கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 29

0

-மேகலா இராமமூர்த்தி

துந்துபிக்கும் வாலிக்கும் நடந்த கடும்போரில் அரக்கன் துந்துபியின் இரு மருப்புகளையும் பிடுங்கிய வாலி அவற்றாலேயே அவனை அடிக்க, வலிதாளாது அலறினான் துந்துபி. அத்தோடு விட்டானா வாலி? மலையின்மேல் இடி விழுந்தாற்போல் அவ் அரக்கனின் தலைமீது குத்தினான். அடுத்து, துந்துபியைத் தூக்கிய வாலி அவனைத் தன் கையால் சுழற்றி உயர வீச, அவ் அரக்கனின் உயிர் விண்ணுலகம் சென்றது; உடலோ மண்ணுலகில் உருசியமுக மலையில் மதங்க முனிவர் தவஞ்செய்யும் ஆசிரமத்தில் வீழ்ந்தது. குருதித் துளிகள் அங்குமிங்கும் தெறித்தன. அப்புனித இடத்தின் தூய்மையை அவ்வுடல் கெடுத்தது கண்ட முனிவர் சினந்து, ”இந்த அடாத செயலைச் செய்தவன் இம் மலைப்பக்கம் வந்தால் தலைவெடித்து இறப்பான்” என்று சாபமளித்துவிட்டார். அதனையறிந்த வாலி உருசியமுக மலைப்பக்கம் வருவதில்லை; ஆதலால்தான் நாங்கள் இங்கே அவன் தொல்லையின்றிப் பாதுகாப்பாய் இருக்கமுடிகின்றது என்றான் சுக்கிரீவன் இராமனிடம்.

முட்டி வான் முகடு சென்று
     அளவி இம் முடை உடற்
கட்டி மால் வரையை
     வந்து உறுதலும் கருணையான்
இட்ட சாபமும் எனக்கு
     உதவும் என்று இயல்பினின்
பட்டவா முழுவதும்
     பரிவினால் உரைசெய்தான். (கம்ப: துந்துபிப் படலம் – 4002)

வாலியின் வலிமையைப் பறைசாற்றுகின்ற விதமாக அவன் துந்துபியை வதம்செய்த விதத்தைச் சுக்கிரீவன் விளக்கியதைக் கேட்ட இராமன், தன் இளவல் இலக்குவனின் ஆற்றலைக் கதிர்ச்செல்வன் மகனான சுக்கிரீவனுக்குக் காட்டவிரும்பி, ”இலக்குவா! துந்துபியின் உடலை இங்கிருந்து அப்புறப்படுத்து!” என்றதும்,  இலக்குவன் அதனைத் தன் கால் விரலால் எற்றினான்; அது மீண்டும் விண்ணுலகு சென்று மீண்டது.

வாலியின் வலிக்குத் தங்கள் வலி சற்றும் குறைந்ததில்லை என்பதை இராமன் மராமரங்கள் ஏழைத் துளைத்துக் காட்டியும், இலக்குவன் மலைபோல் கிடந்த துந்துபியின் உடலை எற்றிக் காட்டியும் நிரூபித்தனர் வானரர்களுக்கு.

இராம இலக்குவரின் வலிகண்ட வானரர் மகிழ்ச்சிக் களியோடு ஒரு சோலை புக்கனர். அப்போது, ”நாயகனே! உன்னிடம் நான் உரைக்க வேண்டியது ஒன்றுளது” என்றான் சுக்கிரீவன் இராமனிடம்.

”அதனைச் செப்புவாய் இப்போது” என்று இராமன் கூற, முன்னொரு நாள் நாங்கள் இங்கிருந்தபோது இராவணன் ஒரு பெண்ணைத் தூக்கிச் செல்வதைக் கண்டோம்; கதறியபடியே சென்ற அப்பெண் நின் தேவியாக இருக்கலாமென ஊகிக்கிறேன்; தன்னிலையை எங்களுக்கு அறிவிக்கக் கருதியோ என்னவோ அப்பெண் தன் அணிகலன்களையெல்லாம் துணியில் முடிந்து கீழேபோட்டாள்; நாங்கள் அவற்றை ஏந்திக்கொண்டோம்” என்று நிகழ்ந்தவற்றை உரைத்துச் சீதையின் அணிகலன்களை இராமனுக்குக் காட்டினான் சுக்கிரீவன்.

அவற்றைக் கண்ட இராமனின் சிவந்த கண்களிலிருந்து புறப்பட்ட கண்ணீர் வெள்ளமானது அங்குள்ள பொருட்கள் யாவற்றையும் இழுத்துச் சென்றது. உடல் புளகித்ததால் எழுந்த மயிர்த்தொகுதி, உடல் முழுவதையும் மூடியது. பூரித்த அவன் தோள்கள் வேர்த்தன என்பேனா? வெப்பத்தில் வெதும்பின என்பேனா? என்கிறார் கம்பநாடர்.

ஈர்த்தன செங்கண்
    நீர் வெள்ளம் யாவையும்
போர்த்தன மயிர்ப் புறம்
    புளகம் பொங்கு தோள்
வேர்த்தன என்கெனோ
    வெதும்பினான் என்கோ
தீர்த்தனை அவ் வழி
    யாது செப்புகேன். (கம்ப: கலன்காண் படலம் – 4012)

உடல் புளகிப்பதும் தோள் பூரிப்பதும் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகள். தோள் வியர்ப்பதும் வெதும்புவதும் துயரத்தின் வெளிப்பாடுகள். கண்ணீர் சிந்துவது உவகையாலும் நிகழும்; வருத்தத்தாலும் நிகழும். இவ்வாறு இராமனின் மெய்ப்பாடுகள் இன்பமும் துன்பமும் கலந்தவையாக இருந்தமையால் அவற்றை எவ்வாறு செப்புவேன்? என்கிறார் புவிபோற்றும் கவிச் சக்கரவர்த்தி.

சீதை தன் அணிகலன்களைக் கீழே எறிய அவற்றைக் குரக்கினங்கள் எடுத்து அணிந்துகொண்ட செய்தியை நகைச்சுவையோடு புறநானூறு எனும் சங்கநூலும் பதிவுசெய்திருக்கின்றது.

ஊன்பொதி பசுங்குடையார் எனும் புலவர் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியின் கொடை வண்மையைப் பாடுமிடத்து, அவனுடைய அரண்மனை முன்றிலில் நின்று தடாரிப் பறையிசைத்த பொருநனின் வறுமைபோக, அணிகலன்களையும் பிற பொருட்களையும் வாரிக்கொடுத்தான் சென்னி. அவனோடு வந்திருந்த பெருஞ் சுற்றத்தினரோ விதவிதமான அணிகள் அணிந்து பழக்கப்படாதவர்களாதலால் அவ் அணிகளைப் பெற்றவுடன் செவியில் அணிய வேண்டிய தோடுகளை விரலிலும், விரலில் அணியவேண்டிய மோதிரங்களைச் செவியிலும், இடையில் அணியவேண்டியவற்றைக் கழுத்திலும், கழுத்தணிகளை இடையிலும் அணிந்து தடுமாறி நின்ற காட்சி இராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதை கீழேயெறிந்த அணிகளைக் கண்டெடுத்த குரக்கினங்கள் அவற்றைத் தாறுமாறாக அணிந்துநின்ற காட்சிபோல் நகையை விளைவித்தது என ஒப்பீடு செய்கின்றார்.

…மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே அதுகண்டு
இலம்பாடு உழந்தவென் இரும்பேர் ஒக்கல்
விரற்செறி மரபின செவித்தொடக் குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு
கறாஅ வருநகை இனிதுபெற் றிகுமே
(புறம்: 378)
 

சீதையின் அணிகளைக் கண்டு உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கு ஆட்பட்ட இராமன் உணர்விழந்த நிலையை அடையவே அவனைத் தாங்கிப் பிடித்த சுக்கிரீவன், “ஐய! இந்த அண்டத்திற்கு அப்பால் உன் தேவியை இராவணன் ஒளித்து வைத்திருந்தாலும் நான் தேடிக் கண்டுபிடித்துத் தருகின்றேன்; தளர்வடைய வேண்டா” என்று தேற்றினான்; ஆறுதல் மொழி சாற்றினான்.

அதைக் கேட்ட இராமன், நினைவு தெளிந்தவனாய்ச் சுக்கிரீவனை அன்பொடு நோக்கி, உன்னுடைய குறையை முதலில் தீர்த்தலே என் கடன் என்றுரைக்க, அருகிருந்த அனுமனும் அதனை ஆமோதித்து, கொடிய வலிமையுடைய வாலியைக் கொன்று, சூரியன் மகனாகிய சுக்கிரீவனைக் கோமகனாய் அரியணை அமர்த்தி, செயல்திறன்மிகு பெரும்படையைச் சேர்த்தாலன்றி அரக்கர்கள் வாழும் இடத்தை நாம் கண்டுபிடித்தல் அரிதாகும் என்றான்.

கொடுந் தொழில் வாலியைக்
      கொன்று கோமகன்
கடுங் கதிரோன் மகன்
      ஆக்கி கை வளர்
நெடும் படை கூட்டினால்
      அன்றி நேட அரிது
அடும் படை அரக்கர்தம்
      இருக்கை ஆணையாய். (கம்ப: கலன்காண் படலம் – 4032)

அஞ்சனை மைந்தன் கூற்றை அண்ணல் இராமனும் ஏற்று, நாம் இப்போது வாலிபாற் செல்லுவோம் என்று உரைத்திட, அனைவரும் உருசியமுக மலையிலிருந்து இறங்கி வாலியின் இருப்பிடமிருந்த கிட்கிந்தை நோக்கி நடக்கலாயினர்.

வாலியின் இருப்பிடத்தருகே வந்ததும் இராமன் ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாய்ச் சுக்கிரீவனை நோக்கி, ”போருக்கு அழை அந்த வாலியை! அவனோடு நீ போர்செயும் வேளையில் விடமன்ன அவ் வாலிமீது வேறிடத்திலிருந்து நான் அம்பு தொடுப்பேன்” என்றான். சுக்கிரீவனும், “நல்ல யோசனை இது” என்று அதனை ஏற்றுக்கொண்டான்.

அவ் இடத்து இராமன் நீ
      அழைத்து வாலி ஆனது ஓர்
வெவ் விடத்தின் வந்து போர்
      விளைக்கும் ஏல்வை வேறு நின்று
எவ்விடத் துணிந்து அமைந்தது என்
      கருத்து இது என்றனன்
தெவ் அடக்கும் வென்றியானும்
     நன்றுஇது என்று சிந்தியா. (கம்ப: வாலி வதைப் படலம் – 4047)

இராமனால் துணிவுற்ற சுக்கிரீவன் தன் தோள்களைத் தட்டிக்கொண்டு பெருங்குரலில் வாலியைப் போருக்கழைத்தான். படுக்கையில் நித்திரையிலிருந்த வாலியின் செவிகளைத் துளைத்தது அவ் ஆரவாரச் சத்தம்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *