தமிழ் – கிரந்தம் – சீயமொழிகளில் திருமுறை

0

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

சாலைகளில், மருத்துவ மனைகளில், தொடர்வண்டி நிலையங்களில், வானூர்தி நிலையங்களில், படங்கள் செய்திகளைச் சொல்கின்றன, மக்களை வழிகாட்டுகின்றன. அப்படங்கள் மொழிகளுக்கு அப்பாலானவை. மொழி எல்லைகளைக் கடந்தவை.

சீனரின் பட வரிவடிவங்கள், எகிப்தியரின் பட வரிவடிவங்கள், இந்துச் சமவெளியின் பட வரிவடிவங்கள் இத்தைகய இணைப்பு நோக்குக் கொண்டன.

வீட்டில், அயலாருடன் எந்த மொழியிலும் பேசலாம், உரையாடலாம். ஒரே மொழியின் வட்டார வழக்கில் பேசலாம் உரையாடலாம். பலர், அதுவும் பல் மொழியாளர் கூடும் இடங்களுக்குப் பட வரிவடிவங்களே இணைப்புப் பாலம். காலத்தைக் கடந்து, நிலப் பரப்புகளைக் கடந்து சீனப் பட வரிவடிவம் சீனர் அனைவரையும் இணைக்கிறது.

இன்றைய சூழலில் உலகமயமாக்கும் பட வரிவடிவங்களை நோக்கி மீண்டும் பயணிக்கிறோமோ என்ற ஐயம் உண்டு.
மொழிதல் புவியியல் சூழலுக்கானது. வரலாற்றுப் பேழையாகிறது. மூச்சின் வெளிப்பாட்டு வழியில் உள்ள உறுப்புகளால் உருட்டியும் வளைத்தும் திரட்டியும் தருவதால் உடலோடு கலந்த உணர்வுக்கும் உரியதானது.

ஒலிசார் வரிவடிவங்கள் அந்தந்த இயற்கைச் சூழல் தந்த ஒலிகளுக்கு வரிகள்.

இயற்கைச் சூழல் தந்த மொழிதலின் ஒலிகளை வகைப்படுத்தி, அவற்றுக்கு வரிவடிவங்களைக் கொடுத்தல் வளர்ச்சியின் பேறு.

ஒலிகளையும் வரிவடிவங்களையும் இணைப்பது, வரையறுப்பது இலக்கணம். பழையன கழித்துப் புதியன புகுத்தும் வரப்பு. திருந்திவரும் வரப்பு. திருத்துதலை மட்டுப்படுத்த இயற்கை தந்த கொடையே மொழி உணர்வு.

12 உயிர்கள், 18 மெய்கள், 1 ஆய்தம் என்றாலும் தமிழின் எழுத்து வரலாற்றை நோக்குவோர், அழிப்புகளைத் தாண்டி எஞ்சி நிற்கும் சான்றுகளை நோக்குவோர், வரிவடிவக் கலப்புத் தமிழைக் கண்ணுறுவர். தமிழியோடு கலந்த பிராகிருதம் முதலாகத் தமிழோடு கலந்த கிரந்தம், பின்னர் ஆங்கிலம் என வரிவடிவக் கலப்புத் தவிர்க்க முடியாதிருந்தாலும், உணர்வாளரின் சாட்டைகள் 31 வரிவடிவங்களுள் அமைந்த இலக்கியங்களையே வாழவிட்டன. கலப்பு வரிவடிவ இலக்கியங்களும் காலப்போக்கில் 31 வரிவடிவங்களுள் கட்டிறுக்கமாக வீரசோழியம் போன்றவை வழிகாட்டின.

தமிழுக்கு 31 வரிவடிவங்கள்தானெனின், மற்ற மொழிகளுக்கும் அவ்வவற்றுக்கான எண்ணிக்கை வரையறை உண்டல்லவா? அந்த எண்ணிக்கை வரையறையை மற்ற மொழியாளர் தீர்மானிக்கலாமா? மற்ற மொழியாளர் தீர்மானிக்க முயல்கையில் அவ்வவ் மொழியாளர் கொதித்தெழுவர், கூக்குரலிடுவர், உணர்வலைகளைத் தூண்டுவர். தமக்குத் தாமே தாமாக அமைக்கும் மொழி இறைமையில் தலையிடுவதாகக் கூறுவர்.

ஐரோப்பியரின் அண்மைக்கால வரலாற்றில் மொழிகளின் ஒலிகளுக்கும் வரிவடிவங்களுக்கும் உள்ள தொடர்புகளை மீள் வரையறுக்கும் முயற்சிகள் படுதோல்வி கண்டன. ஏசுப்பிரந்தோ மொழியின் அறிமுகமும் வெற்றியைத் தராமைக்கு அவ்வவ் மொழி உணர்வாளரின் எதிர்ப்பலைகள், உணர்வுசார் மறுப்புகளே அடித்தளம். எனினும் தமக்குத் தாமே தமக்குள்ளே கலந்து திருத்தம் செய்யும் சிறுசிறு முயற்சிகள் அவ்வப்பொழுது முன்னேற்றத்தைக் கண்டன.

மலாய், இந்தோனீசியத் தீவக நிலத் தொகுப்பில் மொழி ஒருமைக்கான அண்மைய முயற்சியே உரோம வரிவடிவங்களின் அறிமுகம். சாவியையும் பாலியையும் மீள எழுத்து வரிவடிவங்களாக்கும் போராட்டம் உணர்வாளரின் உயிரோடு கலந்து இன்றும் தொடர்கிறது.

சீனரின் 80 ஆண்டுகால முயற்சியின் விளைவே பின்யின் வரிவடிவம். உலக மொழிகளின் ஒலிகளைச் சீன வரிவடித்தில் கொடுக்கும் முயற்சியே பின்யின்.

வரிவடிவச் சீர்மையில் தோல்விகண்ட ஐரோப்பியச் சமூகம், ஐரோப்பிய மொழிகளின் ஒலிகளை வகைப்படுத்தி, ஐரோப்பிய வரிவடிவங்களுக்கு அப்பால், ஒலி-வரிவடிவத் தராதரத்தை உருவாக்க எழுந்த அமைப்பே ஞால ஒலிக் கழகம் (International Phonetic Association). அக்கழகம் நூறாண்டுப் பழமையானது.
காலப்போக்கில் அனைத்துக் கண்ட ஒலிகளையும் வகைப்படுத்தி வரிவடிவத் தரம் அமைத்து வருகிறது.

தொடர்ச்சியான பணியில் ஈடுபடுவதுடன் ஒலி – வரிவடிவம்- ஒலிப்பதிவு எனப் பணி நீட்சி அடைந்துள்ளது. ஒலி-வரிவடிவத் தொடர்பில் உலக வணிக மயமாக்கம் பெரும் பங்கு வகிக்கிறது. Fanta cola என்ற வணிகப் பெயரை எவ்வாறு அரபு மொழியில் தருவது என்ற சிக்கலை, நீண்ட சர்ச்சைகளுக்குப் பின்னர் எகிப்தியர் தமது பகரத்துக்கு நடுவே f இட்டுத் தீர்த்தனர்.

யப்பானியர், தம் அகர வரிசையில் இல்லாத றகரத்தை, பிற மொழி ஒலிச் சொற்களை உள்வாங்குகையில் இன்றும் லகரமாகவே எழுதுவர். பழக்கத்தால் சிலர் றகரமாகப் படிப்பர்.

இவ்வாறாக உலெகங்கும் ஒலி-வரிவடிவத் தொடர்புகளைப் பற்றிய செய்திகளை நீட்டி எழுதலாம்.

தமிழ் மொழி விரைந்து உலக மயமாகி வரும் காலத்தில் வாழ்கிறோம். உலக வரிவடிவங்களில் தமிழை எழுதும் தேவை நாளுக்கு நாள் பெருகுகிறது. இந்தத் தேவைக்கு 2000 ஆண்டுகளுக்கும் கூடுதலான வரலாற்றுப் பின்னணி உண்டு. ஆனாலும் தொக்கி நிற்பவை சில சூழல்களே.

கடந்த 1000 ஆண்டுகளூடாகச் சீயம் நாட்டு (இன்றைய தாய்லாந்து) அரண்மனை நிகழ்வுகளில் தேவாரம், திருவாசகம் பயிலப்பட்டு வருகின்றன. சீய அரசர்கள் தமிழக அரசர்களுடன் கொண்ட திருமண உறவுகள், அவற்றைத் தொடர்ந்த சிவபூசை மரபுகள், தமிழகச் சிவாச்சாரியார்களே அரச குருக்களாக இருந்த மரபுகள், யாவும் இந்த மரபுக்குக் காரணம் போலும்.

தமிழ் வரிவடிவங்களை மறந்தாலும் சிவாச்சாரியார்கள் கிரந்த வரிவடிவங்களில் எழுதித் தேவாரம் (ஊஞ்சல் நிகழ்வுக்கும், ஏர் பூட்டல் நிகழ்வுக்கும்) திருவாசகம் (மார்கழி நோன்புக்கும், முடிசூட்டு நிகழ்வுக்கும்) பாடுகின்றனர்.

https://www.youtube.com/watch?v=ExGjxXY49Gg

இக்காலத்தில் அரச குருக்களிடையே கிரந்த வரிவடிவங்ளைப் படிக்கும் ஆற்றலும் குறைந்து வர, தேவார, திருவாசகங்களைச் சீய வரிவடிவங்களில் எழுதிப் படிக்கும் வழமையும் புகுந்தது.

2007ஆம் ஆண்டு, www.thevaaram.org மின்னம்பல தளத்தில் சீய மொழியில் தேவார, திருவாசகங்களை வாசிக்கும் வசதியை தாய்லாந்து அரச குருமாரின் தேவையை நோக்கியே, கணியன்பூங்குன்றன் விருது பெற்ற திரு. கே. எசு. நாகராசன், அவரது நண்பர் சேலம் திரு. உலோகநாதன் முரளி ஆகியோர் உதவி பெற்றுச் செய்வித்தேன். அக்காலத்தில் தாய்லாந்து அரச குருக்களோடு தொடர்பு எனக்கு இருக்கவில்லை.

அரச குருமார் மட்டுமல்ல பாங்கொக்கு அருள்மிகு மாரியம்மன் கோயிலாரின் கூட்டு வழிபாட்டில் தேவார திருவாசகங்களை, வைத்திப் படையாட்சி (அவர் பெயரில் சிலோமில் ஒரு தெரு உண்டு) காலத்திலிருந்தே, சீய மொழியில் உள்ளூர் மக்கள் எழுதிப் பாடி வந்தைத 1971இல் பாங்கொக்கு வந்தபொழுது கண்ணுற்றேன்.

20.11.2011இல் பாங்கொக்கு வந்தேன். 22.11 அன்று மாலை அரச குருக்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன். அவரிடம் தேவாரம் மின்னம்பல தளத்தில் உள்ள வசதிகளைக் காட்டினேன். சீய மொழியில் வாசிக்கலாம். பாடல்களைக் கேட்கலாம். ஆங்கில மொழிபெயர்ப்பு உண்டு. இவை மூன்றும் அவருக்கு உற்சாகத்தைத் தந்தன.

அரச குருக்கள் வியப்புடன் என்னைப் பார்த்தார். எவ்வளவு கால முயற்சி எனக் கேட்டார். செலவு எவ்வளவாயிற்று என வினவினார். செலவுத் தொகை தருகிறேன் என்றார். எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தது கையில் கிடைத்தது போன்ற உணர்வு அவருக்குப் போலும்.

கிரந்தத்தில் உண்டா எனக் கேட்டார். செய்து தரலாம் என்றேன். திரு. வினோத்ராசனின் தளம் சென்றேன். தமிழ் – கிரந்த ஒலி-வரிவடிவ மாற்றியைப் பயன்படுத்தினேன். 

http://www.virtualvinodh.com/avalokitam-download

 

http://www.virtualvinodh.com/aksharamukha

சீய வரிவடிவுக்கும் மாற்றினேன். அரச குருக்களின் அலுவலகத்திலேயே அச்சுப் படி எடுத்துக் கொடுத்தேன். திருவெம்பாவைப் பாடலைத் தமிழில் படித்தார். மாணிக்கம் என்ற வணிகர் தனக்குத் தமிழைக் கற்றுத் தந்ததை நினைவு கூர்ந்தார். 

திருவெம்பாவைப் பாடலைக் கிரந்தத்தில் படிந்தார். மகிழ்ந்தார், சீயத்தில் படித்தார், மகிழ்ந்தார்.

30.11 தொடக்கம் மார்கழி முழுவதும் திருவெம்பாவை படிக்கப் போவதைக் கூறினார். காலை 04.00 மணி முதல் நிகழ்ச்சி என்றார். 30 நாளும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அழைத்தார். என் பயண ஒழுங்குகளைக் கூறினேன். காணொலி அனுப்புவதாகக் கூறினார்.

20 பாடல்களையும் தமிழ், கிரந்தம், சீயம் மொழிகளில் வாசிக்கவும், ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்கவும் உதவியாக, ஒரு புத்தகம் தயாரித்துத் தருகிறேன் எனக் கூறினேன். செலவு தருகிறேன், செய்து தருக என ஆர்வத்துடன் கேட்டார். செலவு வேண்டாமெனப் பணிந்து கூறினேன்.

22.11 இரவு முழுவதும் புத்தகத்தைத் தயாரித்தேன். 23.11 காலை அச்சகம் சென்றேன். முன்னோட்டமாக 10 படிகளை அச்சிட்டேன். தவறுகளைத் திருத்தியபின் மீள அச்சிடக் கருதினேன்.

எழுத்துருப் பெரியதாக அமைத்து ஒரு படி கொடுத்தேன். நூல்களாக்கிய படிகளை அரச குருக்களிடம் கொடுத்தேன். திருத்தம் இருப்பின் சொல்லுமாறும் திருத்தித் தருவதாகவும் அவரிடம் சொன்னேன்.

திரு. வினோத்ராசனுக்குப் படி அனுப்பினேன். திருத்தம் கேட்டேன். எழுத்துப் பெயர்ப்பபைவிட ஒலிபெயர்ப்பே பொருத்தம் என்றார், வழிகாட்டினார். என்னெச்செம் எழுதியில் கிரந்தம் தட்டச்சுச் செய்யும் விசைப்பலைகக் கோப்பைக் கேட்டேன். அனுப்பினார்.

நூலின் மீள் பதிப்பை அரசகுருவிடம் கொடுத்தேன். அவரின் சீடர்களிடம் காட்டினார், மகிழ்ந்தார்.

யாழ்ப்பாணத்தில் கிரந்தம் பயின்ற, மயூரகிரி சர்மா, கோப்பாய் சிவம் (இவர் கிரந்தத்தில் நூல்களை வெளியிடுகிறார்) ஆகியோருக்கு நூலின் படிகள் அனுப்பினேன். மின் தமிழ்க் குழுமத்தாருக்கு அனுப்பினேன். வான்அஞ்சலில் தருமபுரம் குருமகாசந்நிதானத்துக்கும் சேக்கிழார் அடிப்பொடி, முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரனுக்கும் படிகள் அனுப்பினேன்.

தங்களுடைய மொழி-வரி மாற்றம் மிகச் சிறப்பானது. கிரந்தத்தை வாசித்தேன். அற்புதமாக இருந்தது என்றார் மயூரகிரி சர்மா.

நாளாந்தம் கிரந்தம் வாசிக்கும் இருவர், அரச குருக்கள் ஒருவர், மயூரகிரி சர்மா மற்றவர், இவர்கள் மகிழ்கிறார்கள்.  தன் வருவாய் உழைப்புப் போக மீதி நேரத்தில் எதிர்பார்ப்பு எதுவும் இன்றி வரிவடிவ மாற்றியை இணக்கிய திரு. வினோத்ராசன் மகிழ்கிறார்.

 

நோக்கம் பெருமளவு நிறைவேறி, மார்கழியில் திருவெம்பாவையைக் கிரந்தம் மற்றும் சீய மொழியில் படிக்கப்போகிறார்கள் என்பதில் நான் மகிழ்கிறேன்.

இரு மொழிகளின் வரிவடிவங்களை அவ்வவ் மொழிகளின் ஒலிகளுக்கமைய ஒன்றுக்கொன்றை முற்றாகப் பொருத்தமுடியாது. எகிப்தியர் அரபுப் பகரத்தின் நடுவே f இட்டது போல மாற்றிக்கொண்டே போகலாம், எல்லையே இல்லை.

கிரந்தத்தில்புதிய வரிவடிவங்களைப் புகுத்த முயலலாமா? சீய மொழியில் புதிய வரிவடிவங்களைப் புகுத்த முயலலாமா? சில நூற்றாண்டுகளாகத் திருப்பாவையைத் தெலுங்கிற்கு எழுத்துப் பெயர்த்து, இன்றுவரை அதே எழுத்துப் பெயர்ப்புடன் ஆந்திரப் பிரேதசம் முழுவதும் மார்கழிப் புலர் காலையில் தெலுங்கு வரிவடிவங்களில் திருப்பாவை பத்தியுடன் ஓதப்படுகிறதே?

ஒலிக்கு ஒலி, ஒலிபெயர்ப்பை நாடுவோருக்காக ஞால ஒலி நெடுங்கணக்கு International Phonetic Alphabet உள்ளதே.
திரு. வினோத்ராசன் முயற்சியை, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உழைத்து வரும் முயற்சியை மனமாரப் பாராட்டுவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *