திருச்சி புலவர் இராமமூர்த்தி

இலைமலிந்த சருக்கம்

அரிவாட்டாய நாயனார் புராணம் (மின்னு)

இப்புராணத்தின் அடுத்த அடியாராகிய  அரிவாட்டாயனார் அருள் வரலாற்றை  இனிக்  காண்போம்.

பொன்னிநாடெனும்  சோழ நாட்டில் கணமங்கலம் என்ற ஊரில், கரும்பும் செந்நெல்லும் வளர்ந்து தேனும் முத்தும் சொரியும் தாமரையும், நீலமலர்களும்  விளைந்தன. அவ்வூரில் செல்வம் மிக்க வேளாண் குடியில் தாயானார் என்னும் திருப்பெயர் கொண்ட அடியார் வாழ்ந்தார். அவர் சிவன் கழல் மறவாத சிந்தையர். அவர் அடியார்க்கு உணவளித்த பாங்கினை

மின்னு செஞ்சடை வேதியர்க் காமென்று
செந்நெ லின்னமு தோடுசெங் கீரையும்
மன்னு பைந்துணர் மாவடு வுங்கொணர்ந்
தன்ன வென்று மமுதுசெய் விப்பரால்.

என்ற பாடல் கூறுகின்றது.  இப்பாடலின்  பொருள்:

விளங்குகின்ற சிவந்தசடையினையுடைய வேதியராகிய சிவபெருமானுக்கு ஆகுமென்று செந்நெலரிசியின் இனிய அமுதுடன், செங்கீரையும், நிலைத்த பசுங்கொத்தாகிய மாவடுவையும் கொண்டு அவற்றை ஒவ்வொரு நாளும் நியதியாய் அவரை அமுது செய்விப்பர் (தாயனார்).

விளக்கம்

மின்னு செஞ்சடை  என்ற தொடர் அற்புதத் திருவந்தாதியில் காரைக்கால் அம்மையார் பாடிய

“மாலையின் தாங்குருவே போலும் சடைக்கற்றை”

என்ற பாடலையும், பொன்வண்ணத்தந்தாதியின்,

“மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை”

முதலியதிருவாக்குக்களைநினைவூட்டுகிறது.

சடைசெவ்வான வொளியுடையது என்க. தாயனார் அமுதுசெய்வித்து வழிபட்ட இறைவர் திருத்தண்டலை நீணெறியில் எழுந்தருளிய மூர்த்தி என்றறியப்படுகின்றது.

இத்தலத்தேவராத்தில் “சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடையார்” என்று ஆளுடைய பிள்ளையார் இவரது சடையினைச் சிறப்பித்தருளியது சிந்திக்க.

வேதியர்க்கு ஆகும்  என்ற தொடர்  வேதியரது பூசைக்கு உரியன ஆகும்செந்நெல்லைக் குறித்தது. வேதியர்கள் செந்நெல் உண்ணும் வழக்கும் குறிப்பதாம்.

அன்புடைய மக்கள் தாம் உயர்வாக உவக்கும் உணவையே இறைவனுக்கு ஊட்டுவர். கண்ணப்பநாயனார் வேட்டையாடிச் சேர்த்து இறைவனை ஊட்டிய பண்பு இங்குச் சிந்திக்கத் தக்கது. இதுபற்றியே தாயனார் செந்நெல் அமுதினையே நாளும் இறைவனுக்கு அமுது செய்வித்தனர் என்க. அதுவே இனிய அமுது என்ற காரணத்தால் அதனை ஊட்டினர் என்பார் இன் அமுது என்றார்.

கீரையும் மாவடுவும் உணவுக்கு ஒத்த உதவிச்சுவை தருவனவாதலன்றி அவையே உணவாதவில்லை. நெல்லரிசியமுதே உணவாம். இச்சிறப்புப்பற்றி அமுதோடு கீரையும் வடுவும் தந்தார் என்று   பிரித்தோதினார்.

செங்கீரை – இது செந்நெல் அமுதுடன் ஒத்த சுவையும் குணநலமும் தருவது பற்றி இதனை ஊட்டினர் என்க.

மன்னு பைந்துணர் மாவடு – வடுவின் பசுமையும் இளமையும் மாறாதபடியே பன்னாளும் நிலைக்குமாறு ஊறவைத்துப் பாதுகாக்கப்பட்ட என்ற குறிப்புப்பெற மன்னு  என்றார். மாவடு உணவைச் சீரணிக்க உதவுவது என்ப.  மிக இளைய உவர்ப்பிஞ்சு.

அமுது செய்விப்பரால் என்ற தொடர்,  ஒவ்வொரு நாளும் நியதியாய் ஊட்டுவிப்பார். ஆல் – நியதிபிழையாத உறுதிக் குறிப்புத்தரும் அசை. செய்விப்பர் – பூசைக்குரிய சிவவேதியர்களைக்கொண்டு அமுதமைப்பித்து ஊட்டுவித்தார் என்ற குறிப்புப்பெறப் பிறவினையாற் கூறினார்.

இப்பாடல் தாயனார் அடியார்களுக்கு உணவூட்டும் செயலின் முழுமையை உணர்த்துகிறது! இம்முறையில் சிறிதும் வழுவாமல் அவர் நடந்து கொண்ட அருமையை இனிமேல் காணப் போகிறோம்  என்பதைக் குறிப்பால்  உணர்த்துகிறது!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சேக்கிழார் பாடல் நயம் – 149

  1. வணக்கம்!

    புதுமை செய்கிறோம் என்ற பெயரில் பொத்துப்பட்டு நின்றதுதான் மிச்சம்! இந்த வறட்சி உலகத்தில் ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீராய் உரை நன்னீராய் பாய்ந்ததைக் கண்ட அனுபவம்!

    இரண்டு சொற்களே! கல்விப் பரப்பும் அறிவின் ஆழமும் வெளிப்பட்டு நிற்கும் சிறப்பான சூழல்!
    “வேதியர்க்கு ஆகும் என்ற தொடர் வேதியரது பூசைக்கு உரியன ஆகும். செந்நெல்லைக் குறித்தது. வேதியர்கள் செந்நெல் உண்ணும் வழக்கும் குறிப்பதாம்.”

    ‘மன்னு” பைந்துணர் மாவடு – வடுவின் பசுமையும் இளமையும் மாறாதபடியே பன்னாளும் நிலைக்குமாறு ஊறவைத்துப் பாதுகாக்கப்பட்ட என்ற குறிப்புப்பெற “மன்னு” என்றார்.
    வேதியர் என்பதை ஆகுபெயராக்கி உரைத்த மேதைமையும் ‘மன்’ என்னும் இடைச்சொல்லுக்கான வாழ்வியல் பொருளை மாவடு ஊறுகாயோடு பொருத்தியும் உரை கண்டிருக்கும் சதுரப்பாடு பெரிதும் பாராடடுக்குரியன.
    பழந்தமிழ் உரை மரபு இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது! நன்றி!

    வாழ்த்துக்களுடன்
    ச.சுப்பிரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *