கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 31

0

-மேகலா இராமமூர்த்தி

விண்ணவரும் கண்டு மருளும் வண்ணம் வாலிக்கும் அவன் சோதரன் சுக்கிரீவனுக்கும் நிகழ்ந்த கடும்போரில் ஒருகட்டத்தில் வாலியின் கை ஓங்கியது. யானையை அரி தாக்கி அழிப்பதுபோல், தன்னுடைய நகங்களாலும் கரங்களாலும் சுக்கிரீவனைத் தாக்கிக் கீழே வீழ்த்தினான் அந்தச் சூரன்!

”வாலியை நீ தாக்கும் வேளையில் நான் அவனை அம்புவிட்டுக் கொல்கின்றேன்” என்று சுக்கிரீவனுக்கு உறுதியளித்திருந்த இராமன் அவ்வாறு செய்யவில்லை. இனியும் வாலியோடு மோதினால் அவனால் தான் உயிரிழப்பது உறுதி என்பதை உணர்ந்த சுக்கிரீவன், அங்கிருந்து தப்பித்து இராமனின் மறைவிடம் வந்தடைந்தான். 

நொந்த சிந்தையோடு அவன் இராமனை நோக்கியபோது, “வருந்தாதே சுக்கிரீவா! நீங்கள் இருவரும் ஒத்த தோற்றத்தினராய் இருப்பதனால் சண்டையிடும்போது உங்களில் யார் சுக்கிரீவன், யார் வாலி எனும் வேறுபாடு எனக்குத் தெரியவில்லை; அதனால்தான் நான் அம்பு விடவில்லை” என்று தான் அம்பு எய்யாத காரணத்தை விளக்கிய இராமன், ”இம்முறை நீ கொடிப் பூச்சூடிப் போருக்குப் போ! மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றுரைக்க, அச்சொற்களால் ஊக்கம்பெற்ற சூரியன் மைந்தனாகிய சுக்கிரீவன், கொடிப்பூக் கண்ணியைத் தலையிலணிந்து மீண்டும் போருக்குச் சென்று வாலியைக் கடுமையாய்த் தாக்கத் தொடங்கினான்.

”தோற்றோடியவன் அதற்குள் மீண்டு வந்ததெப்படி?” எனும் சிந்தனையுடன் போரிடத் தொடங்கிய வாலி, சுக்கிரீவனைப் பலமாய் அடித்தான்; நையப் புடைத்தான். அதனால் கடுந்துன்பத்துக்கு ஆளான சுக்கிரீவன் இராமன் மறைந்திருந்த திக்கை எதிர்பார்ப்போடு நோக்கினான்.

போரின் உச்சகட்டமாகச் சுக்கிரீவனைத் தரையில்மோதிக் கொல்வதற்காகத் தன் ஒரு கையைச் சுக்கிரீவனின் இடையிலும், மற்றொரு கையை அவன் கழுத்திலும் கொடுத்து வாலி மேலே தூக்கிய வேளையில், இராகவன் தன்னுடைய வில்லில் கணைதொடுத்து அதனை வாலியை நோக்கிப் போக்கினான்.

எடுத்துப் பாரிடை எற்றுவேன்
      பற்றி என்று இளவல்
கடித்தலத்தினும் கழுத்தினும் தன்
      இரு கரங்கள்
மடுத்து மீக் கொண்ட வாலிமேல்
      கோல் ஒன்று வாங்கி
தொடுத்து நாணொடு தோள்
      உறுத்து இராகவன் துரந்தான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4102)

அக் கணையானது, நீர், நெருப்பு, நிலம், காற்று எனும் நாற்பெரும் பூதங்களின் ஆற்றலை ஒன்றாய்ப் பெற்றவனான வாலியின் மார்பை, கனிந்த வாழைப் பழத்தைத் தைத்துச் செல்லும் ஊசிபோல் தைத்து நின்றது என்று உவமை நயந்தோன்ற, இராமன் செலுத்திய கணையின் வேகத்தையும் ஆற்றலையும் விளக்குகின்றார் கவிச் சக்கரவர்த்தி. ஐம்பெரும்பூதங்களில் வானத்திற்கு வடிவம் இன்மையால் அதனைக் கூறவில்லை அவர்.

தன்மீது படைக்கலமொன்று பாய்ந்ததை உணர்ந்து சீற்றங்கொண்ட வாலி, ”இதனை என்மீது துணிச்சலோடு செலுத்தியவன் யார்?” என்று சிந்தித்தான். தேவரோ என்று முதலில் ஐயுற்றவன், ”வாய்ப்பில்லை! என்னை எதிர்க்கும் ஆற்றல் அவர்க்கேது?” என்ற தீர்மானத்துக்கு வந்தான். ”வேறு யாராக இருக்கக்கூடும்?” என்று மீண்டும் சிந்தித்து இகழ்ச்சி தோன்றச் சிரித்தவன், கடவுளர் மூவரோடும் ஒப்பவன் ஒருவனுடைய செயலாகவே இஃது இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்தான்.     

தேவரோ என அயிர்க்கும் அத்
      தேவர் இச் செயலுக்கு
ஆவரோ அவர்க்கு ஆற்றல்
      உண்டோ எனும் அயலோர்
யாவரோ என நகைசெயும்
      ஒருவனே இறைவர்
மூவரோடும் ஒப்பான் செயல்
      ஆம் என மொழியும். (கம்ப: வாலிவதைப் படலம் – 4109)

தன் மார்பில் பாய்ந்திருக்கும் படைக்கலத்தை அசைத்துப் பார்த்து அஃதோர் அம்பு என்பதையறிந்த ஆளி போல்வானாகிய வாலி, அவ் வாளியைத் தன் வாலினாலும், காலினாலும் பலங்கொண்ட மட்டும் இழுத்துப் பிடுங்கினான். இராமபாணத்தைப் பிடுங்கியெடுத்த அவ்வீரனின் திறல்கண்டு விண்ணோரும் வியந்தனர் எனும் கம்பர், ”வீரரை யார் வியவாதார்?” என்று வாலியின் வீரத்தைத் தாமும் விதந்தோதுகின்றார்.

அம்பினைப் பிடுங்கியதும் அவன் மார்பினின்று குருதிவெள்ளம் கொப்பளித்தது. அதனை எய்தவன் யார் என்றறிய அந்த அம்பினை உற்றுநோக்கினான் வாலி. அப்போது, பூவுலகம் வானுலகம் பாதாளம் எனும் மூவுலகங்களுக்கும் ஆதார மந்திரமானதும், தம்மை வழிபடும் அடியார்க்கு ஒப்பற்ற சிறப்பை அளிக்கக்கூடியதும், இப்பிறப்பிலேயே பின் வரவிருக்கும் எழுபிறப்பென்னும் பிணியையும் அறுக்கும் அருமருந்தாய்த் திகழக்கூடியதுமான ’இராமன்’ எனும் சீர்மிகு திருநாமத்தை அந்த அம்பில் கண்டான் வாலி. 

மும்மை சால் உலகுக்கு எல்லாம்
      மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்
      பெரும் பதத்தை தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
      மருந்தினை இராமன் என்னும்
செம்மை சேர் நாமம்தன்னைக்
      கண்களின் தெரியக் கண்டான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4117)

வைணவர்கள் எட்டெழுத்து மந்திரத்தை உயர்வாய்ச் சொல்வார்கள்; இங்கே கம்பர் அந்த எட்டெழுத்தின் பெருமையையும் சிறப்பையும் இராம நாமத்துக்கு உரித்தாக்குகின்றார்.  

அப் பெயரைக் கண்டதும், மனைவியோடு இணைந்து நடத்தும் இல்லறத்தைத் துறந்து கானகம் வந்தமையால் தங்கள் குலத்துக்குரிய வில்லறத்தையும் துறந்த வீரனான(!) இந்த இராமன் பிறந்ததனால், தருமநெறி வழுவாத சூரிய குலமும் தன் நெறியின்று வழுவியதே என்றெண்ணி நகைத்து, இராமனின் செயலுக்காகத் தான் நாணமுற்றான் வாலி.

”இராமன் அறத்தின் நாயகன்; ஆண்மை நிறைந்தவன்! அவனுக்குப் புன்மை குணங்கொண்ட குரக்கினத்தாரோடு கேண்மை எதற்கு?” என்று தன் மனைவி தாரையிடம் இராமன் குறித்து உயர்வாகப் பேசியவன் அல்லவா இந்த வாலி? இப்போது இராமனின் அறம்பிறழ்ந்த செயல் அவனை வெட்கித் தலைகுனியவும் வேதனைப்படவும் வைத்தது!

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
(1015) எனும் வள்ளுவத்தை நினைவுபடுத்துகின்றது வாலியின் செய்கை.

இவ்வாறு வாலி இராமனின் தகாத செயலுக்காக வருந்தியிருந்த வேளையில், நீலநிறக் கார்மேகம் தன்னிடமுள்ள பல தாமரை மலர்களும் மலரப்பெற்று, வரிவில் ஏந்தி வருவதுபோல் அவன் எதிரில் வந்துநின்றான், அதுவரை மறைந்திருந்த, இராமன். அவனைக் கண்டதும் வாலியின் சீற்றம் ஓங்கிற்று. இராமனின் இழிசெயலைப் பழிக்கத் தொடங்கினான் அந்தக் குரக்கரசன்.

”அரசர்களுக்குரிய அறநெறி உம் குலத்துளோர்க்கெலாம் உடைமை ஆயிற்றே! அவ்வாறிருக்க, சனகன் பெற்ற அன்னத்தை, அமுதத்தையொத்த நின் தேவியைப் பிரிந்தபின் செயலில் தடுமாற்றம் அடைந்துவிட்டாயோ?!

ஏனப்பா…! அரக்கர் உனக்கொரு தீங்கு செய்துவிட்டுப் போனால் அதற்குத் தண்டனையாகக் குரக்கினத்து அரசனைக் கொல்லச் சொல்லி உன்னுடைய மனுநெறி கூறிற்றோ? கருணை எனும் பண்பை எங்கே உகுத்தாய்? என்னிடத்தில் குற்றமென்ன கண்டாய்? இத்தகு பெரும்பழியை நீ ஏற்றுக்கொண்டால் உலகில் புகழைத் தாங்கிப் பெருமைகொள்வார் யார்?” என்று கேட்டான் வாலி.

 அரக்கர் ஒர் அழிவு செய்து
      கழிவரேல் அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல
     மனு நெறி கூறிற்று உண்டோ
இரக்கம் எங்கு உகுத்தாய் என்பால்
      எப் பிழை கண்டாய் அப்பா
பரக்கழி இது நீ பூண்டால்
      புகழை யார் பரிக்கற்பாலார். (கம்ப: வாலிவதைப் படலம் – 4125)

”இராவணனை அழித்தற்கு உனக்குத் துணை தேவையாயின் யானையைப் பற்றியழிக்கும் ஆற்றல்மிகு அரிமாவென நானிருக்க, முயல்போன்ற என் தம்பியைத் துணைக்கொள்ளும் உன் முயற்சியை என்னவென்பது?

வானூர் மதிக்கு ஒரு களங்கம் இருப்பதுபோல் இரவிக் குலத்துக்கும் ஒரு களங்கம் தேவை என்று கருதி அதனை உண்டாக்கிவிட்டாய் போலும்!” 

இவ்வாறு, ஒரு தேர்ந்த வழக்கறிஞனைப்போல் வில்வலானான இராமனைப் பார்த்துச் சொல்வலானான வாலி குற்றச்சாட்டுகளை அடுக்கினான்! 

இவற்றைக் கேட்ட இராமன் வாலிக்கு மறுமொழி பகரலானான்…

பிலம் புகுந்த நீ நெடுநாள் மீளாமையின் அரசியல் சுற்றத்தார் வற்புறுத்தலின்பேரில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான் உன்தம்பி சுக்கிரீவன். நீ மீண்டு(ம்) வந்தவுடன் நிலைமையை விளக்கி அவன் உன்னிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தபோதும், நீ அவனை நம்பால் கொல்லத் துணிந்தாய். அதனால் அவன் உருசியமுக மலையடைந்து மறைந்து வாழலானான்.

உன்தம்பி பேரில் உனக்கு ஒருசிறிதும் அன்போ அருளோ இல்லை. உருசியமுக மலைக்கு வந்து நீ சுக்கிரீவனைக் கொல்லாமைக்குக்கூட உனக்கு வாய்த்திருந்த சாபமே காரணம்.

ஒரு வீரனுக்கு எது அழகு? மாற்றான் மனைவியை மதித்து நடப்பது! ஆனால் நீ என்ன செய்தாய்? உன் தம்பி மனைவியை நயந்து அவளை உனக்குரியவளாக்கிக் கொண்டாய்.

இத்தகு பெரும்பிழைகளை நீ புரிந்தமையால் என்னுயிர் நண்பன் சுக்கிரீவனுக்கு உதவும்பொருட்டு உன்னை நான் தண்டிக்க நேர்ந்தது என்றான் இராமன்.

”என்பால் எப்பிழை கண்டாய் அப்பா?” என்ற வாலியின் வினாவுக்கான மறுமொழிகளாக இவை அமைந்திருப்பதைக் காண்கின்றோம்.

தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை வாலி ஏற்றுக்கொண்டானா?

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *