தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 31

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

உவமங்களான ஓவியங்கள்

முன்னுரை

‘சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கி’ என்பார் பவணந்தி. ‘பாவையின்’ என்பதிலுள்ள இன் என்னும் வேற்றுமை உருபு ஒப்புப் பொருளில் வந்து ஓவியத்தின் அமைதியை நல்ல மாணவனுக்கு உவமமாக்கியது. ஓவம், ஓவியம் சித்திரம், பட்டம், படாம், வட்டிகைச் செய்தி என்று ஓவியத்திற்குப் பல பெயர்கள் உண்டு. ஓவியத்தை எழுதுகிறவர்கள் ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரகாரர், வித்தக வினைஞன், வித்தகர்,  வித்தகர் கிளவி, வல்லோன் என்னும் பல பெயர்களால் அழைக்கப்பட்டனர். சித்தன்ன வாசல் ஓவியங்கள் நமக்குத் தெரியும். தஞ்சை பெருவுடையார் கோயில் ஓவியங்கள் சிறப்பானவை. அஜந்தா ஓவியங்களையும் அறிவோம். இத்தகைய ஓவியங்கள் தமிழ்க்கவிதைகளில் உவமங்களாக இடம்பெற்றிருக்கின்றன. ஓவியத்தைப் பற்றிய ஆய்வு பண்பாடு மற்றும் கலையோடு தொடர்புடையதாகக் கருதப்படுவதால் இலக்கியம் பற்றிய ஆய்வில் இது அவ்வளவாக இடம்பெறாது போயிருக்கக்கூடும். இயற்கையோடு இயைந்து கலைவாழ்வு வாழ்ந்த அக்காலச் சான்றோர் எழுதிய இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சில உவம ஓவியங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. அறிமுகம் செய்கிறது

உவமங்களான ஓவியப் பதிவுகள்

‘ஓவச்செய்தி’ என்பது சங்க இலக்கியச் சிறப்பான தொடர்களில் ஒன்று. ‘ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய பொற்கொடி’ மடந்தையான மாதவியைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது. ‘புனையா ஓவியம்போல’ நின்று மணிமேகலை இரந்தாள்’ என்று மணிமேகலை பேசுகிறது. ‘உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுளத்தில் அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியமே!’ என்று பரவசப்படுகிறார் குமரகுருபரர். ’உன்னுடைய பொருள்தான் பெரிதும் ஓவியமோ?” என்பது உலகியலில் பெருவழக்கு. இவ்வழக்கில் ஓவியம் என்பது உயர்ந்தது (ஒசத்தி) என்னும் பொருளது என்பது அறிக.

ஓவியமான பொய்கை

‘புண்ணிய நறுமலர் ஆடைபோர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப் புனல்யாறு அன்று இது பூம்புனல் ஆறென” சென்றதாக வைகையைப் பற்றி இளங்கோவடிகள் எழுதுகிறார். அவர் ஆற்றுக்குச் சொன்னதைப் ‘பொய்கையெனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்’ என்று பொய்கைக்குப் புனைந்துரைப்பார் புலவர் புலமைப்பித்தன். இவர்களுக்கு எல்லாம் முன்பாக,

“நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
துறுநீர்க் கடம்பின் துணை ஆர்கோதை,
ஓவத்து அன்ன உண்துறை மருங்கில்” (சிறுபாண்.68-70)

என்று சிறுபாணாற்றுப்படையில் ஒரு ஓவியக்காட்சி இயற்கையையொத்த நீர்நிலை போல் இருந்தது என்று உவமிக்கப்பட்டுள்ளது. ‘செறிவுடைய கடம்ப மரங்கள் சூழ நிற்கும் நறுநீர்ப் பொய்கை. கடம்பினுடைய மாலை போன்ற மலர்கள் இந்திரகோபம் போன்ற தாதினை உதிர்த்ததால் ஓவியத்தை ஒத்து விளங்குகிறது’ என்று சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.

ஓவியத்தைப் போன்ற போர்க்களம்

பொய்கை ஒவியத்தைப்போலப் பொலிந்தது எனப் பாடியவர்களே  போர்க்களமும் ஓவியம் போல் இருந்தது என்றும் பாடியிருக்கிறார்கள்.

“நீலத்து அன்ன பைம்பயிர் மிசை தொறும்
வெள்ளி அன்ன ஒள்வீ உதிர்ந்து,
சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை, தாஅய்,
மணிமருள் நெய்தல், உறழ, காமர்
துணிநீர் மெல் அவல், தொய்யிலொடு மலர
வல்லான் தைஇய வெறிக்களம் கடுப்ப” (மதுரை.279-284)

என்ற அடிகள் பல வண்ணக் கலவைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட துணியில் எழுதிய ஓவியம் போல வெறிக்களம் தோற்றமளித்ததாகக் கூறுகிறது. புலவர் தான் கண்ட துணி ஓவியத்தைப் போல வெறிக்களம் இருந்தது என்று தான் கண்ட காட்சிகளை ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளதன் மூலம் அன்றைய கால துணி ஓவியத்தின் இயல்பினைப் பற்றி அறியமுடிகிறது.

வீடுகளுக்கு உவமமான ஓவியம்

‘அரண்மனை மாதிரி வீடு’ ‘பங்களா மாதிரி வீடு’, ‘கோட்டை மாதிரி வீடு’ ‘கோயில் மாதிரி வீடு’ என்றெல்லாம் பிறர் சொல்லக் கேட்டதுண்டு. ஆனால் ‘ஓவியம் போல் வீடு’ எனக் கேட்டதுண்டா? அந்தப் பேறு நமக்கில்லை. நம் முன்னோர்களுக்கு இருந்திருக்கிறது. அவர்கள் வீட்டைச் சொல்கிறபோது அதன் அகப்புற அமைதியை ஓவியத்தோடு ஒப்புமைப்படுத்தியிருக்கிறார்கள்.

“ஓவத்தன்ன இடனுடை வரைப்பில்
பாவையன்ன நப்புறம் காக்கும்” (நற்.182)

“ஓவுக் கண்டன்ன இல்வரை” (நற். 268)

“ஓவத்தன்ன வினைபுனை நல்லில்
பாவை அன்ன நல்லோள் கணவன்” (பதி. 61)

“ஓவத்தன்ன வினைபுனை நல்லில்
பாவை அன்ன பலரல் மாண்கவின்” (அகம். 98)

“ஓவத்தன்ன உருகெழு நெடுநகர்” (பதி. 88 – 28)

என்ற பகுதிகளில் வீடுகளுக்கு ஓவியம் உவமமாக்கப்பட்டுள்ளது, ஓவியத்தோடு சிற்பமும் உவமமாக்கப்பட்டுள்ளது, நகரத்திற்கும் உவமமாக்கப்பட்டுள்ளது. ஓவியத்தைப் போன்ற இல்லத்தில் பாவை சிற்பம் போன்ற மனைவி என்னும் சித்திரிப்பு சிந்திக்கத்தக்கதாய் உள்ளது.

இயற்கையும் ஓவியமும்

பழந்தமிழ் மக்கள் நாளும் துய்த்து மகிழ்ந்த கலைகளில் முன்னிற்பது ஓவியம் என்பது இலக்கியங்களால் அறியப்படும் சேதியாகும். அழகிய காட்சிகளை ஓவியமாகவும் சிற்பமாகவும் கண்டு மகிழ்ந்த மக்களை அக்காலம் பெற்றிருந்தது.  இயற்கையின் அழகை ஓவியத்தின் அழகோடு ஒப்பிடும் போக்கு இருந்திருக்கிறது. அதாவது இயற்கையைச் செயற்கையோடு ஒப்பிடும் அளவுக்குச் செயற்கை சிறப்புற்றிருந்திருக்கிறது.

“…………………………………………………………வல்லோன்
எழுதியன்ன காண்தகு வனப்பின்
ஐயள் மாயோள் அணங்கிய
மையல் நெஞ்சம் என்மொழிக் கொளினே” (நற். 146)

நெஞ்சம் மயங்கியதாம். எதனால்? தலைவியின் அழகால். அந்த அழகுக் கூறுகள் என்னென்ன? அவளுடைய தலைமைப் பண்பு மற்றும் மாமை நிறம். இவற்றுக்கு மயங்கியதாம் இவன் நெஞ்சு. தான் மயங்கியதைத் தன் நெஞ்சு மயங்கியதாக இவன் மயங்குகிறான். இவளுடைய இந்தப் பேரழகு எதனைப் போன்று இருந்தது என்பதில்  தான் ஓவியம் உவமமாகிறது. ‘வல்லோன் எழுதியன்ன காண்தகு வனப்பு’ என்னுந் தொடரில் தலைமகளின் அழகுக்கு ஓவியம் உவமமாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இனிப்,

“புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்
வனைபுனை எழில் முலை வாங்கமை திரள் தோள்
மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன்” (மலைபடு. 56-58)

என்னும் மலைபடுகடாஅத்துள் நன்னனின் சிறப்புக்களாகக் கூறும் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் இயற்கையாக வளர்ந்தோங்கும் மகளிர் மார்பிற்கு வல்லோன் புனைந்த செயற்கை ஓவியத்தை உவமமாக்குவதை அறியலாம்.

பரத்தையர் மறக்காத பரங்குன்றக்  காட்சி

பரங்குன்றத்தில் பரத்தை தன்னை மறந்து இறைவனை வாழ்த்தி நடனமாடுகிறாள். அவள் அழகு கண்டு தலைவி தன்னழகு தாழ்ந்துவிடுமோ என அஞ்சுகிறாள். மற்றொரு தலைவி ஆடியின் முன்னின்று இருக்கின்ற தன்னழகை இன்னும் திருத்திப் பெருக்க முனைகிறாள். மற்றொருத்தியோ தன் கணவன் அவள்மாட்டுச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத் தன் மார்பின் மீது மணமிக்க சந்தனத்தைத் தடவிக் கொள்கிறாள். இந்தக் காட்சி எப்படி இருந்தது என்பதுதான்,

“பல்லூழ்  இவையிவை நினைப்பின் வல்லோன்
ஓவியத்து எழுது எழில் போலும்” (பரி. 21)

என்னும் இவ்வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு அந்த ஆடரங்கில் நடந்த மகளிர் செயலை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருங்கால் அவையெல்லாம் கைவல்லான் தீட்டிய ஓவியக் காட்சிபோல அகக்கண்முன்னே தோன்றுகின்றனவாம். “நெனச்சுப்பாத்தா நெஞ்சில் படம் மாதிரி ஓடுது” என்பது வழக்கியல். “உள்ளுங்காலை உயர்ந்ததன் மேற்றே யாதலின்” உவமமாகிய ஓவியம் உயர்ந்து நிற்றல் காண்க.

கம்பனைக் கவர்ந்த ஓவியம்

இலக்கியத்தை ஓவியமாக்கியவன் கம்பன். அவன் உண்மையில் ஓவியத்தில் மனம் பறிகொடுத்தவன் என்பதற்கு அவனுடைய பாடல்களே அகச்சான்றுகளாக நிற்கின்றன. ஓவியப் புலமையும் ஓவிய ரசனையும் உடைய அக்காலப் புலவர்கள் ஓவியத்தின் உட்பொருளையும் நுண்ணியத்தையும் உணர்ந்த வல்லாளர்களாகவே இருந்திருக்கிறார்கள். இராமன் பிறந்த  மகிழ்ச்சியைச் சித்திரிக்கும் சூழல். அவனுடைய தோற்றம் பற்றிய பாட்டு இப்படி அமைந்திருக்கிறது.

“காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே,
ஓவிய எழிலுடை ஒருவனை அலது, ஓர்
ஆவியும் உடலமும் இலது’ என, அருளின்
மேவினன் – உலகுடை வேந்தர்தம் வேந்தன்.” (கம்ப. பால. 120)

ஒளிவீசுகிற கமலத்தைப் போல் தோன்றிய ஓவிய அழகன் இராமனே தனக்கு உயிரும் உடலுமாகக் கொண்டான் தசரதன்.   இராமன் சிவதனுசை முரிக்கிறான். அதிசயித்த தேவர்கள் எல்லாம் அசைவற்ற ஓவியம் போல நின்றனர் என்கிறார் கம்பர்.

“வயிரியர் மதுர கீதம்
மங்கையர் அமுத கீதம்
செயிரியர் மகர யாழின்
தேம்பிழி தெய்வ கீதம்
பயிர் கிளை வேயின் கீதம்
என்றிவை பருகி விண்ணோர்
உயிருடை உடம்பும் எல்லாம்
ஓவியம் ஒப்ப நின்றார்” (கம்ப.705)

பாலகாண்டத்தில் இவ்வாறு இராமனுக்கு ஓவியத்தை உவமமாக்கிய கம்பன் சுந்தர காண்டத்திலும் மறக்காமல் அசோகவனத்துச் சீதை தன் கணவன் இராமனைப் பற்றிய சிந்தனையில் இருந்தாள். அவள் சிந்தனையில் வந்ததாகக் கம்பன் எழுதுகிறான். ‘இளவரசுப் பட்டம் சூட்டிக் கொள்க’ என்று தந்தை தசரதன் ஆசி வழங்கியபோதும் ‘பரதன் நாடாளவும் பதினான்கு ஆண்டுகள் நீ காடாளவும் வேண்டும்’ எனக் கைகேயி அதிர்ச்சியளித்தபோதும் ‘சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையினை ஒத்திருந்த இராமனுடைய முகத்தினை’ எண்ணி மறுகினாளாம்.

“மெய்த்திருப்பதம் மேவு என்ற போதிலும்
இத்திரு துறந்து ஏகு என்ற போதிலும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்” (கம்ப. சுந்தர. 5088)

கம்பராமாயண நிகழ்வுகளில் சொற்பொழிவாளர்கள் பெரும்பாலும் மறக்காமல் கூறும் உவமம் இது. சீதை அசோகவனத்தில் இருந்த காட்சி ‘ஓவியம் புகையுண்டதை’ ஒத்திருந்ததையும் இராமனால் வதம் செய்யப்பட்ட வாலி ‘ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தோய்’ என்று இராமனுடைய முகத்தை ஓவியத்துள் அடக்க முடியாது வியந்து நின்ற விந்தையையும் அவர்கள் சொல்வார்கள். இப்படியெல்லாம் அயோத்தியர் இறையை ஓவியமாகப் போற்றிய கம்பன் இதே உவமத்தை அவனால் அழியப் போகும் அதாவது அனுமனால் தீக்கிரையான இலங்கைக்கும் ஒப்பிடுகிறான்.

‘ஓவியம் அமைந்த நகர் தீ உண, உளைந்தாய்,
“கோ-இயல் அழிந்தது” என; வேறு ஒரு குலத்தோன்
தேவியை நயந்து, சிறை வைத்த செயல் நன்றோ?
பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ?” (கம்ப. யு.கா. 6119)

என்னும் பாட்டில் இலங்கை மாநகரத்தை ஓவியத்தோடு ஒப்பிட்டு அத்தகைய  நகரம் தீக்கு இரையாவதற்கு இராவணன் காரணமானான். அதனால் ‘உயிர்கொடுத்தும் பழிகொண்ட பித்தனானான்’ என்று பாடுகிறார். கட்டுரையின் அளவு கருதிக் கம்பராமாயணம் உட்பட்ட தமிழ்க்கவிதைகளிலிருந்து ஒருசில எடுத்துக்காட்டுக்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. உவமம் என்பது இலக்கியப் பகுதி. ஓவியக்கலை என்பது வரலாறு மற்றும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. ஓவியம் இலக்கியச் சிந்தனைகளுக்கும் வண்ணனைகளுக்கும் உவமமாகப் பயன்பட்டுள்ளது என்பதே இந்தக் கட்டுரையின் சாரமாகும்.

நிறைவுரை

சிற்பம் என்பது கழித்தலின் எச்சம். ஓவியம் என்பது கூட்டலின் தொகுப்பு.  முன்னது செதுக்கப்படுவது. பின்னது வரையப்படுவது. நிற்றல், இருத்தல், கிடத்தல், நடத்தல் ஆகிய மனித இயல்புகளையும் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் மெய்ப்பாடுகளையும் வண்ணம் கொண்டும் தூரிகைகொண்டும் வட்டிகை கொண்டும் செயற்கையாக வரைந்தவர்களே யாரும் வரையாத இயற்கையோடு ஒப்பிட்டு இலக்கியம் செய்கிறார்கள் என்பதை எந்தக்  கவிதைக் கோட்பாட்டு ஆய்வாளரும் சிந்தித்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். கற்றளியில் இறைவன் நடனமிடும் இடத்தினைச் சித்திரசபை என்றுதான் சொன்னார்கள். சிற்பச் சாலை என்றாரில்லை. படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டு வருகிற மூவேந்தர்களால் கவனிக்கப்படாத இந்தக் கலையைப் பல்லவர்கள் கவனித்தார்கள். அதனால் அவர்கள் சித்திரகாரப் புலி எனவும் போற்றப்பட்டார்கள். இவ்வாறு நோக்கி, இன்னும் நோக்கி முழுமையாக ஆராயாது, உவமத்தில் வெறும் ஒப்புமை ஒன்றினையே நோக்கி ஆராய்வதால் தமிழ்க்கவிதைகளின் உவமம் பற்றிய நுண்ணிய மிக்க இலக்கியக் கோட்பாட்டைக் காண மறுத்துவர்களாவோம்!.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *