விசாலம்

இந்தக் காலத்தில் மிக எளிதாக முக்தி கிடைக்கும் வழிகள் சில இருக்கின்றன. அதில் ஒரு வழி நாமஸ்மரணை. முன்பு கடுந்தவம் இயற்றி உடலை வருத்தி மோட்சம் அடைய முனைந்தனர் பலர். ஆனால் இப்போது இருக்கும் யுகத்தில் தூய உள்ளத்துடன் கடமைகளைச் செய்து தன்னலமில்லாமல் அன்புடன் சேவை செய்தாலே மோட்சப் பிராப்தி தான் என்கிறார் சாயி பாபா. அவரது 86-வது பிறந்த நாளில் அவர் பஜன் செய்வதைப் பற்றிக் கூறியிருக்கும் சில பொன்மொழிகளை நினைவு கூருகிறேன்.  நான் இன்று காலை நகர சங்கீர்த்தனம் சுப்ரபாதம், பஜன் போன போது இதைப் பற்றி எழுத வேண்டும் என்று ஒரு மின்னல் என் மனதில் உதித்தது. கடவுளின் தரிசனத்திற்குச் சிரத்தையும் அன்பும் போதுமானது. பல ரூபாய்களுக்குப் பூக்கள் வாங்கி வைத்தாலும் அங்கு படாடோபம் தன்முனை என்பவை இருந்தால் அங்கு பூஜையின் பலன் இருக்காது. வேடனாக இருந்து தன் அன்பால் சிரத்தையால் கண்ணப்ப நாயனாராக உயர்ந்த இடத்தைப் பிடித்த கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

ஸங்கீர்த்தமனம் என்பது பலர் சேர்ந்து பரமனின் புகழைப் பரவசத்துடன் பாடுவது. இப்படிப் பாட அந்தச் சூழ்நிலையும் புனிதமாகி செவியால் கேட்கும் அனைவரும் முக்தியடைய வழி வகுக்கும். பாபா சொல்கிறார், “பஜன் மனதுக்குப் போஜன். உடலுக்கு ஒவ்வொரு நிமிடமும் பஜனாக இருக்கட்டும். பஜன் என்பது உனது மூச்சுக் காற்றுப் போன்றது. தேவையற்றப் பேச்சுக்களை நிறுத்துங்கள். பஜன் பாடும் போது அதன் பொருளையும் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பெயரின் வடிவத்தின் மீது கவனம் செலுத்துங்கள். அதன் இனிமையின் மேல் நாவைச் சுழற்றுங்கள். இறைவன் பெயரைச் சொல்லவோ அல்லது பஜன் செய்யவோ வெட்கப்படாதீர்கள். உங்கள் நாக்கு நல்ல முறையில் பயன்பட்டது எனச் சந்தோஷப்படுங்கள்.

பஜன் பாடும் முன்னே அமைதி காத்து நம் கண் முன்னே இறைவனின் உருவத்தைக் கொண்டு வர வேண்டும்.பின் கடவுளுக்கு அடக்கத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்,நீங்கள் பாடுவது இறைவனுக்குத் திருப்தியளிக்க வேண்டும். உங்களது விசிறிகளுக்கோ அல்லது புகழுக்கோ அல்ல, பிரார்த்தனை என்பது அடித்தளத்திலிருந்து வர வேண்டும் அன்பினால் தெய்வீக இதயத்தை எளிதாக மலரச் செய்யலாம். பஜன் பாடும் போது சுருதி லயம் மிகவும் முக்கியம்.

சாயி பஜன் ஒரு ஆன்மீகப் பயிற்சி எனலாம்.  மிகவும் எளிய முறையில் எல்லாமே ஒரு பத்து வரிக்குள் இருக்கின்றன. கீர்த்தனைகள் போல் பல்லவி அனுபல்லவி சரணம் என்றும்,  சில பிருகாக்கள் சில ராக அசைவுகள் எல்லாம் இல்லாமல் மிகவும் எளிதாகப் பாடும்படி இருக்கின்றன. பாபா கீர்த்தனைக்கும் சங்கீர்த்தனத்திற்கும் வித்தியாசம் சொல்கிறார்.

“கீர்த்தன் என்பது தனிப்பட்டமுறையில் பாடுவது. இதில் தனிப்பட்ட ஆசைகளைத் தங்கள் திறமைகளைக் கொண்டு நிறைவேற்றலாம். ஆனால் சங்கீர்த்தனம் குழுவுடன் பாடுவது, உலக நன்மைக்காகப் பாடுவது. எல்லாப் பக்தர்களும் சேர்ந்து பஜன் பாடும் போது சக்தி, உள்ளிருக்கும் சக்தி,  ஆன்மீக சக்தி எனத் தனிப்பட்ட மனிதர்களிடமிருந்து ஊக்குவிக்கப்பட்டு ஆன்மீக அதிர்வுகளை உருவாக்கி இதன் மூலம் பல எதிர்மறை சக்திகளான வெறுப்பு, கோபம்,  ஹிம்சை, பேராசை ,ஆகியவற்றை நீர்த்துப் போகச் செய்கின்றன”

நகர சங்கீர்த்தனம் விடிகாலையில் செய்வதென்பது,  அந்த நாள் துவங்கும் போது, இறைவனின் பெயரைப் பாடி அவரது அருளைப் பெறுவது தான். இந்த நேரத்தில் தூங்குபவர்கள் காதிலும் இவை விழ அவர்களும் நல்ல பாசிடிவ் எனர்ஜியுடன் எழுகிறார்கள். சுற்றுச்சூழல் தூய்மையாகிறது. ஆன்மீக விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது. நகர சங்கீர்த்தனத்தினால் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகிறது, ராம நாமமே தன் முழுமூச்சாகக் கொண்ட திரு தியகராஜஸ்வாமிகளும் நகர சங்கீர்த்தனம் செய்தவர்தான். அதே போல் புரந்தரதாஸர் பண்டரி விட்டலர். துகாராம் போன்றவர்களும் நாமசங்கீர்த்தனம் செய்தவர்கள் தான்.

பாபாவின் பிறந்த நாளில் இதை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.

படத்திற்கு நன்றி: http://thambiluvilsamithi.blogspot.com/2011/04/blog-post.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *