ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்–பகுதி 10

0

அண்ணாமலை சுகுமாரன்

“ஊனில் உயிரில் உணர்வினில்

நின்ற ஒன்றை உணர்ந்தேனே “

என்று நம்மாழ்வார் புகல்வது போல் ஊனில் உயிரில் மட்டும் இல்லாமல் உணர்வினும் இறையின் இருப்பை உணர்வதே உடம்பைப் பெற்ற பெரும் பயன் என்று முந்தையக் குறளில் பார்த்தோம் .

இந்த உணர்வு என்பது உணர்ச்சி இல்லை. நாம் இனிப்பை உணர்கிறோம், குளிரை உணர்கிறோம், அன்பை உணர்கிறோம், கோபத்தை உணர்கிறோம். அப்படியே அறிவும் உணர்வும் இணைய வேண்டும். இறை உணர்வு என்பது உணர்வாக உடம்பில் கலக்க வேண்டும்.

வேதத்தில் இருந்து கூறப்படும் ‘தத்துவமசி’ போன்ற மகா வாக்கியங்கள் போல் புதுவை அன்னையின் மகா வாக்கியம் ஒன்று உள்ளது. அவர்கள் கூறிய அருளுரையில் இருக்கும் இந்த வாக்கியத்தை மகாவாக்கியமாக நான் மதிக்கிறேன். அது என்னவெனில் ‘அகவுணர்வுகளின் வெளிப்பாடே நம்மை சுற்றிய புறச்செயல்கள்’ என்பதுவே ஆகும் .

இந்த மகா வாக்கியமே நம்மைச்சுற்றி நடக்கும் அனைத்துக் காரணங்களுக்கும் தகுந்த ஒரு சரியான காரணத்தை கூற வல்லது ஆகும்.

உண்மையில் எல்லோரும் சொல்வது போலோ அல்லது நினைப்பது போல் நாம் என்ன நினைக்கிறோமோ அதைப் பொறுத்தோ ,அல்லது நமது எண்ணங்களை மட்டும் பொறுத்தோ, நமது தேவைகளின் பொறுத்தோ, நமது பிரார்த்தனைகளைப் பொறுத்தோ மட்டும் நமது வாழ்வில் நடக்கும் காரியங்கள் இருப்பதில்லை. நமது அறிவுக்கும் புலமைக்கும், அனுபவத்திற்கும் நடக்கும் காரியங்களுக்கும் எந்தவித தொடர்பும் இருப்பதில்லை.. இது பல நேரங்களில் நமக்குத் திகைப்பை உண்டாக்குகிறது. காரணக் காரியம் புரியாமல் புலம்புகிறோம்.

ஆனால் உண்மையில் நாம் கொண்டிருக்கும் அக உணர்வின் தன்மையைப் பொறுத்தே வாழ்வின் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. உணர்வு என்பது அறிவு மட்டுமல்ல வேண்டுமானால் அறிவின் விளைவு அதன் நிகழ்வு எனக் கூறலாம்.

எப்படி சந்தோஷமாக எப்போதும் இருப்பது எனத் தெரிந்திருந்தாலும், அந்தத் தெரிந்தது மட்டும் சந்தோசம் ஆகி விடுமா?. சந்தோஷமாக உணரவேண்டும்.

அந்த உணர்வு எங்கிருந்து வருகிறது.

எது உணர்கிறது.  மூளையா? மனதா?

மனம் தான் உணரவேண்டும். அதற்கு மனத்திற்கு முன்பே சந்தோசம் என்பது என்ன எனத் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான்அதை உணரமுடியும். சர்க்கரையின் சுவை முன்பே தெரிந்தால் தான் சர்க்கரையை இனம் காண முடியும். முன்பே தெரிந்தது தான் வாசனை என்பது. அது ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு நாளும் பெறும் அனுபவத்தைச் சேகரம் செய்வது. நமக்கும் இறைக்கும் காலம் காலமாகத் தொடர்பு இருக்கிறது. நம்முள் இறைவன் இருக்கிறான்.

ஔவையும் உடம்பில் இருக்கும் உத்தமனைப் பற்றிக் கூறுகிறார்.

நமது மனம், ஆன்மாவின் இருப்பை உணரும் போது, மனம் உள் நோக்கிக் குவியும் போது, நம்முள் இறை உணர்வு உண்டாகிறது. கோயிலுக்குச் சுற்றுப்பிரயாணம் சென்று சாமியைப் பார்த்து விட்டு, பிரசாதத்தை ருசித்து விட்டு வருவதும், காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, அவனே அதுவாகி சாமியைப் பார்ப்பதும் ஒரே ரகமாகி விடுமா. பாவித்தால் தான் பலன் புரியும்.

அக உணர்வை வளர்த்துக் கொள்வதும் நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்வதும் மிக முக்கியமானதாகும். நல்ல உணர்வுகள் என்பது அன்பு, பக்தி, சந்தோசம், பரிவு, பெருந்தன்மை, மன்னிக்கும் குணம் முதலியவையாகும் .

தீய உணர்வுகள் கோபம், பொறாமை, கருமித்தனம், சுயநலம், தன்னை மட்டும் முன்னிலைப் படுத்தல்  முதலியவையாகும்.

உணர்வு என்பது மனிதனின் ஆன்மாவிற்கு சொந்தமானது மட்டுமல்ல. ஆன்மாவின் இயல்பே உணர்வு தான் .

பணக்காரனாக வேண்டுமெனில் பணக்காரனாக தன்னை நினைத்தால் மட்டும் போதாது, பணக்காரனாகவேத் தன்னை உணவேண்டும். உணர்வே  கனவை மெய்யாக்கும் வல்லமை கொண்டது .

நாம் நம் உணர்வில் செயல் படும் போது மட்டுமே ஆன்மாவின் ஒளி உணர்வின் மேல் படுகிறது. இறையுடன் அறிவும், மனமும் ஒருசேர, எந்தவித வினாவும் இன்றிச் சரண் புகும் மனநிலையில் மட்டுமே நமக்கு இறை உணர்வு ஏற்படும். இது உணர்வதுவே, உணரப்படுவது மட்டுமே, எத்தனை முறை விவரித்தாலும் முழுவதும் கூறி விட்டதாகக் கூற முடியாது.

இனி உடம்பின் பயன் எனும் அதிகாரத்தின் அடுத்தக் குறளைப் பார்ப்போம்.

ஒரு பயவாவ துடம்பின் பயனே

தருபயனாஞ் சங்கரனைச் சார்

ஒப்பற்ற உடம்பைப் பெற்றதன் பயன், அத்தகைய பயன் தரும் உடலைத் தந்த சங்கரனைச் சார் என்கிறார் .

இங்கு ஔவைப் பிராட்டி சங்கரன் எனக் குறிப்பிடுவது இறைவனைத் தானே தவிர சிவபிரானையோ, பரமசிவனையோ அல்ல என நினைக்கிறேன். ஏன் எனில் இது ஞானத்தைக் கூறவந்த குறள், இங்கே துதி பாடுதல்  இருக்கத் தேவை இல்லை.

சங்கரன் என்பவர் மங்கலம் தருபவர். சங்கடங்களைத் தீர்ப்பவர், அத்தகைய இறைவனைச் சார்ந்திருப்பதே, உடம்பினைப் பெற்று அதனால் நாம் வாழ்வின் பயன் என்கிறார்.

முதல் குறளில் உடம்பினுள் இருக்கும் உத்தமனைக் காணச் சொன்னார். இரண்டாவது  குறளில் உடம்பின் பயன், அதனால் பெற்ற அறிவின் பயன் என்பது, உணர்வதே என்றார். மூன்றாவது குறளில், உடம்பினைப் பெற்றதன் பயன், அத்தகைய உடம்பினைத் தந்த இறைவனைச் சார்ந்தே, உடம்பினால் பெற்ற  வாழ்வு இருக்க வேண்டும் என்கிறார். இனி  அடுத்தக் குறளைப் பார்ப்போம்.

பிறப்பினாற் பெற்ற பயனாவதெல்லாம்

துறப்பதாந தூநெறிக்கட் சென்று

தூநெறிக்கட் =  உயர்ந்த நெறிகளில். இந்தப் பிறப்பினால் பெற்ற உடம்பின் பயன் எல்லாம் உடம்பைக் கொண்டு வாழும் வாழ்வில் உயர்ந்த நெறிகளில் சென்று, இந்த உடம்பைத் துறப்பதே ஆகும் என்கிறார் .

இந்த உடம்பு, நமக்கு பேறு அளிக்கும் உடம்பு. இந்த உடம்பின் பயன் பேறு நிலை நோக்கிய வாழ்வினை அறிந்து அதன் வழி நடப்பதே. ஆனால் அத்தகைய பேறு கிடைக்கும் போது இந்த உடம்பை நாம் துறக்கிறோம். சீரும் சிறப்புமாகப், போற்றி வளர்த்த இந்த உடம்பு துறப்பதற்காகவே என்பது நமக்கு தெரிய வேண்டும். உடம்பின் மேல் பற்றுக் கொள்ளக் கூடாது.

பரிணாமத்தின் அடுத்த நிலைக்கு போகும் போது, உடம்பைத் துறக்கும் பற்றற்ற நிலை வேண்டும். பழைய சட்டையை, நாம் பெரிதானதும் மாற்றத்தான் வேண்டும். ஆற்றைக்கடக்க ஓடம் தேவைதான்.ஆனால் ஆற்றைக் கடந்ததும் ஓடத்தை கரையில் விட்டு,நாம் மேலே நடக்க வேண்டும். ஓடத்தைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு நடக்கக் கூடாது. உடம்பின் பயன் பெற்றதும் உடம்பினைத் துறக்க வேண்டும். இதுவே இந்தக் குறளில் ஔவை நமக்கு கூறும் செய்தி.

இனி அடுத்தக் குறளை அடுத்ததில் பார்ப்போமா ?

உள்ளும்  புறமுமாய் உடலுக்குள் நீ இருந்தது

எள்ளளவும் நான் அறியாதே இருந்தேனே பூரணமே —

பட்டினத்தார்

என்னில் இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்

என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ ?

சிவவாக்கியர்

படத்திற்கு நன்றி: http://www.ammandharsanam.com/magazine/March2011unicode/page009.php

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *