நிர்மலா ராகவன்

எல்லாரும் முட்டாள்கள் – என்னைத் தவிர

நமக்குப் பலரைத் தெரிந்திருக்கலாம். அவர்களில் எத்தனைப் பேர் நம்மைப் புரிந்துகொள்கிறார்கள்?

நாம்தான் அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்கிறோமா?

அனேகமாக எல்லா மனிதர்களும் தம்மை ஒத்தவர்களை மட்டும்தான் ஏற்பார்கள். மற்றவர்களெல்லாம் முட்டாள், அல்லது அசடு என்று நம்புவார்கள்.

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்துவிடுவார்களோ என்று அஞ்சி, முந்திக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

சில நிமிடங்களோ, வாரங்களோ மட்டுமே ஒருவருடன் பழகினால் அவரைப் புரிந்துகொள்ள முடியுமா?

புரிந்துகொள்ள முடியாததால்தான் ஏளனம்.

கதை

என் சக ஆசிரியை ரொஜிதா (ROZITA) பதின்ம வயது மாணவர்களை, `இந்தக் குரங்குகள்’ என்றுதான் குறிப்பிடுவாள்.

பொறுக்க முடியாது, ஒருமுறை, “உன் குழந்தைகளை `குரங்கு’ என்று சொல்வாயோ?” என்று கேட்டுவிட்டேன்.

“சேச்சே!” என்றாள், சிரித்தபடி.

அவளைப்போல், `நான்’, `எனது’ என்றே யோசித்தால், `நம்’ என்பது புரியாமல் போய்விடும்.

பிறர் நிலையில் நம்மைப் பொருத்திக்கொள்வது

பிறரைக் குறை கூறுவதற்கு முன், நமக்கு வாய்த்த நல்வாழ்க்கை அவர்களுக்கும் அமைந்திருக்குமா என்று சற்று யோசித்தால் அவர்களது நடத்தைக்குக் காரணம் புரியும்.

பதின்ம வயதிற்கே உரிய குணம் எல்லாவற்றிற்கும் சிரிப்பது.

வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வந்த மாணவர்கள், வீட்டில் அன்பு கிடைக்காதபோது, தம்மையொத்த பிற மாணவர்களுடன் பழக நேர்ந்தால் அவர்களுக்குக் கூடுதலான மகிழ்ச்சி.

ரொஜிதாவுக்கு அது புரியவில்லை.

கதை

ஒரு மாணவன் எதற்கும் அடங்கவில்லை.

அவன் தாயைச் சந்தித்தபோது, “கொஞ்சங்கூட மரியாதை இல்லாமல் பேசுகிறான்,” என்று புகார் செய்தேன்.

அவள் பெருமூச்சுடன், “வீட்டிலும் அப்படித்தான்!” என்றாள்.

எங்கு, எப்போது தவறு நேர்ந்திருக்கும்?

இத்தகைய பெற்றொர், சிறு குழந்தைகளைத் திட்டக் கூடாது, அவர்கள் மனம் நோக எதையும் செய்யவும் கூடாது, அவமானம் அடைந்துவிடுவார்கள் என்று நம்பி வளர்க்கிறார்கள்.

நினைவு தெரிந்த நாளிலிருந்து தான்தோன்றித்தனமாக எதையும் செய்து பழகியவன், திடீரென்று பதின்ம வயதில் கண்டிப்பை ஏற்பானா?

இன்னொரு கதை

வகுப்பில் கீழ்ப்படியாமல், படிப்பிலும் கவனம் செலுத்தாது இருந்த மாணவர்களுள் ஆதாமும் ஒருவன்.  ஆனால் பரீட்சையில் பௌதிகப் பாடத்திலிருந்த, கஷ்டமான கணக்குகளைச் சரியாகப் போட்டிருந்தான்.

எனக்குச் சந்தேகம் வந்தது. “என்னெதிரில் இப்போது போட்டுக் காண்பி!” என்றேன்.

சற்றும் யோசியாது, சில வினாடிகளிலேயே முடித்தான்.

மகா புத்திசாலி. ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறான் என்று புரிந்தது.

வகுப்பு முடிந்ததும் என்னுடைய அறையில், சில நண்பர்களுடன் வந்து, என்னைச் சந்திக்குமாறு ஆதாமிடம் கூறினேன்.

எடுத்த எடுப்பிலேயே, “உன் அப்பா உங்களுடன் இருக்கிறாரா?” என்று கேட்டேன்.

“அப்பப்போ,” என்றான், அடக்கிய குரலில்.

“உன் நண்பர்கள் எதிரில் இதைப் பற்றிப் பேசலாமா?” என்று கேட்டுக்கொண்டேன்.

`அதனால் என்ன! நாங்கள் பார்க்காததா!’ என்பதுபோல் அவர்கள் கையை மேலும் கீழும் ஆட்டினார்கள், அலட்சியமாக.

தந்தை வேறு பெண் துணைகளுடன் இருக்கும்போது ஆண்குழந்தைகள்தாம் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

தாயின் தனிமையை, வருத்தத்தை நம்மால் போக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி வேறு.

இவனைப்போல் எத்தனை மாணவர்களைப் பார்த்திருப்பேன்!

அவர்களிடம், “உன் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே இருக்கும் பிரச்னை இது. நீ வீணாகக் குழம்பாமல், உன் எதிர்காலத்தைப் பற்றி யோசி,” என்று பலவாறாக எடுத்துக் கூறுவேன்.

அதற்குப் பின், நான் `எள்’ என்றால் எண்ணெய்தான்!

ஆசிரியர்களும் பிறரைப் புரிந்துகொள்ளும் தன்மையும்

பயிற்சிக் காலத்தில், ஆசிரியர்கள் உளவியல், சமூக இயல் ஆகியவற்றையும் கற்கிறார்கள்.

உதாரணம்: வசதி நிறைந்த குடும்பத்திலிருந்து வந்த மாணவன், சுய முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டு, நல்ல விதமாக நடப்பான்.

படிப்பறிவற்ற பெற்றோர்களின் குழந்தைகளுக்கு எவ்வாறு கல்வியில் நாட்டம் பிறக்கும்? அதற்காக, அவர்களைத் துச்சமாக நினைத்துவிடலாமா?

பரீட்சையில் தேர்ச்சி பெறும் அளவுக்கு இவை புரிந்தால் போதும் என்ற மனப்பான்மை பெரும்பாலான, எதிர்கால ஆசிரியர்களுக்கு. ஆகையால், செயலில் கொண்டுவர முனைவதில்லை. அவர்களுடைய பின்னணி, கல்விக்கூடங்கள் ஆகியவையும் குறுக்கே வர, கற்றது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகப் போய்விடுகிறது.

அப்படியிருக்க, மாணவர்களை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?

தத்தம் கண்ணோட்டத்திலிருந்து பிறரை எடைபோடுவது அநேகமாக தவறான முடிவாகத்தான் இருக்கும்.

கதை

“அந்தப் பெண்ணை விரும்பி மணந்தானா! அவன் எவ்வளவு புத்திசாலி! அவளோ, மக்காக இருக்கிறாளே!”

கல்வித் திறனிலும், உத்தியோகத்திலும் உயர்ந்தவன் அவன்.

`நான் நிறையப் படித்து, பெரிய உத்தியோகத்திலும் அமர்ந்து, சாதித்துக்கொண்டே இருக்கவேண்டும்!’ என்ற கொள்கை கொண்ட பெண்கள் தனக்குச் சரிப்படாது என்று அவனுக்குத் தோன்றியது. அவர்களால் தனது பெரிய குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா என்ற கேள்வி எழ, குடும்பப் பாங்கான பெண்ணை மணந்தான்.

மணவாழ்க்கையும் சுமுகமாக இருந்தது.

அவனுக்குத் தன் மனம் புரிந்திருந்தது. அதனால் பிறரையும் புரிந்துகொள்ள முடிந்தது.

ஏன் சிலரைப் பிடித்துப் போகிறது?

`அவர் என்னைப் புரிந்துகொள்கிறார்!’ என்ற உணர்வு எழும்போது நிறைவாக இருக்கும்.

அப்படிப்பட்டவர் குறைகளே இல்லாதவர் என்று அர்த்தமில்லை. ஆனால், குறைநிறைகளுடன் தன்னை ஏற்றுக்கொண்டவர். அதனால், பிறருடைய குறைகளையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பிறருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்கும் முதிர்ச்சியை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைப்போல் அல்லாதவர்கள் அவர்கள் மனத்தை நோகடித்தாலும், ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று புரியும். `பழிக்குப் பழி’ என்று வீம்பு இருக்காது.

எப்படிப் புரிந்துகொள்வது?

பொதுவாக, பிறர் பேசும்போது, தான் எங்கு, எப்படி குறுக்கிடலாம் என்று காத்திருப்பதுதான் பலருக்கு வழக்கம். இது இயற்கை.

அப்படியின்றி, ஒருவர் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டால், ஓரளவு புரிந்துகொள்ள முடியும். சிலரது புன்னகைக்குப் பின்னால் வருத்தம் இருக்கலாம். அன்பு கோபமாக வெளிப்படலாம்.

பலபேர் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், ஒருவர் மட்டும் மற்றவரது முகபாவம், பயன்படுத்தும் வார்த்தைகள் போன்றவற்றை மௌனமாகக் கவனித்துக்கொண்டிருப்பார். இவர் பிறரைப் புரிந்துகொள்ளும் அறிவாளி.

அது புரியாது, `கர்வி,’ அல்லது, `பழகத் தெரியாதவன்’ என்று பட்டம் சூட்டிவிடுவார்கள்.

தம்பதியருக்கு ஒரே மனமா?

புதிதாக மணமானவர்கள் முதலில் பேசிக்கொள்வது: `நமக்குள் ரகசியமே இருக்கக் கூடாது. அப்போதுதான் நாம் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்”.

இரண்டுமே தவறான எதிர்பார்ப்புகள்.

`நான் திருமணத்திற்கு முன்பே பலருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன்!’ என்று அவர்களுள் ஒருவர் கூறினாலும், மற்றவரின் பொறாமையையும், `இப்போது மட்டும் ஒழுக்கமாக இருந்துவிடுவாயோ?’ என்ற சந்தேகத்தையும்தான் தூண்டிவிடுகிறார்.

நம்மைப் பற்றி நாமே எவ்வளவுதான் விளக்கினாலும், பிறர் நம்மைப் புரிந்துகொள்ள முடியாது.

பிறர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று யோசித்தே நடப்பதால், பலரும் உண்மையாக நடப்பதுமில்லை.

கதை

நீண்ட காலம் தாம்பத்தியத்தில் ஈடுபட்டிருந்த முதியவர்களைக் கண்டு, அதிசயப்பட்டுக் கேட்டார்கள்: “உங்களுக்குள் சண்டையே வந்தது கிடையாதா? அப்படி ஒரு புரிந்துணர்வா!”

அதற்கான பதில்: “என்னிடம் மட்டும் குறையே கிடையாதா, என்ன! கணவருடைய (மனைவியின்) குறைகளைப் பெரிதுபடுத்துவானேன்! ஏதாவது கெட்டுப் போயிருந்தால், அதைச் சரிசெய்து, பயன்படுத்தும் தலைமுறை எங்களுடையது!”

(நிறைவு)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *