தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 44

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

‘கூம்பேறும் பறவை’ குலசேகர ஆழ்வார்

முன்னுரை

தமிழில் இலக்கண விளக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும் இலக்கியப் பொருண்மை புலப்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும்  தனித்தனி இயல்புகள் உண்டு. இது தனி ஆய்வுக்கு உரியது. உயிரோடு மெய் கலப்பதற்கு ‘அப்போடு கலக்கும் உப்பு’ என்பது இலக்கண உவமம். நல்லவரோடு நல்லவர் கலந்துரையாடுவதற்கு ‘நற்றாமரைக் குளத்தில் நல்லன்னம் சேர்வது’ என்பது இலக்கிய உவமம். முன்னது அறிவு சார்ந்தும் பின்னது உணர்வும் அழகியலும் சார்ந்ததுமாகும். ஆனால் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் உவமங்கள் இவற்றினும் வேறாகி அமைகின்றன. காரணம் பக்தியுணர்வு அகப்புற உணர்வுகளினின்றும் மாறுபட்டு நெகிழ்ச்சியை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பதே. இது பற்றிய சில கருத்துக்கள் முந்தையக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. வைணவப் பாசுரங்களில் தனித்து விளங்கும் குலசேகர ஆழ்வார் எழுதிய பெருமாள் திருமொழியில் உருக்கும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்வதாக அமைகிறது.

குலசேகர் ஆழ்வாரின் உள்ளமும் உவமமும்

‘அரற்றுதல்’ என்பது ஒன்று. அனுபவித்தல் என்பது மற்றொன்று. சைவத் திருவடியார் நால்வரும் அரற்றியவர்கள். அவ்வரற்றுதலில் இறைவன் மேனியழகைக் கண்டு அனுபவிப்பது என்பது அளவால் குறைவு. குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும்’ என்பது போன்ற பாடல்கள் சைவத்தில் குறைவு. ‘ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்’ என்பது போன்ற அரற்றலே மிகுதி. வைணவத்தில் இறைவனின் திருமேனி அழகைப் “பச்சை மா மலைபோல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்” என்று ஒவ்வொரு துளியாகச் சுவைத்து அனுபவித்துப் பாடித் தாமும் மயங்கிக் கற்பாரையும் மயக்குவர்.

‘தன்னைக் கைவிடலாகாது காத்தல் வேண்டும்’ என்பதே பொதுவான அடியவர்தம் வேண்டுகோளாயினும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் வேண்டுகிற முறையில் வேறுபாடு உண்டு. குலசேகரர் வித்துவக் கோட்டு அம்மானிடம் வைக்கின்ற வேண்டுகோள் கைவிடலாகாது என்பதேயாயினும் அதற்காக அவர் காட்டுகின்ற உவமங்கள் பல திறத்தன. பாசம் நிறைந்த உறவுகளைக், கடமை தவறாத பணியாளர்களை, முறைதவறா மன்னர்களைச், சிறகடித்துப் பறக்கும் பறவைகளைக், கடலை மறக்காத ஆறுகளை எல்லாம் மையமாக வைத்து உவமம்  சொல்கிறார். இறுதியாகப் பற்றற்ற நிலையில் தான் விரும்பாச்  செல்வம் நிழலைப்போல் தன்னைத் தொடரும் என்று செல்வத்தையும் பெருமாளுக்கு உவமமாக்கியுரைக்கிறார்.

பெருமாளைத் தாயாக்கிய ஆழ்வார்

அரசியல் தலைவர்களில் தொடங்கி ஆண்டவன் வரை அனைவராலும் பயன்படுத்தப்படுகிற உவமம் தாயும் சேயும். தாய் அன்பின் வடிவம். தந்தை அறிவின் வடிவம். தாயன்புக்கு வரம்பில்லை. தந்தையின் அன்பின் வரம்பு வெளிப்படத் தெரிவதில்லை. தாய் குழந்தையை மறப்பதில்லை, இயலாது. வள்ளற்பெருமான் தன்னை  மகவாகவும் இறைவனைத் தாயாகவும் வைத்துப் பாடுகிறார்.

“பெற்றதம் பிள்ளைக் குணங்களையெல்லாம்
பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்று எனை ஈன்ற வள்ளலே!”

“பெற்றதாயை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
…………………………………………………………………
நற்றவத்தவர் உள் இருந்து ஓங்கும்
நமசிவாயத்தை நான் மறவேனே!”

என்றெல்லாம் வள்ளற் பெருமான் தன்னைச் சேயாகவும் இறைவனைத் தாயாகவும் உருவகித்தும் உவமித்தும் பாடுவதைப் போலவே குலசேகரரும் பாடுகிறார்.

“அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள் நினைந்தே அழுங்குழவி அதுவே போன்றிருந்தேனே” (688)

‘அரிசினம்’ என்பது அரிதாக வருகின்ற சினம் என்பது பொருள். ‘அளவுகடந்த சினம்’ என்பது பொருள். ‘பெற்ற தம் பிள்ளை’, ‘ஈன்ற தாய்’ என்னும் பெயரெச்ச அடைகள் எல்லாம்  அவர்தம் அருமை உணர்த்தி நின்றன. அவர் அவ்வாறு செய்யமாட்டார் என்பதாம்! எனவே இறைவனும் தம்மை வெறுக்காது அணைப்பன் என்பது கருத்து. ‘அம்மை நீ! அப்பன் நீ’ எனத் தாய்க்கு முதன்மை தந்து பாடிய அப்பர் நினைவுக்கு வருவார். இந்தப் பாட்டில் ஒரு நுண்ணியம் உணரப்படுகிறது. குழந்தை இரண்டு வகையாக அழுகிறது. அடி தாங்காமல் அழுவது ஒன்று. அடிக்கின்ற தாயின் அருள் வேண்டி மற்றொன்று. ‘அழுகை’ மாறாதது. ஆனால் உனக்கு வேண்டியது என் அழுகைதான் என்றால் நான் உன் அருளுக்காக அழுகிறேன் என்பது கருத்து. ‘மறந்தாலும்’, ‘அகற்றிடினும்’ என்னும் உம்மைகள் எதிர்மறை.

கொண்டானை அன்றிப் பிறரை அறியாக் குலமகள்

தமிழிலக்கிய உலகில் சேதாரமில்லாது சிந்தையில் நிற்கும் பாத்திரங்கள் இரண்டு. அவையிரண்டும் ஆண் பாத்திரங்கள். சிந்தையில் நிற்பதற்கு அவர்களின் ஒழுக்கச் சிதைவே காரணம். ஒருவன் இராவணன். இவன் இராமாயணத்தின் எதிர்நிலைப் பாத்திரம். மற்றொருவன் கோவலன். இவன் சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தலைவன். காப்பியத்தில் தலைவிக்கே முதலிடம் ஆதலின் இவனுக்குக் காப்பியத் தலைமையில்லை என்பதும் அறிஞர் சிலருடைய வாதம். இவ்விரண்டு பாத்திரங்களாலும் இவர்தம் மனைவியராகிய மண்டோதரியும் கண்ணகியும் வானுயர்ந்து நிற்கிறார்கள்.

மண்டோதரியும் கண்ணகியும்

கம்பன் படைத்த பாத்திரங்களுள் கம்பனையே படைத்த பாத்திரமாகி நிற்பவள் மண்டோதரி. சீதையைத் தேடி இலங்கை செல்லும் அனுமன் இராவணன் அருகில் உறங்கும் மண்டோதரியைச் சீதையென்று கருதி மயங்கினான் என்கிற அளவுக்கு மண்டோதரியின் பாத்திரம் உயர்ந்தது.

“இன்ன தன்மையின் எரிமணி விளக்கங்கள்
எழில்கெடப் பொலிகின்ற
தன்னது இன்னொளி தழைப்புற துயில் உறு
தையலைத் தகைவு இல்லாள்
அன்னள் ஆகிய  சானகி இவள் எனஅயிர்த்து,
அகத்தெழுதீ வெந்தீ துன்னும் ஆருயிர் உடலொடு சுடுவது
ஓர் துயர் உழந்து”

என்பது கம்பன் வாக்கு. மண்டோதரி இராவணனை எதிர்த்துத் தன் கருத்துக்களைக் கூறியதாக இராமாயணத்தில் பதிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இராவணனுக்கு வரவிருக்கும் பேரழிவை முன் உணர்ந்தே அவள் நிகழ்வுகள் அமைகின்றன. இந்திரசித்தன் மறைந்தபோது,

“அஞ்சினேன் அஞ்சினேன் சீதையென்ற  அமிழ்தால் செய்த
நஞ்சினால் இலங்கைவேந்தன் நாளைஇத் தகையன் அன்றோ?”

என்று புலம்பிய மண்டோதரியைக் காணமுடிகிறது. மேற்கண்ட தரவுகளால் இராவணனைக் கண்டார்கள்  இகழ்ந்தாரன்றி மண்டோதரி இகழவில்லை. ஆனால் கோவலனைக் கண்டார்  இகழ்ந்தார்கள். கண்ணகியும் இகழ்ந்திருக்கலாம். ஆனால் இல்லற நெறி இழந்ததைத்தான் அவள் பெரிதாகக் கண்டாள் என்பதை அறிந்து கொள்ள முடியும். “போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’  என்னும் தொடரில் அமைந்துள்ள ‘ஒழுக்கம்’ என்னும் சொல் அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஓம்புதல், துறவோர்க்கு எதிர்தல், விருந்தெதிர் கோடல் என்னும் இல்லற நெறிகளே.

காப்பிய மகளிரும் குலசேகர ஆழ்வாரும்

இராவணனும் கோவலனும் மிக உயர்ந்த பண்புகளைப் பெற்றிருந்தும் ஒழுக்கச் சிதைவு காரணமாக அவர்தம் பெருமையினை இழந்தனர். கண்டவர் இகழ்வது இருக்கட்டும் அவ்விரு காப்பியங்களைப் படிக்கின்றவர் இன்றைக்கும் வேதனைப்படுகிறார்கள் அவர்களை நினைத்து. இருப்பினும் அக்காப்பிய மாதர் இருவரும் தம் கணவன்மாரை வெறுத்தார் இலர். இராவணன் இறந்தவுடனேயே மண்டோதரியும் களத்திலேயே உயிர்விடுகிறாள். கண்ணகியோ கணவன் பழி துடைக்கிறாள். ‘போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ எனத் தன் மனைவியினாலேயே நோக்கப்பட்டவன் கோவலன். ஆழ்வாரின் ‘கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்’ என்ற தொடருக்குப் பொருத்தமானவர்களாகவே அவ்விரு பெண்களும் திகழ்கிறார்கள் என்பது கட்டுரையாளர் கருத்து.

“கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்” (689)

என்னும் உவமத்தில் வரும் ‘குலமகள்’ என்பது நுண்ணியமிக்க சொல்லாட்சி. இந்த இடத்தில் நல்லகுடிப் பிறப்பை மட்டும் அது குறிப்பதாகக் கொள்ளாமல் கணவனையன்றிப் பிற ஆடவர் மனத்திலும் புகாத உயரொழுக்கத்தைக் குறித்ததாகக் கொள்ளலாம். கண்டறிதல், கேட்டறிதல் என்னும் இருவகை அறிவில் எந்த  அறிவாலும் கணவனைத் தவிர பிற ஆடவரை அறியாதார் என்பது கருத்து. இகழ்வன என்னும் பன்மை வினையாலணையும் பெயர் கணவன் செய்த தொடர் நிகழ்வுகளைக் குறித்தது. ‘அத்தனையும் தாங்கி அவனையே கொண்டொழுகும் பத்தினியர் போலத் தானும் திருமாலையன்றி வேறொருவனை எண்ணேன்’ என்பதாம். ‘நீ கொண்டு ஆளாகியிலும்’ என்னுந் தொடர் மனைவியைக் கொண்டு செலுத்த வேண்டிய கணவன் அவ்வாறு செலுத்தாவிடினும் அவனை நம்பி வழிபடும் மனைவியைப்போல் தான் என்பதை உணர்த்தி நின்றது. ‘குலமகள்’ தன் கணவனை மட்டுமே அறிவாள் என்றதால் ஆழ்வார் பெருமாளையன்றிப் பிற தெய்வம் அறியார் என்பது குறிப்பு. இனி, இகழ்வன செய்யும் கணவனுக்குப் பெருமாள் உவமம் ஆனதால் ஆழ்வார் மனைவியாகிறார். எனவே இந்தப் பாட்டில் ‘கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்’ என்னும் துறைக்கருத்து இழைய, நாயக நாயகி பாவம் முன்னெடுக்கப்பட்டது என்க. இது வள்ளற் பெருமான் பாடிய ‘இங்கித  மாலையோடும் மகாகவி பாடிய கண்ணன் பாட்டோடும் ஒக்கும்.

மன்னனை நோக்கும் மக்கள்  மருத்துவனை நோக்கும் நோயாளி!

திருக்குறள் பொருட்பாலின் தலையதிகாரமே இறைமாட்சி என்பதாகும். நாட்டை ஆளுவது என்பது அதிகாரப் பீடம் என்பதை விட்டு மக்களுக்குத் தொண்டு செய்வதற்கான வாய்ப்பு என்பதைக் கருத வேண்டும். இது மன்னராட்சிக்கும் பொருந்தும் மக்களாட்சிக்கும் பொருந்தும். ஓச்சுதல் கடிது போலத் தோன்றினாலும் எறிவது மென்மையாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் காட்டும் மாட்சி. இறைமாட்சியுள் அமைந்த பத்து குறட்பாக்களில் முன்னவை ஐந்தும் மன்னனின் தகுதி பற்றியன. பின்னவை ஐந்தும் மன்னனின் பண்பு பற்றியன.

  1. காட்சிக்கு எளியன் கடுஞ்சொல் அல்லன்
  2. இன்சொலால் ஈத்து அளிக்க வல்லான்
  3. முறைசெய்து காப்பாற்றும் மன்னன்
  4. செவிகைப்பச் சொல் பொறுக்கும் வேந்தன்
  5. கொடை, அளி, செங்கோல், குடியோம்புபவன்

முந்தைய தகுதிகளை அதிகாரத்தை மையமாக்கி ஒரு மன்னன் செயல்படின் மக்கள் துன்புறுவர்.. பிந்தைய பண்புகளை, மக்களை மையமாக்கி ஒரு மன்னன் செயல்படின் மக்கள் இன்புறுவர். முன்னது நடக்கும் காலத்திலும் அம்மக்கள் பிந்தைய காலம் வராதா என ஏங்கி நிற்பர். அதனைத்தான் குலசேகர ஆழ்வார் உவமமாகப் பயன்படுத்துகிறார்.

“தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோல்நோக்கி வாழும் குடிபோன்றிருந்தேனே” (690)

மன்னன் மக்களுக்குச் செய்கிற துயர் அதிகாரத்தினால் வருவது. இறைவன் அடியவருக்குத் தரும் துன்பம் அவனைப் பக்குவப்படுத்துவது. அல்லது வினைவழி வருவது. கொடுங்கோல் ஆட்சி செய்யும் மன்னனின் அன்பையே மக்கள் எதிர்நோக்குவர். அதுபோலத் திருவடிப் பேறு வேண்டி நிற்பார் இத்தகைய துன்பங்களையும் இன்னல்களையும் பொருட்படுத்தாது அவற்றின் நோக்கமறிந்து செயல்படுவராதலின் இடர் தரும் இறைவனையே எதிர் நோக்குவர் என்பதாம். துன்பம் தருபவனையே எதிர்நோக்கும் இரண்டு சூழல்களில் ஒன்று நாட்டை ஆளும் மன்னனிடம் அன்பை எதிர்நோக்குவது. இரண்டு சிகிச்சையில் துன்பம் தரும் மருத்துவனையே நம்பி அவனையே எதிர்நோக்குவது.

“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல்” (691)

எதிர்வினையைக் கருத்திற் கொள்ளாது மக்களை வாட்டும் மன்னனை ஒதுக்காமல் அவனை அவனுடைய செங்கோலையே எதிர்பார்த்து வாழும் மக்களை உவமமாகச் சொன்ன ஆழ்வார் இந்தப்பாட்டிலும் ‘கொடுமை’ செய்யும் மருத்துவனையே நேசிக்கும் நோயாளியை உவமமாக்குகிறார். இந்தப் பாட்டில் ‘அறுப்பது’ ஒரு வினை. ‘சுடுதல்’ மற்றொரு வினை. அறுவைச் சிகிச்சை என்பது இவ்விரண்டும் இணைந்ததே. நோயாளி தன் உடல் அறுக்கப்படும்போதும் அல்லல் உறுகிறான். அறுத்த இடத்தில் சுடப்படுகிறபோதும் அல்லல் படுகிறான். எனவே ‘அறுத்து’ என்பது எச்சமாகாது தனித்த வினையைக் குறித்தது.

நோய் தீர்ந்தவுடன் மருத்துவனை மறந்துவிடுதல் இயல்பு. ஆனால் இந்தப் பாட்டில் நோய் தீராமலேயே அவன்பால் தீராத காதல் உடைய நோயாளன் என்கிறார். அறுவைச் சிகிச்சை உடலுக்கானது. அதற்குத் தீர்வு காணும்வரை அவன்பால் வைத்திருக்கும் அன்பு குறையாது. எனவே அது நீளும். அதனால் மாளாத அன்பு என்றார். பிறவி நோய் தீர்ந்து திருவடிப்பேற்றுக்காக இறைவன் தரும் சோதனைகள் தாங்கொணாவாக இருப்பினும் அவன் மேல் கொண்டிருக்கும் அன்பு ‘மாளாது’ என்பது பெறப்படும். அடித்து மேய்ப்பவனே அணைத்து மீட்பான் என்பது கருத்து.

தொடர்ந்து சுட்டெரிக்கும் வேறொரு பொருளையும் சுட்டெரிக்கும் அதனையே விரும்பும் மற்றொரு பொருளையும் இணைத்து உவமம் கூறுகிறார் ஆழ்வார். கதிரவனுக்குத் தாமரை மலரும் என்பது இயற்கையும் கவிமரபும் ஆகும். இந்த மரபுகள் கவியின்பத்திற்காக மாற்றப்படுவது உண்டு. ‘சுடர் மின்னற் கண்டு தாழை மலர்வது போலே உனைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே’ என்பதும் ‘தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க’ என்பதும் மரபு காத்த திரையிசைப்பாடல் வரிகள்.

“செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரஞ்சேர் வெங்கதிரோற்கல்லால் அலராவால்” (693)

கதிரவன் கனன்றாலும் தாமரை அதற்கே மலர்வது போலத் தானும் பெருமாளுக்கே மகிழ்கிறார் என்பது கருத்து. கொடுங்கோல் மன்னனால் வரும் துன்பத்திற்குக் காரணம் ஏவுதற் கருத்தா. மருத்துவனால் வரும் துன்பத்திற்குக் காரணம் இயற்றுதற் கருத்தா. இவையிரண்டிலிருந்தும் மாறுபட்டுத் துன்பம் தருவது கதிரவன். அது அந்தரத்தில் நிற்கிறதேயன்றிச் சுற்றாது சுழலாது. ஆனால் அதன் ஒளிக்கதிர்கள் சுட்டெரிக்கும். சினைவினை முதல்வினையாகக் கருதப்படும். காணாதார் தரும் துயரமும் கண்டார் தரும் துயரமும் காண இயலாதன தரும் துயரமும் என எதுவாயினும் தாங்கிக் கொள்வது போல இறைவன் எத்தகைய துன்பத்தைக் கொடுத்தாலும் அவனுடைய அருளையே வேண்டுவன் என்பதாம்.

மழைநோக்கும் பயிர்கள்

கடவுள் வாழ்த்து என்னும் தலையதிகாரத்தைத் தொடர்ந்து திருவள்ளுவர் எழுதிய அதிகாரத்திற்குப் பெயர் ‘வான் சிறப்பு’. மழையினது சிறப்பு என்பது பொருள். மழை இல்லாவிடின் உலகியல் இல்லை. உலகியல் என்பது மக்களையும் ஞானிகளையும் உள்ளடக்கியது. இவர்களைப் பசியடக்கும். எனவே உலகியல் நடக்க வேண்டுமெனின் பசியடங்க வேண்டும்.  பசியென்னும் நோயைப் பற்றியும் அது தணிக்கும் வாயில் பற்றியும் தணித்தவர் அடையும் பெருமை பற்றியும் பேசாத இலக்கியங்கள் எண்ணிக்கையில் குறைவு. நோய் என்பது உடலுக்கு வருவது. பிணி என்பது உயிருக்கு வருவது. உடலுக்கு வரும் நோயை உயிருக்கு ஆக்கியது அதன் கொடுமை பற்றி. இறுதியாக வள்ளற்பெருமானைத் தொடர்ந்து உணர்ந்து பாடியவர் மகாகவி. ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்’ என்பது அவர் வாக்கு. அந்தச் சோற்றுக்குக் காரணமானது பயிர். பயிர் தழைக்க நீர் வேண்டும். அந்த நீர் வானின்று வருவது. பயிர் இருவகைப்படும். வான்நீரின் பல்வகைப் பரிமாணங்களாகிய ஏரி, ஆறு, குளம் என்பவற்றால் உயிர்தழைப்பன ஒன்று. வான் மழையை மட்டுமே நம்பியிருப்பன மற்றொன்று. முன்னது நன்செய் என்றும் பின்னது புன் செய் எனவும் வழங்கப்படும். நன்செய்க்கும் மழைதான் மூலமெனினும் ‘வானம் பார்த்த பூமி’ என்னும் சொல்வழக்கு புன்செய்ப் பயிரையே குறிக்கும். வானத்தை நோக்கியே வளரும் புன்செய்ப் பயிரை இறைவனின் அருள் வேண்டி நிற்கும் ஆழ்வார் தனக்கு உவமமாக்கியுரைக்கிறார்.

“எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்று அவைபோல” (694)

இந்தப் பாட்டில் வானம் பயிர்களைக் காக்க வேண்டியது கடமை என்பதுபோலப் பாடுவதைக் காணலாம். வானம் மழைபெய்ய மறந்துவிட்டதாகக் கூறும் நுண்ணியம் உணரத்தக்கது. மழைபெய்யாவிடினும் அம்மழையையே எதிர்நோக்கும் புன்செய்ப் பயிராகத் தன்னை உருவகித்துக் கொள்கிறார். மாமுகில் என்னும் உரிச்சொற்றொடரில் உள்ள மா என்பது முகிலுக்கு அடையாகி நின்று இறைவனின் அளப்பரிய பேரருளைக் குறிப்பாகச் சுட்டியது.  உவமத்திற்கான அடைமொழிகள் பொருளுக்கும் ஆகிவரும் என்னும் உவமக் கொள்கைக்கு அரண் சேர்ப்பது.

போக்கிடமின்றிப் புலம்பும் குலசேகரர்

‘திக்குத் தெரியாத காட்டில் உன்னைத் தேடித் தேடி இளைத்தேனே’ என்பார் பாரதி. உய்யும் வழி ஏதுமின்றி மானுட உயிர்கள் வழி காணாது தவித்து இறுதியாகத்தான் இறைச்சிந்தனை வரப்பெற்று (அதற்கும் ஊழ் இருக்க வேண்டும். அவனருளாலே அவன்தாள் வணங்கி என்பது திருவாசகம்) இறைவனை நோக்கித், தம் வழியில் நடக்கத் தொடங்குகின்றன.

“தொக்கு இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவை போல” (695)

உயிர்கள் ஆறெனின் இறைவனே கடல். ஆறுகள் கடலை நோக்கிச் செல்வது இயல்பு. இந்த இயல்பு மாறினாலோ மாற்றப்பட்டாலோ உட்படுத்தினாலோ உலகியல் வாழ்க்கை தடம் புரளும். நீர்வழித்தடங்களைத் தடுக்கக் கூடாது என்பது நீதிமன்ற ஆணை. உயிர்கள் பிறப்பது இறப்பதற்காக. பிறப்புக்குப் பயணம் கிடையாது. ஆனால் இறப்புக்குப் பயணம் உண்டு. அந்தப் பயணம்தான் மானுட வாழ்வு. இந்த வாழ்வின் குறிக்கோள் பிறந்த இடத்தையே சேர்வது. பிறந்த இடம் என்பது இறைவன் திருவடி. உலகியல் என்னும் மாயை உயிர்களின் வழித்தடத்தை மறைக்கும் திரைகள். உயிர்கள் தோன்றுகிற இடத்தையும் இறைவன் கோயில் கொண்டிருக்கும் இடத்தையும் ‘கருவறை’ என்ற சொல்லாலேயே குறிக்கும் நுண்ணியம் இதுதான். தன்னை ஆறாக உருவகித்துக் கொள்ளும் குலசேகரர்  இறைவனாகிய கடலன்றி வேறு போக்கிடம் காணாது அதனையே தன் உயிர்க்கான புகலிடமாகக் கொள்கிறார் என்பது கருத்து.

உவமத்தை இன்னும் விரிவுபடுத்துகிறார் ஆழ்வார். ஆறு கடல்வழி தெரிந்து அதனுள் கலக்கும். ஆனால் கடலுக்குள் சென்றுவிடின் கரை தெரியாது. தன்னை ஆறாக உருவகப்படுத்திக் கொண்டவர் தொடர்ந்து கடற்பரப்பில் சென்ற திசைமாறிய பறவையாக உருவகித்துக் கொள்கிறார். பிறவியைப் பெருங்கடல் என்றார் திருவள்ளுவர். ஒரு பிறவி முந்தைய பிறவியின் காரியமாகவும் வர இருக்கும் பிறவிக்குக் காரணமாகவும் கரையின்றி வருதலின் பிறவியைப் பெருங்கடல் என்றார். இதற்குக் கரையில்லை. இதனை உள்வாங்கிய ஆழ்வார் பாடுகிறார்.

“எங்கும்போய் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேகும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே” (682)

வங்கம் என்னும் பலபொருள் ஒரு சொல் ஈண்டு நாவாயைக் குறித்தது. நாவாயின் உச்சியில் இருக்கும் ஒரு பகுதிக்குக் கூம்பு என்று பெயர். முக்கோண வடிவில் கொடிமரத்தின் உச்சியில் இருக்கும் அந்தக் கூம்பினைப் பிடித்துக் கொண்டாலேயே கப்பல் பயணம் கைகூடுவதைப் போல இறைவனாகிய கூம்பைப் பிடித்துக் கொள்ளும் புத்திசாலிப் பறவையைத் தனக்கு உவமமாகக் கூறிக் கொள்கிறார் ஆழ்வார்.

உவமத்தின் உச்சம்

அருவப்பொருளை அருவப்பொருளுக்கே உவமமாக்கிக் கூறுவது தமிழ்க் கவிதைகளில் காணப்படும் நுண்ணிய உவமக் கொள்கையும் கோட்பாடும் ஆகும். இது முந்தைய கட்டுரைகள் பலவற்றில் சொல்லப்பட்டது. ஒருவனுடைய நிழல் அவனையே தொடர்ந்து சென்று அவன் காலடியிலேயே தங்குவதுபோல அவன் செய்த தீவினைக்கான பயன் அவனையே சென்று அடும் (208) என்பது வள்ளுவம்! இதனை வேறுமாதிரியாகவும் கவிஞர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள். நிழலை நீ புறந்தள்ளினால் அது உன்னைத் தொடரும் அதுபோலச் செல்வத்தை நீ மனத்தால் புறந்தள்ளினால் அது உன்னைத் தொடரும் என்றும் பாடியிருக்கிறார்கள். கணவனே எல்லாம் என்றிருக்கும் மனைவி தன்னை நிழலாகப் பாவித்து ‘எங்கெங்கே போனாலும் நிழல்போகும் தன்னோட எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட’ என்னும் திரையிசைப்பாடல் நிழலை உறவுக்கோணத்தில் பார்க்கிறது. இந்தப் பின்புலத்தில் குலசேகர ஆழ்வார் பாடல் நோக்கப்படுகிறது.

“நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான் வேண்டும் செல்வம்போல்” (696)

உலகிலேயே அழியாத பொருள் இறைவன். தோற்றம் இல்லாததால் அழிவும் இல்லையாயிற்று. அதனால் அது நிலைபேறுடையதாயிற்று. நில்லாதவற்றை நிலையென்று நம்பும் புல்லறிவுக்கும், பொருள் அல்லவற்றைப் பொருள் என்று நம்பும் அறியாமைக்கும் இது புலப்படுவதில்லை. அப்படியானால் நிலையானது எது? பொருள் எது? நிலைப்பவை மட்டும் நிலைக்கும் என்பதை உணர்வது ஞானம். நிலைப்பது எது? இறைவன் மட்டுமே! எனவே நிலைத்த செல்வமாகிய இறைவனை நினைத்துத் தொடர்ந்தால் நிலையாத செல்வம் இவனைத் தொடருமாம். அந்தச் செல்வத்தைப்போல ஆழ்வார் இறைவனைத் தொடர்கிறாராம். எவ்வளவு ஆழமான சிந்தனை? ஆழமான உவமம்?

நிறைவுரை

சைவ நாயன்மார்களின் அரற்றலைப் பாசுரங்களைப் பொருத்தவரையில் பெருமாள் திருமொழியிலேயே செவிமடுக்க முடிகிறது. வித்துவக்கோட்டம்மா என்னும் பகுதியில் அவர் நிரல்படுத்தியிருக்கும் உவமங்கள் குடிமக்கள், நோயாளி, குழந்தை, குலமகள், பயிர், ஆறு, பறவை எனப் பல திறத்தன. இவற்றின் கொடுமுடியாகத் திகழ்வது வேண்டாத  செல்வமாகும். ‘அற்றது பற்றெனில் உற்றது வீடு’ என்பது நம்மாழ்வாரின் கொள்கையாதலின் அதனை வழிமொழிவதைப் போல அமைந்த உவமம் இது. நம்மால் துறக்கப்பட்ட பொருள் நம்மைத் தேடிவரும் என்பது உலகியல் நம்பிக்கை. எல்லாருக்குமாக எழுதப்பட்டது இந்தக் கட்டுரை. இதன் ஆழமான நுண்ணியத்தையும் விரிவான அழகியல் சித்திரிப்பையும் பெரியவாச்சான் பிள்ளையின் பிரபந்த உரை கண்டு தெளியலாம்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *