தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 15

0

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

இலக்கண உரைகளில் உவமங்கள்- 1

முன்னுரை

‘இலக்கியத்தில் உவமம்’ என்பது அனைவரும் அறிந்த உண்மை. இலக்கிய உரைகளில் உவமம் என்பதும் அத்தகையதே. இலக்கண விளக்கத்தில் உவமம் என்பது சிலரால் அறியப்பட்ட உண்மை. இலக்கண உரைகளில் உவமம் என்பது அச்சிலருள்ளும் சிலரால் அறியப்பட்ட உண்மையாகும். கணிதத்தையொத்த இலக்கணத்தில் உவமப் பயன்பாடு பற்றிய சிந்தனையோ எதிர்பார்ப்போ அவ்வளவாக எழாது. அதற்கான சூழல் அங்கே இல்லை. ஆனால் தமிழிலக்கண உரைகள் இந்தக் கருத்தியலைப் புறந்தள்ளியிருக்கிறது. கல்வி அறிவு நோக்கியது. அதனால் அறிவு தெளிவு நோக்கியது என்பது பெறப்படும். ‘தெளிவு பெற்ற மதியினாய்’ என்பது பாரதி கருத்து. இந்த அடிப்படையில் யாப்பருங்கலக்காரிகை என்னும் செய்யுளிலக்கண நூலுக்குக் குணசாகரர் எழுதிய உரையில் வரும் ஓர் உவமம் பற்றிய ஆய்வாய் இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

வெண்பாக்களுள் நேரிசை வெண்பா

பாக்கள் தனி. அவற்றின் கிளைகளான வகைகள் தனி. ஒவ்வொரு பாவாற்றுக்கான கால்வாய்கள் தனி. அவை இனம் என அழைக்கப்படும். சான்றாக வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பது நால்வகைப் பாக்களாகும். மருட்பா பொருட்பற்றிய பிரிவாதலின் யாப்புப் பற்றிய பாகுபாடுடைய முன்னவற்றோடு இயையாது. இணையாது. நான்கென்றலே மரபு. வெண்பாவில் குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா என ஆறு வகைகள் உண்டு. ஆனால் இந்த ஆறுவகைகளும் புறக்கட்டுமானத்தில் கவிஞர் ஏற்படுத்திக் கொள்ளும் சில மாற்றங்களால் உண்டாகும் பெயர் மாற்றங்களே தவிர குறள் வெண்பாவைப்போலத் தனித்தன்மை உடையன அல்ல. அதாவது வெண்பாவின் வகைகள் ஆறாகக் கருதப்படினும் அவ்வளவும் குறள் வெண்பாவின் நீட்டியாகவே கருதப்படும் அளவிற்கே அமைந்துள்ளது. குறள் வெண்பாவின் அடுத்த நிலை நேரிசை வெண்பா. அது பற்றிய விளக்கத்தை அடுத்த பத்தி ஆராய்கிறது.

இரு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா

‘ஈரடி வெண்பா குறள்’ என்பதற்குக் குறள் வெண்பா ஈரடியால் அமையும் என்பது பொருள். அத்தகைய குறள் வெண்பாக்கள் சில மாற்றங்களைப் பெற்று இணைய நான்கடியாய் உருமாற்றம் அடைந்தால் அது நேரிசை வெண்பா எனப்படும். தனித்தன்மையுடைய இரண்டு குறள்வெண்பாக்களே செயற்கையான நேரிசை வெண்பாவை உருவாக்கும் காரணிகளாக அமைகின்றன. காரிகை இலக்கணம் அப்படித்தான் சொல்கிறது. அது மட்டுமன்று வெண்பாக்களை அது அடிகளால்தான் அடையாளப்படுத்துகிறது. வெண்பாக்களினிடையில் படைப்பாளரால் கொண்டுவரப்படும் புறமாற்றங்களும் பெயர் வேற்றுமைக்குக் காரணமாகின்றன. இரண்டடியால் அமைவது குறள் வெண்பா. நான்கடியால் அமைவது நேரிசை வெண்பா. மூன்றடியால் அமைவது சிந்தியல் வெண்பா. பல அடிகளால் அமைவது பஃறொடை வெண்பா. மூன்றடியால் அமைகிற சிந்தியல் வெண்பா தனிச்சொல் பெற்றுவந்தால் அது நேரிசைச் சிந்தியல் வெண்பா. தனிச்சொல்லின்றி மூன்றடியால் வந்தால் அது இன்னிசைச் சிந்தியல் வெண்பா.  எனவே வெண்பாவின வகைகள் என்பன பொருட்பாகுபாட்டைச் சுட்டுவதன்று. வடிவ மாற்றத்தை மட்டுமே அதுவும் பெரும்பாலும் அடிகளால் உண்டாகும் மாற்றத்தையே சுட்டும் என்பது பெறப்படும்.

பொற்கொல்லரும் பொடியும்

‘பொற்றுகள், மண்துகள், பற்பொடி, மிளகாய்த்தூள் என்னும் வழக்குகளைக் கேட்டிருக்கலாம். இவற்றுள் ‘பொற்றுகள்’ என்பது பொன்னின் தூளைப் பொதுவாகக் குறித்தாலும் அணிசெய்யும் பொற்கொல்லரின் இணைப்புத் தொழிலுக்குப் பயன்படும் ஓர் கருவிப் பொருளாகும். ஒரே தரமுடைய இரண்டு பொற்கம்பிகளை இணைக்க வேண்டுமாயின் அதே தரமுடைய கம்பியைக் கொண்டு இணைக்க இயலாது. பொற்கொல்லரின் ஆற்றலுக்குத் தங்கம் உருகாது. அதனால் சற்றுத் தரம் குறைந்த பொன்னைத் தூளாக்கி அதனை அவற்றிடை வைத்து ஊதினால் அது உருகித் தரமுடைய இரண்டு கம்பிகளையும் இணைக்கும். இவ்வாறு ஊதுவதற்குப் ‘பொடிவைத்து ஊதுதல்’ என்று பெயர். ஒரு நகையின் தரம் இத்தகைய பொடியின் அளவுக்குக் கூடவோ குறையவோ செய்யும்.  நுட்பமான வேலைப்பாடுடைய நகைகளைப் பொடிவைத்த நகைகள் என்று அழைக்கிற வழக்கும் உண்டு. இங்கு இது பற்றிய ஆய்வைவிட ஒற்றுமைப்படாத உலோகங்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான பொற்கொல்லரின் செயலும் அதற்கு அவருக்குப் பயன்படும் பொடியுமே கருத்திருத்த வேண்டியது ஆகும்.

நேரிசை வெண்பா உருவான கதை 

யாப்பருங்கலக்காரிகைக்கு முன்னும் பின்னும் நேரிசை வெண்பா ஓரலகாகப் படைக்கப்பட்ட வரலாறு உண்மை என்பதைப் பல்வேறு நேரிசை வெண்பாக்களால் அறிந்து கொள்ள இயலும். ஆனால் காரிகைக் காலத்தில் இரண்டு குறள்வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பாவாகத் தோற்றம் பெற்றிருக்கிறது.

“உன்நலத்தை நாடாதே! ஊர்நலத்தை நாடுகநீ!
பன்னலமும் வந்தெய்தும் பார்”

என்பது ஒரு குறள் வெண்பா.

“தேக்கம் உணர்ந்திடுக! தேயா வளர்பிறையாய்
ஊக்கம் பெறுவாய் உணர்ந்து”

என்பது மற்றொரு குறள் வெண்பா. இந்தத் தனித்தனிக் குறள் வெண்பாக்களைக் கவிஞர் சில மாற்றங்களால் ஒரு நேரிசை வெண்பாவாக மாற்றிவிடுகிறார்.

“உன்நலத்தை நாடாதே! ஊர்நலத்தை நாடுகநீ!
பன்னலமும் வந்தெய்தும் பார்போற்றும் – இன்றுள்ள
தேக்கம் உணர்ந்திடுக! தேயா வளர்பிறையாய்
ஊக்கம் பெறுவாய் உணர்ந்து”

செய்திருக்கும் மாற்றங்கள்:

  1. முதல் குறட்பாவில் நேரசையில் முடிந்திருக்கும் ஈற்றுச்சீரைத் தளைதட்டாது மூவசைச் சீராக்கியிருக்கிறார்.
  2. முதலடியின் முதற்சீருக்கு ஏற்ப இரண்டாம் அடியின் இறுதியில் அதாவது நான்காவது சீரை ஏழாவது சீருக்கும் எட்டாவது தனிச்சீருக்கும் தளைதட்டாத வகையில் தனிச்சொல்லை அமைத்திருக்கிறார்.

இந்த மாற்றங்களைத்தான் ‘பாட்டில் ஒட்டுவேலை’ என்கிறோம் நாம். இந்த ஒட்டுவேலையைப் பொற்கொல்லரின் பொடிவைத்து ஊதும் வேலைக்கு ஒப்பிட்டு காரிகைக்கு உரையெழுதுகிறார் குணசாகரர். எப்படி? இப்படி,

“‘சீரியவான் தனிச் சொல் அடி மூய்’ என்று சிறப்பித்த அதனால் முதற் குறட்பாவினோடு தனிச்சொல் இடைவேறுபட்டு விட்டிசைப்பின் ஒற்றுமைப்படாத உலோகங்களை, ஒற்றுமைப்படப் பற்றாசிட்டு விளக்கினாற்போல முதற் குறட்பாவின் இறுதிக்கண் ஒன்றும், இரண்டும் அசைகூட்டி உச்சரிக்கப்பட்டு இரண்டு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வருவனவுமுள. அவை ஒருசார் ஆசிடை நேரிசை வெண்பா எனக் கொள்க.”

குணசாகரரின் இந்த உரையால் நேரிசை வெண்பாவைப் பற்றிய பல உண்மைகள் வெளிப்படுகின்றன. காரிகையில் பயின்றுவரும் அடைச்சொற்களைக் கொண்டு இவற்றை அவர் தருகிறார்.

  1. நேரிசை வெண்பா என்பது தனியான ஓர் அலகன்று.
  2. இரண்டு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா ஆகும்.
  3. முதல் குறள் வெண்பாவில் ஈற்றுப் பகுதியில் செய்யப்படும் மாற்றங்களே நேரிசை வெண்பாவிற்கான வடிவமாற்றமாகக் கருதப்படுகிறது.
  4. இந்த மாற்றத்தினை இரண்டு உலோகங்களை இணைப்பதற்குப் பொடி வைத்து ஊதும் பொற்கொல்லரின் செயலை உவமமாக்கிப் ‘பற்றாசிட்டு விளக்கினாற்போல’’ என விளக்கியிருக்கிறார்.

நேரிசை வெண்பா –  வடிவப் பயன்பாடு

ஆராய்ந்து நோக்கினால் இரண்டு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா என்பது நடப்பியலுக்கு முரணாகவும் படைப்பாளர்தம் சிந்தனை வெளிப்பாட்டுக்குப் பொருந்தாத எதிராகவுமே அமைந்துள்ளதாகத் தெரிகிறது. கவிதை என்பது கருத்தியலின் உணர்ச்சி வெளிப்பாடாதலின் அங்கே வடிவக்கட்டுமானத்தைத் திட்டமிடுவதற்கு நேரமிருக்காது. இருந்தால் அது கவிதையாக பரிணமிக்காது. யாப்பென்னும் கலத்துள் கவிதை நிரம்ப வேண்டும் என்பதுதான் தமிழ் மரபுக் கவிதைகளின் வடிவக் கோட்பாடு. காரிகைக்கு முன்னவையான சிலப்பதிகாரத்திலும் பத்துப்பாட்டிலும் உள்ள நேரிசை வெண்பாக்கள் தனித்தன்மையான ஒரே அலகுகளாகவே அமைந்துள்ளன. காரிகைக்குப்பின் வந்த சோமேசர் முதுமொழி வெண்பா, மணிமேகலை வேண்பா, பாரத வெண்பா, பாரதியின் பல வெண்பாக்கள், வைரமுத்து, கடவூர் மணிமாறன், கரூவூர் கவிஞர் குழந்தை முதலியோர்தம் வெண்பாக்கள் எல்லாம் தனித்தனி அலகுகளாகவே அமைந்திருக்கின்றன. இரண்டு குறள் வெண்பாக்களின் கூட்டணியாக அவை இல்லை. இது வளர்சிந்தனைக்குரிய யாப்பியல் கருத்தாகக் கருதப்படலாம்.

நிறைவுரை

எதனையும் உவமம் காட்டி விளக்குவதும் உரைநெறியே என்பதைக் குணசாகரர் உணர்ந்து உரையெழுதியிருக்கிறார். இலக்கண விளக்கங்களுக்காக உவமங்கள் பயன்படுத்தப்படுவது கோட்பாடு எனின், உலகியல் சார்ந்த ஒரு தொழில் நிகழ்வை உவமமாக்குவதைப் பயன்பாடு என்று கருதலாம். ‘பொன்னார் மேனியனே’ என்பது தேவாரம். ‘பொன்மேனி’ என்று உவமம் கண்ட தமிழ்க்கவிதை உலகில், ‘பொற்பொடி’ பற்றிய இந்த உவமம் உவமப்பயன்பாட்டில் தனியிடம் பெறுகிறது.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *