காசாவை அமெரிக்கா எடுத்துக்கொள்ளுமா?

அண்ணாகண்ணன்
காசாவை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்ற டிரம்ப்பின் அறிவிப்பு, பலரையும் அதிரச் செய்துள்ளது. பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமெரிக்கா தானாக வந்து தலையைக் கொடுக்கிறது. புதிய எதிரிகளைச் சம்பாதிக்கிறது. இதன் மூலம் இஸ்ரேலுக்கு மிகப் பெரிய இராஜ தந்திர வெற்றி கிட்டியுள்ளது. மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேலின் இறையாண்மை குறித்து நான்கு வாரங்களில் அறிவிப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். பெரும்பாலும் இஸ்ரேலின் நிலைப்பாட்டை அவர் ஆதரிக்க வாய்ப்பு உள்ளது.
எகிப்தும் ஜோர்டானும் மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீனியர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். இதே அடிப்படையில் 20 இலட்சம் பாலஸ்தீனியர்களை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளுமா? அல்லது, பாலஸ்தீனத்திலேயே அவர்களைத் தங்க வைத்து, பாலஸ்தீனத்தைத் தன் 51ஆவது மாகாணமாக அறிவிக்குமா? பாலஸ்தீனப் பிரச்சினையை வெற்றிகரமாகத் தீர்ப்பவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இன்னொரு கோணத்தில் டிரம்ப்பின் காசா அறிவிப்பு, ஒரு பொறி. சீனா, ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட அமெரிக்க எதிர்ப்பு நாடுகள், இதில் சிக்கும் வாய்ப்பு உண்டு. காசாவில் அமெரிக்கப் படைகள் இறங்கினால், எதிரி நாடுகள் தாக்கும். இவை இரண்டு அணிகளாகப் பிரியும். உலகப் போர் மூளும். இதைச் சாக்காக வைத்து, இந்த நாடுகளை அழிக்க, அமெரிக்கா முயலும். ஆனால், இவை அனைத்தும் அணு ஆயுத நாடுகள் என்பதால், படுநாசம் உண்டாகும்.
வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டியில், பாலஸ்தீனியர்கள் சிக்கக் கூடாது. நிலத்தைக் காக்கும் போராட்டத்தில் தங்கள் உயிரை இழந்து விடக் கூடாது. பிறகு, ஒரு நினைவுச் சின்னம் வைத்துக் கதையை முடித்துவிடுவார்கள். போரினால் இவ்வளவு காலம் அவதியுற்றவர்கள், சுமூகத் தீர்வு ஏற்படும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும். இஸ்ரேலைப் போலவே பாலஸ்தீனமும் இராஜ தந்திர நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். பாலஸ்தீனத் தலைவர்கள், சீன அதிபரைச் சந்தித்து, தங்கள் நாட்டை அடுத்த 10 ஆண்டுகளுக்குச் சீனாவிடம் குத்தகைக்கு விடுவதாக ஓர் ஒப்பந்தம் போட்டால், சரியான காய் நகர்த்தலாக இருக்கும். அப்போது சட்டப்படி சீனா, காசாவில் கால் வைக்கும். அதன் பிறகு அமெரிக்கா, அங்கே எளிதில் நுழைய முடியாது.
#gaza #westbank #palastine #israel #us #usa #trump #china