தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 46

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

ஒரே நாளில் ஓராயிரம் உவமங்கள்

முன்னுரை

‘நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள்’ என்னும் உலகியல் வழக்கில் உள்ள ‘நாலுவிதம்’ என்பது நான்கை வரையறுக்காது ‘பலரும் பலவகையாகப் பேசுவார்கள்’ என்பதைக் குறிக்குமல்லவா? அதுபோல ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தைச் சித்திரிக்கும் ஓர் இலக்கியப் பதிவில் காணப்படும் எண்ணற்ற பொருத்தமான உவமங்களைக் குறிக்கவே ‘ஒரே நாளில் ஓராயிரம் உவமங்கள்’ எனத் தலைப்பிடப்பட்டது. ‘ஆயிரம் நிலவே வா!’, ‘ஆயிரம் பெண்மை மலரட்டுமே’, ‘ஆயிரம் வாசல் இதயம்’ என்பன போல. பாவேந்தர் பாரதிதாசனுக்கு நிலைத்த புகழைக் கொடுத்தவை இரண்டு. ஒன்று, அவர் தன் புனைபெயரைத் தன் வழிகாட்டியான பாரதியுடன் இணைத்து அமைத்துக் கொண்டது. இரண்டு அவருடைய புதுமையான சிந்தனைகளும் கற்பனைகளும் அடங்கிய கவிதை இலக்கியங்கள். பின்னவற்றுள் குறிப்பிடத்தக்கதும் தமிழ்க்கவிதை இலக்கிய நெறியில் புதுமையாகவும் அமைந்தது ‘குடும்ப’ விளக்கு. குடும்ப விளக்கின் முதற்பகுதியாகிய ஒருநாள் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவமச்சிறப்பையே இக்கட்டுரை சுருக்கமாக ஆராய முற்படுகிறது.

குடும்ப விளக்கின் கட்டமைப்பு

‘நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்’ என்பது பொருளாழமுடைய ஒரு தொடர். நாட்டில் பல்கலைக்கழகங்கள் பெருகிய அளவுக்கு நல்ல குடும்பங்கள் தழைத்திருக்கின்றனவா என்பது எளிதில் விடை காணமுடியாத வினா. ‘குடும்ப விளக்கு’ என்பது நடப்பியல் சார்ந்த கற்பனை கலவாத ஒரு காவியம். ஒருநாள் நிகழ்ச்சி, விருந்தோம்பல், திருமணம், மக்கட்பேறு, முதியோர் காதல் என்னும் அவ்வைந்து  பிரிவுகளில் ‘ஒருநாள் நிகழ்ச்சி’ என்பது ‘ஓர் இரவு’ என்பதுபோல ஒரு நாள் ஒரு குடும்பத்து இயல்பான நிகழ்வுகளைச் சித்திரிக்கும் பகுதியாகும்.

ஒருநாள் நிகழ்ச்சி

குடும்பத்தலைவி விடியற்காலையில் படுக்கையை விட்டு எழுந்திருப்பது, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, கணவனைப் பணிக்கு அனுப்புவது, மாமனார் மாமியாருக்குரிய பணிவிடைகளை மகிழ்ச்சியுடன் செய்வது, குடும்ப உறுப்பினர்களுக்குப் பிடித்தமான உணவுகளைத் தயாரிப்பது, பள்ளி சென்று திரும்பிய குழந்தைகளை வரவேற்பது, அவர்களுக்குப் பாடம் கற்பிப்பது, அவர்களை உறங்க வைப்பது, கணவனோடு பொதுநலம் குறித்துப் பேசுவது, உறங்கச் செல்வது என நிரல்படக் கோத்த அருமணி ஆரமாகத் திகழ்வது ஒருநாள் நிகழ்ச்சியாகும். நாட்டுப்படலம், நகரப்படலம் எனத் தொடங்கிய  தமிழ்க்காப்பிய உலகில் வாசலில் கோலமிடும் வைகறைத்  தலைவியிலிருந்து தொடங்கிச் சித்திரித்துக் காட்டலாம் என்ற எண்ணமே காப்பியப் புரட்சியாகும். கவிதைப் புரட்சியாகும்.

மடமையிருள் கலைந்தது

கவிதையில் உவமத்தின் ஆற்றலை நன்குணர்ந்திருந்த பாவேந்தர் தன் காப்பியத்தை உவமங்களிலேயே தொடங்குகிறார். இது ஒருவகையில் தமிழ்க்கவிதை மரபினைச் சார்ந்தது எனலாம். ‘அகர முதல’ எனத் தொடங்கிய திருவள்ளுவரும், ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு’ என்னும் நக்கீரரும் இவர்க்கு முன்னோடியாகலாம். குடும்பப் பெண்கள் விடியற்காலத்திலேயே படுக்கையிலிருந்து எழுந்து வாசல் தெளித்துக் கோலமிடுதல் ஒரு பண்பாட்டு மரபு. பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பலபடப் பேசியிருந்தாலும் குடும்ப விளக்குக் காப்பியம் முழுமையும் பண்பாட்டுக் கூறுகளே நிறைந்துள்ளன. கதிரவன் கீழ்த்திசையில் உதிக்காத போதும், அதனால் விலகவேண்டிய இருளாகிய போர்வை நீங்காதபோதும் நள்ளிரவு மென்மையாய் நடந்து கொண்டிருந்ததாம்.

“இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை
இரவு போர்த்த இருள் நீங்கவில்லை!
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்
நள்ளிரவு மெதுவாய் நடந்து கொண்டிருந்தது”

என்று வண்ணனை செய்து அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ என்னும் திருக்குறள் உவமக் கருத்தினை உள்ளீடாக்குகிறார். தொடர்ந்து மலர்கின்ற காலைப் பொழுதினைத்,

“தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
கலப்பென இருள் தன் கட்டுக்குலைந்தது”

என்று எழுதுகிற பாவேந்தர், நூலின் முதல் உவமத்தில் அறிவை முன்னிறுத்தியிருப்பது நோக்கத்தக்கது. நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பதே நூலின் நோக்கமாதலின் அதனைக் குறிப்பாய் உணர்த்தினார் என்பதாகவும் கொள்ளலாம். கற்றலும் கேட்டலும் இணைந்ததே அறிவெனினும் இந்த உவமத்தில் கேள்விக்கு முதன்மை கொடுத்திருப்பது  நூலறிவு பெற இயலாதவரையும் மனத்துட் கொண்டே நூலின் முன்னுரையில்,

“குடும்ப விளக்கைப் பெறும் தோழர்கள் தாமேயன்றி மறந்து போகாமல் தம் துணைவியர்க்கும் படிக்கக் கொடுக்க. துணைவியர் எழுத்தறிவு இல்லாராயின் படித்துக்காட்டுக! துணைவர்க்கு எழுத்தறிவு இழுப்பாய் இருந்தால் துணைவியார் சொல்லிக் காட்ட மறவாதிருக்க வேண்டுகிறேன்”

என்னும் பகுதி ‘கேள்வியால் அகலும் மடமைபோல்’ என்னும் உவமத்தின் ஆழத்தை ஓரளவு தெளிவாக்கக் கூடும். படிக்க இயலாத காலையில் கேட்டலுக்கு முதன்மை தந்தவர் மாலை நிகழ்வில் கற்றலுக்கு முதன்மை தருவதைக் காணலாம்.

குளத்து நீரில் குதிக்கும் கெண்டை மீன்

தமிழிலக்கியத்தில் பெண்களின் கண்களுக்கு வேல், கெண்டைமீன் முதலியவை உவமமாக்கப்படினும் அதன் வினைபடுபொருள்களாகக் கண்ணீரைத்தான் காட்டினார்கள் தமிழ்க்கவிஞர்கள். சீதையின் கண்களும்  கண்ணகி மற்றும் மாதவியின் கண்களும் மீன்களாக உருவகம் செய்யப்பட்டிருப்பினும் காப்பியங்கள் அவர்களுடைய கண்ணீரைத்தான் காட்டின. ஆனால் பாவேந்தர் விழித்த தலைவியின் கண்களைத்,

“தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி
குளத்து நீரில் குதிக்கும் கெண்டை மீன்”

எனக் களிப்பு மேலிடத் தாவிக் குதிக்கும் கெண்டைமீன்களாகச் சித்திரித்தார். ‘கருக்கலில் ஒளிபடும் அவள் விழி’ என்னும் பொருளை விளக்கக் ‘குளத்துநீரில் குதிக்கும் கெண்டைமீன்’ என்னும் உவமத்தால் விளக்கினார். ‘தெளிவிலாக் கருக்கல்’ என்னும் பொருளுக்குத்  ‘தெளிவிலாக் குளத்து நீரையும்’ கருக்கலில் அலைபாயும் அவள் ‘விழிக்குக்’, குதிக்கும் கெண்டைமீனையும் உவமித்ததில் கவிஞரின் உவம ஆற்றல் புலப்படுவதைக் காணலாம்.

பொடிமுத்துச் சுடர்

சொல்லப்படுகிற உவமம் எந்த வகைமையில் பொருளுக்கு உவமமாக்கப்படுகிறதோ அந்த வகையில் முழுமையான விளக்கத்தைத் தரவேண்டும். அதுதான் உவமத்தின் பணி. ஆனால் அந்த விளக்கத்திற்காகத் தெரிவுசெய்யப்படும் துல்லியமான பொருத்தமான உவமம் படைப்பாளனின் துல்லிய நோக்கையும் பரந்த பார்வையையும் வெளிப்படுத்தும். அவ்வாறு பொருள் விளக்கத்திற்கான துல்லியமான ஆழமான உவமங்கள் கிட்டாதபோது படைப்பாளனே சில உவமங்களைப் படைத்தும் பொருள் விளக்கத்தைச் செய்துவிடுவான். சான்றாகப் ‘பசுத்தோல் போர்த்திய புலி’ என்பதுதான் உலக வழக்கு. திருவள்ளுவர் புலித்தோல் போர்த்திய பசுவைக் காட்டுகிறார். புலித்தோல் போர்த்திய பசு என்பது யாரும் காணாதது. துறவறத்திற்குச் சென்றவர்கள் அந்தத் துறவற வேடத்தைப் பயன்படுத்திக் கொண்டு கூடாவொழுக்கத்தில் ஈடுபடுவதை விளக்குதற்காகத் திருவள்ளுவர் இந்த உவமத்தை இட்டுக்கட்டியிருக்கிறார்.

பாவேந்தர் பாரதிதாசன் நுண்மாண் நுழைபுலமும் உற்று நோக்கும் இயல்பும் கொண்டவர். கருத்துக்களில் புதுமை தேக்கினும் பண்பாட்டில் பழந்தமிழ்ப் பண்பாட்டையே முன்னெடுப்பவர். அதனால் மூக்குத்தி அணிந்த பெண்களையே பாடுபொருளாக்கியிருக்கிறார். அவர்களுடைய மூக்குத்தியையும் பாடுபொருளாக்கியிருக்கிறார். அதில் தொங்கும் முத்தையும் உவமமாக்கியிருக்கிறார். காதில் தோட்டோடு தொங்குவதுபோல மூக்குத்தியிலிருந்தும் முத்து தொங்கும். அது அளவால் மிகச் சிறியது. இதனை எங்கோ கண்ணால் நோக்கி மனத்துள் பதிய வைத்திருந்த பாரதிதாசன் குடும்ப விளக்கில் அகல்விளக்கின் சோர்ந்து போன சுடருக்கு உவமமாக்கியிருக்கிறார்.

“சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
பொன்னாற் செய்த பொடிமுத்தைப் போல்
துளி ஒளி விளக்கின் தூண்டுகோலைச்
செங்காந்தள் நிரல் மங்கை விரலால்
பெரிது செய்து விரிமலர்க் கையில்
ஏந்திச்”

செல்கிறாளாம். சுடரின் சோர்வைத் தூண்டுகோலால் அடிப்பகுதி நூலைத் தூக்கிவிடுவதன் மூலம் ஒளிவிடச் செய்கிறாளாம். விளக்கைத் துடைப்பதும், விளக்கேற்றுவதும், எண்ணெய் குறைந்தால் ஊற்றுவதும், குறைந்த சுடரைப் பெருக்கிக்காட்டுவதும் பெண்களின் இல்லறக் கடமைகளில் ஒன்று. ஆனால் பாரதிதாசன் இதனை உற்று நோக்கியிருக்கிறார். பண்பாடு சார்ந்த விளக்குச் சுடரேற்றும் நிகழ்வை மற்றொரு பண்பாடு சார்ந்த மூக்குத்தியின் பொடிமுத்தை உவமமாக்கி உரைத்ததன் மூலம் தான் ஒரு மரபுக்கவிஞர் என்பதை மீண்டும் உறுதி செய்கிறார்.

உணவுக் கூடமா? உவம மண்டபமா?

காலை உணவு, நண்பகல் உணவு என்றெல்லாம் அடுக்களையில் சமையல் செய்யச் செல்கிறாள் தலைவி. அடுக்களையில் ஒருநாள் சமையற்கான பொருளைத் தேர்ந்தெடுப்பதிலும் குடும்பத்தில் உள்ள யார் யார் என்னென்ன விரும்புவார்கள் என்பதிலும் மிக நுண்ணிய பார்வையைப் பாரதிதாசன் செலுத்தியிருக்கிறார்.

“பொரியலோ பூனைக் கண் போல்
பொலிந்திடும்!”

பொரியலை உண்ணாதார் இலர். பூனையைக் காணாதார் இலர். ஆனால் பாரதிதாசனால் மட்டுமே பூனைக் கண்ணையும் பொரியலையும் ஒப்பிட்டுக் காண முடிந்திருக்கிறது. தேங்காய்த் துருவல், கடுகு முதலியன இட்டு வதக்கி வறுத்துச் செய்யப்படும் பொரியல் பூனைக் கண் போலவே இருப்பதைப் பாரதிதாசன் கவிதையைப் படித்த பிறகுதான் தெரிகிறது. பள்ளி செல்லும் பிள்ளைகளுக்குக் காலில் செருப்பணிவிக்கிறாள். அந்தச் செருப்புக்கும் உவமம் சொல்கிறார்.

“புன்னைஇலைபோல் புதையடிச் செருப்புகள்
சின்னவ காலிற் செருகி”

என்று. குழந்தைகளின் அதாவது பெண் குழந்தைகளின் காலடிகளுக்குப் புன்னையிலையை உவமம் கூறுவது எவ்வளவு பொருத்தம் என்பதை புன்னையிலையைப் பார்த்தவர்களுக்குப் புரியும். பாரதிதாசன்,

“காலுக்குப் புன்னையிலை போலும் செருப்பணிந்து
கையில் விரித்த குடை தூக்கி”

என்று பிறிதொரு இடத்திலும் பாடுவார். செயல்களின் மாற்றமே ஓய்வு. இந்த நுண்ணியத்தைப் பாவேந்தர் எப்படிக் காட்சிப்படுத்துகிறார் தெரியுமா? பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் கையில் விரித்த குடையைக் கொடுத்துத் தெருவரை அவருடன் நடந்து மற்ற பிள்ளைகளோடு அவர்களையும் அனுப்பிவிட்டு வீட்டுக்கு வருகிறாளாம். எப்படி?

‘கிளைமாறும் பசுங்கிளிபோல ஓடி
ஆளனோடு அளவளாவினாள்”

வேன்களில் குழந்தைகளை அனுப்பும் வழக்கத்தையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் தற்காலத் தாய்மார்களுக்கு இந்த அனுபவமும் கிட்டாது. பாவேந்தரின் இந்தப் பாட்டும் கிட்டாது.

பாண்டியனும் பாவேந்தரும்

சேர, சோழ, பாண்டியர்களில் பாவேந்தரின் படைப்புக்களில் பெரிதும் நிறைந்திருப்பவர் பாண்டியரே. காரணம் பாவேந்தரின் அளப்பரிய தமிழ்ப்பற்று. பாண்டியர்கள் தமிழை வளர்த்தார்கள். சோழ நாட்டிலும் சேரநாட்டிலும் பயனை அனுபவித்தார்கள். என்ன பயன் பாண்டியர் காத்த தமிழில் கவிதைகளையும் காப்பியங்களையும் யாத்தனர். முத்தொழில்களிலும் காத்தல்தானே தலைசிறந்தது? அதனால் பாண்டியரை அவர் முன்னெடுப்பதில் வியப்பேதும் இல்லை!. குடும்பத்தலைவன் மணவழகர் உடுத்த வேண்டிய ஆடை கிழிந்திருக்கிறது. அதனைத் தைத்து அவனை அணியச் செய்து அவன் அழகைப் பருகுகிறாளாம் அவள். எப்படித் தெரியுமா?

“பொத்தலும் கிழிசலும் பூவை கண்டாள்!
தைத்தாள் தையல் சடுகுடு பொறியால்!
ஆண்டநாள் ஆண்டு மாண்ட செந்தமிழ்ப்
பாண்டிய மன்னன் மீண்டது போல”

என்று எழுதுகிறார். காப்பியம் புதுமை தேக்கியது. உவமம் மரபு சான்றது. ‘செந்தமிழ்ப்பாண்டியன்’ என்றதாலே அவர் பாண்டியனை முன்னெடுத்ததற்குத் தமிழே காரணம் என்பதும் பெறப்படும்.

“கூண்டுவண்டி கட்டி நாம்
கூடலூர் அடைந்தால்
பாண்டியன் குடும்பம் என்று
பார்த்து மகிழ்வார்கள்”

என்று பிறிதொரு இடத்திலும் பாண்டியனை உவமமாக்கியிருப்பார் பாவேந்தர். எண்சீர் விருத்தங்களால் ஆன தமது காப்பியத்திற்குப் ‘பாண்டியன் பரிசு’ என்றுதான் அவர் பெயர் வைத்திருக்கிறார். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய அந்தத்தாய், அடுத்துத் தன் கணவனைக் கடைப்பணிக்கு அனுப்புகிறாள். அவன் உணவருந்தியபின் தமிழ் மரபுப்படி வெற்றிலைப் பாக்கு உண்ண விரும்புகிறான். வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொள்வதில் பலவகை உண்டு. தானே எடுத்துத் தானே கிள்ளித், தானே தடவித் தன்னுடைய வாயில் தானே போட்டுத் தானே மென்று தானே துப்புவது. வெற்றிலை முதலானவற்றை மனைவி எடுத்துச் சுண்ணாம்பு தடவி மடித்துக் கணவனிடம் கொடுத்துப் போட்டுக் கொள்ளச் சொல்வது. அப்படி மடித்த சுருளைக் கணவன் கையில் கொடுக்காமல் கணவன் வாயிலேயே கொடுப்பது. இன்னொன்றும் உண்டு. தாம்பூலத்தை முதலில் தலைவி தரித்து மென்று உமிழ்நீரோடு கணவனோடு பரிமாறிக் கொள்வது. பெரும்பாலும் இலக்கியங்களில் பேசப்படாத நிகழ்வு இது. ஆனால் துணிச்சல் மிக்க திருவள்ளுவர் இதனைக் குறிப்பாகக் காட்டியிருக்கிறார்.

“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்”

என்ற தலைவனின் பட்டறிவு பகர்வில் நீர் பாலும் தேனும் கலந்த சுவையினைப் பெற்றது காண்க.

“எயிறூறிய என்றவிடத்து இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது. வேறுவேறு அறியப்பட்ட சவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னதென்று அறியலாகா இன்சுவைத்தாம் ஆதலின் அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க”

என்னும் அழகர் உரைகொண்டு இக்காட்சியை நோக்கலாம்.  தலைவனின் அந்த நிகழ்ச்சி களவியல் வெளிப்பாடு. பாவேந்தரின் இந்த வெளிப்பாடு வேறுமாதிரியாக அமைந்திருக்கிறது. காரணம் இது கற்பியல்.

“வெற்றிலைச் சுருளைப் பற்றி ஏந்தினாள்
கணவன் கைமுன் காட்டி அவன் மலர்
வாயில் தரத்தன் மனத்தில் நினைத்தாள்!
தூயவன் அப்போது சொன்னது என்னெனில்
சுருளுக்கு விலை என்ன சொல்லுவாய் என்றான்
பொருளுக்குத் தக்கது போதும் என்றாள்.
கையில் கொடுப்பதைக் காட்டிலும் சுருளை
வாயிற் கொடுத்திடு மங்கையே! என்றான்.
சேயிழை அன்பால் செங்கை நீட்டினாள்!
குடித்தனப் பாங்கைக் கூட்டி எடுத்து
வடித்த சுவையினை வஞ்சிக்கு அளித்தல்போல்
தளிர்க்கைக்கு முத்தம் தந்து
குளிர்வாய் வெற்றிலை குழைய ஏகினனே!”

பாங்கோடு குடும்பம் நடத்தியவள் தலைவி. அனுபவித்தது குடும்பம். குடும்பத் தலைவன் அனுபவித்த அந்தச் சுவையை உவமமாக்குகிறார் பாவேந்தர். விரைவுச் சாப்பாட்டில் வாழ்க்கையை முடித்துக்  கொள்வாருக்கு இந்தக் கவிதையும் புரியாது. உவமமும் புரியாது.

“உணவுண்ணச் சென்றாள் அப்பம்
உண்டனள் சீனி யோடு
தணல் நிற மாம்பழத்தில்
தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்
மணவாளன் அருமை பற்றி
மனம் ஒரு கேள்வி கேட்க
இணையில்லா அவன் அன்புக்கு
ஈடாமோ இவைகள் என்றாள்”

என்று குடும்பத்தலைவி உணவுண்ணச் சென்ற காட்சியைச் சித்திரிக்கிறார் பாவேந்தர். அப்பம் உண்பது ஒரு சிறிய வினை. அந்த வினையை உவமத் தோரணத்தால் அணிசெய்துவிடுகிறார். மாம்பழத்தைக் கண்ணால் கண்டு நிறத்தை அறிகிறாள். உண்டு சுவையை உணர்கிறாள். தணல் நிற மாம்பழம் என்றதால் உரு உவமை. தமிழ் நிகர் சுவை என்றதால் பண்புவமை. இத்துடன் இன்னொரு உவமத்தையும் வெகுநுட்பமாகக் கையாள்கிறார். கணவன் கண்ணுக்கு அழகானவன். மனத்திற்கு இனிமையானவன். அந்த அழகும் அவ்வினிமையும் இந்த மாம்பழத்திற்குக் கிடையாதாம். அணி வேற்றுமையாக இருந்தாலும் மாம்பழத்தின் உருவும் பண்பும் கணவனுக்கும் பொருந்துமாறு உவமம் புணர்த்தியிருக்கும் நுண்ணியம் உணரத்தக்கது.

“குழந்தைகள் பள்ளி விட்டு
வந்தார்கள் குருவிக் கூட்டம்
இழந்தநல் உரிமை தன்னை
எய்தியே மகிழ்வதைப் போல்”

என்பது ‘சிட்டுக்குருவி போலே விட்டு விடுதலையாகி’ என்னும் பாரதியின் தொடரோடு ஒப்பு நோக்கத்தக்கது.

பழைமையைப் பழுதுபார்க்கும் பண்டிதர்கள்

உவமங்கள் அழகியல் சார்ந்தவை என்பது அவற்றின் இலக்கிய  நோக்கம். பொருள் விளக்கம் என்பது அவற்றின் உயிர் நோக்கம். அரசுக்குக் கொள்கைமுடிவு என்பதுபோலப் படைப்பாளனின் கொள்கை அடையாளங்களின் குறிப்பு என்பது கூடுதல் சிறப்பு. இந்தக் கொள்கை அடையாளத்தைப் பெரும்பாலான கவிஞர்கள் வெளிப்படச் சொல்ல மாட்டார்கள். இலைமறை காய்மறையாகத்தான் சொல்வார்கள். சுவைப்பார் அல்லது திறனாய்வார் கண்டறிந்து பந்தி வைக்க வேண்டும். பாரதி பழைமைக்கு எதிரி. அதாவது பயனற்ற பழைமைக்கு எதிரி. இந்தப் பழைமை எதிர்ப்பை அவன் தனது எல்லாப் படைப்புக்களிலும் பதிவு செய்திருக்கிறான். இந்த மூடநம்பிக்கை, பொருளற்ற பழைமை இவற்றில் பாரதிக்கு இருந்த உறுதியும் தெளிவும் கனகசுப்புரத்தினம் பாரதிதாசன் ஆவதற்கான காரணங்களுள் தலையாயது.

“பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப்
பழமை இருந்தநிலை கிளியே
பாமரர் ஏதறிவார்?”

என்னும் பாரதியத்தை உள்வாங்கிய பாரதிதாசன் அந்தக் கருத்தினோடு தமக்கிருக்கும் ஒத்திசைவைக் குடும்பத்தின் ஒருநாள் நிகழ்ச்சியில் வைத்துக் காட்டுகிறார். காலைமுதல் அனைத்துக் கடமைகளையும் முடித்த தலைவி இறுதியாகப் பசுவுக்கும் கன்றுக்கும் வைக்கோல் வைப்பதற்கு முன்னால் இந்த உவமத்தைப் பயன்படுத்துகிறார். எப்படி?

“கண்டு, படுக்கை திருத்தி, உடை திருத்திக்
காற்றில்லாப் போதினிலே விசிறி வீசி,
வண்டுவிழி திறக்குமொரு குழந்தை தண்ணீர்
வையென்னும் ஒன்றுதலை தூக்கிப் பார்க்கும்!
பண்டிதரின் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம்
பணிக்கையிடல் போல்அனைத்தும் தணிக்கை செய்தே!”

படுக்கை திருத்துவது முதலாகத் தொடங்கிக் குடி தண்ணீரைத் தலைமாட்டில் வைப்பதுவரை தலைவி செய்யும் செயல்களுக்கெல்லாம் பழைமையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் பண்டிதர்களின் செயல்களை உவமமாக்கியுரைக்கிறார் பாரதிதாசன்.

பாகற்காய் கசக்கும்! பாடல் இனிக்கும்

‘குடும்ப விளக்கு’ பலவகைகளில் தமிழ்க்கவிதைகளிலும் காப்பியங்களிலும் புதுமை தேக்கி நிற்கும் சிறப்புடையது. கணவன், மனைவி இரவில் படுக்கையில் சந்திக்கின்ற காட்சியைப் பண்பாட்டுடன் முதன்முதலில் சித்திரித்துக் காட்டிய பெருமை பாவேந்தருக்கு உண்டு. தனிமனிதன் குடும்பமாகிறான். குடும்பம் தெருவாகிறது. தெரு ஊராகிறது. ஊர் நாடாகிறது. நாடு உலகம் ஆகிறது என்பதுதான் மகாகவி பாரதி, பாரதிதாசன் ஆகியோர்தம் சமுதாயக் கட்டுமானக் கொள்கையாகும். இந்தக் கருத்தியலைப் பாவேந்தர் படுக்கையறையில் வைத்துக் காட்டுகிறார். பகலெல்லாம் தலைவி வீட்டிலும் தலைவன் கடையிலும் உழைத்து வந்து படுக்கையில் விழுகின்ற நேரத்திலும் சுயநலம் நோக்காத அவர்தம் மனநிலையைப் பதிவு செய்கிறார்.

“கண்டான் கண்டாள் உவப்பின் நடுவிலே ஓர்
கசப்பான சேதியுண்டு கேட்பிர் என்றாள்”

மனைவி இதனைச் சொன்னவுடன் கணவன் சொல்லுகிற சொல்தான் காப்பியத்தை நினைக்க வைக்கிறது. கணவன் சொல்லுகிறான்,

“மிதிபாகற்காய் கசக்கும் எனினும் அந்த
மேற்கசப்பின் உள்ளேயும் சுவையிருக்கும்”
அதுபோலத் தானேடி? அதனால் என்ன
அறிவிப்பாய் இளமானே! என்றான் அன்பன்”

மிதிபாகற்காயை அறிந்தாலேயொழிய இந்த உவமத்தை உள்வாங்க முடியாது. பாகற்காயில் பலவகை உண்டு. இவற்றுள் மிதிபாகற்காய் என்பது படியில் அளந்து கொடுப்பார்கள். மேற்புறம் இருக்கும் கசப்பு குறைவாகவும் உள்ளிருக்கும் இனிப்பு அதிகமாகவும் இருக்கும். பாகற்காய் கசக்கும் என்பது இதற்கு அவ்வளவாகப் பொருந்தாது. பக்குவப் பெண்கள் சமைத்தால் இனிப்பு இருமடங்காகும். இந்தப் பாகற்காயை மனைவியின் பேச்சுக்கு உவமித்ததன் மூலம் தலைவி சொல்லவரும் கருத்து இனிப்பானதே என்ற சிந்தனையோடு அணுகுகிறான் தலைவன். தலைவி அப்படி என்ன பேசுகிறாள் படுக்கையறையில்?

“அதிகாலை தொடங்கி நாம்இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமது நலம் சேர்ப்பதல்லால்
இதுவரைக்கும் பொதுநலத்துக்கென்ன செய்தோம்
என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவும் இல்லை”

இவைதான் அவள் பேசிய கசப்பான சேதி!. உள்ளே இருக்கும் சுவை என்ன? மனைவி இரவில் சொல்ல வந்ததைக் கணவன் பகலிலேயே செய்து முடித்துத் தமிழினத்தின் உயர்வுக்கான சிந்தனையோடு வீடு வருகிறான். அவனுடைய பேச்சைக் கேட்டு மனைவி முடிக்கிறாள் இப்படி!

“பழம் இடுவேன்! சர்க்கரைப்பால் வார்ப்பேன்! உங்கள்
பண்பாடும் வாய்திறப்பீர், அத்தான்! என்றாள்!”

உள்ளத்தால் இணைந்த கணவன் மனைவியர்தம் இல்லறத்தின் நோக்கம் பொதுநலம். விடுகதை போடலாம் என்று மனைவி எண்ணியிருந்தாள். கணவன் விடையோடுதான் வந்திருக்கிறான் என்பதை அவள் அறியாள். மனைவி சொல்லிக் கணவன் செய்வதைவிடக் கணவன் சிந்திப்பதையே மனைவி எண்ணுவது சிறந்தது. சொல் கசப்பாயிருக்கலாம். பொருளும் பயனும் இனிப்பானவை என்பது கருத்து.

நிறைவுரை

வைகறையில் தொடங்கி முன்னிரவில் நிறைவு செய்து காட்டியிருக்கும் ஒருநாள் நிகழ்ச்சியில் பாவேந்தர், குடும்பப் பாங்கான உவமங்களையே கையாண்டிருக்கிறார். ‘வண்டுவிழி’, ‘அன்றிலடி நாமிருவர்’, ‘குன்றத்தில் படர்ந்த மலர்க்கொடி’, ‘செங்காந்தள் நிகர் விரல்’, ‘பூவிதழ் மேல் பனிதூவிய துளிபோல்’ என்றெல்லாம் ‘தொட்ட இடமெல்லாம் தட்டுப்படும்’ உவமங்களால் நிறைந்தது ஒருநாள் நிகழ்ச்சி!  ஒருநாள் சித்திரிப்பில் ஓராயிரம் உவமங்கள். ஆனால் அவை அழகு பெற்றதும் அழியா வாழ்வு பெற்றதும் தமிழிலக்கியத்தில் புதுத் தடம் கண்டதும் காட்டியதும் பயன்படுத்தப்பட்ட உவமங்களால் என்பது அவ்வுவமங்களில் மனங் கரைந்தார்க்கே புலனாம்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *