தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 32

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

உலகியல் வாழ்க்கைக் கூறே உவமம்

முன்னுரை

‘முகத்தைப் பாரு! இஞ்சித் தின்ன கொரங்காட்டும்!’, ‘முழிக்கிறத பாரு! திருடன தேள் கொட்டுன மாதிரி!’, ‘அசைஞ்சு வர்றதப் பாரு எருமை மாடு மாதிரி’, ‘எப்படிப் பேசறா பாரு? தேன் ஒழுகிற மாதிரி’ என்னுமாறு அமைந்த பேச்சுக்களைக் கேட்காதவர்கள் இதுவரைப் பிறக்காதவர்களே!. ‘முகம் குரங்கு மாதிரி இருக்கிறது’ என்றால் முகம் என்ன கவிதையா? ‘திருடன தேள்கொட்டுன மாதிரி’ என்றால் தவறு செய்தவன் கீர்த்தனையா? ‘எருமை மாதிரி அசைந்து வருகிறான்’ என்றால் வருகிறவன் செய்யுளா? ‘தேன் மாதிரி பேசுகிறாள்’ என்றால் அவள் என்ன பாடலா? அவர்களெல்லாம் மனிதர்கள். இந்தப் பேச்செல்லாம், இந்த உவமங்கள் எல்லாம் வாழ்வியலில் நாளும் காண்பன. நாளும் கேட்பன. ‘வாழ்க்கையின் எதிரொளியே இலக்கியம்’ என்பது உண்மையாயின் உவமங்கள் வாழ்வியல் விளக்கங்களாகவே இருக்க முடியுமேயன்றிக் கவிதைக்கு அழகு சேர்க்கிற ஒன்றாகவோ செய்யுளுக்கு அணியாகவோ ஆகவே முடியாது. இது தமிழ் மரபு. தமிழ்க்கவிதை மரபு. தமிழ்க்கவிதைகளின் உவமக்கோட்பாட்டின் தலையாய கொள்கை.

மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்

தமிழ்க்கவிதைகளில் உவமக்கோட்பாடுகள் என்பது தொல்காப்பியம் சார்ந்ததும் அதனையொட்டிய காலமுறை வளர்ச்சியுமாகும். இதிலிருந்து ஓர் ஆய்வுண்மையை நம்மால் பெற முடியும். அதாவது ‘தொல்காப்பியத்தில் இவ்வாறு இருந்து வந்த இவ்வுவமநெறி பிற்காலத்தில் இன்னின்னவாறு மாறியிருக்கின்றன’ என்று கண்டறிவதுதான் அந்த உண்மை. அதாவது ஆய்வு என்பது மேலிருந்து கீழாக வரவேண்டுமேயன்றிக் கீழிருந்து மேலாகச் செல்லுதல் அல்நெறி.  அதுதான் ஆய்வு நெறி.

அண்மையில் ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் பெயருடைய ஒரு நூலினைக் கற்கும் வாய்ப்பு கிட்டியது, அந்த ஆய்வு நூல் உவமம் பற்றியது. அந்த ஆய்வறிஞர் என்ன சொல்லுகிறார்? சங்க இலக்கியத்தில் நிரல் நிரை அணி இருந்தது என்கிறார். தொல்காப்பிய உவமக் கோட்பாடுகள் அனைத்தும் அகத்திணை மரபினைச் சார்ந்தவை என்பது இக்கட்டுரைத் தொடரின் தொடக்கப் பதிவுகளில் வலிமையான சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளன. அந்த அறிஞர் சொல்லுவதில் உள்ள முரண்களைப் பின்வரும் பகுதியில் காணலாம்.

தொல்காப்பிய உவமக் கொள்கையும் அணிகளும்

மெத்த படித்த மேதைகள் எல்லா அணிகளையும் உள்ளடக்கித்தான் தொல்காப்பியம் உவம அணியைச் சொல்கிறது என்கின்றனர். எனவே “உவமை ஏனைய அணிகளுக்குத் தாய்” எவ்வளவு பொருத்தமில்லாத கருத்தியல் இது? திருமணம் ஆகிய பெண்ணொருத்திக்குத் தனக்கு நாற்பத்து மூன்று பிள்ளைகள் பிறக்கும் என்று அவ்வளவு துல்லியமாகத் தெரியுமா என்ன? தொல்காப்பியர் அணியிலக்கண கருத்துடையார் அல்லர். உரையாசிரியர்கள் சிலர் அந்தக் கருத்தினை உடையவர் என்பது அவர்தம் உரைகளால் பெறப்படும். காரணம் மூலத்திற்கும் உரைகளுக்குமான காலம் 1500 ஆண்டுகள் இடைவெளி என்பதை மறக்கக் கூடாது. இந்த இடைவெளியில் அணியிலக்கணக் கொள்கை தோன்றி வளர்ந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் அதனைத் தனியாகச் சொல்லி விளக்கும் தனித்தமிழ் இலக்கண நூல் தமிழில் இல்லை. பிறமொழிக் கலப்பின் காரணமாக அமைந்தது தண்டியலங்காரம். அது வடமொழியின் ‘காவ்ய தரிசனம்’ என்பதன் தழுவல். இலக்கியத் திறனாய்வில் மேல்நாட்டுத் திறனாய்வுக் கொள்கையை வைத்துக் கொண்டு பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்ததும் மதிப்பீடு செய்ததும் எவ்வாறு அல்நெறியோ அதுபோன்றதுதான் இதுவும்.

தமிழில் துறை பகுப்பு

தொல்காப்பியத்திற்குப் பின்னால் வந்தவை சங்கத் தமிழ் இலக்கியங்கள் என்றால் தொல்காப்பிய நெறிப்படித்தான் துறை வகுத்திருக்க வேண்டும். அகநூல்களுக்குத் தொல்காப்பியத்தையும் புறப்பாடல்களுக்குப் புறப்பொருள் வெண்பாமாலையும் கொண்டு துறைவகுத்தது அடிமுரண். பிந்தைய இலக்கியப் பாடல்களுக்குத் துறை பொருத்தமில்லை என்றால் ‘துறை கண்டிலது’ என்று விட்டுவிடுவதுதான் செந்நெறி. எதனையும் எதிலும் திணிக்க எத்தனிப்பதும் தடுமாறுவதும் தமிழ் இலக்கிய உலகம் கண்டுவரும் அவலநிலையே. பல இலக்கண நூற்பாக்களுக்கு உரையாசிரியப் பெருமக்கள் எடுத்துக்காட்டுக்கள் கிட்டாது ‘வந்துழி கண்டு கொள்க’ என்று கூறியிருப்பதுதான் சரியான நெறி.

“நிரல் நிறை உவமை “உவமைகள் ஒன்றன்பின் ஒன்று அடுக்கிக் கூறப்படுகின்றன. அவற்றை அடுத்து அதே முறைவைப்பில் பொருள்களும் அடுக்கிக் கூறப்படுகின்றன. இதனை நிரல் நிறை உவமை என்று தொல்காப்பியம் கூறும்.

நிரல் நிறுத்தமைத்தல் நிரல் நிறை –(தொல். சூ.309) ஒழுங்காக முறை பிறழாமல் அமையும் உவமை அடுக்கினை நிரல் நிறை எனவும், மாறி மயங்கி வருவனவற்றை மயக்க நிரல் நிறை எனவும் கூறுவர்.’ சங்க இலக்கியத்தில் முன்னதே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.’

இந்தப் பகுதியில் நிரல் நிறை அணி என்று தொல்காப்பியம் கூறும் என்பது தொல்காப்பியத்தில் எங்கும் காணாதது. ஒரு கருத்தினை நிரல் நிறையாகக் கூறுவது வேறு. அதனை அணியாக்கி அழகு பார்ப்பது வேறு. முன்னது தானாக அமைவது. பின்னது திட்டமிட்டுக் கட்டமைப்பது. அது மட்டுமன்று ‘மயக்க நிரல் நிறை என்றும் கூறுவர்’ என்று யாரோ ஒருவர் மேல் பழிபோடுவதையும் காணமுடிகிறது. ‘நிரல் நிறுத்து அமைத்தல்’ என்பது தனி நூற்பாவன்று. ஒரு நூற்பாவின் பகுதி. உவமங்களை அடுக்கிக் கூறுவது ஏற்புடையது அன்று எனக் கூறும் தொல்காப்பியர் மூன்றனுக்கு விதிவிலக்கு தருகிறார். அடுக்கிக் கூறுவது என்றால் ஒரு பொருளை மற்றொரு பொருளோடு உவமித்து உவமித்த அதனையே மீளவும் இன்னொன்றோடு உவமிப்பது ‘காக்கை குயில் போல இருக்கும்., குயில் கரிபோல் இருக்கும்., கரி கரடிபோல் இருக்கும் என்று அடுக்கிக் கொண்டே போவது உவமத்தின் பொருளுணர்த்தும் ஆற்றலை சிதைத்துவிடுமாதலின் இவ்வாறு கூறுவது ஏற்புடைத்தன்று என்பதுதான் தொல்காப்பியம் கூறவரும் கருத்து.

“வெண்திங்கள் போன்றுளது வெண்சங்கம், வெண்சங்கின் வண்டிலங்கு தாழை வளர்கோடு”

என்னும் பேராசிரியர் தரும் எடுத்துக்காட்டும் இதனை விளக்கும். எனினும் இதற்கான விதிவிலக்கைத் தொல்காப்பியம் அனுமதிக்கிறது. நிரல்நிறுத்து அமைத்தல், நிரல்நிறை, சுண்ணம் ஆகிய மூன்றும் அல்லாதவிடத்து அடுக்கிவருதல் ஏற்புடைத்தன்று (இம்மூன்றில் மட்டும் அடுக்கி வரலாம்) என்பது தான் நூற்பாவின் கருத்து. இனி இந்த நூற்பாவை இரண்டு நூற்பாக்களாகக் கொண்டும் உரை வகுத்திருக்கின்றனர். இந்த நூற்பாவிற்குச் சிறப்புரை எழுதிய பேராசிரியர்,

“இனி அவற்றைப் பொருளுறுப்பென்பதல்லது, அணியென்ப வாயிற் சாத்தனையும் சாத்தனால் அணியப்பட்ட முடியும் தொடியும் வேறுகண்டாற்போல அவ்வணியும் செய்யுளின் வேறாகல் வேண்டும் என்பது”.

என்னும் விளக்கம் உவமத்தைச் செய்யுளுறுப்பாகக் கொள்ளுதல் ஆகாது என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது. மேலே சில பத்திகளில் செய்யப்பட்ட ஆய்வு, பொதுவாக உவமங்களைச் சுவைக்கும் நெறியையும் குறிப்பாகச் சங்க இலக்கிய உவமங்களைச் சுவைக்கும் நெறியையும் வரன்முறை செய்வதற்கே. உவமம் என்பது செய்யுளுக்கானது அன்று. அது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம் போலச் செய்யுள் உறுப்புக்களுள் ஒன்று அன்று. கவிதை படர்க்கையில் அமைந்தால் கவிஞனுக்கானது. கவிதை பாத்திரங்களினால் அமைந்தால் தொடர்புடைய பாத்திரத்திற்கானது. அதனால்தான்,

“கிழவி சொல்லின் அவளறி கிளவி
தோழிக்காயின் நிலம் பெயர்ந்து உறையாது” (தொல். உவம. 26)

“கிழவோட் காயின் ஈரிடத்து உரித்தே” (தொல். உவம. 29)

எனத் தொல்காப்பியம், உவமத்திற்கான மாந்தர்களை அடையாளப்படுகிறது. இனி ஆய்வு என்பது மேலிருந்து கீழாக வருதலன்றிக் கீழிருந்து மேலாகச் செல்வதன்று. பல நூற்றாண்டுகளுக்குப் பின் பல காரணங்களால் தோன்றியதொரு  பிறமொழி சார்ந்த அணியிலக்கண நூலில் பன்னெடுங்காலத்திற்கு முற்பட்ட இலக்கியத்தைச் சுவைப்பதற்கான வழிமுறைகளைத் தேடுவது ஆய்வு நெறியன்று.

வேறுபாடு தெரியாத வேழம்

வரலாறுக்கு முந்தையது தொன்மம். ஆனால் வரலாற்றுக் காலத்தில் கண்டறியப்பட்டது. வாழ்வோடும் வாழ்வின் நம்பிக்கையோடும் கலந்தது. இரவுக்குறிக்கு அல்லற்படும் தலைவனை வரைவு கடாவி, அவன் ஒப்புதலைத் தலைவிக்குத் தோழி சொல்லுகிறாள். தலைவனுடைய நாட்டைப் பற்றிய வண்ணனையை உவமத்தால் கூறும் தோழி, கையிலாய மலை எடுக்கலாற்றாது உழன்ற இராவணனைப்போல  மரவேங்கையை மறவேங்கையெனக் கருதிக் குத்திய தன்னிரு தந்தங்களை எடுக்கலாற்றாது மலையதிரும் வண்ணம் உழற்றிய யானைகள் நிரம்பிய நாட்டுக்குத் தலைவன் என்கிறாள்.

“இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தன்ன ஆக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் புலி தடக்கையின் கீழ்புகுந்து அம்மலை
உழக்கல் செல்லாது உழப்பவன் போல
உறுபுலி ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மதயானை
நீடு இரு விடர் அகல் சிலம்பக் கூய் தன்
கோடு புக்கல்லது உழக்கும் நாட!” (குறி. கலி. 2)

இராமகாதை கம்பனால் பாடப்பெற்றிருந்தாலும் அவருக்கு முன்பே உலகம் தழுவிய அளவில் இராமகாதை புழக்கத்தில் இருந்ததும் சங்க இலக்கியங்கள் உட்பட்ட தமிழிலக்கியங்கள் பலவற்றிலும் அது பற்றிய குறிப்புக்கள் பரவலாகக் காணக்கிடக்கிறது என்பதும் இலக்கிய வரலாறு எடுத்துக்காட்டும் உண்மை. இந்த உண்மையைத்தான் கபிலர் படைத்த தோழி தலைவிக்குக் கூறுகிறாள். அதாவது தானறிந்த உலக வழக்கை உவமமாக்குகிறாள்.

“ஆர் இடை என்னாய் நீ அரவஞ்சாய் வந்தக்கால்
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை
கார் பெற்ற புலமே போல் கவின் பெறும்
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்
பொருளில்லான் இளமைபோல் புல்லென்றாள் வைகறை
அருள் வல்லான் ஆக்கம் போல் அணிபெறும்
மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால்
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள் வைகறை
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்” (குறி.கலி. 2)

என்னும் தாழிசைகளில் தலா இரண்டு வீதம் ஆறு உவமங்களைக் கூறுகிறாள். எதிர்மறையில் மூன்று உடன்பாட்டில் மூன்று என்று. பல்வகையான இடர்ப்பாடுகளுக்கிடையே தலைவன் வந்து தலைவியைக் காண்பதை நிரல்படுத்திய தோழி, அவன் வருகையால் தலைவியிடம் ஏற்படும் மாற்றங்களை உவம அளவையால் விளக்கிக்காட்டுகிறாள். தலைவன் வராவிடின் அவள் படும் வேதனைக்கும், வந்தால் அவள் அடையும் மகிழ்ச்சிக்கும் தனித்தனியாக மூன்று உவமங்களைக் கூறுகிறாள். தலைவன் வராவிடின்,

  1. நீரற்ற புலமாகிறாள் தலைவி
  2. பொருளில்லான் இளமைபோல் கழிகிறது அவள் பருவம்
  3. அறம் செய்யாது அகவையால் மூத்தவனின் மூப்பாகிறது அவள் வாழ்வு.

இதற்கு மறுதலையாக அவன் வருகையினால்,

  1. கார் பெற்ற புலமாகிறாள் தலைவி
  2. அருள் வல்லான் ஆக்கம் போல் மேனி செழிக்கிறாள்
  3. திறம் சேர்ந்தான் செல்வம்போல் பொலிகிறது அவள் அழகு.

தலைவி தலைவனால் புரக்கப்பட வேண்டியவள். அன்றி இல்லறம் கடைபோகாது. தலைவன் இல்வழி நீரற்ற புலமானவள் அவன் உள்வழிக் கார் பெற்ற புலமாகிறாள். ‘கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை’. இளமைப் பருவத்தை விதந்தோதியதற்குக் காரணம், அதன் காலம் மிகக் குறைவு என்பதே. தலைவனால் ஆளப்படவேண்டிய தலைவியின் இளமை நலம் அவன் இல்வழி வறுமையில் சிக்கிய இளமையாக வீணாகக் கழிய, அவன் உள்வழி ஒப்புரவு அறிந்தவன் செல்வம் போல் வளர்கிறது என்பதாம். ‘செல்வத்துப் பயனே ஈதலாதலின்’ தலைவன் இல்வழி மனம் மொழிய காயங்களால் அறம் செய்யாதவன் அடையும் மூப்பைப் போலப் பயனற்று வீணாகிய அவள் வாழ்வு தலைவன் உள்வழி, அறம் செய்தான் செல்வம் போல் பொலிவு பெற்று வளர்ந்ததாம். இந்த வரிகளில் வாழ்வியலில் செய்யக் கூடாத நெறிகளும் செய்ய வேண்டிய அறங்களும் உவமங்களாக அமைந்துத் தலைவனின் காதல் சார்ந்த கடமையுணர்வினைக் குறிப்பாக உணர்த்தினமை காண்க.

வண்ணனையில் காட்டும் வாழ்வியல் உவமங்கள்

தலைவன் தலைவியோடு உடன்போக்கு மேற்கொள்கிறான்.   அவர் சென்றதை அறியாத செவிலி நடுக்குற்று நடந்த உண்மைகளை நற்றாயிடம் கூறுகிறாள். சுரம்போகிய செவிலி வழிச்செல்வாரிடம் தலைவன் தலைவி பற்றி வினவ, அவர்கள் தலைமக்களைக் கண்டதாகக் கூறும் பகுதி. தலைமக்கள் சென்ற பாலை நிலம் இப்படி இருக்கிறதாம்,

“வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்
சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி
யார்கண்ணும் இகந்து செய்து இசைகெட்டான் இறுதிபோல்
வேரோடு மரம் வெம்ப, விரிகதிர் தெறுதலின்
அலவுற்றுக் குடி கூவ ஆறு இன்றிப் பொருள் வெஃகி
கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நிழல்
உலகுபோல் உலறிய உரம் வெஞ்சுரம்”  ( பாலை. கலி. 9)

முந்தைய பாட்டில் கபிலர் குறிஞ்சியிலிருந்து பாலையைச் சிந்தித்தார். இந்தப் பாட்டில் கடுங்கோ பாலையிலிருந்தே பாலையைச் சிந்திக்கிறார். அவர்கள் இருவர் மனத்திலும் பாலையின் கொடுமையைவிட வறுமையில் இளமைதான் முன்னிற்கிறது. இளமையிலேயே வறுமையுற்றவன் போலத் தளிர்கள் வாடிய கொம்புகளை உடையனவாக மரங்கள் நின்றன. கொடுத்தற்கு மனம் இல்லாதவனுடைய (சிறுமனம் கொண்ட கருமி) செல்வம், தன்னைச் சேர்ந்தார்க்குப் பயன்படாதவாறு போலத் தன்னைச் சேர்ந்தவர்களுக்கு நிழலின்றி இருந்தன. யாவரிடத்தும் ஒழுக்கத்தைக் கடந்துத் தீங்கு செய்பவனின் புகழ்கெட்டு, இறுதிக் காலத்தே அவன் சுற்றத்தார் மட்டுமன்றி அவனும் கெடுவான். அதுபோல் கதிரவனின் கதிர்கள் சுடுதலினால் கிளைகள் மட்டுமன்றி, மரங்கள் வேரொடு வெம்பி நின்றன. இவையெல்லாம் புறக்காட்சிகள். நெறிமுறை இன்றி வரி தண்ட, அது கொடுக்க வழியில்லாத அரற்றிய மக்களைக் கொலையால் தண்டிக்கும் கொடியவர்களைக் கொண்டு ஆட்சி நடத்தும் கொடுங்கோலன் காலத்தில் அருள் நிழல் அறியா நாடு போல உலர்ந்து போன பாலையாம்.

வைரமுத்து பாடலும் வழிவழி மரபும்

இத்தகைய பாலைவழிச் சென்று விட்ட மகளை எண்ணி மருகும் செவிலிக்குக் கண்டோர் ஆறுதல் கூறுகின்றனர். அந்த ஆறுதலில் ஆறுதல் இருக்கிறது. தேறுதலும் இருக்கிறது. நடப்பியல் உண்மையும் இருக்கிறது. அவை உவமங்களாகவும் இருக்கின்றன. பொதுமக்கள் கவனத்திற்கு ஆளான வைரமுத்தின் திரையிசைப் பாடல்களில் ஒன்றின் சரணம் இப்படி அமைந்திருப்பதைக் கண்டிருக்கலாம்.

‘சிப்பிக்குள் முத்து வந்தாலும் சிப்பிக்குச் சொந்தம் ஆகாது!’

வைரமுத்து நகலெடுத்தார் என்பதல்ல கருத்து. இந்தச் சிந்தனையின் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது உண்மை. வைரமுத்து கையாண்டிருக்கும் இந்த உவமத்திற்கும் திரைக்கதையில் பாடல் இடம்பெறும் சூழலுக்கும் என்ன பொருத்தம் என்பது தனி விவாதத்திற்கு உரியது. ஆனால் தோன்றிய இடம் என்பதாலேயே தோன்றிய பொருள் அவ்விடத்திற்கு உரிமையானதன்று என்பது ஒரு நடப்பியல் உண்மை. இந்தக் கருத்தியல் மரபுவழிச் சார்ந்தது.

‘பலவுறு நறுங்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதான் என் செய்யும்?

சீர் கெழு வெண்முத்தம் அணிபவர்க்கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதான் என் செய்யும்?

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதான் என்செய்யும்” (பாலை.கலி. 8)

மகளைப் பறிகொடுத்துத் தவிக்கும் செவிலிக்குக் கண்டோர் கூறும் ஆறுதல் மொழியில் மலையில் தோன்றியும் மலைக்குப் பயன்படாத சந்தனம், நீருள் தோன்றி நீருக்குப் பயன்படாத முத்து, யாழுள் தோன்றி யாழுக்குப் பயன்படாத யாழிசை என்னும் நடப்பியல் சார்ந்த வாழ்வியல் உண்மைகளை உவமங்களாகக் கூறுகின்றனர். பெண்ணுக்குப் பிறந்த வீடு நிலையானதன்று. அது அவள் வந்து போகும் நந்தவனம். புகுந்த வீடே நிலையானது. ஒரு மரபினின்றும் மற்றொரு மரபிற்கு வேராகும் விந்தையை வித்தையாகச் செய்து காட்டுபவள் பெண். அந்த உண்மையை விளக்க, கண்டோர் கூறும் மூன்று உவமங்களும் தலைவியின் உடன்போக்கை நியாயப்படுத்துவது மட்டுமன்று, செவிலியின் மனச் சங்கடத்தையும் போக்கும் மருந்தாக அமைந்துவிடுவதைக் காணலாம்.

நிறைவுரை

இதுகாறும் செய்யப்பட்ட இவ்வாய்வுச் சுருக்கம் உவமம் பற்றிய சில  உண்மைகளை முன்னெடுக்கிறது. முன்பே கூறிய வண்ணம் இலக்கியம் என்பது வாழ்வின் எதிரொளியாக இருந்தால் வாழ்வியலின் அத்தனைக் கூறுகளும் அதனுள் இடம்பெற்றிருக்க வேண்டும். உவமம் செய்யுளுறுப்பு அல்ல. தமிழ் மக்களின் இந்த மண்ணின் வாழ்வியல் கூறு. எனவே தமிழ்க்கவிதைகளின் பெரும்பாலான உவமங்கள் இந்த அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. இனி, எல்லாப் படைப்புக்களுக்கும் படைப்பாளர்களுக்கும் இக்கோட்பாடு பொருந்துமா எனின் நிச்சயம் பொருந்தாது. சுரதா உள்ளிட்ட மரபுக்கவிஞர்களும் அப்துல் ரகுமான் உள்ளிட்ட புதுக்கவிதை எழுதுவோரும் அழகியலுக்காகவே சில இடங்களில் உவமங்களைப்  பயன்படுத்தியுள்ளனர். இது தனி ஆய்வுக்கு உரியது.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *