திருமதி வசந்தா சுத்தானந்தம்

சமீபத்தில், சங்கரன் கோவிலில் நடந்த பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு முகாமில் நான் ஆற்றிய உரையை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பெண் கல்வி என்பது பெண்களின் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு மட்டும் உரியது என்று கருதிவிடக்கூடாது. பெண்கள் கல்வி பயின்றால் அது குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கல்வி கொடுப்பதற்குச் சமம் என்பார்கள். பெண்களுக்குக் கல்வி கொடுப்பதால் அவர்களின் குடும்பம் உயர்ந்த நிலையை அடையலாம். அதன்மூலம் சகலமும் முன்னேறும்.

காலங்காலமாக பெண்கள் வீட்டில் மட்டும் இருந்துகொண்டு வீட்டு வேலைகளை. குறிப்பாக சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளை மட்டும் செய்யக் கூடியவர்கள் என்று நினைத்துக் கொணடிருந்தார்கள். அந்த கடமைகளையும் பெண்கள் செய்ய வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. அதே சமயம் பெண்கள் தொன்றுதொட்டு காலங்காலமாக வெளியுலக அனுபவம் இல்லாமல் வாழ்தல் என்பது மிகவும் கொடுமையான செயலாக நான் கருதுகிறேன்.

அறிவியலிலும் சரி தொழில்துறையிலும் சரி இன்று பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்பதை பல்வேறு பெண்கள் சாதித்துக் காட்டியுள்ளார்கள். வெறும் அழகுப் பொருளாகவும். வேலைசெய்யும் இயந்திரங்களாகவும் இருந்த பெண்கள் இன்று உலகின் பல்வேறு துறைகளிலும் கால்பதித்து வெற்றிக்கனி பறித்துள்ளார்கள் என்றால் அது மிகையில்லை.  உதாரணமாக. விண்வெளித்துறையில் கல்பனா சாவ்லா. அரசியலில் இந்திரா காந்தி முதல் இன்றைய முதல்வர் வரை. பொதுச்சேவையில் அன்னை தெரசாவில் தொடங்கி இன்றைய மேதா பட்நாகர், அருந்ததிராய் போன்றோர் வரை. சங்க மற்றும் இலக்கியத் துறையில் சாதித்துள்ளார்கள். பன்னாட்டு குளிர்பான நிறுவனமாகிய பெப்சி என்ற அமைப்பில் நமது இந்தியப் பெண்மணி இந்திரா நூயி தலைமை மேலாளராக உள்ளார்எ ன்பது நம் இந்தியப் பெண்கள் அனைவருக்கும் பெருமைதானே.

சமீபத்தில் நடந்த ஜ.ஏ.எஸ். தேர்வில் திவ்யதாரிணி என்ற தமிழ்நாட்டுப் பெண் இந்தியாவில் முதலிடம் பெற்றார் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்ளலாம். இப்படிப்பட்ட சாதனைப் பெண்களின் பெயர்ப்பட்டியலில் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை மறைந்துள்ளதை நீங்கள் உற்று கவனிக்க வேண்டும். நான் குறிப்பிட்ட அத்தனை பெண்களும்,  கல்வியால் தான் உயர்ந்துள்ளனர் என்பதனை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  நீங்களும் உங்கள் பெண் குழந்தைகளும் சாதனைப் பெண்மணிகளாக உயர வேண்டும் என்று நினைத்தால் கட்டாயம் கல்வி பயிலச் செய்ய வேண்டியது நமது கடமை. கல்வியைப் போற்றிய பெண்களால் மட்டும்தான் பொருளாதார ரீதியாகவும். சமுதாயா ரீதியாகவும் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

பல நேரங்களில் பெண்கள் படும் கடுந்துயரங்களுக்கு பெரும் காரணமாக இருப்பது அவர்களுடைய அறியாமையே ஆகும். இந்த அறியாமை என்ற இருளைப் போக்க வேண்டும் என்று சொன்னால் பெண்கள் கட்டாயம் கல்வி பயில வேண்டும். அவ்வாறு பெறும் கல்வியால் மட்டுமே அவர்கள் பெருமை அடைய முடியும். பெண்கள் கல்வி பயில்வது என்பது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள மட்டும் உதவக கூடியதாக கருதக கூடாது. இனி வரும் காலங்களில் தன் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருவதற்கும். அவர்கள் செய்யும் வீட்டுப்பாடங்களுக்கு உறுதுணை புரிவதற்கும் கட்டாயம் பெண்கல்வி உதவும். பெண்கள் ஆண்களைவிட மிகவும் பொறுமைசாலிகள் எளிதில் கோபப்பட மாட்டார்கள். ஆகவேதான் கல்வி நிறுவனங்களில் குறிப்பாக பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடம் கற்றுத்தர அவர்களை நியமனம் செய்கின்றோம்.

இன்று சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துப் போராடவும் பெண் கல்வி அவசியமாகிறது. மிகவும் வருத்தம் தரும் செய்தி என்னவென்றால் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் அனைத்துப் பெண்களும் உயர் கல்விக்குச் செல்வதில்லை. பள்ளிக் கல்வியோடு தன் கல்வி வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றார்கள் அல்லது முடித்துக் கொள்ள தூண்டப்படுகிறார்கள். அதுவும் உயர் கல்விக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாக உள்ளது. தயவுசெய்து பெற்றோர்களே. நீங்கள் உங்கள் பெண் குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள். அது நீங்கள் உங்கள் பெண்குழந்தைகளுக்குச் செய்யும் மிகப்பெரிய சீதனமாக இருக்கட்டும். எந்தச் சுழ்நிலையிலும் தன்னம்பிக்கை குறையாமல் பெண்கள் வாழவேண்டுமென்றால் பெண்கல்வி மிகவும் அவசியம் என்பதனை நாம் அனைவரும் உணர வேண்டும். எதற்காகவும் பிறரைச் சாராமல் சுயமாக வாழ வேண்டுமென்றால் பெண்கல்வி மிகவும் அவசியம்.  அதேசமயம். கற்ற பெண்கள் நமது இந்திய கலாச்சாரத்தையும். பண்பாட்iடையும் கடடிக்காக்க வேண்டியதை தன் கடமையாகக் கருதவேண்டும். படித்த பெண்கள் குடும்பத்தாரையும். உற்ற உறவினர்களையும் அரவணைத்து ,தன் குடும்பத்தின் கவுரவத்தையும். கண்ணியத்தையும் கட்டிக்காப்பவர்களாக இருக்க வேண்டும்.

கடந்த காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது. விவாகரத்து போன்ற சமூகச் சீரழிவு செயல்கள் அதிகரித்துள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். பெண்களினுடைய கல்வி அவர்களுக்கு தன்னம்பிக்கையைத் தருவதாக இருக்க வேண்டுமே தவிர. தன்னம்பிக்கை என்ற பெயரால் தன் குடும்ப வாழ்வைச் சீரழித்துக் கொள்வதாக இருக்கக் கூடாது என்பதனை கட்டாயம் நாம் நம் குழந்தைகளுக்கு உணர்த்தக் கடமைப்பட்டுள்ளோம்.

பெண்கள் மேன்மேலும் உயர கல்வி பெற்று இந்த நாடடிற்கும். பெண்கள் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்து வாழ என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை இந்த நல்லநேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பெண்கல்வி

  1. தென் மாவட்டங்களில் அதுவும் குறிப்பாக சங்கரன்கோவில், தென்காசி பகுதிகளில் பெண்கள் என்றால் வீடு வேலை செய்யவும் கணவனுக்கு பணிவிடைகள் செய்யவும்தான் சிருஷ்டிக்க பட்டவள் என்ற எண்ணத்துடன் கூடிய செயல்பாடுகளை நீண்ட நெடுங்காலமாக இருந்துவந்தது என்பது உண்மை. அனால் இன்று நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதும் கண் கூடாக காண்கின்ற உண்மை. அப்பகுதி பெண்கள் நிறையப்பேர் நன்கு படித்து இப்போது சென்னையிலும் வெளி மாநிலங்களிலும் வேலைக்கு சென்று வருவது அப்பகுதியை (சங்கரன்கோவில்)சார்ந்தவன் என்கின்ற முறையில் எனக்கு பெருமையாகவே உள்ளது. அனால் இது இன்னமும் முழுமையாக வில்லை பள்ளி இறுதி வகுப்புக்கு மேல் இப்பகுதி பெண்களின் படிப்பு பாதிக்கப்டுகிறது என்பதே நேசமான உண்மை. இந்த உண்மையினை, சங்கரன் கோவிலில், திருமதி.வசந்தா சுத்தானந்தம் ஆற்றிய உரையில் ‘பன்னிரெண்டாம் வகுப்புக்கு மேல் பெண்களின் படிப்பு பாதிக்கபடுகிறது அதற்க்கு மேல உயர்கல்விக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது” – பிரதிபலித்தது எனக்கு மன நிறைவாக இருந்தது. இந்த பெண்கள் விழிபுணர்வு முகாம் சங்கரன் கோவிலுடன் நிறுத்தாமல் இப்பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களிலும் நடத்தப்பட்டு இவர்களின் கருத்துக்கள் இப்பகுதி முழுவதும் பரவவேண்டும் என்பது அவசியமானதே . இதற்க்கு அப்பகுதி பெண்கள் அமைப்பு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் எனது வேண்டுகோள். பெண் கல்வி என்ற முறையில் அருமையான கருத்துக்களை தேவையான இடத்தில எடுத்துரைத்து பெருமையினை பெற்ற திருமதி.வசந்தா சுத்தானந்தம் அவர்களுக்கு எனது வணக்கங்கள் கலந்த பாராட்டுக்கள். உரையினை அதன் முக்கியத்துவம் கருதி வெளியிட்ட “வல்லமை” ஆசிரியர் குழுவிக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

    சித்திரை சிங்கர்,
    சென்னை.
    23.11.2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *