டு விட்ட தவத்தோர்க்குப்
பலவாய்ப் புறத்தில் வேடமிட
பலநாள் முடியை வளர்த்தேதான்
தலையில் சடையும் தாடிவளர்த்தும்
தவிர்த்து மொட்டையும் வேண்டாமே…!

லிமரைக்கூ..

நடப்பில் நல்லொழுக்கப் பாடம்
பேணும் தூய துறவோர்க்கு வேண்டாம்,
மழித்து வளர்க்கும் புறத்து வேடம்…!

கிராமிய பாணியில்...

வேணும்வேணும் நல்லொழுக்கம்,
வேண்டவே வேண்டாம்
வெறுத்து ஒதுக்குற தீயொழுக்கம்..

ஒலகத்து மக்களும்
உத்தமமான பெரியவங்களும்
வேண்டாம்னு பழிக்கிற
கெட்ட ஒழுக்கத்த மனசால
விட்டுவிட்ட சாமியாருங்க
வெளிவேசமா
மொட்டயும் போடவேண்டாம்,
முழு நீளமா
சடையும் வளக்கவேண்டாம்..

அதால
வேணும்வேணும் நல்லொழுக்கம்,
வேண்டவே வேண்டாம்
வெறுத்து ஒதுக்குற தீயொழுக்கம்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *