திருச்சி புலவர் இராமமூர்த்தி

வரலாறு

திண்ணனார்  குடுமித்தேவரை  தரிசித்தபோது இருள் பரவத்தொடங்கியது. மூங்கிலிலிருந்து முத்துக்கள் உதிரும் மலைமேல் நிலவு ஒருபக்கம் ஒளி வீசியது. குகைகளில் நாகம் உமிழ்ந்த மணிகள் வெயில்போல் ஒளி வீசின. அங்கிருந்த பலவகை மாணிக்க மணிகளின் ஒளியும், பச்சைக்கற்கள் நீல மணிகள் ஆகியவை உண்டாக்கிய ஒளியும் சூரிய சந்திரர் போல் விளங்க அதுகண்டு இருளும் இரவும் ஒதுங்கின, ஒளிவீசும்  தீப மரங்கள், குரங்குகள் குகையில் வைத்த மணிகளாகிய விளக்குகள், ஐம்புலம் அடங்கியவரின் தியானசோதி ஆகியவை எப்போதும் இருப்பதால் திருக்காளத்தி மலையில் இரவின் இருளே இல்லை. அங்கே கண் துயிலாத திண்ணனார்  நள்ளிரவில் பறவைகள் எழுப்பும் ஒலி கேட்டார். இறைவனுக்கு அமுது கொண்டு வர எண்ணி அங்கிருந்து நீங்கினார். பன்றி முதலாயின எழுந்து  இயங்காத போதில் கையில் வில்லுடன் திண்ணனார் சென்றார். திண்ணனார் சென்ற அழகை உலகிற்குக் காட்ட, முகம் காட்டிய கதிரவன் அவர் வேட்டையாடுவதைக் காட்ட இருளை நீக்கிக் கதிர்க்  கைகாட்டினான்.  அப்போது, சிவாகம விதிப்படிப் பூசை புரிவதற்கேற்ற மலரும், நீரும் கொண்டு  மலைமேலிருந்த மருந்தாகிய பெருமானை வழிபடும் வழக்கமுடைய  சிவகோசரியார்,  சிந்தையில் பக்தியுடன் தேவர் தலைவராகிய பெருமானை நோக்கிச் சென்றார்.

அங்கே இறைவன் திருமுன்பு வெந்த இறைச்சி, எலும்பு ஆகியவற்றைக் கண்டு விலகியோடி, ‘’உசிதமற்ற இந்தப் பொருள்களைக் கண்டு, ‘’ஐயோ கெட்டேன், இதனை யார் செய்தார்?’’ என்று மனமழிந்தார்.  சற்றும் அச்சமற்ற வேடுவரே இதனைச்  செய்திருப்பார். இவ்வாறு அவர் செய்து போகலாமா?இது நின் திருவுளத்துக்கு ஏற்றதோ? ஏறி பதறி அழுதார்.

மலைமேல் எழுந்தருளும் இறைவனின் பூசனை தாமதமாகியதால் இனியும் நான் உயிர்வாழ்வதோ? என்று கூறி அங்கிருந்த இறைச்சி, எலும்புடன் இலையும், செருப்படி மண்ணும், நாயடி மண்ணும் தம் கையில் இருந்த திருவலகால்  ஒதுக்கித்  தள்ளினார். பின்னர் பொன்முகலி  நீரில் மூழ்கி விரைந்து வந்தார்;  உசிதமற்ற செயலால் விளைந்த தீமையினை நீக்கப் பவித்திரமான கழுவாய் புரிந்தார்; பின்னர் திருமஞ்சனம் முதலாகிய முழுமையான வழிபாட்டைப் புரிந்தார். இறைவன் திருவடி பணிந்தார்.

பணிந்தெழுந்து, “தனிமுதலாம் பர” னென்று பன்முறையால்
துணிந்தமறை மொழியாலே துதிசெய்து, சுடர்த்திங்கள்
அணிந்தசடை முடிக்கற்றை யங்கணரை விடைகொண்டு
தணிந்தமனத் திருமுனிவர்  தபோவனத்தி  னிடைச்சார்ந்தார்.

பொருள்

பணிந்து எழுந்து, “எல்லார்க்கும் சிவபெருமானே முழுமுதற் கடவுளாவார்” என்று பலமுறையாலும் துணிந்து ஒலமிடும் வேத மந்திரங்களினாலே துதித்து, ஒளியையுடைய சந்திரனை யணிந்த சடைக்கற்றை முடி யினையுடைய அங்கணராகிய காளத்தியப்பரிடம் விடைபெற்றுக்கொண்டு, தணிவு பெற்ற மனமுடைய சிவகோசரியாராகிய திருமுனிவர் தாம் தவஞ் செய்யும் வனத்திற் சார்ந்தனர்.

விளக்கம்

“தனிமுதலாம் பரன்” என்று பன்முறையால் துணிந்த மறை மொழி – விசுவகாரணன், விசுவரூபன், விசுவாதிகன், விசுவசேவியன் என்பன முதலாக வேதங்களாலே பலவகையாலும் துணிந்து துதிக்கப் பெற்ற வேதமந்திரங்கள்.

பன்முறையால் என்பது,  பல முறைகளாலும்  என்பதைக் காட்டியது. பன்முறையாவன நமக சமகங்களிற் கூறியபடியும் மற்றும் பலபடியும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் எனத் துணிந்து துதித்தல். இவற்றை, சிவபெருமான் யாவுமானவர்; அவரே யாவுமல்லாதவர்; சிவனை ஒப்பாரும் அவனின் மிக்காருமில்லை; சிவன் எண்குணமுடையவர்; சிவபெருமான் ஒருவரே பிறப்பில்லாதவர்; சிவன் வேதாகம் முதலிய எல்லா நூல்களுக்குங் கர்த்தா; சிவபெருமான் எண்ணிறந்த கண், கால், சிரம் முதலியவற்றை யுடையவர்; அவர் எல்லா நாமங்களாலுங் கூறப்பட்டு எல்லாமாயுள்ளார்; அவர் சோதியுட் சோதி; சிறியதிற் சிறியர்; பெரியதிற் பெரியர்; சிவனே பசுபதி; அவரே தேவதேவர் என்பன வேதவாக்கியங்களாகும்.

மறை மொழி – அதர்வசிகை, சுவேதாசுவரம் முதலியன. இங்குப் பவன் முதலிய எட்டு நாமங்களாற் றுதித்துப்பூசை முடிவில் அட்டபுட்பம் சாத்தும்முறை குறிக்கப்பட்ட தென்பார்.

சுடர்த்திங்கள்   என்ற தொடர்,  முன்னர்க் குறைந்த ஒளியை மீண்டும் சிவனருளால் வளரப்பெற்று அந்த ஒளியை உணர்த்தியது.

திங்கள் – மூன்றாம் பிறைச் சந்திரன். திருவருளாலே வளர்த்த ஒளி என்று குறிக்கச் சுடர் என்று சிறப்பித்தார்.

திங்கள் அணிந்தசடை – அங்கணர் – இவ்விரண்டும் சேரக் கூறியது, இறைவர் தமது திருமுன்பே இவ்வநுசிதம் நிகழப் பார்த்தனரே என்றெழுந்த முனிவரது மனக்கொதிப்பையும் பதைப்பையும் மாற்றி அங்கண்மையுடன் அவர்க்கு உண்மையன்பின் திறத்தைத் தேற்றம்பெற உணர்த்தியருளும் திருவருளின் அங்கண்மை பற்றியாம்.

தணிந்தமனம் – காம முதலிய தீக்குணங்களை யெல்லாம் வென்று? ஆன்ற சாந்தமுடைய மனம். இது பெருமுனிவர்களது மனத்தின் நன்மை யென்பார் திருமுனிவர் என்றார். இக்கருத்துபற்றியே வரும்பாட்டிற் பெருமுனிவர் என்றதும் காண்க.

“அறத்திற்கே யன்புசார் பென்பவறியார்,
மறத்திற்கு மஃதே துணை” என்றதிருக்குறளும் காண்க.

“பற்றி லாநெறிப் பரசம யங்களைப் பாற்றும்,
செற்ற மேவிய சீலமு முடையராய்த்திகழ்வார்”.

என்றதும், “மறைக ணிந்தனை சைவ நிந்தனை பொறாமனமும்” என்று திருநந்திதேவர் கேட்ட வரமும் காண்க. முன்னர்க்கொதித்த மனம் பூசையினால் தணிந்த மனமாயிற்றென்று உரை கூறுவாருமுண்டு.

விடைகொண்டு – வழிபாட்டின் முடிவில் இறைவனை வணங்கி விடை பெற்றுச் செல்லுதல் மரபு.

இப்பாடலில், சிவகோசரியார்  உள்ளத்துடிப்பும், பதற்றமும், பின்னர் அவர் செய்த கழுவாயும், மீள் பூசையும், வேடன் செய்த  வழிபாட்டின் மேல் கொண்ட சினமும்  புலப்படுகின்றன. இச்செயல்  இயல்பானதே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *