கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 39

0

-மேகலா இராமமூர்த்தி

”இராமதூதன் நான்” என்று தன்னைச் சீதையிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு இராமனின் திருவாழியை அனுமன் காட்டவும், அதனைக் கண்டு இழந்த உயிரை மீண்டும் பெற்றாற்போல் மகிழ்ந்த சீதை, ”இன்றுபோல் என்றும் வாழ்க”வென அனுமனை வாழ்த்தினாள். ”இராமனும் இளவலும் யாங்குளர்? நீ அவர்களை அறிந்தது எவ்வாறு?” என்று அனுமனை வினவினாள்.

அவனும் சீதை இராவணனால் கடத்திக்கொண்டு போகப்பட்ட நிகழ்வு தொடங்கி இராமனுக்கும் சுக்கிரீவனும் நட்பு ஏற்பட்டமை, இராமன் வாலியை வீழ்த்திச் சுக்கிரீவனுக்கு அரசளித்தமை, மாரிக்காலம் முடிந்தபின் சீதையைத் தேடுதற்குப் படையோடு வருக என்று இராமன் சுக்கீரிவனைப் பணித்தமை, சுக்கிரீவன் வழிகாட்டுதலின்படித் தென்திசையில் தேடிக்கொண்டு வந்த தான் சீதையைக் கண்டமை ஆகிய அனைத்தையும் விரித்துரைத்தான்.

அவற்றைச் செவிமடுத்த சீதை, “நீ இப்பெருங்கடலைக் கடந்து இலங்கையை அடைந்தது எப்படி?” என்று அனுமனை வியப்போடு வினவ,

”அன்னையே! உன் ஒப்பற்ற தலைவனின் தூய திருவடிகளில் மனத்தை ஒன்றுபடுத்திப் பேரறிவடைந்த ஞானியர், ஓய்வில்லாத மாயை எனும் பெருங்கடலைக் கடப்பதுபோல் அடியேன் இக் கருங்கடலைக் கால்களால் கடந்துவந்தேன்” என்றான் அனுமன். கால் என்பதைக் காற்று எனக்கொண்டால் காற்றின் துணையோடு வான்வழியே இக்கருங்கடலைத் தாண்டி வந்தேன் என்றும் பொருள் கொள்ளலாம்.

சுருங்குஇடை உன்ஒரு துணைவன் தூயதாள்
ஒருங்குடை உணர்வினோர் ஓய்வுஇல் மாயையின்
பெருங்கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல்
கருங்கடல் கடந்தனென் காலினால் என்றான்.
(கம்ப: உருக்காட்டு படலம் – 5432)

பிறவி எனும் பெருங்கடலைக் கடக்க இறைவனின் திருவடிகளே துணைசெய்வன என்று திருக்குறளும் சாற்றியிருப்பது நினைவுகூர்தலுக்கு உரியது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
(குறள்: 10)

அவன் பதிலால் மேலும் வியப்படைந்த முத்துநகை முறுவலாள் சீதை, “இத்துணைச் சிறிய யாக்கையை உடைய நீ, பெருங்கடலைக் கடந்தது தவத்தின் பயனாலா? சித்தியினாலா?” என்று கேட்டாள்.

”இரண்டும் இல்லை” என்று மறுத்த அஞ்சனை மைந்தன், தன் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் பேருருவெடுத்து (விசுவரூபம்) வானளாவ உயர்ந்து நின்றான். அப்போது எட்டுத் திசைகளின் எல்லையிலும் எல்லா உலகங்களிலும் இடம்விட்டுப் பெயராத உயிர்க்கூட்டங்கள் எல்லாம் அனுமனைப் பார்த்தன; அனுமனும் மேலுலகம் எனப்படுவதில் வாழும் எல்லாத் தேவர்களையும் தன் தாமரைக் கண்களால் கண்டான்.

எண்திசை மருங்கினும் உலகம் யாவினும்
தண்டல்இல் உயிர்எலாம் தன்னை நோக்கின
அண்டம் என்றதின் உறைஅமரர் யாரையும்
கண்டனன் தானும்தன் கமலக் கண்களால்.
(கம்ப: உருக்காட்டு படலம் – 5439)

அனுமன் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தமையால் உயிர்கள்
அவனைக் கண்டன. உயர்ந்து இருந்தமையால் அவன் தேவரைக் கண்டான்.
இதனால் அவன் தோற்றத்தின் பெருக்கமும் உயரமும் பேசப்பட்டன.

உலகெலாம் அளந்துநின்ற அனுமனின் பேருருத் தோற்றத்தையும் ஆற்றலையும் கண்கூடாய்க் கண்ட சீதை நனிமகிழ்வெய்தி, தனக்கு இச் சிறைவாழ்விலிருந்து விடுதலை கிடைத்துவிடும் எனும் நம்பிக்கை கொண்டவளாய் அவன் உருவத்தைச் சுருக்கிக் கொள்ளப் பணித்தாள்.

அவ்வாறே தன் உருவைப் பழையபடிச் சுருக்கிக்கொண்ட அனுமனைப் பார்த்து, “இந்த ஒரு கடலென்ன, ஏழு கடல்களைக் கடக்கும் வல்லமை பெற்றவன் நீ” என்று புகழ்ந்துரைத்த சீதை, ”நீ இராமனுக்கு உற்றதோர் நற்றுணை ஆவாய்!” என்றாள். அவள் திருவடிகளை வணங்கிய அனுமன், ”தாயே! எண்ணிறந்த வானர வீரர்கள் இராமனுக்குப் பணிசெய்யக் காத்துக்கிடக்கிறார்கள். அவர்களுள் நானும் ஒரு பணியாளன். ஏவும் கூவும் பணிகளைச் செய்வேன்” என்று அடக்கத்துடன் மறுமொழி அளித்தான்.

திருமகளை ஒத்த சீதை அரக்கியரிடை இருந்து படும் இன்னல்களையும் அவளின் இரங்கத்தக்க நிலையையும் சிந்தித்துப்பார்த்த அனுமன், இவளை நான் என் முதுகில் சுமந்துசென்று இராமனிடம் ஒப்படைப்பதே இப்பெண்ணரசியின் துயரத்தை உடனடியாய் மாற்றுதற்கு ஏற்றவழி எனும் எண்ணங்கொண்டான்.

தன் கருத்தைச் சீதைக்குத் தெரிவிக்க விரும்பியவன், “அன்னையே நான் சொல்வதைக் கோபியாமல் கேட்பீராக! என் தோள்மீது ஏறிக்கொள்ளுங்கள்! கண்ணிமைக்கும் நேரத்தில் உங்களை அண்ணல் இராமனிடம் கொண்டு சேர்ப்பேன்; நான் தங்களைச் சுமந்துசெல்வதை அறிந்து அரக்கர்கள் பின்தொடர்வரேல் அவர்களைச் சிதைத்து என் சீற்றத்தைத் தணித்துக் கொள்வேன். தங்களின் துன்பநிலை கண்டும் அதற்குக் கழுவாய் தேடாமல் வெறுங்கையுடன் பெயரேன்!” என்றவன், ”இமைப்பதற்குள் இந்த இலங்கையை உருக்கியழித்து, இராவணனையும் அவனுடைய நிருதர் கூட்டத்தையும் ஒழித்துவிட்டு வா என்று நீங்கள் செப்பினாலும் அப்படியே செய்கின்றேன்” என்றான் தீர்மானமாக.

”நீ சொல்லும் யோசனை இராமனின் வில்லுக்குக் களங்கமுண்டாக்கக் கூடியது. அத்தோடு, இராவணன் என்னை வஞ்சகமாய்க் கவர்ந்துவந்ததுபோல் நீயும் அவனுக்குத் தெரியாமல் என்னை வஞ்சகமாய்த் தூக்கிச் செல்லக் கருதுதல் முறையன்று. வஞ்சத்தை வஞ்சத்தால் வெல்வதென்பது சான்றோர்க்கு அழகன்று” என்று அந்த யோசனையை ஏற்கமறுத்த சீதை,

”துன்பத்தைத் தரக்கூடிய இந்த இலங்கைவாழ் விலங்கு போல்வாரை மட்டுமல்லாது, எல்லையில்லாமல் இருக்கக்கூடிய அனைத்து உலகங்களையும் என் சொல்லினாலேயே சுட்டெரித்துவிடுவேன்; அது, தூயவனாகிய இராமனின் வில்லுக்கு மாசு என்பதனாலேயே அவ்வெண்ணத்தைச் செயற்படுத்தாது வீசினேன்” என்றாள்.

அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ
எல்லைநீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன் அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசுஎன்று வீசினேன்.
(கம்ப: சூடாமணிப் படலம் – 5470)

அசோகவனச் சிறைவாசத்திலிருந்து தன்னைப் பிறர் துணையின்றித் தானே விடுவித்துக்கொள்ளக் கூடிய ஆற்றலைச் சீதை பெற்றிருந்தும், அதனைப் பயன்படுத்தாமல், தன் கணவன் இராமன் தன்னைவந்து மீட்கவேண்டும்; அவனே வெற்றிவீரனாய்த் திகழவேண்டும் என்று சீதை கருதியிருந்தமையை இதன்மூலம் நாம் தெளிவாய்த் தெரிந்துகொள்கின்றோம்.

சீதையின் இவ்வெண்ணங்கள் பெண்ணடிமைத்தனத்துக்கே உரம் சேர்ப்பனவாய் இருக்கின்றன. கணவனைச் சார்ந்திருப்பதும் அவன் புகழுக்குப் பாடுபடுவதுமே மனைவியின் மாண்பு என விதிவகுத்துப் பெண்களைச் செயல்திறன் முடக்கப்பட்ட கோழைகளாய் வைத்திருந்த அன்றைய ஆணாதிக்கச் சமூகத்தை ஒரு பண்பட்ட நாகரிகச் சமூகமாய்க் கருதமுடியவில்லை.

அன்றைய இலக்கியப் படைப்புகளில் வெளிப்பட்ட சிந்தனைகள்தாம் இவ்வாறிருந்தனவென்றால் இன்றும்கூடப் பெரும்பான்மையான இலக்கியப் படைப்புகளும் வெள்ளித்திரைப் படைப்புகளும் (திரைப்படங்கள்) நாயகனை தகுதிக்குமீறி உயர்த்திப் பிடிப்பனவாகவும், நாயகியரை அவன் உதவியின்றித் தம் துன்பங்களிலிருந்து விடுபட இயலாதவர்களாகவுமே சித்திரிப்பது, காலங்கள் மாறினும் ஆணாதிக்கச் சிந்தனைப் போக்கிலிருந்து நாம் இன்னமும் விடுபடவில்லை என்பதன் வெளிப்பாடுகளே!

சீதையின் மொழிகளை நன்று என்று நவின்ற அனுமன், ”நான் இராமனிடம் தங்கள் சார்பாய்க் கூறவேண்டியது யாது?” என்று கேட்டான் அவளிடம்.

”ஒருமாத கால எல்லையில் என்னுடைய தவம் நிறைவேறுகின்ற படியால் அதற்குள் இராமன் இங்கு வந்திலனேல் புதிய நீர்ப்பெருக்கை உடைய கங்கையாற்றங்கரையில் தன்னுடைய சிவந்த கரங்களால் எனக்கும் இறுதிச் சடங்கைச் செய்யச் சொல்!” என்றாள் சீதை விரக்தியோடு!

திங்கள் ஒன்றின் என் செய்தவம் தீர்ந்ததால்
இங்குவந்திலனே எனின் யாணர் நீர்க்
கங்கையாற்றங்கரை அடியேற்கும் தன்
செங் கையால்கடன் செய்க என்று செப்புவாய்.
(கம்ப: சூடாமணிப் படலம் – 5484)

தன் கருத்துக்களைத் தொடர்ந்து வெளிப்படுத்திய சீதை, ”மிதிலையில் என்னைக் கரம்பற்றி உடனுறை காலத்தில், இந்தப் பிறவியில் இன்னொரு பெண்ணைச் சிந்தையாலும் தொடமாட்டேன் என்று இராமன் எனக்குரைத்த உறுதிமொழியை அவர் செவியில் இரகசியமாய்ச் செப்புக” என்றாள்.

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
தந்த வார்த்தைதிருச் செவி சாற்றுவாய்.
(கம்ப: சூடாமணிப் படலம் – 5486)

சீதை சொன்னவற்றைக் கவனத்தோடு கேட்ட அனுமன், ”அன்னையே! நீங்கள் ஒரு மாதம் வரைக்கும் இந்த இலங்கையில் துன்பத்துடன் காத்திருக்க வேண்டியதில்லை. நான் விரைவில் இராமனைப் பார்ப்பதுதான் எஞ்சியுள்ள செயல். அதன்பிறகு(ம்) ஆண்தகையான அவன் இங்குவர நல்லகாலம் பார்த்துக்கொண்டிருப்பானா? ஒரு கணமும் பொறுத்திரான்!” என்றான் உறுதிபட.

ஈண்டு ஒருதிங்கள் இவ்இடரி்ன் வைகுதல்
வேண்டுவது அன்றுயான் விரைவின் வீரனைக்
காண்டலே குறைபினும் காலம் வேண்டுமோ
ஆண்தகை இனிஒரு பொழுதும் ஆற்றுமோ.
(கம்ப: சூடாமணிப் படலம் – 5518)

புறப்படுவதற்கு நல்ல காலம் பார்ப்பதை ‘மீன மேஷம் பார்த்தல்’ என்பர் கிராமப்புறங்களில்; அவ்வாறு பார்த்துக்கொண்டிருக்க மாட்டான் இராமன்; சீதை இருக்குமிடம் தெரிந்தவுடனே புறப்பட்டுவிடுவான் அவளை மீட்க என்பது அனுமன் சீதைக்குத் தெரிவிக்கும் செய்தி.

அதனைக் கேட்டு உவந்த சீதை, மேலும் சில செய்திகளை இராமனிடம் சொல்லுமாறு அனுமனிடம் கூறியபின், தன் ஆடையில் முடிந்து வைத்திருந்த, சூரியனைவிட அதிகமாய்ச் சுடர்விடும், சூளாமணியை (தலையணி/நெற்றிச்சுட்டி) தன் மலர்க்கையால் எடுத்து அதனை அனுமனிடம் அடையாளமாய்க் கொடுத்தாள். அதனை வாங்கித் தன் ஆடையில் பத்திரமாய் முடிந்த அனுமன், அழுத கண்களோடு அவளைத் தொழுது புறப்பட்டான்.

திரும்பி நடக்கும்வழியில் சில சிந்தனைகள் அனுமனுக்குள் எழுந்தன. ”இந்த இலங்கை நகரை அழித்து நிருதர்களை ஒழிக்காமல் போவேனேல் நான் இராமனின் அடியவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையுண்டா?”

”இந்த அசோக வனம் மிக்க அழகுடையதாயும் இராவணனின் விருப்பத்துக்கு உகந்ததாயும் இருக்கின்றது. இதனை நான் அழித்தால் அரக்கர்கள் என்னோடு போருக்கு வருவார்கள்; அவர்களை நான் கொன்றால் இராவணன் என்னோடு போருக்கு வருவான்; அவ்வாறு வருவானேல் அவன் கதையை முடித்துவிட்டு மகிழ்வோடு செல்வேன்” என்று எண்ணமிட்டான்.

நினைத்ததைச் செயற்படுத்தும் வண்ணம், அவ்வெழிலார் பொழிலை அழிக்கத் தொடங்கினான்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *