தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 24

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

கருத்துக்களே உவமமாகும் கவிதைகள்

முன்னுரை

கவிதைகளில் உவமை அமையும் பாங்கு பற்றி ஆராயும் தொல்காப்பியம் ஒரு இன்றியமையாக் குறிப்பினைத் தருகிறது. சில நேர்வுகளில் விளக்கப்பட வேண்டிய கருத்து அல்லது பொருள் உவமையாகிவிடக்கூடும். அவ்வாறு அது உவமையாகச் சொல்லப்படுங்கால் அதனை உவமமாகவே கொள்ள வேண்டுமேயன்றி உபமேயமாக அதாவது பொருளாகக் கருதி மயங்குதல் கூடாது. உவமம் அகத்திணைக்கே உரியது என்பது தொல்காப்பியம் காட்டும் தமிழ்க்கவிதைக் கோட்பாடு. அகம், புறம் என்னும் பொருள் வரையறையின்றி உவமம் பொது ஆளுகைக்கு உட்பட்டது தொல்காப்பிய நெறியின் நெகிழ்ச்சியாகவே கருத வேண்டும். இதன் தொடர்ச்சியாக அல்லது வளர்ச்சி நிலையாக ஒரு கருத்தே  மற்றொரு கருத்து விளக்கத்திற்கு உவமமாக அமைந்திருக்கும் நிலையும் ஏற்பட்டது. எனவே பொருளுக்கு உவமம், பொருளே உவமம், பொருளுக்கு மற்றொரு பொருளே உவமம்  என்னும் மூன்று நிலைகளைக் காணலாம். இதில் ‘கருத்துக்குக் கருத்து உவமம்’ என்னும் மூன்றாம் நிலையைப் பற்றிய சில கருத்துக்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

உவமங்களின் படிநிலை வளர்ச்சி

உவம வகைகளையும் அவற்றின் நிலைக்களங்களையும் அதாவது எந்தச் சூழலில்  உவமம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் துல்லியமாக ஆராய்ந்திருக்கும் தொல்காப்பியம், பொருளையே உவமமாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறது. படைப்பிலக்கியக் கூறுகளைப் பற்றி ஆராயும் ஆய்வறிஞர்களின் வியப்புக்குக் காரணமான அமைப்பு இது. சிங்கம் போலப் பாய்ந்தான் என்றால் சரி. ‘இவனைப் போலச் சிங்கம் பாய்ந்தது’ என்றால் அது புதுமை. சிந்தனை மாற்றத்தின் வெளிப்பாடு. இதற்குத் தொல்காப்பியம் ஏற்பளித்திருக்கிறது.

பொருளே உவமம் செய்தனர் ஆயினும்
மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்

என்னும் நூற்பா மேற்கண்ட கருத்தை உறுதி செய்யக் கூடும். ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகே தொல்காப்பியர் இந்நூற்பாவை அமைத்திருக்க வேண்டும். ‘இருதிணைப் பொருள்களுள் இவையெல்லாம் உவமமாக வரும்., இவையெல்லாம் பொருளாக வரும்’ என்னும் வரையறை தமிழில் இல்லை. கவிஞனின் சிந்தனைப் போக்குக்கு ஏற்றவாறு அமையும் உத்தி அது.

வருமுலை யன்ன வண்முகை உடைந்து
திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை” 

என்னும் சிறுபாணாற்றுப்படை வரிகளில் ‘வருமுலையன்ன வண்முகை’ என உவமம் பொருளானது காணலாம். கவிஞன் நோக்கில் வண்முகை பொருளானதே இதன் காரணம்.

அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரின் தோன்றும்

‘அணங்குகொல்? ஆய்மயில் கொல்? எனத் தலைவிக்கு மயிலை உவமிப்பதும் உண்டு. மேற்கண்ட குறுந்தொகைப் பாடலில் கண்டுள்ளவாறு மயிலுக்குப் பூக்கொய்யும் பெண்ணை உவமமாக்குவதும் உண்டு. திருக்குறள் தலைவிக்கு மயில் உவமமானால், குறுந்தொகை மயிலுக்குப் பெண் உவமமாகிறாள்.  மயில் உவமையாகத்தான் வரவேண்டும்., பெண் பொருளாகத்தான் வரவேண்டும் என்னும் கட்டுப்பாடு தமிழில் இல்லையென்பதற்கு இவை போல்வன போதுமான சான்றுகளாகலாம்.

ஈரோட்டுப் பெரியாரின்  சட்டைபோல
இருண்ட கடல், அண்ணாவின் பேச்சைப் போல
நீரோட்டம்., சாண்டில்யன் கதையைப் போல
 நீண்டமலை

ஆகியவை எல்லாம் நிலவில் இருப்பதாகக் கற்பனை செய்கிறார் கவிஞர் சுரதா.  நிலவுக்குக் கவிஞர் சென்றதே கற்பனையில்தான். கற்பனை நிலவில் அவர் கண்ட கடலின் கருப்புக்குத் தந்தை பெரியாரின் கருப்புச் சட்டைதான் நினைவுக்கு வந்திருக்கிறது. அங்கே இருந்த நீரோட்டத்தைக் கண்டவுடன் பேரறிஞர் அண்ணாவின் ஆற்றொழுக்கான பேச்சு அவருடைய நினைவுக்கு வந்திருக்கிறது. மலைத்தொடர்களைக் கண்டவுடன் சாண்டில்யன் கதை நினைவுக்கு வந்திருக்கிறது. அறிந்தவற்றைக் கொண்டு அறியாதனவற்றிற்கு உவமை சொல்ல வேண்டுதலின் இங்கே பொருள்கள் உவமமாகின்ற நிலைப்பாட்டைக் காணமுடிகிறது. சுரதாவுக்குப் பெரியாரின் சட்டை தெரியும். அண்ணாவின் பேச்சறிவார். சாண்டில்யன் நாவலையும் அறிவார். ஆனால் நிலவும் அதன் அமைப்பும் தெரியாது. கற்பனையில் மட்டுந்தான் தெரியும் என்பதால் உவமங்கள் இப்படி அமைந்திருக்கின்றன.

கருத்துக்கு உவமம் கருத்தே

பொருளுக்கு உவமம் அல்லது கருத்துக்கு உவமம் என்பதைத் தெளிவாக்கிக் கொண்டால்தான் கருத்துக்குக் கருத்து உவமம் எப்படி அமைகிறது என்பதைத் தெளிவாக்கிக் கொள்ள இயலும். சான்றாகத்,

தீயவை  செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடி உறைந்தற்று

என்பது ஒரு குறட்பா. தீயவற்றைச் செய்பவன் கெடுவான். இது உறுதி. இந்த உறுதிக்கு ஓர் உவமத்தைப் பயன்படுத்துகிறார் திருவள்ளுவர். நடந்து செல்கிறவனுடைய நிழல் அவனுடைய அடிக்குள்ளே சென்று அடங்குவது போல. அதாவது அவனுடைய நிழல் அவனுக்குள்ளே அடக்கம்! தீவினை நிழல் போன்றது. வினைப்பயன் செய்தவனையே சென்று சேரும். இந்தக் கருத்தினை விளக்குவதற்கு அடிக்குள் நிழல் மறைவதை உவமமாக்குவதுதான் பொருளுக்கு உவமம்.  இப்போது இந்த உவமத்திற்குப் பதிலாக இன்னொரு கருத்தினையே உவமமாக்குவது. அது எப்படி? இப்படி!

இன்மையுள் இன்மை விருந்து ஓரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

இதுவும் ஒரு குறட்பா. பொதுவாக நாம் பற்றாக்குறையை வறுமை என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். திருவள்ளுவர் இதன் பரிமாணத்தை இன்னும் கூடுதலாக்குகிறார். அதாவது ஒரு பண்பாடு முற்றிலும் அழிகிற அளவுக்குப் பொருளாதாரத்தில் ஒருவன் சந்திக்கின்ற நிலையே வறுமை என்கிறார். ‘விருந்தோம்பல்’ என்பது தமிழர் பண்பாடு. ஒரு அதிகாரத்தையே இதற்காக ஒதுக்கிப் பேசுகிற அளவுக்கு அது உயர்ந்த பண்பாடு. வீட்டிற்கு வந்த விருந்தினரை அவர் வருவது எந்தப் பொழுதாயினும் விருந்தோம்புவது கடமை. அக்கடமையைச் செய்ய முடியாது தவறுகிற நிலையே உண்மையான வறுமை நிலை. இது ஒரு கருத்து.

‘பொறுமை’ என்பது பொறுமையாக இருப்பதல்ல. பிறர் ஏசுவதைப் பொறுத்துக் கொள்வது என்பது சாதாரணம். திருவள்ளுவர் இதன் பரிமாணத்தைக் கூடுதலாக்குகிறார். பேசுகிறவனை வைத்து அந்தப் பொறுமையை அளவிடுகிறார். பொறுமை எப்போது சிறக்கிறது என்றால் அதாவது எது பொறுமை என்றால் அறிவற்ற பேதையர் சொல் பொறுக்கிற நிலைதான். அறிவற்ற பேதையர் பேசுகிறபோது நமக்குச் சினம் வரும். தாக்கலாமோ என்ற எண்ணம் வரும். துரியோதனன் அவையில் திருதராட்டிரன் செய்த செயலைத் தருமன் பொறுத்துக் கொண்டது போல. எனவே சாதாரண மக்களையோ அறிவாளிகளையோ பொறுத்துக் கொள்வது பொறுமையாகாது. பேதைகளைப் பொறுத்துக் கொள்வதுதான் பொறுமை. இது ஒரு கருத்து.

இப்போது குறட்பாவை நோக்கினால் இரண்டு கருத்துக்கள் அதாவது இரண்டு வாழ்வுண்மைகள் புலப்படும். இரண்டு கருத்துக்கள் இரண்டு உவமங்கள் என்பதைப் பெற முடியும்.

  1. விருந்தோம்ப இயலாத நிலை வறுமையுள் வறுமை என்பது போலப் பேதையரைப் பொறுத்துக் கொள்ளுதலே பொறுமையாகும்.
  2. பேதையரைப் பொறுத்துக் கொள்ளுவதே பொறுமை என்பது போல விருந்தோம்ப இயலாத நிலையே வறுமையுள் வறுமை எனப்படும்.

இந்த நுட்பத்தைப் பதிவு செய்ய வேண்டியே இவ்விரண்டு கருத்துக்களையும் ஒன்றற்கொன்று உவமமாக்கிக் கொள்ளுமாறு அமைத்துக் காட்டுகிறார்.  தனித்தனி உவமங்கொண்டு விளக்கினால் இரண்டு கருத்துக்கள் அவற்றுக்கான உவமங்கள் இரண்டு என படைப்பு விரியும். அணுவைத் துளைத்து உலகியல் சொன்ன திருக்குறளுக்கு இது பொருந்தாது அல்லவா? எனவே இதற்கு அது உவமம். அதற்கு இது உவமம் என்றாயிற்று என்பதை விளங்கிக் கொள்ளலாம். வாழ்வுண்மைகளைத் தொடர்ச்சியாக  வலியுறுத்திக் கொண்டே வருவதே நீதிநூல்களின் வெளிப்பாட்டு உத்தியாதலின் இத்தகைய கருத்துக்குக் கருத்தே உவமம் என்னும் நெறி பின்பற்றப்பட்டுள்ளது எனவும் அனுமானிக்கலாம்.

உடலை விரும்பும் உயிரும் சூதினை விரும்பும் சூதனும்

உடலுக்கு உணர்ச்சியில்லை. உயிருக்குத்தான் உணர்ச்சி. அந்த உயிர்தான் எல்லாவற்றையும் உணர்கிறது. எல்லா உணர்வுகளும் சுவைகளும் உயிருக்கானதே. பிணத்துக்கு இனிப்பு தெரியாது. கசப்பு புரியாது. இத்தகைய சிறப்புடைய இந்த உயிர், சிறப்பே இல்லாத உடலை விரும்புகிறது! உடலுக்கு நோய்வந்த போதும் அது அறுக்கப்படும்போதும் அது அழுகும் போதும் உயிர் அழுகிறது! கண்ணீர் உயிர்த்துடிப்பு! உயிரின் வெளிப்பாடு! எனவே எவ்வளவுதான் துன்பத்தில் உழன்றாலும் உயிர் உடலை விரும்புகிறது என்பது பெறப்படும்.  இந்தக் கருத்து அதாவது உவமேயம் விளக்கப்படல் வேண்டும்!. கருத்தைக் கருத்தாகவே சொன்னால் விளக்கம் பெறுவதைவிட உவம வாயிலாகச் சொன்னால் கூடுதல் விளக்கம் பெறப்படும். அதனால் திருவள்ளுவர் மற்றொரு கருத்தினை உவமமாக்குகிறார்.

சூது விளையாடுபவன் இழப்பான்!. ‘இழப்பு வருகிறது வேண்டாம்’ என்றால் ‘விட்டால்தான் பிடிக்க முடியும்’ என்பான். நாம் கவனித்திருக்கிறோம். இழப்பு என்பது நன்கு தெளிவாகத் தெரிகிறது.  ஆனால் அதன் மேல் வைத்த காதலைச் சூதனால் விட முடியவில்லை. இது உவமம். திருவள்ளுவர் எழுதுகிறார்,

இழத்தொறும் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர்

‘எத்துணைதான் துன்பம் வந்தாலும் உடலையே விரும்பும் உயிரைப்போல், எவ்வளவுதான் இழந்தாலும் சூதன் சூதினையே விரும்புவான்’ என்பது மேற்கண்ட குறட்பாவின் கருத்தாகும். உடல்நலம் வலியுறுத்தும் மருந்துக்குச் சற்றும் தொடர்பில்லாத சூதினை ‘மருந்து’ என்னும் அதிகாரத்தில் உவம அளவையால் திருவள்ளுவர் வலியுறுத்துவதைக் காணலாம்.

உயிரினது அறியாமை கூறுவார் போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்தாகலின், அதனை யாப்புறுத்தற் பொருட்டு உவமமாக்கிக் கூறினார்.”

என்பது பரிமேலழகரின் உரை நுட்பம். அழியக் கூடிய உடம்பின் மீது காதல் கொள்ளுவது உயிரின் அறியாமை. இழப்புக்குக் காரணமாகும் சூதின் மேல் காதல் கொள்ளுவது சூதனின் அறியாமை. இதுதான் அழகர் உரையின் சாரம்.

குறைந்தால் இன்பம் கூடினால் துன்பம்!

அளவாக உண்ணுதல் நோய்க்குத் தடை. உடல் நலத்திற்கு நன்மை. உடல் நலம் பேணுவார்க்கு இது ஒரு கருத்து. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதால் அளவாக உண்ணுதல் செல்வம் சேர்வதற்குக் காரணி என்பது பெறப்படும். படவே வாழ்வுக்கு அது இன்பம் என்பதும் பெறப்படும். ஆகக், ‘குறைவு நலம்பயக்கும்’ என்பது அறிந்து உண்பவனிடம் இன்பம் நிலைபெறும். இந்தக் கருத்தினைத் திருவள்ளுவர் உவமமாக்கியிருக்கிறார். ஆக்கி, அதற்கு எதிர்மறையான கருத்தினையே உவமேயம் ஆக்கியிருக்கிறார். வெகு நுட்பமான அணுகுமுறை இது! குறைவுக்கு எதிர்மறை நிறைவு! இது பெருநிறைவு! அதாவது அளவுக்கு மிக அதிகமாக உண்பது. ‘பேரிரை’ உண்பவனுக்கு நோய் உறுதி என்பது சொல்லாமலே பெறப்படும். எனவே செல்வம் சேராது. இது பொருளாகிய உவமேயம். திருவள்ளுவர் எழுதுகிறார்,

இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேரிரையான்கண் நோய்

இதற்குச் சிறப்புரை எழுதிய பரிமேலழகர் ,“விதி எதிர்மறைகளை உவமமும் பொருளும் ஆக்கியது இரண்டானும் பெறுதற்கு” என எழுதிக்காட்டும் விளக்கம் உவமமும் பொருளுக்குரிய சிறப்பைப் பெறுகிறது என்பதை விளக்குகிறது. ‘இழிவறிந்து உண்’ என்பது விதி. ‘கழிபேரிரை உண்ணாதே’ என்பது எதிர்மறை. இரண்டின் கருத்தும் ஒன்றாகலின் ‘இரண்டானும் பெறுதற்கு’ என்று கூறினார். அதாவது விதியால் எதிர்மறையைப் பெறவேண்டும். எதிர்மறையால் விதியைப் பெறவேண்டும். இவ்வாறு ஒரு கருத்தை மற்றொரு கருத்துக்கு உவமமாக்கும் போக்கு, இன்றைய புதுக்கவிதை உலகிலும் நிலைபெற்றுள்ளது சுட்டத்தகுந்தது.

தேசத்தைப் போலவே   
நம் வாழ்க்கையும்
இன்று
தெருவில் நிற்கிறது

எனக் காதலன் ஒருவன் கூறுவதாக அமைந்த கவிதை வாரிகளில் முச்சந்திக்கு வந்த காதலுக்குத் தெருவுக்கு வந்துவிட்ட தேசத்தின் சிறுமை உவமமாக்கப்படுகிறது.

தேசமும் காதலும்

தனிமனிதனின் ஒழுகலாறுகள் சமுதாயத்தின் போக்கையும் சமுதாயத்தின் போக்கு தனிமனிதனையும் பாதிப்பது இயல்பு. ‘காதல்’ என்பது ‘உயிர்த்துடிப்பு’ என்ற நிலையிலிருந்து கீழிறங்கிச் சமுதாயச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது என்ற நிலைப்பாட்டினாலும், பருவக்கிளர்ச்சி எனக் கருதப்பட்டதாலும்,  ‘திருமணத்தின் தொடக்க நிலை’ எனக் கருதாது, ‘தனித்ததொரு வாழ்வியல் கூறு’ என்னும் கருத்தியல் மேலோங்கி நிலைத்துப் போனதாலும் ‘முழுமையடைந்த காதல்’ என்பது எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளது. சங்க அகவிலக்கிய மரபிலிருந்து தமிழின் எந்த ஒரு மரபுநிலைத் தொடர்ச்சியும் காதலைத் ‘தனித்ததொரு வாழ்வுநிலை’ எனக் கருதியதற்கான சான்றில்லை.

‘வணங்கத்தக்க தேசத்தின் பெருமை முச்சந்திக்கு வந்ததுபோல’ என்னும் உவமையால், ‘உயிரின் பெருமை கூற வேண்டிய காதலும் சமுதாயத்தின் கேலிக்கு ஆளாகித் தெருவுக்கு வந்துவிட்டது’ என்னும் கருத்து விளக்கமுறுவதைக் காணலாம். ‘தேசம் தெருவுக்கு வந்துவிட்டது’ என்பதும் ஓர் உண்மை. ‘காதல் தெருவுக்கு வந்துவிட்டது’ என்பதும் ஓர் உண்மை. ஓருண்மையே பிறிதொரு உண்மைக்கு உவமமாகியிருப்பது அதாவது ஒரு கருத்தே மற்றொரு கருத்திற்கு உவமமாகியிருப்பது புதுக்கவிதை வரையிலும் தொடர்கிறது என்பது இதனால் புலப்படலாம்.

நிறைவுரை

வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு வகையாகச் சிறப்பு, நலன், காதல், வலி, கீழ்மை என்னும் ஐந்து நிலைக்களன்களில் பரிமாறப்படும் கவிதை உவமங்கள் அப்படியே தேங்கிவிடாமல்  விரிவடைந்து கொண்டே வந்திருக்கிறது., முற்சொன்ன நான்கு வகையாக அமைந்த உவமங்கள் என்பது முதல் நிலை. அவை விளக்கும் பொருள்களே உவமமாக அமைந்தது அடுத்த நிலை. இவையிரண்டனையும் கடந்த நிலையில் கருத்துக்கு மற்றொரு கருத்தே உவமம் என்னும் நிலை தமிழ்க்கவிதைகளின் உவமக் கொள்கைகளின் கொடுமுடி எனலாம். மானுடம் சிறக்க வந்த தமிழிலக்கியங்களுக்கான வரையறையைத் தரும் தமிழிலிலக்கணங்கள் வளர்ச்சி மற்றும் புதுமைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் உடையன என்பதை இதனால் உணர்ந்து கொள்ள இயலும்!

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *