செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(364)

இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றி னின்ற துணை.

– திருக்குறள் – 41(இல்வாழ்க்கை)

புதுக் கவிதையில்…

இல்லறத்தான் என்பவன்
இல்லாளுடன் கூடி வாழ்ந்தே,
தன்னைப் பெற்றோர்
தனக்குப் பிறந்த பிள்ளைகள்
உற்றார் உறவினரெனும்
இயல்புடைய மூவர்ககும்
நற்றுணையாய் இருந்தே
உதவுபவனே…!

குறும்பாவில்…

மனையாளுடன் கூடயிருந்து
பெற்றோர் பிள்ளைகள் உறவினர் மூவர்க்கும்
உறுதுணை யானவனே இல்லறத்தான்…!

மரபுக் கவிதையில்…

கட்டிய துணையுடன் கூடிவாழ்ந்தே
காசினி போற்றிட வளர்த்துலகில்
விட்டதாய் தந்தையாம் பெற்றோர்கள்,
விரும்பி வளர்த்திடும் பிள்ளைகளும்
எட்டியே சென்றிடா உறவினர்கள்
என்னும் மூன்றெனும் இயல்பினோரின்
கிட்டிடும் துணைவனாய் யிருந்துதவும்
கெட்டிக் காரனே இல்லறத்தான்…!

லிமரைக்கூ…

இல்லாள் அவனது இணை,
இயல்புடை மூன்றாம் பெற்றோர் பிள்ளைகள் சுற்றம்
இவர்க்கெலாம் இல்லறத்தானே துணை…!

கிராமிய பாணியில்…

இல்லறத்தான் இல்லறத்தான்
இந்த ஒலக வாழ்க்கயில
இவந்தான் இல்லறத்தான்..

கெட்டின பொண்டாட்டி
கூடவே வாழ்ந்துக்கிட்டே
பெத்து வளத்தத் தாய் தகப்பன்,
பெத்து வளக்கும் பிள்ளைகள்
அக்கம் பக்கத்து ஒறவுகளுண்ணு
மூணுவருக்கும்
ஒதவும் தொணயாக் கூட
இருக்கவந்தான்
உண்மயில இல்லறத்தான்..

தெரிஞ்சிக்கோ
இல்லறத்தான் இல்லறத்தான்
இந்த ஒலக வாழ்க்கயில
இவந்தான் இல்லறத்தான்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *