(Peer Reviewed) தன் சீர் தனது ஒன்றின் தன் தளையாம்

4

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006. 
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

(தமிழ் யாப்பியல் மரபில் சீர் மற்றும் தளை பற்றிய ஓர் ஆய்வு)

ஆய்வு அறிமுகம்

மரபுக்கவிதை, புதுக்கவிதை எனத் தமிழ்க் கவிதைகள் இரு வகைபாட்டுக்குள் அடங்கலாம். பொதுவாக யாப்பிலக்கண அடிப்படையில் எழுதப்படும் கவிதைகளை மரபுக்கவிதைகள் என்பது பெருவழக்கு. உண்மையில் ‘மரபுக்கவிதை’ என்னும் சொல்லுக்கான பொருளடர்த்தி இன்னும் ஆழமாயினும் ‘யாப்பில்லாதவையெல்லாம்’ புதுக்கவிதையாகக் கொள்ளப்படுதலின் ‘யாப்பு உள்ளவையெல்லாம்’ மரபுக்கவிதை எனக் கருதப்பட்டிருக்கலாம். இரண்டிலும் ‘கவிதை’ என்பது தனி., எழுத்து மரபு, சொல் மரபு, பொருள் மரபு, கூற்று மரபு, வழக்கு மரபு என மரபு என்பது பல பரிமாணங்களையும் உடையது. இந்த அடிப்படையில் அமைந்த கவிதைகள் மிகச் சிலவே. யாப்பமை கவிதைகளுக்கான வடிவக் கோட்பாடு ‘யாப்பிலக்கணம்’ என்ற பொருண்மையில் அமைந்துள்ளது. இந்த யாப்பு, செய்யுள் உறுப்புக்களைத் தமது உள்ளடக்கமாகக் கொண்டது. அவ்வுள்ளடக்கம் தொல்காப்பியச் செய்யுளியலில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தாலும் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம் என்னும் எட்டு உறுப்புக்களைக் கொண்டது என்பது யாப்பருங்கலக்காரிகை என்னும் யாப்பிலக்கண நூலின் கருத்து. ‘எழுத்து, அசை, சீர், பந்தம், அடி, தொடை, பா, இனம் கூறுவன்’ என்பது காரிகை.  இவ்வெட்டு உறுப்புக்களுள் ‘தளை’ என்னும் உறுப்புப் பற்றிய ஓர் ஆய்வாக இந்தக் கட்டுரை அமைகிறது. ‘யாப்பருங்கலக் காரிகை’ என்னும் நூல், அதற்குக் குணசாகரர் என்னும் சான்றோர் எழுதிய உரை ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது.

கட்டுரைத் தலைப்பு

‘தண்சீர் தனதொன்றின் தன் தளையாம்’ என்னுந் தலைப்பில் இக்கட்டுரை அமைகிறது

ஆய்வுக் கருதுகோள்

தமிழ் யாப்பியல் மரபில் அமைந்த எழுவகைத் தளைகளுக்கான பெயர் மற்றும் பொருளமைதியில் (‘நின்ற சீருக்கே தளை’ என்னும் கருத்தமைவில்) ஒத்திசைவு இருக்கிறதா? என்பதையே இக்கட்டுரை தனக்கான கருதுகோளாகக் கொள்கிறது. சீர் பற்றிய ஆய்வினையும் இணைத்து முன்னெடுக்கிறது.

ஆய்வு நெறி

இவ்வாய்வு இலக்கண வரலாற்றியல் அணுகுமுறையில் விளக்கவியல் திறனாய்வு முறையை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது.

முதன்மை மற்றும் துணைமைச் சான்றாதாரம்

யாப்பியல் மரபு மற்றும் இலக்கணம் பற்றிய நூல்கள் பலவாயினும் அமிதசாகரர் எழுதிய ‘யாப்பருங்கலக்காரிகை’ என்னும் நூலையே தனக்கு அடிப்படையாகக் கொள்கிறது.

முதனிலைச் சான்று

அந்நூலில் அமைந்துள்ள,

“ஈரசை நாற்சீர் அகவற்குரிய! வெண்பாவினமாம்
நேரசையால் இற்ற மூவசைச்சீர்! நிரையால் இறுப
வாரசை மென் முலை மாதே! வகுத்த வஞ்சிக்குரிச்சீர்!
ஓரசையே நின்றும் சீராம்! பொதுவொரு நாலசையே!”

“தேமா புளிமா கருவிளம் கூவிளம் சீர் அகவற்கு
ஆம்! ஆங்கு கடை காய் அடையின் வெண்பாவிற்கு! அந்தம் கனியா
வாமாண் கலையல்குல் மாதே! வகுத்த வஞ்சிக்குரிச்சீர்!
நாமாண்பு உரைத்த அசைச்சீர்க்கு உதாரணம் நாள்மலரே!”

“‘தண்சீர் தனதொன்றின் தன் தளையாம்’ தணவாத வஞ்சி
வண்சீர் விகற்பமும் வஞ்சிக்குரித்து வல்லோர் வகுத்த
வெண்சீர் விகற்பம் கலித்தளையாய்விடும்! வெண்டளையாம்
ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும் ஒண்ணுதலே!”

என்னும் மூன்று காரிகைகளை மட்டும் தனக்கான முதனிலைச் சான்றுகளாகக் கொண்டு அமைகிறது.

ஆய்வுத் தேவை

தமிழ் யாப்பியல் மரபில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய இலக்கணக் கூறுகள் பல.  அவற்றுள் தற்கால மரபுக்கவிதைகளில் அமைந்திருப்பதாகச் சொல்லப்படும் தளைமயக்கமும் ஒன்று. அதனைக் களைய முயல்வதையே இவ்வாய்வு தனது நோக்கமாகக் கொள்கிறது.

ஆய்வுப் பயன்

தளையைப் பொருத்தவரையில் விதிவிலக்குகளை அடிப்படையாகக் கொண்டே தற்கால யாப்பியல் கவிதைகள் எழுதப்படுகின்றன என்னும் உண்மையைப் படைப்பாளரும் படிப்பாளரும் உணரச் செய்வதையே இக்கட்டுரை தனது பயனாகக் கொள்கிறது.

தளை வந்த வழி

‘நின்ற சீருக்குத்தான் தளை’ என்பது பலருடைய கருத்தாக நிலவுகிறது. அதாவது தளைக்குப் பெயரிடுகிறபோது நின்ற சீரின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என்பதாம். நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் (அது எதுவாயினும்) முதலசையும் ஒன்றுவதும் ஒன்றாததுமே தளையின் தோற்றக் காரணம். இது பொதுவான கருத்து. இந்த அடிப்படையில்,

  1. ஈரசைச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது, ஒன்றாதது.
  2. நேரீற்று மூவசைச்சீர்கள் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது, ஒன்றாதது.
  3. நிரையீற்று மூவசைச்சீர்கள் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது, ஒன்றாதது.

எனத் தளை எழுவகைப்படும். நேர் ஒன்று ஆசிரியத்தளை, நிரை ஒன்று ஆசிரியத்தளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என்னும் அதன் விரிவை அடுத்த பத்தியில் காணலாம்.

தளைப் பெயர்கள் ஒரு குறிப்பு

தளைகளுக்கான பெயர்களையும் அவை உருவாகும் முறையினையும் அவற்றின் பெயர்களில் நிலவும் மாறுபாடு அல்லது முரண்பாடுகளையும் ஆராய்வதாக இந்தப் பத்தி அமைகிறது.

  1. நேரொன்று ஆசிரியத்தளை: ஈரசைச்சீர்கள் நான்கனுள் தேமா, புளிமா என்னும் வாய்பாட்டில் அமையும் (நேர் ஈற்று ஈரசைச்சீர்கள்) சீர்கள் நிற்க, வரும் சீர் முதலசை நேரசையாக இருந்தால் (வரும் சீர் எதுவாகவும் அமையலாம்) அது நேர் ஒன்று ஆசிரியத்தளை எனப்படும்.
  1. நிரையொன்று ஆசிரியத்தளை: ஈரசைச்சீர்கள் நான்கனுள் கூவிளம், கருவிளம் என்னும் வாய்பாட்டில் அமையும் (நிரையீற்று ஈரசைச் சீர்கள்) சீர்கள் நிற்க வரும் சீர் முதலசை நிரையசையாக இருந்தால் (வரும் சீர் எதுவாகவும் அமையலாம்) அது நிரை  ஒன்று ஆசிரியத்தளை எனப்படும்.
  1. இயற்சீர் வெண்டளை: ஈரசைச்சீர்கள் நான்கனுள் தேமா, புளிமா நின்று வரும் சீர் முதலசையோடு (வரும் சீர் எதுவாகவும் அமையலாம்) ஒன்றாததும் ஈரசைச் சீர்கள் நான்கனுள் கூவிளம், கருவிளம் நின்று வரும் சீர் முதலசையோடு (வரும் சீர் எதுவாகவும் அமையலாம்) ஒன்றாததும் இயற்சீர் வெண்டளை எனப்படும்.
  1. வெண்சீர் வெண்டளை: நேரீற்று மூவசைச்சீர்கள் பெரும்பாலும் வெண்பாவிற்குள் பயின்று வருவதால் அவை வெண்சீர்கள் என அழைக்கப்படும். அச்சீர்கள் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) நின்று வரும் சீர் (அது எந்தச் சீராகவும் அமையலாம்) முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளையாகக் கருதப்படும்.
  1. கலித்தளை: மேற்சொன்ன நேரீற்று மூவசைச்சீர்கள் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) நின்று வரும் சீர் (அது எந்தச் சீராகவும் அமையலாம்) முதலசையோடு ஒன்றாதது கலித்தளையாகக் கருதப்படும்.
  1. ஒன்றிய வஞ்சித்தளை: நிரையீற்று மூவசைச்சீர்களாகிய (தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி) பெரும்பாலும் வஞ்சிப்பாக்களில் வருவதால் இவை வஞ்சியுரிச்சீர் எனப்படும். அச்சீர்கள் நின்று வரும் சீர் (அது எந்தச் சீராகவும் அமையலாம்) முதலசையோடு ஒன்றினால் அது ஒன்றிய வஞ்சித்தளை என வழங்கப்படும்.
  1. ஒன்றாத வஞ்சித்தளை: மேற்சொன்ன நிரையீற்று மூவசைச்சீர்களாகிய (தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி) நின்று வரும் சீர் (அது எந்தச் சீராகவும் அமையலாம்) முதலசையோடு ஒன்றாதது ஒன்றாத வஞ்சித்தளை எனப்படும்.

பெயர்ச்சிக்கல் – ஒரு பார்வை

எழுவகைத் தளைகளையும் (தற்காலத்தில் பயன்படுத்துகிற முறைமையை ஏற்றுக் கொண்ட அடிப்படையில்) அவற்றிற்கான பெயர்களை ஆராய்ந்தால் தளைப்பெயர்களில் ஒரு ஒருங்கிணைப்பு அல்லது ஒத்திசைவு  காணப்படுவதாகத் தெரியவில்லை. இதனைப் பின்வரும் பதிவுகளால் உணரமுடியும்.

  1. நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றுவதற்குப் பெயரிட வேண்டுமானால் அதில் ஒரு ஒழுங்கமைவு (UNIFORMITY) இருத்தல் வேண்டும். ஆனால் அவ்வாறு இருக்கிறதா என்றால் உறுதியாக இல்லை. சான்றாக இயற்சீரின் ஈற்றசை நேரசையாக இருந்து வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ‘நேர் ஒன்று ஆசிரியத்தளை.’ இதுபோல இயற்சீரின் ஈற்றசை நிரையசையாக இருந்து வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது நிரையொன்று ஆசிரியத்தளை. இதே நெறிதான் வஞ்சித்தளைக்கும் பின்பற்றப்படுகிறது. அங்கே நிரையீற்று மூவசைச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ஒன்றிய வஞ்சித்தளை. ஒன்றாதது ஒன்றாத வஞ்சித்தளை. அதாவது ஈரசைச்சீர்கள் நின்று ஒன்றுவதும் கனிச்சீர்கள் நின்று ஒன்றுவதும் ஒன்றாததும் நின்றசீரின் பெயர்களையே பெறுகின்றன. (நேர் ஒன்று ஆசிரியத்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை)
  1. இந்த நெறி இயற்சீருக்கும் நேரீற்று மூவசைச்சீருக்கும் பின்பற்றப்படவில்லை. இயற்சீர் நின்று, வரும் சீர் முதலசையோடு ஒன்றாவிட்டால் இயற்சீர் வெண்டளை என்று அழைக்கப்படுகிறது. நேரீற்று மூவசைச்சீர் அதாவது காய்ச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றினால் ‘வெண்சீர் வெண்டளை’ எனப் புதுநாமம் கொடுப்பது ஏன் என்று புரியவில்லை. சீர் வெண்சீராக இருப்பதால் ‘நேர் ஒன்று வெண்டளை’ என்றுதானே பெயர் பெற்றிருக்க வேண்டும்? ‘நேர் ஒன்று ஆசிரியத்தளை’ என்றால் ‘நேர் ஒன்று வெண்டளை’ என்பதுதானே பொருந்தும்?
  1. ‘வெண்பாவிற்கான சிறப்புச்சீர் வெண்சீராகிய காய்ச்சீர்கள். எனவேதான் அது வெண்சீர் வெண்டளை ஆயிற்று’ எனச் சிலர் கூறலாம். வாதத்திற்காக அதனை ஏற்றுக் கொண்டால் காய்ச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றாத தளைகளை ஒன்றாத வெண்டளை என்னாது ‘கலித்தளை’ என்பானேன்? கலித்தளை என்னும் சொல் வருகின்ற காலம் வரை ‘கலி’ என்ற சொல்லையே யாப்பு அறியவில்லையே? இலக்கிய நயத்தோடு கூறவேண்டுமானால் வெண்சீருக்குப் பிறந்த மாற்றுத் திறனாளியா கலித்தளை?
  1. இனி ஒன்றாததை எடுத்துக்கொண்டால் ஈரசைச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றாதது நேர் ஒன்றாத ஆசிரியத்தளை என்றுதான் பெயர் பெற்றிருக்க வேண்டும். மாமுன் நிரையும் விளம் முன் நேரும் இத்தகைய பெயர் பெறாது ‘இயற்சீர் வெண்டளை’ என்று பெயர் பெறுவது ஏன்? வெண்சீருக்கு உரியதுதான் வெண்டளை என்றால் இயற்சீர் முரணுக்கும் வெண்டளை என்பது எப்படிப் பெயராக அமைய முடியும்?
  1. இதனால் தளைப்பெயர்களில் ஆசிரியத்தளையிலும் வஞ்சித்தளையிலும் ஒரு நெறியும் வெண்டளையில் வேறொரு நெறியும் பின்பற்றப்பட்டுள்ளதை அறியலாம்.

வெண்டளை விடைகாண முடியாத சிக்கல் 

  1. ஒன்றுவதும் வெண்டளை –ஒன்றாததும் வெண்டளையா? இது ஒரு நுட்பமான வினா. அதாவது வெண்டளை என்பது வெண்பாவிற்கு உரியது. இயற்சீர்களின் ஈற்றசை முரணும் வெண்பாவிற்குள் வர அனுமதி உண்டென்பதால் அவையும் வெண்டளை என்றே அழைக்கப்படுகின்றன என்பர். ஆனால் சிக்கல் என்னவென்றால் காய்ச்சீரின் ஈற்றசையோடு வருஞ்சீர் முதலசை ஒன்றுவதற்கும் ‘வெண்டளை’ என்று பெயர் வைத்து, இயற்சீரின் ஈற்றசையோடு வருஞ்சீர் முதலசை ஒன்றாததற்கும் ‘வெண்டளை’ என்று பெயர் வைத்திருப்பது சிந்திக்க வைக்கிறது. ஒன்றுவதும் வெண்டளை? ஒன்றாததும் வெண்டளையா?
  2. எழு தளைகளில் மற்றவைகளின் முன்னொட்டுக்கள் சீர்களின் பெயர்ப்பகுதியைத் தாங்கி நிற்க (ஆசிரியத்தளை, வெண்டளை, வஞ்சித்தளை) ‘கலித்தளை’ என்பது அவ்வாறு அமையவில்லை என்பதை அறியலாம். அதாவது ‘கலிச்சீர்’ என்று ஒன்று இல்லாமலேயே  தளை மட்டும் அப்பெயரால் வழங்கப்படுகிறது. அதாவது கலிச்சீர் இல்லை ஆனால் கலித்தளை இருக்கிறது! எப்படி?

சீர்கள் மற்றும் தளைகளின் திருநாமங்கள்

எழுவகைத் தளைகளைப் பற்றிய மேற்படி காரிகையையும் அதற்கு முன்பாக அமைந்துள்ள சீர் பற்றிய ‘தண்ணிழல் தண்பூ தந்து உறழ்ந்தால் எண்ணிரு நாலசைச்சீர் வந்து அருகும்’ என்னும் காரிகை உட்பட பிற காரிகைகளையும் அவற்றிற்குக் குணசாகரர் எழுதிய உரைப்பகுதியையும் உற்றுநோக்கினால் பின்வரும் சில உண்மைகள் புலப்படுகின்றன.

  1. நேரீற்று ஈரசைச்சீர் என்றும் நேரீற்று மூவசைச்சீர் என்றும் நிரையீற்று ஈரசைச்சீர் என்றும் நிரையீற்று மூவசைச்சீர் என்றும் சீர்கள், அவற்றின் ஈற்றசை கொண்டு பெயர் பெற்றிருக்கின்றன.
  2. அகவற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர், வெண்பா உரிச்சீர், வஞ்சி உரிச்சீர் எனப் பெரும்பான்மை இடம்பெறும் பாக்களின் அடிப்படையிலும் பெயர் பெற்றிருக்கின்றன.
  3. மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர், பூச்சீர், நிழற்சீர் என வாய்பாடுகளின் அடிப்படையிலும் பெயர்பெற்றிருக்கின்றன.
  4. தளைகளைப் பொருத்தவரையில் நேர் ஒன்று ஆசிரியத்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை, ஒன்றிய வஞ்சித்தளை என்னும் நேர்முக இணைப்பில் பெயர் பெற்றிருக்கின்றன.
  5. ஒன்றிய ஆசிரியத்தளை, ஒன்றிய வஞ்சித்தளை என்னும் பெயர்கள் வழங்கியிருந்த வேளையிலேயே அவ்வாறு ஒன்றும் மற்றொரு தளைக்கு வெண்சீர் வெண்டளை என்னும் திருநாமமும் வைக்கப்பெற்றிருக்கிறது. முன்னவற்றோடு ஒப்புமையாக்கம் என்ற வகையில் அமைத்திருந்தால் இவை ‘ஒன்றிய காய்த்தளை’ அல்லது ‘ஒன்றிய வெண்பாத் தளை’ என்றல்லவா பெயர் பெற்றிருக்க வேண்டும்?
  6. ஒன்றாத வஞ்சித்தளை என்கிறார்கள். ஆனால் காய்ச்சீர் நின்று வரும் சீர் முதலசை ஒன்றாததை ஒன்றாத காய்த்தளை அல்லது ஒன்றாத வெண்டளை என்னாது ‘கலித்தளை’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். (இதற்குச் சில யாப்பியல் மேதைகள் ‘கலித்து’ வருவதால் கலித்தளை எனத் தம் புலமை மீதூர பொருளுரைத்து மகிழ்வர். வெண்பா உரிச்சீரின் முரண்கள் கலிப்பாவிற்குள் பெரும்பான்மையும் வருவதால் அது கலித்தளை அதாவது கலிப்பாவிற்குரிய தளை என்பது அடிப்படை அறிவு)
  7. அதுபோலவே ஒன்றாத ஆசிரியத் தளைகளை ஒன்றாத ஆசிரியத்தளைகள் என்னாது ‘இயற்சீர் வெண்டளை’ என்கிறார்கள்.

எனவே சீர், தளை இவற்றின் பெயர்களைப் பற்றிய மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் சில ஆய்வு உண்மைகளை நிரல்படுத்த  முடியும்.

  1. சீர்களுக்குப் பெயர் சூட்டுவதில் அசைகளின் எண்ணிக்கை, வாய்பாடுகள், அவை இடம்பெறும் பாடல்களின் பெயர்கள் ஆகியவை கருத்திற் கொள்ளப்பட்டுள்ளன.
  2. தளைகளுக்குப் பெயர் வைப்பதில் ஒவ்வொரு தொகுப்புச் சீர்களுக்கும் ஒவ்வொரு நெறிமுறை பின்பற்றப்பட்டுள்ளது. ஓர் தெளிவான ஒழுங்கமைதி இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றுவதற்கும் ஒன்றாததற்குமான நிலைப்பாட்டை ஒரு குறிப்பிட்ட குறியீட்டால் குறிக்க இயலவில்லை.

எந்தச் சீரும் வரலாமா? இந்தச் சீர்தான் வரவேண்டுமா?

பொதுவாகப் பாக்களில் தளைவரம்பு பின்பற்றப்படுவதில்லை. அங்கே சீர்களும் அடி வரையறையுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. காரிகைக்குப் பின்னாலே மட்டுமன்று திருக்குறள் மற்றும் பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் முதலியவற்றில் காணப்படும் வெண்பாக்களில் கூட இயற்சீர் வெண்டளை அல்லது வெண்சீர் வெண்டளை என்பது நின்ற சீருக்கு மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது. அதாவது நின்ற சீர் ஆசிரிய உரிச்சீராக இருந்து வரும் சீர் முதலசையோடு ஒன்றாதது இயற்சீர் வெண்டளை எனப்பட்டது. இந்தச் சூழலில் வரும் சீர் ஆசிரிய உரிச்சீராக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த ஆய்வின் உயிர்நாடியே இதுதான். நின்ற சீரும் வருஞ்சீரும் ஒரே வகைச் சீராக இருந்து அவற்றின் ஈற்றசையும் முதலசையும் ஒன்ற வேண்டும் அல்லது முரண்பட வேண்டும். இதனைத்தான் காரிகை உரையாசிரியர் குணசாகரர் தமது உரையில் விளக்குகிறார்.

நேரொன்று ஆசிரியத்தளை

‘வந்தான் போனான்’ என்பன தேமா வாய்பாட்டில் அமைந்த ஈரசைச்சீர்கள்.  நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றுகிறது. ஒரே சீர் ஒன்றுகிறது. எனவே இதுதான் நேர் ஒன்று ஆசிரியத்தளை. இவ்வாறின்றி ‘வந்தான் போவானா?’ என்றெழுதி இதுவும் நேர் ஒன்று ஆசிரியத்தளை என்றால், நின்ற சீர் ஒன்றாகவும் வரும் சீர் பிறிதொன்றாக அதாவது காய்ச்சீராக அமைந்திருப்பதும் காண்க.  இவ்வாறு அமைவது பற்றிக் குணசாகரர் எழுதுகிறார்.

“ஆசிரிய உரிச்சீர் நின்று, தன் வரும் சீர் முதலசையோடு நேராய் ஒன்றுவது நேரொன்று ஆசிரியத்தளை”. “தணவாத என்று மிகுத்துச் சொல்லியவதனால் தன்சீர் நின்று பிறிதாகி வரும் சீர் முதலசையோடு ஒன்றுவதும் தன்தளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

(இந்த விளக்கத்தை நேரொன்று ஆசிரியத்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை ஆகிய அனைத்திற்குமாகப் பொருத்திக் கொள்ளவேண்டும்)

நிரையொன்று ஆசிரியத்தளை

‘கனிதரு மரமென’ என்பன கருவிளம் வாய்பாட்டில் அமைந்த ஈரசைச்சீர்கள்.  நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றுகிறது. ஒரே தன்மையான சீர் ஒன்றுகிறது. எனவே இதுதான் நிரையொன்று ஆசிரியத்தளை. இவ்வாறின்றிக் ‘கனிதரு புளியமரம்’  என்றெழுதி இதுவும் நிரையொன்று ஆசிரியத்தளை என்றால் நின்ற சீர் ஒன்றாக இருக்க வரும் சீர் பிறிதொன்றாக அதாவது காய்ச்சீராக அமைந்திருப்பது காண்க.  இவ்வாறு அமைவது பற்றிக் குணசாகரர் எழுதுகிறார்.

“ஆசிரிய உரிச்சீர் நின்று, தன் வரும் சீர் முதலசையோடு நிரையாய் ஒன்றுவது நிரையொன்று ஆசிரியத்தளை” “தணவாத என்று மிகுத்துச் சொல்லியவதனால் தன்சீர் நின்று பிறிதாகி வரும் வரும் சீர் முதலோடு ஒன்றுவதும் தன்தளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

இயற்சீர் வெண்டளை

‘அகர முதல’ என்பதில் இரண்டு சீர்களும் இயற்சீர்கள். நின்ற சீரும் இயற்சீர். வரும் சீரும் இயற்சீர். நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றாததால் இது இயற்சீர் வெண்டளை. இதுதான் இயற்சீர் வெண்டளை என்பது காரிகை கருத்து. ஆனால் ‘முதல எழுத்தெல்லாம்’ என்பதும் இயற்சீர் வெண்டளை எனக் கொள்ளப்படுகிறது. இதில் என்ன சிக்கல் என்றால் நின்ற சீர் இயற்சீர். வரும் சீரோ புளிமாங்காய் என்னும் காய்ச்சீர்! இவ்வாறு அமைவது பற்றி, ‘ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும் வெண்டளையாம்’ என்னும் தொடருக்குத் தாம் எழுதும் உரைப்பகுதியில் ,

“ஒண்சீர்’ என்று சிறப்பித்தவதனால் ஆசிரிய உரிச்சீர் நின்று பிறிதாகி வரும் வரும் சீர் முதலோடு ஒன்றாததும்  இயற்சீர் வெண்டளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

என்று அது சிறப்பற்றது என்று குறித்திருப்பதைக் காணலாம்.

வெண்சீர் வெண்டளை

‘யாதானும் நாடாமால்’ என்பது தேமாங்காய், தேமாங்காய் என்னும் வாய்பாட்டில் அமைவது. நின்ற சீரும் வரும் சீரும் வெண்பா உரிச்சீர்கள். ஒரே வகை. இவ்வாறு அமைவதுதான் வெண்சீர் வெண்டளை. ஆனால் ‘வையைக்கோன் கண்டான்’ எனத் தேமாங்காய் நின்று தேமாவின் முதலசையோடு ஒன்றுவதையும் வெண்சீர் வெண்டளை என்பது நடப்பியல். இது தவறு என்பது கருத்தன்று. இவ்வாறு அமைவது சிறப்பன்று என்றுதான் குணசாகரர் கூறுகிறார்.  தன்சீர் தனது ஒன்றின் தன் தளையாம் என்பது இதுதான். இது அமிதசாகரர் கருத்தாகக் குணசாகரர் கருதுவது. தன்னுடைய சீர் நின்று தன்னுடைய சீரோடு இணைவதே தனது தளையாகும் என்பது உரை.

“வெண்பா உரிச்சீர் நின்று தன் வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது  வெண்டளையாம்”

என்று உரையெழுதுகிறார் குணசாகரர். தொடர்ந்துத்,

“தணவாத’ என்று மிகுத்துச் சொல்லியவதனால் தன்சீர் நின்று பிறிதாகி வரும் வரும் சீர் முதலோடு ஒன்றுவதும் தன்தளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

என எழுதுகிறார். மிகத் தெளிவாக அவர் எழுதுகிறார் அது சிறப்பற்றது என்று.

கலித்தளை

தளைகளிலேயே மிகவும் சிக்கலான ஆய்வுக்குரியது. மற்ற தளைகளுக்குச் சீர்கள் உண்டு. இந்தக் கலித்தளைக்குச் சீர்கள் இல்லை. அதாவது ஆசிரிய உரிச்சீர், வெண்பா உரிச்சீர், வஞ்சியுரிச்சீர் என்றெல்லாம் பாடலுக்கான சீர்கள் உண்டு. ஆனால் கலிப்பாவுக்காகத் தனித்த சீர்கள் இல்லாதபோதும் ‘கலித்தளை’ என்பது ஒன்று உண்டு. இது வியப்பிற்கும் ஆய்விற்கும் உரியது, வெண்பா உரிச்சீராகிய காய்ச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றாதது கலித்தளை எனப்படும். வெண்பா உரிச்சீர் கலித்தளைக்குக் காரணமாகுமா என்பது பற்றியே ஓர் ஆய்வு தேவைப்படும் சூழலில் மற்ற தளைகளைப் போலவே வரும் சீர் முதலசையோடு ஒன்றாதது கலித்தளை என்பது பொருந்தாது. நின்ற சீர் வெண்பா உரிச்சீராக இருக்க வரும் சீரும் வெண்பா உரிச்சீராகவே இருக்க வேண்டும். சான்றாக  ‘எல்லாரும் வருவாரோ? தேமாங்காய் நின்று புளிமாங்காய் வர, முதலசை ஒன்றாததுவே கலித்தளை.  இருப்பினும்,

“வல்லோர் வகுத்த என்று மிகுத்துச் சொல்லியவதனால் வெண்பா உரிச்சீர் நின்று பிறிதாகி வரும் வரும் சீர் முதலோடு ஒன்றாததும் கலித்தளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

என்று குணசாகரர் தரும் விளக்கத்தால் தற்போது பயன்பட்டுவரும் கலித்தளை என்பது உண்மையான கலித்தளைக்கான விதிவிலக்கே என்பது பெறப்படும்.

ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாத வஞ்சித்தளையும்

தளைகளிலேயே மிகத் தெளிவாக அமைந்திருக்கும் இரண்டு தளைகள் இவை. நின்ற சீர் வஞ்சியுரிச்சீராக இருந்து வரும் சீரும் வஞ்சியுரிச்சீராக அமைய அவற்றுள் ஒன்றுவது ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாதது ஒன்றாத வஞ்சித்தளை என்ற அளவில் குழப்பமில்லாத ஒரு நிலை இத்தளைகளுக்கு உண்டு. அதாவது ‘கனிச்சீர்’ நின்று வரும் சீர் ‘புளிமாங்கனி, கருவிளங்கனி’ என ஒன்றினால் அது ஒன்றிய வஞ்சித்தளை. கனிச்சீர் நின்று வரும் சீர் தேமாங்கனி, புளிமாங்கனி என ஒன்றாவிடின் அது ஒன்றாத வஞ்சித்தளை. இந்த உண்மையைத் தெளிவுபடுத்துவதற்காகவே, ஒன்றிய வஞ்சித்தளைக்கு, ‘வெண்சாமரை புடைபெயர்தர’ எனத் ‘தேமாங்கனி மற்றும் கருவிளங்கனி’ என்னும் வாய்பாடுகள் அடங்கிய எடுத்துக்காட்டுக்களை அமிதசாகரர் தந்திருக்கிறார்.

‘ஒன்றாத வஞ்சித்தளைக்குச் ‘செந்தாமரை நாண்மலர்மிசை’ எனக் கூவிளங்கனி மற்றும் கூவிளங்கனி என்னும் வாய்பாடு அடங்கிய எடுத்துக்காட்டுக்களை அமிதசாகரர் தந்திருக்கிறார்.

இந்த உதாரண முதல் நினைப்புக்காரிகை ஆசிரியர் அமிதசாகரருடையது. அதனால்தான் அவருடைய கருத்தினை நன்கு உள்வாங்கிக் கொண்டு காரிகைக்கு உரை காண்கிறார் குணசாகரர்.

இத்தளைகளை இவ்வாறின்றி நின்ற சீர் மட்டும் வஞ்சியுரிச்சீராக இருந்து வரும் சீர் எதுவாயினும் அவற்றின் முதலசையோடு ஒன்றுவதும் ஒன்றாததும் அவற்றிற்கான பெயர்களால் அழைக்கப்பெறலாம் என்னும் விதிவிலக்கை,

“வண்சீர் என்று சிறப்பித்தவதனால் வஞ்சி உரிச்சீர் நின்று பிறிதாகி வரும் சீர் முதலசையோடு ஒன்றாததூஉம் வஞ்சித்தளையே சிறப்பின்றாயினும் எனக் கொள்க”

என்று உரைழுதி விளக்குகிறார்.

ஆய்வில் கண்டறியப்பட்ட மெய்ம்மைகள்

மேலே பல பத்திகளில் வலிமையான தரவுகளின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட ஆய்விலிருந்து பெறப்படும் உண்மைகள் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன.

  1. ஈரசைச்சீர் நான்கு, நேரீற்று மூவசைச்சீர் நான்கு, நிரையீற்று மூவசைச்சீர் நான்கு என்னும் பன்னிரண்டு சீர்களுக்குப பெயர் சூட்டுவதில் அவ்வளவாக இசைவு இல்லை.
  1. அசைகளின் எண்ணிக்கை, ஈற்றசைகளின் இயல்பு, வாய்பாடுகள், சீர்கள் இடம் பெறும் பாடல்கள் என்னும் இவற்றின் அடிப்படையில் பலவாறு அமைந்திருப்பது சிந்தனைக்குரியது. மேலும் இவ்வெல்லாச் சீர்களும் எல்லாப் பாக்களுள்ளும் மயங்கி வருவதால் பெயரிடுவதன் நோக்கம் முழுமையான வெற்றியடைந்தது எனக் கருதுவதற்கில்லை.
  1. தளைகளைப் பொருத்தவரையில் நின்ற சீரும் வரும் சீரும் ஒரே தன்மையனவாக இருந்தாலேயொழிய தளைகளின்  பெயர்கள் பொருத்தமற்றவையாகிவிடும். இதனால் தற்காலத்தில் கவிஞர்களால் கருத்திற் கொள்ளப்படும் தளைகள் ‘சிறப்பில’ என்னும் ஒரு தொடருக்குள் அடங்கிவிடுகின்றன.
  1. யாப்பறி புலவர்கள் தாங்கள் பயன்படுத்திவரும் தளை விகற்பங்கள் எல்லாம் விதிவிலக்கே என்பதைப் புரிந்து கொள்வது இக்கட்டுரையின் பயனாகக் கருதப்படலாம்.

நிறைவுரை

தரவுகளிலிருந்து கருதுகோளை உருவாக்குவதும், அதனை உறுதியாக்கும் மேற்கோள்களின் அடிப்படையில் நிகழ்த்தப்படுவதும் ஒரு தற்காலிகத் தீர்வினை எட்டுவதுமே ஆய்வு என்பதாகக் கருதப்படும். தரவுகளையே சரியாகப் புரிந்து கொள்ளாமல் கருதுகோளை உருவாக்கிக் கொள்வது பெரிதும் குழப்பத்திற்கும் சிக்கலுக்கும் வழிவகுக்கும். இந்தக் கட்டுரை தரவுகளைச் சரியான நெறியில் புரிய வைக்க முயலுகிறது. சிக்கலை அடையாளம் காண்பதே ஆய்வின் முதற்படி. தொடர்ந்து அச்சிக்கலின் தன்மையை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்விரண்டையும் இவ்வாய்வுக்கட்டுரை தன்னால் இயன்ற அளவுக்கு முன்னெடுத்திருக்கிறது.


ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

‘தன்சீர் தனதொன்றின் தன் தளையாம்’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் பரிந்துரை!

இடையீடற்ற கற்றல் இயல்பாகவும் எடுத்தியம்பும் ஆற்றல் முயற்சியினாலும் அமைந்த ஆய்வாளர்களுக்கு  ஆய்வுக்கான கருதுகோள் எளிதாகக் கிட்டிவிடும். அத்தகைய சிறப்புக்குரியது இக்கட்டுரை.

காரிகையாசிரியர் அமிதசாகரர் கூறும் தளை பற்றிய இலக்கணம் குணசாகரர் உரையால் விரிவு பெற்று நிறைவடைகிறது. நூலாசிரியர் விதிகளைக் கூறுகிறார். உரையாசிரியர் விதப்புக்கிளவிகளையும் அடைசொற்களையும் கொண்டு சிறப்பற்ற ஆனால் நடைமுறையில் உள்ள விதிவிலக்குகளைக் கூறுகிறார். இதனையே இந்தக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

‘சிறப்பில’ என்னும் ஒற்றைச் சொல்லால் அத்தனைப் படைப்புகளையும் மதிப்பீடு செய்துவிடுகிறார் குணசாகரர். அந்த மதிப்பீட்டினை மிக வலிமையான, தெளிவான தரவுகள் மூலம் ஆய்வாளர் விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

எழுவகைத் தளை பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரையில் சீர்களின் திருநாமம் பற்றியும் ஆராய்ந்திருப்பது துணைவலி சேர்க்கும் ஆய்வு நுண்ணியமாகும்.

தளை வரையறை என்பது நின்ற சீருக்கும் வரும் சீரின் முதலசைக்குமான ஒட்டுறவன்று, ஒரே  தன்மையனவாக அமைந்த இரண்டு முழுமையான சீர்களுக்கிடையே நிலவும் நல்லுறவு மற்றும் வல்லுறவு என்பதைக் காரிகை மற்றும் உரையாசிரியரின் விளக்கம் ஆகிய அகச்சான்றுகளைக் கொண்டு நிறுவியிருக்கும் இந்தக் கட்டுரையில் ஆய்வு நெறியை முழுமையாகப் பின்பற்றியிருப்பது போற்றுதற்குரிது.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “(Peer Reviewed) தன் சீர் தனது ஒன்றின் தன் தளையாம்

  1. வணக்கம்! தலைப்பில் ‘தண்சீர்’ என்று இருப்பது சரியன்று. தன்சீர் என்றே இருததல் வேண்டும். தன்னுடைய சீரே நின்று தன்னுடைய சீரோடு ஒன்றுவதே தன் தளை (அதாவது சீரிரன் பெயரே தளைக்குமாகும்) என்பது கருத்து. நன்றி

  2. வணக்கம்! நெஞ்சார்நத நன்றி! வல்லமைக்கு வாழ்த்துக்கள்!

  3. வல்லமையாளர்களுக்கு வணக்கம். மேற்கூறிய பின்னூட்டப் பதிவினை ஏற்றுக் கொள்கிறேன். கையில் இருந்த கழகப் பதிப்பு நூல் மேற்கோளை மட்டும் பார்த்ததால் நேர்ந்த தவறு. அது இனிவருங் காலங்களில் தவிர்க்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *