ஊர்வசி- சயந்தன் கதை உணர்த்தும் பாடம்!

0

முனைவர் அரங்கன் மணிமாறன்

ஒரு முறை தேவாதிபதியான இந்திரனின் சபைக்கு அகத்திய மாமுனிவர் செல்கிறார். இந்திரன் மகிழ்ந்து பணிந்து மிகச்சிறப்பான வரவேற்பும் உபசரிப்பும் செய்கிறான். இந்திரன் சபை கலைகளின் உறைவிடமாயிற்றே! இரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ அரம்பையர் சூழ இருந்து கலைகளின் உச்சத்தைத் தொட்ட அரசவை அல்லவா?!

அவ்வழியே தம் அரசவைக்கு வருகைப்புரிந்த தமிழ்முனி குறுமுனி குடமுனி கும்பமுனி அகத்திய  பெருமானுக்கு கலைவிருந்து அளிக்க விரும்பி ஊர்வசியின் நாட்டிய கலைவிருந்து ஏற்பாடு செய்கிறான் இந்திரன். தேவாதிபதியின் தேவசபை புதுப்பொலிவு பெற்றது. கலைநயத்தியத்தின் உறைவிடமான இந்திரனின் சபை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. கலைநயமும் ஒளிநயமும் நறுமணமும் மிக்கு விளங்கிய சபை ஊர்வசியின் கலைத்திறனைக் கண்டு ரசிக்க கூடியது. “ஊர்வசி! உன் கலைத்திறனை தமிழ்முனி அகத்தியர் கண்டு வியக்கும்படி நிகழ்த்திக்காட்டு!” என ஆணையிட்டான் இந்திரன்.

சபையில் இந்திரனின் மைந்தனான சயந்தனும் அமர்ந்திருந்தான். ஊர்வசியின் காதலனாக அவன் அவள் இதயத்தில் இடம்பிடித்திருந்தான் என்பது பலரும் அறியா உண்மை.

நாட்டியம் தொடங்கியது. ஆனால் ஊர்வசியின் மனமும் விழிகளும் சயந்தனையே நாடிநின்றது. ஆடலின் இடையே கண்கள் வழியே நயன காதல் சரசத்தில் ஈடுபட்டாள் ஊர்வசி. நாட்டியத்தை ஒப்புக்கு ஆடினாள். கடமைக்கு ஆடினாள். உப்புசப்பு இன்றி ஆடினாள். அந்த கலை அர்ப்பணம் அகத்தியருக்கன்றி சயந்தனை மகிழ்விப்பதாகவே இருந்தது.

இந்திரன் தன்னை அழைத்து கலைவிருந்து கொடுப்பதாய் அவமானப்படுத்திவிட்டான் என கொதித்தெழுந்தார். கோபங்கொண்ட அகத்தியர் ‘ஊர்வசி! நிறுத்து உன் கலை கொலையை! நீ நிகழ்த்தியது நாட்டிய விருந்தா? அல்லது உன் உள்ளங்கவர் கள்வன் சயந்தனுடனான நயன சல்லாபமா? காதல் மயக்கத்தில் கலையை மறந்து என்னையும் அவமானப்படுத்திவிட்டீர்கள்!

இனி உனக்கும் சயந்தனுக்கும் தேவ லோகத்தில் இடம் இல்லை. நீ பூமியில் மாதவி எனும் கணிக்கைக்குலப் பெண்ணாக அவதரிப்பாய்.நீ காதல் மயக்கத்தில் மறந்த ஆடற்கலையை முழு ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் கற்று,  சோழன்  அரசவையில் அரங்கேற்றுவாய்! அங்கு மூங்கிலாக மாறப்போகும் சயந்தன் தலைக்கோல் எனும் பட்டமாகச் சூட்டப்பெற்று நீ அவனை அடைவாய்! இதுவே காமத்தில் கலையை மறந்து இழிவுப்படுத்திய உங்கள் இருவருக்கும் நான் கொடுக்கும் சாபம்! அகத்தியனின் வாக்கு அகிலத்தில் பொய்க்காது!நான் வருகிறேன்.

ஊர்வசி மாதவியாக மண்ணில் பிறப்பெடுக்கிறாள். ஐந்தாம் வயது முதலே நாட்டியம் கற்கிறாள். தம் பனிரெண்டாம் வயதில் சோழ மன்னன் அரசவையில் தன் நாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்துகிறாள். கலையை முழுதாகக் கற்றுத்தேர்ந்த அவள் தன் திறன் முழுதும் வெளிப்படும்படியாக அரங்கேற்றியதைப் பாராட்டிய சோழன், நெறிப்படி பகைவரின் வெண்கொற்ற குடை காம்பை இழைத்து நவரத்தினங்களை பதித்து இடைஇடையே தங்க இழையால் சுற்றி அதை புனித நீராட்டி பூமாலைச் சூட்டி பட்டத்துயானையின் மீது இசை முழக்கத்தோடு அரசவை பெரியோர்கள் சூழ வலம்வரச்செய்து நாட்டிய அரங்கில் இருத்தினான். அத்தலைக்கோல் எனும் பட்டத்தையே மாதவியின் ஆடற்கலை திறனுக்கு உயரிய விருதாக அளித்தான். ஊர்வசி தலைக்கோலாம் சயந்தனைச் சூடினாள். இதனை சிலப்பதிகாரம் புகார்காண்டம் அரங்கேற்றுக்காதையில் “காவல் வெண்குடை மன்னவன் கோயில் இந்திர சிறுவன் சயந்தன் என வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்!”

எனவும்

‘இலைப் பூங்கோதை இயல்பினில் வழாமைத் தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி’ எனவும் குறிக்கப்பெற்றுள்ளது.

இதன் மூலம் இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் அறிந்து கொள்ளும் பாடம் என்னவெனில் நம்முன் கடமைகள் இருக்கும்போது அதை மறந்து  பொழுதுபோக்கு, விளையாட்டு, கேளிக்கை, காதல் போன்ற தேவையற்ற செயல்களிலேயே மூழ்கி, கல்விகற்றல், திறன்களை வளர்த்தல், எதிர்கால வாழ்வுக்கான திட்டப்பணிகளில் ஈடுபடுதலை மறக்கிறோம்.

நாம் யார்? எந்த பருவத்தில் இருக்கிறோம்? நம் இன்றைய பணிகள் என்னென்ன? என்னென்ன திறன்களை நாம் பெற வேண்டியுள்ளது. உலகிலுள்ள மற்ற நாட்டின் இளைஞர்களில் சிலர் எந்த முன்னேற்றத்தை நோக்கி உயர்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை உணர வேண்டும். மொழியறிவு, தொழில் நுட்ப அறிவு, விஞ்ஞான அறிவு ஆகியவற்றில் எத்தனை விரைவான முன்னேற்றம் கண்டுள்ளனர் என்பதை உணர்ந்து நாமும் அத்தகை அறிவுலகின் பந்தயத்தில் பங்கேற்று வெல்வதற்கான சூழல்களைப் பெற வேண்டும். ஆனால் எதிர்கால திட்டங்களோ இலட்சியங்களோ இன்றி அரசியல், சினிமா, விளையாட்டு,  பொழுதுபோக்கு போன்றவற்றில் மூழ்கி குறிக்கோளற்ற பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறோம். சிறந்த உடற்திறனும் அறிவுத்திறனும் கொண்டு   முன்னேற வேண்டும். அதைவிடுத்து தவம் செய்யும் காலத்து சுகங்களில் திளைத்தால் வரம் வாய்க்காது என்பதை உணரவேண்டும். காதல் மயக்கத்தில் கலையை மறந்தவள் கதை உணர்த்தும் நீதி மனம் ஒன்றிலும் செயல் வேறொன்றிலும் இருந்தால் வரத்திற்கு பதிலாக சாபமே கிடைக்கும்.

மனம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றிய கடமைகள் செய்து முன்னேற்றம் காண்போம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *