திருச்சி புலவர் இராமமூர்த்தி

12. குங்கிலியக் கலைய நாயனார் புராணம்

முன்னுரை

திருத்தொண்டருள் பன்னிரண்டா மவராய்ச்  சிறப்பிக்கப் பெறுபவர், குங்கிலியக் கலைய நாயனார்  ஆவார். இவர் தம் வறுமையிலும் செம்மையராய்  தம் குங்கிலியப்புகை ஊட்டும் செயலில் வழுவாமல் வாழ்ந்தது மட்டுமின்றி அதன் பெருமையை உலகறியச் செய்யும் பொருட்டு, இறைவன் திருப்பனந்தாள் என்ற தலத்தில் செய்த திருவிளையாடலை மாற்றியமைத்த  வரலாறு இப்புராணத்தில் கூறப்பெறுகிறது!

பாடல்

வாய்ந்தநீர் வளத்தா லோங்கி மன்னிய பொன்னி நாட்டில்
ஏய்ந்தசீர் மறையோர் வாழு மெயிற்பதி யெறிநீர்க் கங்கை
தோய்ந்தநீள் சடையார் பண்டு தொண்டர்மேல் வந்த கூற்றைக்
கய்ந்தசே வடியார் நீடி யிருப்பது கடவூ ராகும்.

பொருள்

நீர் பொருந்தியதனா லுளதாம் வளத்தினாலே சிறந்து ஒங்கி நிலைபெற்ற காவிரிபாயும் சோழநாட்டில்;.சிறப்புப் பொருந்திய வேதியர்கள் வாழ்தற்கிடமாகிய மதில்சூழ்ந்த ஊர்;  அலைகள்வீசும் நீரையுடைய கங்கையாறு தோய்ந்த நீண்ட சடையினையுடையாரும்;  தொண்டராகிய மார்க்கண்டேயர் மேல் உயிர்கொள்ள வந்த காலனை முன் உதைத்த சிவந்த திருவடியினையுடையாரும் ஆகிய சிவபெருமான்; நிலைத்து வாழ்வதான திருக்கடவூர் என்பதாகும்.

விளக்கம்

நீர்வாய்ந்த வளத்தால், அதாவது  நீரின் வாய்ப்பாவது உயிர்க்கும் பயிர்க்கும் நிலத்துக்கும் பொருந்தியதாகுதல். குடகு நாட்டினும் கொங்கு நாட்டினும் போந்த காவிரிநீர் இங்குச் சோழநாட்டில் வந்து  பொருந்திய  என்றலுமாம்.

நீர் வளத்தால் ஓங்கி மன்னிய – நீர்வளம் ஒன்றானே சிறந்து நிலை பெற்ற. பொன்னிநாடு – சோழநாட்டைப் பொன்னிநாடு, நீர்நாடு; காவிரிநாடு என் பனவாதி பெயர்களாற் கூறுவது ஆசிரியர்மரபு. காவிரி, தான் தொடக்க முதலாகச் செல்லும் ஏனைநாடுகளிற் பயன் தராது, சோழநாட்டுக்கே பெரும் பயன் தருதலால் இவ்வாறு கூறுவது மரபு. கன்னடதேயத்திற் காவிரி பயன்றருதல் பின்னாள் வழக்கு.

மறையோரின் சீராவன அவர்களது பிறப் பொழுக்கமாகிய வைதிகசீலத்தானும் வேத உள்ளுறையாகிய சைவசீலத்தானும் சிறப்புறுதல்.

மறையோர் வாழும்பதி என்ற தொடர்,  இச் சரிதநாயகராகிய கலயநாயனார் மறையவர் மரபினராதலின் அதனை முற்குறிப்பாகக் காட்டியபடி. மறையோர் மரபினர் தனித்து வாழும் பதிகளும் உண்டு. இவை போல்வன சதுர்வேதிமங்கலம் என்று வழங்கப்பட்டன என்பது கல்வெட்டுக்களால்  அறியப்படும்.

எதிர்நீர்க் கங்கை தோய்ந்தநீள் சடையார் – என்ற தொடர்  அலைகளால் நீரினை மேலே வீசும்  கங்கையாற்றைக்  குறித்தது. உலகங்களை அழிக்கவல்லதாய்ப் பல்லாயிர முகங்களாகப் பரந்திழிந்த கங்கை என்ற சரிதக்குறிப்பும் காண்க.  எறிநீர் என்றது இவ்வாறு மேல் அலைகளால் எறிதலேயன்றிக் கீழ் ஊற்றுக்கால்களின் வழிப் பல இடமும் செல்லும்படி பரப்புதலும் குறித்தது. திருத்தில்லையில் திருச்சிற்றம்பலத்தி னருகே உள்ள பரமானந்த கூபத்தில் ஐப்பசி மாதத்துப் பூர்வபக்க நவமியில் கங்கை வருகின்றது என்ற மரபும், திரு அவிநாசியிற் காசிக்கங்கைக் கிணற்றின் வரலாறும், திருக்குடந்தை மகாமக வரலாறும் இவை போன்றன அங்கங்குள்ள சான்றுகளும் இங்குக். கருத்தத்க்கன.

தோய்ந்த நீள்சடை என்பது  எறியும் நீராயினும் அவ்வாறு எறியாது தன்மட்டில் அமைவதாகக் கொண்ட சடையைக் குறித்தது. தோய்ந்த – சடைக்கற்றையின் அளவில் கட்டுப்பட்டு நின்ற.  நீள்சடை – கங்கையின் பரப்புக்குத் தக்கபடி நீளும்சடை, மார்க்கண்டேயர் பூசிக்கும்பொருட்டுக் கங்கை வருகின்றதென்று வழங்கும் இத்தலத்துத் தீர்த்தமும், அதன் நீரினையே இங்கு அமிர்தகடேசருக்கு நாளும் திருமஞ்சனமாட்டும் வழக்குங் காண்க.

காசியினின்றும் கங்கை கடவூர்வரை நீர் எறிந்து பரவுமாகில் இவரது சடையும் அவ்வளவும் நீண்டு இங்கு விளக்கமுறும் என்ற உட்குறிப்பும் காண்க. இக்குறிப்பினையே இச்சரிதத்தில் பலவிடத்தும்,  தேற்றம்பெற முதலில் வைத்துக்காட்டியதும் காண்க.

மார்க்கண்டேயர் மேல்வந்த கூற்று, பதினாறு வயது என்ற அவர் வாழ்நாளின் எல்லை யணுகிற்று என்று அவருடைய உயிர் கவரும் பொருட்டு வந்த காலன். “தருமராசற்காய் வந்த கூற்றினை” என்ற திருத்தாண்டகம் காண்க. மேல்வந்த – குறித்துவந்த என்ற பொருளில் வந்தது. பண்டு – முன். இது ஒரு கற்பத்திற் காசியில் நிகழ்ந்ததாகக் கந்தபுராணம் கூறும்.

காய்ந்த சேவடியார் என்ற  தொடர்,  சேவடியினால் உதைத்துக் காய்ந்தவர் என்பதைக்  குறித்தது. இச்சரிதம் இத்தலத் தேவாரங்களிலெல்லாம் போற்றப்படுதலாலும், இப்புராணத்தினுட் பல இடத்திலுங் குறிக்கப் படுதலும் காண்க. இத்தலத்திற் காலசங்கார மூர்த்தி சிறக்க வழிபடப் பெறுகின்றதும், அவரது திருவிழா பெருஞ்சிறப்பாகப் போற்றப்படுகின்றதும் காணத்தக்கன.

நீடியிருத்தல் என்ற தொடர், இப்பெருமையுடன் என்றும் நீங்காது விளக்கமாக வீற்றிருத்தல். இருப்பது, இருப்பதாகிய அவ்வூர்.

கடவூர் – அமிர்தகடம், கலயம் சிவலிங்கத் திருமேனியாக உருக்கொண்டு எழுந்தருளிய ஊர் ஆதலின் கடவூர்  கால பயத்தைக் கடத்தற்குதவும் ஊர் என்றலுமாம்.

இப்பாட்டினால் இப்புராணத்துக்குரிய ஆறு – நாடு – நகரம் – குடிவளம் – மூர்த்தி – தலம் – தீர்த்தம் – சரிதம் முதலிய சிறப்புக்கள் பலவும் ஒருங்கே கூறிய அழகு கண்டு மகிழத்  தக்கது!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சேக்கிழார் பாடல் நயம் – 141 (வாய்ந்த)

  1. வணக்கம்! சேக்கிழார் திருவடி போற்றி! ஒரு தமிழ்ப் பாட்டுக்கு எப்படி உரையெழுத வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிற அரிய உரை. பயன் தெரிவார் குறைவானாலும் படிக்கின்றோர் நெஞ்சைக் குளிர்வித்து இறைவனின திருவருள் பெற உதவும். பேரியோர் உரைக்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *