தங்கத்தின் மீது பெண்களுக்கு ஏன் தனி ஈர்ப்பு?

0

சுகியன்

என் நண்பரின் ஆறு மாதக் குழந்தையைப் பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன். நண்பனின் உறவினர் அந்தக் குழந்தையைத் தூக்கி, “செல்லக்குட்டி, கன்னுக்குட்டி, சிங்கக்குட்டி…” என்று கொஞ்சிக் கொண்டிருந்தார். சமையல் அறையில் இருந்து குழந்தையின் தாய் ஏதோ முனங்கிக் கொண்டே தேநீர் கொண்டு வந்தார். குழந்தையைக் கொஞ்சிக் கொண்டு இருந்தவர் தொடர்ந்து, “தங்கக்கட்டி…” என்று கொஞ்சும்போது, குழந்தையின் தாயின் முகத்தில் புன்னகையின் பூரிப்பைப் பார்க்க வேண்டுமே! அப்படியொரு சந்தோஷமான முகபாவனை. 

பின்னர் நான் குழந்தையைத் தூக்கி தோள்பட்டையில் வைக்க முற்பட்டேன், அழத் துவங்கி விட்டது. நண்பனின் உறவினர் வாங்கி அன்பான வார்த்தைகள் சொல்லி அழுகையை நிறுத்த முயற்சித்தனர் முடியவில்லை. குழந்தையை தாய் வாங்கிச் சீராட்டி அறையினுள் சென்று பாலூட்டி பின் வந்து தூங்க வைத்தார். நண்பனிடம் பேசிக் கொண்டே, தூங்கும் குழந்தையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தபோது, குழந்தையின் கை விரலில் ஒரு தங்க மோதிரமும், கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலியும் எனக்கு விசித்திரமாகக் காட்சியளித்தது.

அக்குழந்தைக்குத் தங்கத்தைப் பற்றி என்ன தெரியும்? ஏன் தங்கத்தை அணிந்து விட்டு இருக்கிறார்கள்? கள்ளம் கபடமில்லா குழந்தை என்ன அசிங்கமாகவா இருக்கும் அழகு என்று நினைத்துக் கொண்டு தங்கத்தை அணிந்து விட? இல்லை பணக்கார வீட்டுத் தங்கக் குழந்தை என்று ஊரார் சொல்லவா? இப்படிப் பலவாறு மனதில் கேள்விகள் எழும்பிக் கொண்டிருந்தன.

இதையொரு பழக்கமாகவே ஆக்கி விட்டார்கள். இப்பழக்கம் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என்று பிரிதொரு காலத்தில் தானாகவே எனக்குப் புலப்படத் தொடங்கியது. பெண்மகளின் திருமணத்திற்குப் பெற்றோர்கள் தங்கம் சேர்ப்பது கஷ்டமான இஷ்டம். காரணம், தன் மகளின் வாழ்க்கை. இதற்கு மட்டுமே பல வருடங்கள் உழைக்க வேண்டியதாயிருக்கிறது. திருமணத்திற்கு ஆண்மகன் தங்கம் வாங்குவதில்(பெண்வீட்டாரிடமிருந்து) தனி ஆர்வம் இல்லை என்றாலும் ஆர்வம்தான். காரணம், பெற்றோர்கள். இது சமுதாயத்தில் ஒரு பெரும் தங்கச் சங்கிலித் தொடரே! அதனாலயோ என்னவோ பெண்களுக்குத் தங்கத்தின் மீது நெருக்கமான ரசனை வந்து விடுகிறது. தங்கத்தின் பின்னால் தன் பெற்றோரின் அன்பும்,உழைப்பும் அல்லது தன் கணவனின் அன்பும்,உழைப்பும் அல்லது அவளின் உழைப்பும், விருப்பும் இருப்பதினாலோ என்னவோ பிரம்மையான ஈர்ப்பும் தொத்திக் கொள்கிறது.

இதன் பிற்பாடு பெண்கள் கழுத்தில் தங்கம், கையில் தங்க வளையல் முடிந்தால் மோதிரம், காதில் தங்க ஜிமிக்கி, காலில் வெள்ளி கொலுசு இல்லாமல் இருப்பது தன் உடலின் உறுப்புக்களில் ஒன்று இல்லாதது போலவும், அழகின் முக்கியமாகவும், ஆடம்பரத்தின் அஸ்திவாரமாகவும், எதிர்நோக்கும் உறவினர்கள், நண்பர்களிடம் பெருமையாகவும் காட்டிக் கொள்ளவே விரும்புகிறார்கள். இல்லாதவர்கள் போலித் தங்கமோ, பித்தளையோ, பிளாஸ்டிக்கோ அணியத் தவறுவதில்லை.

சமீபத்தில் எங்கள் ஊரில் பத்து வருடத்திற்கு முன் கல்யாணமான ஒரு பெண்ணின் கழுத்தில் மாட்டுக்குக் கட்டும் மூக்கணாங்கயிறு சைசில் ஒரு தடிமனான தங்கச் சங்கலி தொங்குவதைப் பார்த்து மிரண்டு போய்க் கேட்டேன். “மெலிசான ஏழு சங்கிலி போட்டுருந்தேன், எல்லாருக்கும் பொறாமை, அதான் உருக்கி ஒரே ஒரு சங்கிலி போட்டுள்ளேன்” என்றார். என்ன ஒரு பதில்?, வெயிட்டான பெண் இவளோ! 

அவசரப் பணக்கஷ்டத்தினைக் கட்டிய மனைவி கொண்டு வந்த தங்கம் தான் மீட்கிறது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. GOLD IS ATM (Any Time Money)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *