சைனிக் மற்றும் மிலிட்டரி பள்ளிகள்

2

கேப்டன் கணேஷ்

இந்திய பாதுகாப்புப் படைகளான இராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படைகளில் உயர் நிலை அதிகாரிகளாய் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக பள்ளி வயதில் இருந்தே மாணவர்களைத் தயார் செய்ய மத்திய அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பள்ளிகள் தான் சைனிக் பள்ளிகள் (Sainik Schools) மற்றும் மிலிட்டரி பள்ளிகள் (Military Schools).  நாடு முழுவதும் மொத்தம் பதினெட்டு சைனிக் பள்ளிகளும் ஐந்து மிலிட்டரி பள்ளிகளும் உள்ளன.  இவைகளில் சேர்வதற்கு தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதோடல்லாமல் நேர்முகத்தேர்விலும் வெற்றி பெறவேண்டும்.  இப்பள்ளிகளில் நுழைவது ஒன்றும் அவ்வளவு எளிய காரியம் அல்ல.  ஆனால் இப்பள்ளிகளில் இடம் கிடைத்த குழந்தைகள், தங்களது வாழ்கையில் எவ்வித சவால்களையும் தீரத்துடனும் திறமையுடனும் சந்திக்கும் திறனைப் பெற்று நல்ல குடிமக்களாக விளங்குவார்கள்.

நான் அப்படி ஒரு பள்ளியின் மாணவனாக இருக்க ஆசைப்பட்ட நாட்கள் பல.  அது நடக்காமல் போனதால் எனக்குள் தோன்றியது ஒரு உத்வேகம்.  என்னை அந்த மாணவர்களுக்கு இணையாக நன்கு தயார் படுத்திக்கொண்டு எனது தேசிய அளவிலான தேர்வுகளைச் சந்தித்தேன்.  அதையடுத்து ஐந்து நாட்கள் தொடர்ந்து நடக்கும் தேசிய அளவிலான நேர்முகத் தேர்விலும் நல்ல மதிப்பெண்களுடன் தேறினேன்.  நான் இராணுவப் பயிற்சியில் இருந்த போதும் சரி,  இராணுவ சேவையில் இருந்த போதும் சரி, நான் மேற்கூறிய பள்ளிகளில் படித்த பல இராணுவ அதிகாரிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அந்த அதிகாரிகளின் அணுகுமுறையே வித்தியாசமானதாக இருக்கும்.  இதில் எனக்கு சில மகிழ்சியான தருணங்களும் வந்தன.  எனது சில செயல்பாடுகளைப் பார்த்த அந்த அதிகாரிகள் என்னிடம் “எந்த சைனிக் பள்ளி அல்லது மிலிட்டரி பள்ளியில் நீ படித்தாய்?” என்று கேட்ட தருணங்கள் தான் அவை.

இந்த இரு பிரிவு பள்ளிகள் மட்டுமின்றி ராஷ்ட்ரீய இந்திய மிலிட்டரி கல்லூரி(Rashtriya Indian Military College) என்ற ஒரு பள்ளியும் உள்ளது.  RIMC என சுருக்கமாக அழைக்கப்படும் இப்பள்ளி டேராடூன் -ல் அமைந்துள்ளது.  இப்பள்ளியின் மாணவர்கள் தங்களின் விடுமுறை நாட்களின் என்ன செய்வார்கள் என்று சொன்னால் அந்த பள்ளியின் சிறப்பு உங்களுக்குத் தெரியவரும்.

இவர்கள் விடுமுறையில் கிரிக்கெட் ஆடமாட்டார்கள்.  தொலைக்காட்சியே கதியென்றும் இருக்க மாட்டார்கள்.  இமயமலையில் நந்த தேவி, நங்கா பர்வதம் ஆகிய சிகரங்களில் ஏறுவார்கள்.  நுங்கும் நுறையுமாய் வேகத்துடன் ஓடி வரும் கங்கை நதியில் ஒயிட் ரிவர் ராஃப்டிங் (White River Rafting)செய்வார்கள்.  சிறு விமானங்கள் செய்து அதில் எஞ்சினைப் பொறுத்தி பறக்கவிடுவார்கள்.  இவை அனைத்தும் செய்யும் மாணவர்கள் 12ம் வகுப்பிற்கும் கீழ் படிக்கும் மாணவர்கள் என்றால் நம்ப முடிகின்றதா?

நான் இதுவரை சொன்ன செய்திகள் எல்லாம் இந்த பள்ளிகள் பற்றிய ஒரு நல்ல அறிமுகம் கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.

ஆனால் இதை நான் எழுத ஆரம்பித்த காரணம் வேறு!

திறமையான ஆசிரியர்கள், அதிகபட்ச ஒழுக்கம் விளங்கும் ஒரு சூழல், அறிவுடன் திடமான ஆரோக்கியத்தையும் தரும் வகுப்பு சார் பயிற்சிகள் மற்றும் கடுமையான வெளிப்புறப் பயிற்சிகள் அடங்கிய பள்ளிகள் சைனிக் மற்றும் மிலிட்டரி பள்ளிகள்.  காலை நான்கு மணிக்குத் தொடங்கும் இவர்கள் ஒரு நாள் முடிவது இரவு பத்து மணிக்கு.  காலையும் மாலையும் மொத்தம் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி வகுப்பு.  காலை எட்டு மணியில் இருந்து பன்னிரண்டு மணி வரை வகுப்புகள் நடக்கும்.  சாதாரண சிபிஎஸ்இ பள்ளிகளின் அதே பாடங்கள் பயிற்றுவிக்கப்படும்.  மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வகுப்புகள் நான்கு மணிக்கு முடியும்.  அதன் பின் மாலை நேர உடற்பயிற்சி மற்றும் சிறப்புப் பயிற்சிகள் தொடங்கிவிடும்.

ஆனால் இந்தப் பள்ளிகளிலும் ராக்கிங் என்னும் அரக்கன் நுழைந்துள்ளது மிகவும் அதிர்ச்சிக்குரிய தகவலாக உள்ளது.

ஜார்கண்ட் மாநிலம், ரான்சி யில் உள்ள சைனிக் பள்ளியில் ராக்கிங் கொடுமை காரணமாக விடுமுறைக்கு வீடு வந்த பதிநான்கு வயது சிறுவன், விடுமுறை முடிந்த பின் பள்ளிக்குத் திரும்ப மறுத்துள்ளான்.  சாலை ஓரம் தேநீர் கடை வைத்திருக்கும் ஒரு ஏழை வியாபாரியின் மகன் இவன். தேசிய அளவிலான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பள்ளியில் நுழைந்த ஒரு சிறுவன் எனக்கு படிப்பே வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு ராக்கிங் கொடுமை நடந்துள்ளது.

இதைப் போன்று பல புகார்கள் வந்ததால், மாநில உயர்நீதி மன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  ராக்கிங் கொடுமையால் சில மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.  சில மாணவர்கள் தற்கொலைக்கும் முயன்றுள்ளனர்.  பல மாணவர்கள் பள்ளியை விட்டுச் சென்று விட்டனர்.  இராணுவத்தில் உயரதிகாரியாக வேண்டும் என்ற இவர்களின் கனவு, கனவாகவே நின்றுவிட்டது.

மாணவர்கள் ராக்கிங் பற்றி ஆசிரியர்களிடமும், தலைமை ஆசிரியரிடமும் புகார் கொடுத்தும் பலனில்லை என்று அந்த மாணவன் கூறுகின்றான்.

பள்ளித் தரப்பில் இருந்து அதன் தலைமை ஆசிரியர் லெப்டினண்ட் கர்னல். T.D. பிரேம் லால் கூறுகையில்:”ராக்கிங் பற்றிய எந்த வித புகாரும் பள்ளி நிர்வாகத்திற்கு வந்து சேரவில்லை.  தங்கும் விடுதிப் பொறுப்பாளர்கள் கூட இதுவரை அப்படி ஒரு தகவலை தரவில்லை.  எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு சாதாரணமாக நடத்தும் பாடங்கள் மட்டுமல்லாது மனதையும், உடலையும் திடப்படுத்தும் பல கூடுதல் பயிற்சிகளும் தருகின்றோம்.  இந்த பயிற்சிகள் அனைத்தும் கடுமையானவை என்பது உண்மை தான்.  ஆனால் அந்த பயிற்சிகள் மாணவர்களுக்கு நன்மை பயக்கும்.  கடுமையான பயிற்சிகளை செய்ய முடியாத ஒரு சில மாணவர்கள் பள்ளியை விட்டு விலகிவிடுகின்றனர்.  அவ்வளவுதான்.” எனக் கூறுகின்றார்.

சைனிக் பள்ளிகள் மற்றும் மிலிட்டரி பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, பள்ளிகளும் அரசும் பெற்றோர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.  ராக்கிங் போன்ற கொடுமைகள் தடுக்கப்பட்டு, மாணவர்கள் நல்ல பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்கின்றனர் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.  நானும் இராணுவத்தில் பணி புரிந்தவன் என்ற முறையில் எனது கருத்தாக இங்கே பதிவு செய்கிறேன்.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சைனிக் மற்றும் மிலிட்டரி பள்ளிகள்

  1. அன்பின் கேப்டன் கணேஷ்,

    தங்களைப்போன்று உன்னத சேவையில் பணியாற்றியவர்கள் செய்ய வேண்டிய சரியான விழிப்புணர்வு என்பதில் ஐயமில்லை! சைனிக் மற்றும் மிலிடெரி பள்ளி என்பது பல பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கைக் கனவு என்பதும் நிதர்சனமே.. அருமையான கட்டுரை. வாழ்த்துகள் கேப்டன்.

  2. இந்தப் பள்ளிகளில் ராகிங் என்பது உண்மை. உடுமலை அருகே உள்ள சைனிக் பள்ளியில் படித்த என் நண்பன் கூறியவைகள் கல்லூரிகளில் தான் ராகிங் என்ற நம்பிக்கையைத் தகர்த்து. தன் பள்ளியில் நிதர்சனமாக இருக்கும் ராகிங்கை கண்டுபிடிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் லெப்டின்ண்ட் ஆக இருந்தால் என்ன புண்ணியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *