கதையும் மொழிதலும் – 4: கு. அழகிரிசாமியின் ‘காற்று’

1

முனைவர் ம. இராமச்சந்திரன்
உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
ramachandran78.blogspot.com
9360623276

கரிசல்காட்டு வாழ்க்கையை இலக்கியமாக்கியதில் குறிப்பிடத்தக்கவர் கு.அழகிரிசாமி. இவர் 1940 க்கும் 1970 க்கும் இடைப்பட்ட கரிசல்காட்டு வாழ்க்கையைச் சிறுகதைகளில் காத்திரமாகப் பதிவு செய்திருக்கிறார். இவரின் ‘அன்பளிப்பு’ சிறுகதைத் தொகுப்பு சாகித்திய அகாதமி விருது பெற்றது. தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் க.நா.சு. மதிப்பீடு செய்த சிறுகதை எழுத்தாளர்களில் கு.அழகிரிசாமியும் ஒருவர். தனது சிறுகதைகள் உருவாகிய விதம் குறித்தும் அதன் அமைப்பு குறித்தும் அக்கதைகள் எழுதப்பட்ட பின்புலம் குறித்தும் இவரே கட்டுரைகள் எழுதியுள்ளார். அக்கட்டுரைகள் இவரின் சிறுகதைகளை மூன்று விதங்களில் புரிந்துகொள்ள உதவுகின்றன. நிகழ்ச்சிகளின் தொகுப்பாக எழுதப்பட்ட கதைகள், கதைகளாக எழுதப்பட்டுக் கருவாக உருமாறிய கதைகள், கருவை மையமாக வைத்துப் புனையப்பட்ட கதைகள் என்று தனது கதைகள் உருவான விதங்கள் பற்றி அவரே கூறியிருக்கிறார். இவரது கதைகள் பெரும்பாலும் வரது குடும்பப் பின்னணியைச் சார்ந்தவையாகவும் அவர் வாழ்ந்த இடைசெவல் கிராமம் சார்ந்த பின்புலத்தைக் கொண்டவையாகவும் உருவாக்கப்பட்டிருப்பதைச் சிறுகதைகளின் ஊடாக நம்மால் அறிந்துகொள்ள முடியும். பிறகு தான் வாழ்ந்த சென்னை நகர வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டு சில கதைகளை எழுதியிருக்கிறார். அப்படி எழுதப்பட்ட கதைகளில் மிகவும் முக்கியமான கதையாக விளங்குவது ‘காற்று’ சிறுகதை.

கிராமச் சமுதாயம் படிப்படியாக வளர்ந்து நகரச் சமுதாயமாக மாறி வருகின்ற முக்கியமான காலக்கட்டம் 1970. இக்காலக்கட்டத்தில் விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் ஒவ்வொரு கிராமத்தையும் ஒவ்வொரு நகரத்தையும் மிகப்பெரிய பாதிப்புக்கும் மாற்றத்திற்கும் உட்படுத்தின. அத்தகைய மாற்றத்தில் பாதிக்கப்பட்டது வேதகிரி குடும்பம். கிராமத்தில் இருந்து நீங்கி, நகரத்தை நோக்கிப் பயணித்து, ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்கிறார் வேதகிரி. திருமண வாழ்க்கைக்குப் பிறகு நான்கு குழந்தைகள் பிறந்தாலும் மிஞ்சி இருப்பவர்கள் இரண்டு குழந்தைகளே.

திண்ணைகள், மனித வாழ்க்கையில் மிக முக்கியமான சிந்தனைப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு வீடும் திண்ணைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். வழிப்போக்கர்கள் அமர்வதற்கும், காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் ஆசுவாசத்தோடு கதைபேசி உறவுகளோடு உரையாடுவதற்கும், இயற்கையோடு இன்பமாகக் களிப்பதற்கும் முக்கிய இடமாக விளங்கி வந்தவை திண்ணைகள். பிறகு குழந்தைகளின் விளையாட்டு இடமாக மாறிப் போயின. வீட்டைவிட்டுத் தெருவிற்கு வந்தால் குழந்தைகள் கூடுகின்ற இடமாகத் திண்ணைகள் விளங்கின. குழந்தைகளின் அட்டூழியங்களைக் கண்டு வீட்டுக்காரர்களும் இரும்புக் கம்பிகளால் வளையம் போட்டுவிட்டார்கள். குழந்தைகளின் மிகப் பெரிய கொண்டாட்டம் தடுக்கப்பட்டதால் குழந்தைகள் அனாதைகள் ஆனார்கள். அவர்களின் கொண்டாட்டத்தைத் தேடி அலைந்ததில் கற்பகத்திற்கு வாய்த்தது ஒரு திண்ணை. கற்பகத்தைப் போல அந்தத் தெருவில் இருக்கின்ற குழந்தைகள் பலருக்கும் கொண்டாட்டத்தின் இடமாக அந்தத் திண்ணை மாறியது. அதே நேரத்தில் அந்த வீட்டிற்கு வாடகைக்காரராக வந்திருக்கக்கூடியவருக்கு மிகப்பெரிய அளவில் நெருக்கடியாகக் குழந்தைகளின் கொண்டாட்டம் மாறிவிட்டது. குழந்தைகளின் கும்மாளமும் விளையாட்டும் அவருக்குத் தொந்தரவாக மாறின.

குழந்தைகளுக்கு எதிரியாக மாறி, கற்பகத்தையும் மற்றொரு குழந்தையையும் அடித்து நொறுக்கி விடுகிறார். கன்னம் வீங்கி, கண்கள் சிவக்க அடிவாங்கிய கற்பகம், வீட்டிற்கு வந்தபோது அம்மாவின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக, அப்பாவின் கரிசனமான வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தவற்றைக் கூறுகிறாள். என்ன செய்ய முடியும்? ‘அவர்கள் வீட்டுத் திண்ணையில் நீங்கள் போய் விளையாடினால், அவர்கள் அடிக்கத்தான் செய்வார்கள்’ என்று பெற்றோரின் வார்த்தைகளைக் கேட்டு மௌனமானாள் கற்பகம்.

அன்றுமுதல் வீட்டை விட்டு வெளியே செல்வதற்குத் தடைகள் பல. இந்த ஒண்டுக் குடித்தன வாழ்வு என்பது, கற்பகத்துக்குச் சவாலான ஒன்றாக மாறிப்போனது. அம்மாவின் அடுப்படியில் இருந்து எப்பொழுதும் புகைமூட்டம் வந்துகொண்டே இருக்கிறது. மூச்சு விடுவதற்குக்கூட சிரம்மப்பட வேண்டியநிலை. வெளி உலகமும் சுதந்திரக் காற்றும் கற்பகத்தைச் சுண்டி இழுத்தன. என்றாலும் அம்மாவின் கோபத்திற்கும் அப்பாவின் அன்புக்கும் கட்டுப்பட்டு வீட்டிலேயே இருக்கத் தொடங்கினாள். அந்தத் திண்ணை வீட்டுக்காரரின் அடி, இன்னும் அவளது மனத்தில் நீங்காத வடுவாக இருந்து வந்தது. மற்ற குழந்தைகள் எல்லாம் சகஜமாக மீண்டும் அதே திண்ணையில் விளையாடியபோதும் அவளுக்குத் தைரியம் வரவில்லை.

நாட்கள் செல்லச் செல்ல, கற்பகத்தின் எண்ணம் உடலை நலிவடையச் செய்தது . குழந்தையின் மன மாற்றத்தையும் உடல் மாற்றத்தையும் வியப்போடு கண்டுகொண்டிருந்த வேதகிரிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கற்பகம், அப்பாவிடம் நமது வீட்டிலும் திண்ணை கட்டினால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தாள். அவளின் கோரிக்கையைக் கேட்டுப் புன்னகைத்துவிட்டு கடந்து சென்றுவிட்டார் வேதகிரி. நாம் வாங்குகின்ற 40 ரூபாய் சம்பளத்தில் 10 ரூபாய் வீட்டு வாடகைக்குச் சென்று விடுகிறது. நகர வளர்ச்சியின் அசுர வேகத்தில் தனது வாழ்க்கை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறுவதை ஒவ்வொரு நாளும் கவனித்து வருகிறார். அதே நேரத்தில் குழந்தைகளும் வளர்ந்து வருகின்றன.

கற்பகத்தைப் பள்ளியில் சேர்த்துவிட்டால் அவளது மனச் சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்று எண்ணுகிறார் வேதகிரி. அருகில் இருக்கக்கூடிய பள்ளிக்கூடத்தில் கற்பகத்தைச் சேர்த்து விடுகின்றார். கற்பகத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்தச் சிறிய வீட்டில் மனச் சிக்கலோடு புறவுலகின் பரந்த வெளியை நினைத்து ஏங்கிய அவளுக்குப் பள்ளிக்கூடம் மிகப்பெரிய விடுதலையைத் தந்தது. மிக மகிழ்ச்சியோடு பள்ளிக்கூடம் சென்று வந்தாள். புற உலகத்தைச் சுற்றிப் பார்ப்பதும் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதும் மற்ற மனிதர்களின் வாழ்வியல் செயல்பாடுகளை உற்றுநோக்குவதும் அவளுக்குப் பிடித்த செயல்களாக மாறின. ஒருநாள் கற்பகத்திற்கு அப்பா அழைத்துச்சென்ற கடற்கரையைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பள்ளிவிட்ட பிறகு கடற்கரை ஓரமாகச் சென்று வரலாம் என்று எண்ணினாள். பரந்த மணல் பரப்பும் சுதந்திரச் செயல்பாடுகளும் விளையாட்டின் உச்சமும் அவளைச் சாந்தோம் கடற்கரையை நோக்கி நடக்கத் தூண்டின. பள்ளிவிட்ட பிறகு பொடிநடையாகக் கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

பாதையில் ஓடுகின்ற வாகனங்களையும் உயர்ந்து நிற்கின்ற கட்டடங்களையும் வியப்போடு பார்த்துக்கொண்டே நடந்தாள். எதிரில் வருகின்ற மாட்டையும் கன்றுக்குட்டியையும் கவனிக்காமல் திடுக்கிட்டு நின்றுவிட்டாள். பிறகு சுதாரித்துக்கொண்டு மாட்டிற்கு வழிவிட்டு நடக்கத் தொடங்கினாள். வியப்பின் உச்சத்தில் மனித நாகரிகத்தின் முழு ஆற்றலையும் உள்வாங்கிக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள். அவளின் சுதந்திர வேட்கையும் புறவுலகின் பிரம்மாண்டமும் அவளைக் களத்தில் உந்தித் தள்ளின. மகிழ்ச்சி வேகத்தில் சாலைகளைக் கவனமாகக் கடக்கத் தவறிய அவள் எதிரே வருகின்ற லாரியில் அடிபட்டுச் சுக்கு நூறாகி மரணித்துக் கிடந்ததோடு கதை முடிவடைகிறது. காற்று மட்டுமல்ல அவளது உயிரும் சுதந்திரமாக உலாவித் திரியத் தொடங்கின.

இந்தக் கதையின் ஆசிரியர், கற்பகத்தைக் கொலை செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக, வாசகனின் மனத்தைத் துன்பப்படுத்துகிறது. அவளைச் சாந்தோம் கடற்கரை ஓரமாக விளையாட விட்டிருக்கலாம்.  ஆனந்தப் பெருவெளியை அவள் மூலமாகக் கட்டி அமைத்திருக்கலாம். ஆனால் கு.அழகிரிசாமியால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அவரது காலத்தில் கதைக் கட்டமைப்பு என்பது இப்படித்தான் முடிந்திருக்க வேண்டும். இத்தகைய முடிவைத்தான் அவர்கள் விரும்புவார்கள் என்ற மனப்போக்கு அவருக்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் வாசகனுக்கு அந்த முடிவு, ஒரு செயற்கையான செயல்பாட்டை மனத்தில் ஏற்படுத்தி விடுகின்றது.

கதையில் அழகிரிசாமியின் கிராமத்து இயக்கங்கள், கற்பகத்தின் வாயிலாக வெளிப்பட்டு நிற்கின்றன. திண்ணைகள், கிராமப்புற வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பெறுபவை. குழந்தைகளின் சுதந்திரமும் விளையாட்டுக் குதூகலமும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழலில் ஏங்கித் தவித்த நிகழ்வை மறு சிந்தனைக்கு உட்படுத்தாமல் இருப்பதில்லை. அதேபோல திண்ணை வீட்டுக் குடித்தனக்காரர் குழந்தைகளை விரட்டுவதற்குச் செய்கின்ற பிரயத்தனங்களும் பேசுகின்ற சொற்களும் இறுதியில் குழந்தைகளை அடிக்கின்றதும் நாம் ஏதோ ஒரு சூழலில் அனுபவித்ததாக, நேரில் பார்த்ததாக, கேள்விப்பட்டதாக இருக்கின்றன.

மனிதனின் மகிழ்ச்சியானது இன்னொரு மனிதனுக்கு மிகப் பெரிய உளவியல் சிக்கலை ஏற்படுத்துவதை இக்கதையில் காண முடிகிறது. குழந்தைகளின் கொண்டாட்டத்தைக் குடித்தனக்காரரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவரது மனம், கொடூர எண்ணங்களால் கொல்லப்படுகிறது. இதன் வெளிப்பாடாகக் கற்பகத்தை அடிக்கும் அவர் மனத்தளவில் சமாதானம் அடைவதும் நிம்மதி அடைவதும் அவரின் உளவியல் சிக்கலை எடுத்துக் கூறுகின்றன. அதே நேரத்தில் வறுமையில் வாழ்பவர்கள் எதையும் எதிர்த்துக் கேட்க முடியாத, முழுமனத்தோடு ஏற்றுக்கொள்கின்ற ஒரு வாழ்வியல் சிக்கலை இங்கேயும் நாம் காணலாம்.

வாழ்க்கைப் போராட்டம், இருப்பதைத் தக்க வைத்துக்கொள்வதற்கும் சுற்றுச் சூழலோடு முரண்படாமல் வாழ்வதற்கும் எதையும் தனது குற்றமாக எண்ணிக்கொள்வதற்குமான ஒரு சிந்தனை முறை வேதகிரியால் கட்டமைக்கப்படுகிறது. ஒரு சமூகம் இத்தகைய மனிதர்களைத் தனது பொருளாதார, அரசியல் சூழலில் கட்டமைக்கிறது என்பதற்கு வேதகிரியின் வாழ்க்கையும் கற்பகத்தின் மரணமும் சான்றுகளாக அமைகின்றன. அனைத்தையும் பார்த்துக்கொண்டு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இந்தச் சமூகம் சென்றுகொண்டிருக்கிறது. வேதகிரியின் மனைவி, இக்கதையில் பல இடங்களில் கற்பகத்தை இறந்து விடுவதாக அல்லது கற்பகத்தைக் கொன்று விடுவதாகக் கூறுகிறாள்.

கதை ஆசிரியர், கற்பகத்தின் அம்மா மூலமாகக் கற்பகம் இறந்துவிடுவாளோ என்ற ஓர் உணர்வை உருவாக்கி விடுகிறார். சுதந்திரத்தை விரும்புபவர்கள் கொண்டாட்டங்களை நோக்கிப் பயணிக்கக் கூடியவர்கள், சுயமாகச் சிந்திப்பவர்கள் இறுதியில் மரணத்தை அடைவார்கள் என்ற ஒரு தவறான புரிதலை இக்கதையில் கட்டமைத்து விடுகிறார் அழகிரிசாமி. கற்பகத்தின் மரணம் என்பது வறுமையில் வாழ்கின்ற, சுதந்திரத்தை விரும்புகின்ற, புற உலகைத் தன்வயப்படுத்த எண்ணுகின்ற ஒரு மனிதனது வலிமைக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியாக இருப்பதைக் காண முடிகிறது.

இக்கதையில் வேதகிரி, அவருடைய மனைவி, கற்பகம், கற்பகத்தின் தம்பி தற்சார்புடைய குற்ற உணர்ச்சிக்கு உட்பட கூடியவர்களாக இருக்கிறார்கள். சிக்கலான வாழ்க்கைச் சூழலுக்கும் அடிமைத்தனத்திற்கும் இறுதியில் கற்பகத்திற்கு ஏற்படுகின்ற மரணத்திற்கும் சமூகச் சூழலே காரணம் என்பதை உணர்த்தத் தவறி விடுகிறதும், அதற்கு மாற்றாகச் சுய கழிவிரக்க உணர்ச்சியும் எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டுமென்ற போராட்டமும் மேலும் இக்காலக்கட்டத்தின் சமூக நோய்க்கூறை வெளிப்படுத்தியும் இருக்கிறது கதை.

ஒரு சமூகத்தில் மனிதர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், அவர்களின் வாழ்க்கைச் சூழல் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, இந்த வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்துவிட்டு செல்வதற்காகப் போராடும் மனிதர்களின் வாழ்க்கை எந்தச் சமூகத்திற்கும் ஏற்றதாகவும் சமூகச் சார்பற்றதாகவும் தனித்து விடப்பட்ட பலூனைப் போல அனாதையாகச் சுற்றி திரிவதைக் காணமுடிகிறது. ஒவ்வொரு மனிதனும் இந்தச் சமுதாயத்தின் பிரதிபலிப்பு, இந்தச் சமுதாயத்தின் ஒரு கண்ணி, இந்தச் சமுதாயத்தின் முக்கியமான இடம் என்பதை உணராமல் அல்லது உணர்த்தப்படாமல் அனைத்திற்கும் தானே காரணம் என்ற பயிற்றுவிப்பு இங்கே வாசகனை ஆழ்ந்த கழிவிரக்கம், கடுமையான கோபம், சமூகத்தின் மேல் பல கேள்விகளுக்கும் ஆட்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் இந்தச் சமுதாயத்தின் இயங்குதளத்தில் முக்கிய கண்ணியாக இருந்தபோதிலும் அது அவனுக்கு உணர்த்தப்படாமலேயே இந்தச் சமூகம் அவனைச் சுரண்டிப் பிழைப்பதை வேதகிரி வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது.

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கைச் சிக்கலுக்குத் தான் மட்டுமே காரணம் என்ற பயிற்றுவிப்பும் உலகின் சுரண்டலைப் பற்றிய அக்கறையும் இக்கதையில் கூடுதல் கவனத்தைப் பெறுகின்றது. கற்பகம் இறுதியில் இறந்து விடுவது என்பது எந்த ஒரு மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத சமூகத் தற்கொலையாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கதையும் மொழிதலும் – 4: கு. அழகிரிசாமியின் ‘காற்று’

  1. காற்றைத் தேடியவள் காற்றாகவே மாறிவிடுகிறாள். காற்றோடு கலந்துவிடுகிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *