பாஸ்கர்

(நடிகர் திலகத்தின் நினைவு நாள் இன்று)

சைக்கிள் ஓட்டுவதில் நண்பர் சிதம்பரம் கெட்டிக்காரன். பெரும் பொறுமை. எந்த இடர்ப்பாடும் இல்லாமல் ஓட்டும் அந்த லாகவம் எனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது. எங்கள் இணைப்புப் பாலம், இரவுக் காட்சி. அது வெலிங்டனா, சித்ராவா என்று நினைவு இல்லை. கணேசனைப் பார்ப்பது எங்களுக்கு ஒரு பெரும் சந்தோஷம். இதில் மணியும் எங்கள் கட்சி.

அவனுடன் நான் செல்வது தனிப் பந்தி. விடிவெள்ளியில் தோரணம் கட்டும் காட்சியில் அவர் காட்டும் அதிர்ச்சியோ, அல்லது பச்சை விளக்கில் அவர் திருக்குறள் சொல்லும் அழகோ, உயர்ந்த மனிதனில் அசோகனிடம் கைகளை மடக்கி அவன் நல்லா பைட் பண்றாண்டா எனச் சிவகுமாரைப் பார்த்துச் சொல்லும் பாங்கோ.. தெய்வ மகனில் தம்பியிடம் பணம் கொடு எனக் கண்களால் பேசுவதோ… எனக் கணேசனைச் சுமந்துகொண்டே போகலாம்.

எந்தப் பெரிய பின்புலமும் இல்லாமல் நாடகத் திறமையைக் கொண்டு ஒரு பாத்திரத்தில் ஊறி, அதைச் செம்மையாகக் கொண்டு வருவதில் அவருக்கு நிகர் இல்லை.

ஒரு படத்தில் அவர் பாட அமரும் முன் அந்தப் பெரிய சபையைப் பார்த்துப் பிரமித்து பயப்படும் நிலையை முகத்தில் காட்ட, சிரித்தவாறு வியர்வையைத் துடைத்துக்கொள்ளும் ஒரு பிரில்லியன்ட் பெர்போர்மேர் அவர்.

பாசமலரில் அவர் ஜெமினியோடு பேசும்போது பென்சிலைச் சீவிக்கொண்டே முறைக்கும் முறைப்பு நினைவு உண்டா? எனக்கு விஸ்வநாதன் இடது என்றால், நடிகர் திலகம் வலது கண்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *