தமிழ்த்தேனீ

Tamil_thenee”ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானீர் என்னும் ஊரில் உள்ள எலிக் கோயிலில் மனிதர்களை விட அதிகமாக எலிகள்தான் நடமாடும். இந்தக் கோயிலுக்கு எலிக்கோயில் என்றே  பெயர். இங்கே எலிகளை யாரும் துன்புறுத்துவதில்லை. அது மட்டுமல்ல,யாரும் இங்கே பூனைகளை வளர்ப்பதில்லை.எலிகளைத்  தெய்வமாகவே கொண்டாடுகிறார்கள்”

“ஏங்க, ரெண்டு நாளா  இந்த எலி பண்ற அட்டகாசம்  தாங்க முடியலை,பூஜை  அறையில் உள்ள  பிள்ளையார் சிலையெல்லாம் கீழே தள்ளி வைக்குது, அங்கே இருக்கிற விளக்கிலேருந்து  திரியெல்லாம் எடுத்து  கீழே போட்டு வைக்குது” என்றாள்  மனைவி.

“என்கிட்ட சொல்லவே இல்லையே,இப்போதானே  சொல்றே”  என்றேன் நான்.

“நான் முதல்லே  அது எலிதான்னு முடிவு பண்ணிட்டுதானே உங்ககிட்ட சொல்லணும். நேத்து  பூஜை அறையைத் திறக்கும் போது என் கண்ணாலே  பாத்தேன். அதுனாலேதான்  இப்போ  சொல்றேன்” என்றாள் அவள்.

சரி, இந்த எலியை எப்படிப் பிடிக்கலாம் என்று  யோசனை செய்தோம்.

அவள் சொன்னாள், “நீங்க ஒரு எலி பிடிக்கிற எலிப்பொறி ஒண்ணு வாங்கிண்டு வந்துருங்க. அதுலே  ஒரு மசால் வடையை வைத்தால் அது வந்து தானே  மாட்டிக்கும்” என்றாள்.

சரி  என்று  சொல்லிவிட்டு, தெருக்கோடியில் இருந்த  டீக்கடையை நோக்கிச் சென்று அங்கே  ஒரு மசால் வடை ஒண்ணு குடுப்பா” என்றே.

என்னையே  விசித்திரமாக  பார்த்தபடி, “நீங்கள்ளாம் என் கடைக்கெல்லாம்  வரமாட்டீங்களே. அதுவும் மசால் வடை கேக்கிறீங்க?” என்றான்.

அவனிடம்  இந்த எலி விஷயத்தைச் சொன்னேன்.

“அடடா  இன்னிக்கு மசால் வடை  தீந்து போச்சே, நாளைக்கு  நானே  உங்க வீட்டாண்டை  கொணாந்து தரேன். நீங்க ஒண்ணும் கவலைப்படாம  போங்க”  என்றான்.

மறுநாள் வாசலில் அழைப்பு மணி ஒலிக்கவே  கதவைத் திறந்தேன். டீக்கடைக்காரர்  நின்றிருந்தார்.

“என்னப்பா  மசால் வடை  கொண்டு வந்திருக்கியா” என்றேன்.

அதற்கு  அவர், “சார் மன்னிக்கணும் என் மச்சான்தான் வழக்கமா நம்ம கடைக்குக்  காய்கறி எல்லாம் வாங்கிட்டு வருவான். நேத்து  அவனுக்கு புத்தி கெட்டுப் போச்சி. யாரோடையோ  சேந்துக்கிணு  சாராயத்தை  வாங்கிக்  குடிச்சிட்டு  நைட்டெல்லாம் ஒரே கலாட்டா. தூங்கவே இல்லே காலைலே கடை திறக்கவே  லேட்டாயிடிச்சி.

“என்னா சார் பண்றது  விக்கிற வெலையிலே  இங்கல்லாம் வாங்கி  கடை நடத்த, முடியுதா? அவன் என்னாடான்னா  தண்ணி போட்டுக்கிணு நான் குடுத்த பணத்தையெல்லாம்  தொலைச்சிட்டு வந்து நிக்கிறான். கேட்டாக்க  நான் பத்திரமாதான் போய்ட்டு வந்தேன். எவ்ளோ தண்ணி  போட்டாலும் நான் ஸ்டெடியாதான் இருப்பேன். நம்மளை யாரும்  ஒண்ணும் பண்ண முடியாது, இன்னிக்கு இன்னா ஆச்சுன்னு  தெரிலே.  எவனோ கேப்மாறி பிளேடு போட்டு அறுத்து, பணத்தை  எடுத்துகினான். நான் இன்னா வேணும்னுட்டேவா செஞ்சேன். இத்தினி நாளா  வாங்கியாறேனே, எதுனா  மிஷ்டேக் நடந்திச்சா. ஏதோ ஒருநாள் இப்பிடி ஆயிடிச்சி அதுக்கு இப்போ இன்னான்றே.  உனுக்கு  என்ன விட இந்த பிசாத்து காசுதான்  முக்கியமா போச்சில்லே. நாளைக்கு உன் காசை எடுத்தாந்து  உன் மூஞ்சீலே கடாசறேன். அப்பிடின்னு பேசிட்டுப் போறான். அவனை இன்னா பண்றது சார்”  என்றான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக  இந்த டீக்கடைக்காரன்  இதெல்லாம் நம்மகிட்ட சொல்றான்  என்று யோசித்தபடி,  மனைவியைத்  திரும்பிப் பார்த்தேன். அவள் கண்களில் கலவரம். நான் கண்களாலேயே பயப்படாதே  என்று அவளுக்கு  சமிக்ஞை செய்துவிட்டு,”சரிப்பா  இப்போ என்ன பண்ணலாம்?” என்றேன் டீக்கடைக்காரரிடம்.

“அதான் சார்  ஒண்ணும் புரியலை” என்றான் அவன்.

“என்ன புரியலை?” என்றேன் நான் குழப்பத்துடன்.

“இல்ல சார் இன்னிக்கு  காய்கறியெல்லாம் வாங்கி கடையே  இனிமேதான்  திறக்கப் போறேன். பாவம் நீங்க  மசால் வடைக்காகக் காத்துக்கிட்டு இருப்பீங்களேன்னு  சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன். மதியம் சாப்பாட்டு நேரத்திலே கொண்டாந்து தரேன் சார். அதை சொல்லிட்டுப்  போலாம்னு வந்தேன்” என்றார்  டீக்கடைக்காரர்.

“வேண்டாம்பா  நானே  வந்து  வாங்கிக்கறேன் கடையிலே”  என்றேன்.

“சரி சார்  சரியா  ஒரு மணிக்கு வந்துருங்க. அப்பாலே  தீந்து போயிடும்” என்றபடி கிளம்பினார்  டீக்கடைக்காரர்.

நான், சொன்னபடி  மதிய வேளை  ஒரு மணிக்கு  மீண்டும் டீக்கடைக்கு சென்றேன்.

“வாங்க சார். இந்தாங்க பேப்பர்லே  கட்டி வெச்சிருக்கேன். ரெண்டு வடை  ஆறு ரூபாய்” என்றார்.

ஆறு ரூபாயை  அவரிடம் கொடுத்துவிட்டு மசால் வடை பொட்டலத்தை வாங்க்கிக்கொண்டு கிளம்பினேன். மசால் வடை வாசனை மூக்கைத் துளைத்தது. ஒரு வடையை எடுத்துப் பாதியாக விண்டு நாவில் ஊறிய உமிழ்நீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு, எலிக்கு வாங்கிய மசால் வடை என்று மனத்தைத் தேற்றிக்கொண்டு, அந்தப் பாதி வடையை எங்கே வைத்து எலி பிடிக்கலாம் என்று யோசித்தேன். அப்போதுதான் இன்னும் எலிப்பொறி வாங்கவில்லை என்பதே உறைத்தது.

உடனே கடைக்குப் போய் “ஒரு எலிப்பொறி குடுங்க” என்றேன். அந்தக் கடைக்காரர் இரண்டாக மடிக்கப்பட்ட  ஒரு அட்டையை கொடுத்து 65 ரூபாய் என்றார்.

“ஏம்பா எலிப்பொறி கேட்டா ஒரு அட்டையைக் குடுக்கறையே” என்றேன்.

“இது எலிப்பொறிதான் சார். இதை இரண்டாகப் பிரித்து வடையை அதிலே வெச்சிருங்க. இந்த அட்டையிலே கோந்து மாதிரி ஒரு பிசின் இருக்கு. எலி வந்தா அப்பிடியே நூல் மாதிரி சுத்திக்கும். எலி எங்கேயும் போக முடியாது” என்றான்.

சரி என்று வாங்கிக்கொண்டு வந்து, அதில் மசால் வடையை வைத்தேன். என் மனைவி வந்து அந்த எலிப்பொறியைப் பார்த்துவிட்டு,”உங்களுக்கு எதுவும் துப்பு கிடையாது. எலிப்பொறி வாங்கிண்டு வரச்சொன்னா ஒரு அட்டையை ஏமாந்து போயி வாங்கிண்டு வந்து நிக்கறீங்க” என்றாள்.

கடைக்காரர் சொன்னதை அவளுக்கு விளக்கி அதை அவள் புரிந்துகொண்டாளோ, இல்லையோ, “எனக்கென்னமோ, எலி இதுலே மாட்டிக்காதுன்னு தோன்றது” என்றாள்.

இரண்டு நாட்கள் வரை இரவு நேரத்தில் கூட போய்ப் பார்த்தும் பிரயோசனமில்லே. என் பொண்டாட்டி என்னை விட எலியைப் பற்றி நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறாள் என்று புரிந்தது.

சரி பழைய மாதிரியே மரப்பொட்டிலே இருக்குமே அதையே வாங்கிண்டு வந்து வெச்சிப் பாக்கலாம்னுட்டு கடைக்குப் போயி அந்த எலிப்பொறியைக் கேட்டேன். 65 ரூபாய் என்றார். கொடுத்தேன். ஒரு எலிப்பொறி கொடுத்தார்.

வீட்டுக்கு வந்து அந்த மீதி மசால் வடையை  வைக்கலாம் என்று அந்த மசால் வடையை தேடினேன். நான் மசால் வடை வைத்திருந்த காகிதத்தில் மசால் வடையைக் காணோம். அப்போதுதான் புரிந்தது. எலிப்பொறி உள்ளே மசால் வடையை வைத்துவிட்டு,வெளியேயும் மீதி மசால் வடையை வைத்திருக்கவே, புத்திசாலி எலி, வெளியே இருந்த மசால் வடையைத் தின்றுவிட்டுப் போயிருக்கிறது.

வாழ்க்கையில் எல்லாமே ஒரு பாடம்தான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *