(அண்ணாகண்ணன் ஆசிரியராக இருந்த சென்னை ஆன்லைன் தமிழ்ப் பிரிவில் 2009இல் இந்தக் கேள்வி-பதில் வெளியானது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் இதை மீள் பிரசுரம் செய்கிறோம்.)

அ.அண்ணாமலை, சென்னையில் உள்ள காந்தி கல்வி நிலையத்தின் இயக்குநர்; காந்தியடிகளால் அடிக்கல் நாட்டப்பட்ட தக்கர் பாபா வித்யாலயத்தின் இணைச் செயலாளர்; தமிழ்நாடு சர்வோதய மண்டலின் செயலாளர்; அகில இந்திய சர்வோதய மண்டலின் நிர்வாகக் குழு உறுப்பினர்; இளைஞர் முகாம், காந்திய பிரச்சார யாத்திரைகள், படக் காட்சி, கண்காட்சி என்று தமிழகம் முழுவதும் சுற்றி, இளைஞர்களிடையே காந்தி பற்றிய தெளிவான புரிதலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ‘தமிழர், தமிழ்நாடு, காந்தி’ எனும் சிறப்பு புகைப்படக் கண்காட்சியைப் பிற காந்திய அன்பர்களுடன் இணைந்து பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார். பொதிகை தொலைக்காட்சியில் கடந்த ஒன்றரை வருடங்களாக ‘உலக உத்தமரின் உயரிய சிந்தனைகள்’ என்ற பகுதியில் காந்தியடிகளைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து வந்துள்ளார்.

காந்தியத்தில் ஆழ்ந்து தோய்ந்த அ.அண்ணாமலை, காந்தியம் தொடர்பான நம் கேள்விகளுக்குப் பதில் அளிக்க இசைந்துள்ளார். அவரிடம் அண்மைக் காலத்தில் கேட்கப்பட்ட சில கேள்விகள் வருமாறு:

கேள்வி 1:

வாடிக்கையாளரே நம்முடைய வியாபாரத்தின் முக்கிய நபர்;
அவர் நம்மை சார்ந்து இல்லை;
நாம்தான் அவரைச் சார்ந்து இருக்கிறோம்.
அவர் நம்முடைய வியாபாரத்திற்கு இடையூறு செய்பவர் அல்ல;
நம் வியாபாரமே அவருக்காகத்தான்.
நம் வியாபாரத்திற்கு அவர் அந்நியரல்லர்;
அவருடன்தான் நம் வியாபாரமே உள்ளது.
நாம் அவருக்கு உதவி புரியவில்லை;
அவர்தான், சேவை செய்யும் வாய்ப்பை நமக்களிப்பவர்

இது ஒரு அருமையான கருத்து. காந்தியடிகள் கூறியதாகப் பல இடங்களில் பார்க்கிறோம். உண்மையிலேயே இது காந்தியடிகளின் வார்த்தைகளா? ஆம் எனில் எந்தப் புத்தகத்தில் இதனைக் காணலாம்?

பதில்:  நிச்சயமாக இது ஒரு நல்ல கருத்துத்தான். ஆனால் இது காந்தியடிகளின் வார்த்தைகள் அல்ல. அதே போல் அவருடைய திரட்டப்பட்ட 100 ஆங்கிலத் தொகுதிகள் அடங்கிய புத்தகங்கள் எதிலும் இவை இல்லை.

===============================================

கேள்வி 2:

மகாத்மா காந்தியின் கடைசி உண்ணாவிரதம் இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு ரூ.55 கோடி கொடுக்க வேண்டும் என்பதற்காக முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்ததாகும். இது இந்திய அரசைப் பணம் கொடுக்க நிர்ப்பந்தம் செய்தது போன்ற செயல்தானே?

பதில்: 1947, செப்டம்பரில் கல்கத்தாவிலிருந்து காந்தியடிகள் டெல்லிக்கு வந்தார். அங்கிருந்து கலவர பூமியான பஞ்சாபில் அமைதி ஏற்படுத்துவதற்காக அங்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். சர்தார் படேல் காந்தியடிகளைச் சந்தித்து டெல்லியில் நிலவும் நிலையை விளக்கினார். ஆகவே, அமைதிக்காகவும், மத ஒற்றுமைக்காகவும், உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார் காந்தி. ஆதலால், டெல்லியில் அமைதி ஏற்படுத்த வேண்டி மேற்கொண்ட உண்ணாவிரதம்தானே தவிர, பாகிஸ்தானுக்கு ரூ.55 கோடி தரவேண்டும் என்பதற்காக அந்த உண்ணாவிரதத்தைக் காந்தியடிகள் மேற்கொள்ளவில்லை. அதனால் இந்திய அரசை எந்தவிதமான நிர்பந்தமும் காந்தி செய்யவில்லை என்பதுதான் வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை.

பிரிவினையின்போது நம்மிடையே ஏற்பட்ட ஒப்பந்தம்:

இந்தியா ரூ.55 கோடியை பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தப்படி ரூ.20 கோடி ஏற்கெனவே கொடுத்தாகி விட்டது. ஆனால் பாகிஸ்தான் இராணுவ உதவியுடன் காஷ்மீரில் ஆக்கிரமிப்பு நடத்தியதால் இந்திய அரசு இரண்டாவது தவணைத் தொகையை நிறுத்தி வைக்க முடிவு செய்தது. இது இரு தரப்பும் இணைந்து ஒப்புக்கொண்டதை மீறும் செயலாகும் என்று மவுண்ட்பேட்டன் பிரபு இந்த விஷயத்தைக் காந்தியடிகளின் பார்வைக்குக் கொண்டு சென்றார்.

கண்ணுக்குக் கண் என்ற சித்தாந்தத்தை எப்பொழுதும் எதிர்த்து வந்த காந்தியடிகள், தார்மீக அடிப்படையில் இந்திய அரசின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே காந்தியடிகளின் இந்த நிலைப்பாட்டை, சில தீய சக்திகள் அவர் சமூக அமைதிக்காக இருந்த உண்ணாவிரதத்துடன் திட்டமிட்டே இணைத்து இவ்வாறான செய்தியைப் பரப்பினார்கள்.

உண்ணாவிரதம் பற்றிய உண்மைகள்:

தில்லியில் நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் மறைய காந்தியடிகள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார் என்றவுடன் டாக்டர் சுசீலா நய்யார், தன் சகோதரரும் காந்தியடிகளின் செயலாளருமான பியாரிலாலை சந்தித்துப் பேசுகிறார். அப்போது பேசப்பட்ட விஷயங்களில் ரூ.55 கோடி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

* உண்ணாவிரத அறிவிப்பை 12ஆம் தேதி நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தியடிகள் வெளியிட்டார். அப்பொழுதும் இதைப் பற்றி அவர் பேசவில்லை.

* அதே போல், 13ஆம் தேதி நடந்த கூட்டத்திலும் எதுவும் பேசவில்லை.

* 15ஆம் தேதி அவருடைய உண்ணாவிரதம் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலிலும் இதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரசு வெளியிட்ட பத்திரிகைக் குறிப்பிலும் இதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

* டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைமையில் காந்தியடிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய குழு கொடுத்த வாக்குறுதிகளிலும் இவை இடம்பெறவில்லை. இவ்வளவு சாட்சியங்கள் இருந்தும், காந்தியடிகள் ரூ.55 கோடி பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் உண்ணாவிரதம் இருந்தார் என்று கூறுவது வெறும் அவதூறுதானே தவிர அது உண்மைக்கு முற்றும் புறம்பானது.

===============================================

கேள்வி 3:

நேதாஜிதான் காங்கிரஸின் உண்மையான ஹீரோ. காந்தியடிகள் அவருடைய தலைமையைக் கேள்விக்கு உள்ளாக்கி காங்கிரஸை விட்டுப் போவதற்குக் காரணமாக இருந்தார் என்று பலர் நினைக்கிறார்கள். இதில் உங்களுடைய கருத்து என்ன?

பதில்:  நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் 1938இல் நடந்த ஹரிபுரா காங்கிரஸ் மகாநாட்டில் ஒருமனதாக முன்மொழியப்பட்டார். அதே போல காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டார்கள். நேதாஜி தலைவரானவுடன் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும், அதனுடைய அகிம்சைப் போராட்டத்தின் ஏற்புடைமை பற்றியும் மாறுபாடான கருத்துகளைப் பேசி வந்தார். மிகவும் வெளிப்படையாக இதையெல்லாம்
விவாதித்தாலும் காங்கிரஸ் பெரும்பாலான உறுப்பினர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் காந்தியடிகளின் ஆதரவு நிலையை எடுத்தவர்கள்.

ஓராண்டுக்குப் பின், 1939இல் திரிபுரியில் காங்கிரஸ் பொதுக் குழு கூடியது. மீண்டும் தலைவராக நேதாஜி விரும்பினார். மௌலானா அபுல்கலாம் ஆசாத் தாமும்போட்டியிடுவதாக அறிவித்து விட்டார். ஆனால் காந்தியடிகள் பட்டாபி சீத்தாராமையாவைத் தலைவராக்க விரும்பினார். நேதாஜி, மௌலானா, பட்டாபி மூவரும் தலைவருக்கான தேர்தல் களத்தில் இறங்கினார்கள். கடைசி நேரத்தில் மௌலானா வாபஸ் வாங்கி பட்டாபியை ஆதரித்து விட்டார். ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு நேதாஜி வெற்றிப் பெற்றார்.

தலைவராக காங்கிரஸின் பெரும்பாலோர் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற நேதாஜி, செயற்குழுவின் வழிகாட்டுதலுடன் செயல்பட வேண்டும். ஆனால் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலோர் காந்தியடிகளின் ஆதரவாளர்கள். எனவே காந்தியடிகள், ‘சீத்தாராமையாவின் தோல்வி என்னுடைய தோல்வி. புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் தற்போதைய செயற்குழு உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும். அப்போதுதான் நேதாஜி தன்னுடைய கருத்துக்கு உடன்பட்டவர்களைச் செயற்குழுவில் சேர்த்து காங்கிரஸ் இயக்கத்தை நடத்த முடியும்’ என்று கூறினார்.

காந்தியடிகள் இக்கருத்தைத் தெரிவிப்பதற்கு மற்றொரு காரணம் உண்டு. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் நேதாஜியைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தபின், காந்தியடிகள் மீதும் காங்கிரஸ் இதுவரை கடைப்பிடித்து வந்து கொள்கை மீதும் எங்களுக்குப் பூரணமான நம்பிக்கை உள்ளது என்று தீர்மானம் நிறைவேற்றினர். இத்தகைய முரண்பாடான நிலைதான் காந்தியடிகள் நிர்வாகக்குழு உறுப்பினர்களைப் பதவி விலக வற்புறுத்தியது. நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது. அவர்களுக்கு இடையே கருத்து மாறுபாடுகள் இருந்தது. ஆனால் அவர்களுக்கிடையே இருந்த உறவு அற்புதமானது. இன்றைய தலைமுறையினரான நாம் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

காந்திக்கு தாகூர் இதுபற்றி கடிதம் எழுதுகிறார். அதற்கு காந்தி அளித்துள்ள பதிலில் ‘எங்கள் இருவருக்கும் கருத்தில் முரண்பாடு உள்ளது. உறவில் அல்ல. நேதாஜி என்றைக்கும் என்னுடைய மகன்தான்’ என்றார். அதேபோல 1944, ஜூன் 4ஆம் நாள் ரங்கூனில் இருந்து ‘ஆசாத் ஹிந்த் வானொலி’ மூலம் பேசிய நேதாஜி, காந்தியடிகளை ‘இந்தியாவின் தந்தை’ என்று அழைத்தார். ‘உங்களுடைய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மூலமாக பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவை விட்டு அகன்றுவிட்டாலோ அல்லது உங்களுடைய திட்டங்கள் வெற்றி பெற்றாலோ அதற்காக எங்களைவிட மகிழ்ச்சி அடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது’ என்றும் தெரிவித்தார்.

மேலும் நேதாஜி, ‘மேலே சொன்ன விஷயங்கள் தற்போது நடைபெறாது என்ற ஊகத்தின் அடிப்படையில்தான் நாங்கள் எங்களுடைய போராட்டத்தைத் தொடருகிறோம். விடுதலைக்கான இந்தப் புனிதப் போரில் இந்தியாவின் தந்தையாகிய உங்களுடைய ஆசிர்வாதத்தையும் வாழ்த்துகளையும் வேண்டி நிற்கிறோம்’ என்றும் உரையாற்றினார்.ய

மேலே உள்ள நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, தன் கருத்துகளுக்கும், கொள்கைகளுக்கும், தனியான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி வழிநடத்தினால்தான் நமது இலக்கான சுதந்திரத்தை அடைய முடியும் என்ற எண்ணம் நேதாஜிக்கு வந்ததால்தான் காங்கிரஸை விட்டு விலகும் முடிவை எடுத்திருக்க வேண்டுமே தவிர, அதற்குக் காந்தி தான் காரணம் என்ற வாதத்தில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.

நன்றி -சென்னை ஆன்லைன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *