சதானந்தன் எங்கள் சச்சிதானந்தன் ஐயாவுக்கு பவள விழா – (70ஆவது அகவை) – வாழ்த்தி வணங்குகின்றோம்

 

 


ஆக்கம் : ‘செந்நெறிச் செம்மல்’ சூ. யோ. பற்றிமாகரன்

B. A., Special Dip. (Oxford), B. Sc., PG. Dip., M. A.
ஆசிரியர், ஊடகவியலாளர், ஆய்வாளர், ஒக்ஸ்வோர்ட், ஐக்கிய இராச்சியம்

சத்தியம் நிலைபெற நித்தியம் உழைப்பவர். அப்பரின் பின் மற்றொரு அப்பர் என எண்ணிட வைப்பவர். ஒருவருடைய மனித வாழ்வில் சில மனிதர்களின் சந்திப்புகள் தித்திக்கும் நினைவாக என்றும் நிலைப்பதுண்டு. அத்தகைய ஒரு சந்திப்புதான் மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஐயா அவர்களைச் சென்னையில் தியாகராச நகரில் 1986இல் நான் சந்தித்த முதற் சந்திப்பு.

வெள்ளை வேட்டி, நிமிர்ந்த நடை, பளிச்சென்ற சிரிப்பு, பார்வையால் பண்பளக்கும் கண்கள், மனதுக்குள் இனந் தெரியா மகிழ்ச்சி காட்டும் வதனம். இவையே இன்றும் அவரைச் சந்தித்த அந்த நாள்களை நினைந்தவுடன் முந்துறும் முதல் மனப்பதிவு. தியாகராச நகரில் பாண்டி பசாரில் அன்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமைச் செயலகத்திற்குச் செல்லும் பாதையில் ஒரு மர நிழலில் நிகழ்ந்தது அந்த முதல் சந்திப்பு.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவென வந்து கொண்டிருந்த சச்சிதானந்தன் ஐயாவைச் சந்திக்கவென என் நண்பரும் மலையகத்தின் பெரும் புலவர் பெரியசாமி அவர்களின் மகனுமாகிய சிவஞானம் அவ்விடத்திற்கு என்னை அழைத்து வந்திருந்தார். பாண்டி பசாரில் இருந்த தமிழர் கூட்டணிப் பணிமனைக்கு முன்பாகக் காத்திருந்தோம்.


தனக்கே உரித்தான வேக நடையுடன் வந்து கொண்டிருந்த சச்சிதானந்தன் அவர்களைக் கண்டவுடன் என்னுடன் கூட வந்த சிவஞானம் “வணக்கம் ஐயா, இவர்தான் நான் கூட்டி வருவதாக உங்களிடம் சொன்ன என் நண்பர் பற்றிமாகரன். உங்களுக்கு அறிமுகப்படுத்தவென்று கூட்டி வந்தேன்” என்றார்.

“வணக்கம் ஓ! நீங்கள்தாமா பற்றிமாகரன்? உங்கள் எழுத்துகளைச் சுதந்திரனில் சுடரில் ஈழநாட்டில் படித்துள்ளேன். யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் உங்களைப் பற்றி நிறையச் சொல்லியுள்ளார். இன்று உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி”. முந்தி வரவேற்கும் அவர் பழக்கம் அவருக்கே உரிய ஒரு தனிக்கலை. மறைஞானசம்பந்தரின் குரல் கேட்டு அவர் பின் சென்ற உமாபதிசிவாச்சாரியாரின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நான் அனுபவத்தில் காணவைத்த சந்திப்பு அந்தச் சந்திப்பு. நான் பேச வாய் திறக்கச் சில நிமிடங்கள் எடுத்தன.

“வணக்கம் ஐயா. உங்களையும் குறித்து நிறையவே அறிந்துள்ளேன்……” வசனத்தை முடிக்கு முன்பே “அதை எல்லாம் விடுங்க தம்பி. ஏதோ என்னால் இயன்றதைச் செய்கிறேன். நீங்கள் எப்போ சென்னை வந்தீர்கள்?” புகழ்பாடல் விரும்பாத அவர் வார்த்தைகளால் வெட்டி ஆள்வதில் மட்டும் பலே கெட்டிக்காரர். எவரது மனத்தையும் புண்படுத்தாமல் தனது எண்ணத்தைப் பசுமரத்தாணி போல் பதிக்கும் பேச்சுக்கலை அவரின் கூடப்பிறந்த வாழ்வுக்கலை.

சில வேளைகளில் வார்த்தைகள் மெலிந்த குரலில் பிறக்கும். ஆனால் அதன் தாக்கங்கள் மிகவும் ஆழமாக இருக்கும். இப்படிச் சொல்லால் நிர்வகிக்கும், வழிகாட்டும், வளப்படுத்தும் வல்லமை கொண்டவர்களுடன் பழகுதல் என்பது பிறவிப்பயன் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இவர் கருத்தால் மோதுவதும், மோதலைக் காதலாக்கி ஆட்கொள்வதும், சுந்தரரை ஆட்கொண்ட இறைவனின் காட்சியைப் பலதடவைகள் மனதில் எழவைத்தது உண்டு.

எது பேசினும் எப்படிப் பேசினும் இவரை விட்டுப்பிரியும் மனம் யாருக்கும் வருவதில்லை. இதனால்தான் ஆட்கொள்ளல் என்ற சொல்லாட்சி இவரின் அன்பை வெளிப்படுத்துவதற்குப் பொருத்தமானதாக எனக்குப் படுகிறது.

வேறு காரணங்களால் பிரிந்தவர்கள் கூட நினைவில் அவரை விட்டுப்பிரியாது இன்று வரை வாழ்ந்து வருவதை 25 வருடங்களுக்குப்பின் கடந்த ஆண்டு செம்மொழி மாநாட்டிற்குத் தமிழகம் வந்த பொழுது, அவருடைய காந்தளகத்தில் என்னுடன் பணியாற்றிய நண்பர்களைச் சந்தித்த பொழுது தெரிந்து கொண்டேன்.

திரு சச்சிதானந்தன் அவர்களைச் சந்திக்கும் பொழுது நான் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் குட்செப்பெற் கொன்வென்ற சந்தியில் இருந்த குடும்பம் மற்றும் கலாச்சார ஆசிய ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

மாலை நேரத்தில் அண்ணா சாலையில் உள்ள காந்தளகத்திற்குச் சென்று நூல் விற்பனையில் உதவி செய்து வந்தேன். குடும்பம் மற்றும் கலாச்சார ஆசிய ஆய்வு மையத்தில் இருந்து விலகிய பின்னர், முழுநேரமாகச் சச்சிதானந்தன் ஐயா அவர்களின் காந்தளகத்தில் விற்பனை முகாமைத்துவத்தில் சந்தைப்படுத்தல் அலுவலர் பணி செய்தேன்.

ஆதம்பாக்கத்தில் இருந்து வேலைக்கு வருவேன். அந்நேரம் என் இரண்டு பிள்ளைகளும் மழலைகள். இதனால் பிந்தி வருவதும் அவரின் முகாமைத்துவ அறைக்குள் ஏச்சு வாங்குவதும் பின் மதிய உணவுக்குத் தானே வந்து என்னைத் தன்னுடன் அழைத்துச் சென்று காந்தளகத்திற்கு அருகில் உள்ள சைவஉணவகத்தில் மதிய உணவு வாங்கித் தந்து “ அறைக்குள் நான் முகாமையாளர் வெளியே நான் உங்களின் நண்பன்” என்று கூறிய நாள்களும் இன்றும் இதயத்தை நெருடும் நினைவுகள்.


மாலையில் தமிழ் சைவம் தொடங்கி அரசியல் ஈறாக மனந்திறந்து என்னுடன் பேசுவார். சிலவேளைகளில் அவருடைய பேச்சைக் கேட்பதற்காகவே அவரின் இல்லம் இருந்த பாந்தியன் சாலை வரை அவருடன் நடந்து செல்வதும் உண்டு. தனக்கு வந்த கடிதங்களைக் கூடக் காட்டி அதில் உள்ள செய்திகளைப் பரிமாறும் அளவுக்கு அவர் நட்புக்கு முக்கியத்துவம் அளித்தார்.

தன்னுடைய நண்பர்களை மட்டுமல்ல தன்னை யார் சந்திக்க வந்தாலும் என்னையும் அழைத்து அறிமுகம் செய்து, சகோதரத்துவம் சமத்துவம் சுதந்திரம் என்பன கற்பனைக் கோட்பாடுகளல்ல – நடைமுறைச் சாத்தியமானவையே என்று அக்காலத்தில் நிரூபித்தவர் அவர். நானோ கிறிஸ்தவன், அவரோ சைவப்பழம். ஆயினும் என்னுடன் அவர் சைவத்தைப் பற்றி மனந்திறந்து பேசியவைகள்தான் மதங் கடந்த கடவுளைக் காணும் பண்பினை என்னில் வளர்த்தது.

“யாதொரு தெய்வம் கண்டீராகில் அத்தெய்வமாகி” என்கிற அருணந்தி சிவாச்சாரியாரின் அருள்வாக்கின்வாழ்வுதாரணம் திரு சச்சிதானந்தன் அவர்கள். ஆறுமுகநாவலரின் மார்கழி நினைவு தினத்திற்கு என்னையும் அழைத்துச் சென்று அண்மையில் காலமான நமச்சிவாயம் ஐயா அவர்களுடன் தேவநேயப் பாவாணர் நூலக மண்டபத்தில் கூட்டங்கள் நடாத்திய நாள்கள் இன்னமும் பசுமையாக உள்ளன. இந்த அனுபவங்களே இன்று நான் சைவநூல்கள் எழுதவும் சைவத்தைக் குறித்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்தவும் வித்திட்டன. இன்று என்னை செந்நெறிச் செம்மல் என இலண்டன் சைவ முன்னேற்றச் சங்கமும் சமுதாய சோதி எனப் பிரித்தானியத் திருக்கோயில்கள் ஒன்றியமும் மதிப்பளித்தன என்றால் இந்த மதிப்புக்கு வழிகாட்டியவர் சச்சிதானந்தன் ஐயா அவர்களே.

அவ்வாறே சாதி என்னும் தமிழர் உட்பகைக்கு எதிராக நாம் போராடுவதற்கான பலத்தைத் திரு சச்சிதானந்தன் ஐயா அவர்களிடம் இருந்தே பெற்றேன். தாயகத்தில் அறவழிப் போராட்டக் குழுவொன்றே நடாத்தி, ஆலயங்கள் தாள் திறக்க உழைத்த அருளாளர் அவர். சமபந்திப்போசனம் தேநீர்க்கடைகளிலும் பொது இடங்களிலும் சமத்துவம் நிலைநாட்டிட சொல்லால் அல்ல செயலால் போராடிய சமுகத்தலைவர் அவர்.

ஒடுக்கபட்ட மக்களின் கல்விக்கு உதவிகள் மட்டும் அல்ல அதனை அவர்களின் உரிமை என்று மற்றோரும் ஏற்கச் செய்ய உழைத்த உத்தமர்களில் இவரும் ஒருவர்.

மலையகத் தமிழ் மக்களைச் சிங்கள பௌத்த பேரினவாதம் அடித்து விரட்டிய பொழுது சாவகச்சேரியில் அவர்களுக்கான குடியேற்றத்தை அன்று அறவழிப்போராட்டக்குழுவால் ஏற்படுத்திக் கொடுத்ததும் அல்லாமல் இன்று அந்த மக்களுக்குக் கொடுக்கப்பட்ட காணிகள் சிலரால் அவர்களுக்குக் கொடுக்கப்படாது தன்னலங்களுக்குப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து இன்று அங்கு சென்ற பொழுதும் போராடியவர் திரு சச்சிதானந்தன் அவர்கள். இவ்விடயத்தில் இன்றும் அவரின் போராட்டம் தொடர்ந்து கொண்டெ இருக்கிறது.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் திருமூலர் தத்துவத்தின் வாழ்வுதாரணம் திரு சச்சிதானந்தன் அவர்களின் வாழ்வு.

அந்த நாள்கள்தான் சச்சிதானந்தன் என்னும் சித்தரை நான் முற்றாக விளங்கிக்கொண்ட நாள்கள். அறிவியல் முதுவல் விலங்கியல் பட்டதாரியை கலை முதுவல் தமிழ் பட்டதாரியை, யாழ்ப்பாணப் பல்கலைகழக முன்னாள் விரிவுரையாளரை, இலங்கையின் முன்னாள் உள்ளூராட்சி அமைச்சர் அமரர் மு. திருச்செல்வம் அவர்களின் தனிச் செயலாளரை, கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலைய முன்னாள் ஆய்வாளரை, ஐ. நா.வின் உணவு வேளாண் நிறுவன ஆலோசகரை, காந்தளகம் பதிப்பகம் நூல்விற்பனை அங்காடியின் நிறுவனரை, சித்தர் என்று சொல்லும் நீ ஒரு பித்தன், எனச் சச்சி ஐயாவை அறிந்தவர்கள் கூறக்கூடும்.

உண்மையில் அவர் அறிவில் அன்பில் தமிழ்ப்பற்றில் தாயக உணர்வில் சிவப்பற்றில் நான் ஒரு பித்தன். அதனால் அவர் சித்துத் தன்மைகளை என் மனது அறியும். இதனால் அவரைச் சித்தன் என நான் அழைப்பது சரியென்பதே என் வாதம்.

நீருக்குள்ளால் நெருப்பையும் நெருப்புக்குள்ளால் நீரையும் கொண்டு செல்லும் வல்லமை கொண்டவர் அவர். இவர் தந்த வல்லமையே நான் ஐரோப்பா வரவும் இங்கு ஆசிரியர் ஊடகவியலாளர் ஆய்வாளர் என்று பன்முக மக்கள் பணி செய்யவும் உதவியது.

உண்மைக்குச் சாட்சியம் சொல்வதற்கு என்றுமே பின்நிற்காப் பெருந்தகை. அறவழிப்போராட்டமே சமுக அரசியல் பொருளாதார ஆன்மீக விடுதலைக்கான நெஞ்சுறுதி கொண்ட மற்றொரு காந்தி.

ஆயினும் சிங்கள அரசுக்களின் வெங்கொடுமைகளும் புத்தத்தின் மேலாண்மையையும் கண்டு பேச்சில் அனலையும் எழுத்தில் நெருப்பையும் கக்கிடும் படைப்பாளன் எழுத்தாளன். அந்த வகையில் 1977ல் கொழும்பில் சிங்கள புத்த அரசாங்கத்தின் ஆதரவில் நடைபெற்ற தமிழ்மக்கள் மேலான சிங்களவரின் இனவெறித்தாக்குதலில் இவரது கொழும்பு வீட்டுக்கு விழுந்த அடியை தன் இனமானத்திற்கு விழுந்த உதையாகக் கருதி கொழும்பில் பார்த்த உயர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு யாழ்ப்பாணம் வந்தவர் சச்சிதானந்தன் அவர்கள்.

வந்ததும் தான் தொடங்கிய காந்தளகம் பல்பொருள் அங்காடியின் முதல் நூலாக, ஆவணி அமளி என்னும் தலைப்பில் தான் கண்ட அனுபவித்த 1977 இனக்கலவரத்தினை வரலாற்றுப் பதிவாக்கினார்.

பின்னர் சென்னையில் காந்தளகம் தொடங்கப்பெற்ற பொழுதும் இவரின் “எனது யாழ்ப்பாணமே” என்னும் நூல் சிங்களத்தின் இனஅழிப்புத்தன்மையினைப் பதிவாக்கி காந்தளகத்தின் முதல் நூலாக வெளிவந்தது.

தாய் மண்ணை அறவழிப்போராட்டத்தால் காத்திடல் வேண்டும் என்ற இவருடைய துடிப்பு, இவருடன் இளவயது முதலே கூட வளர்ந்து வரும் விடுதலை உணர்வு. இதனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட அணுகுமுறைகளை ஏற்காத நிலையிலும் அவர்களின் இலட்சியத்தில் இருந்த சத்தியத்தன்மையை தன் எழுத்தாலும் பேச்சாலும் வெளிப்படுத்திய தாயகப் பற்றாளர் இவர்.

அவ்வாறே தாயக மக்களின் இன்னல்கள் இழப்புகள் கண்டு தன் ஆற்றலுக்கு இயன்றதெல்லாம் அறவழியில் செய்யும் தன்மை அவரில் என்றும் நிலைபெற்ற பண்பு. இந்த அறம் போற்றும் அதே வேளை மக்கள் நலம் பேணும் இவரின் முயற்சி இவருக்குப் பல சோதனைகளை வேதனைகளைத் தோற்றுவித்தது.

சிறைகண்டும் தன் உறுதியான நிலையில் சற்றும் மாறவில்லை. நாடுகடத்தல் உத்தரவு பெற்றும் தான் தவறு செய்யவில்லை என்ற உறுதியுடன் தமிழகத்திலேயே வாழ்ந்து தன் சத்தியத்தன்மையைப் பலதுன்பங்கள் தாங்கி நிரூபித்த மற்றொரு நெல்சன் மண்டேலா இவர். சிறுவயதில் இவரின் தந்தையின் யாழ்ப்பாணத்தில் இருந்த ஸ்ரீகாந்தா அச்சகத்திற்கு யோகர் சுவாமி வரும் பொழுது “புத்தகம் போடும் நல்லா விக்கும்“ என்று தந்தைக்குச் சொன்ன ஆசிமொழி ஸ்ரீகாந்தா அச்சகமாகத் தாயகத்திலும் காந்தளகமாகத் தமிழகத்திலும் பெருவளர்ச்சி காண வைத்தது என்பது அவர் நம்பிக்கை.

கூடவே கந்தபுராண படனம் படிக்கச் சச்சிதானந்தன் அவர்களை அழைத்துச் சென்று சிவத்தொண்டன் நிலையத்தில் யோகர் சுவாமிகளே சேர்த்து சில தடவைகளில் தானே இவருக்கு கந்தபுராண படன விளக்கமும் கற்பித்துள்ளார்.


அந்த ஆசியுடன், இலங்கையில் இந்து இளைஞர் சங்கம் பலம் கொண்டு எழத் திரு சச்சிதானந்தன் அரும்பணியாற்றினார். சீசெல்சில் பிள்ளையார் கோயில் எழும்பச் செய்தார் மொரிசீசியசில் சைவம் வளர உழைத்தார்.

இதன் தொடர்ச்சியாகக் காந்தளகம் பதிப்பாக, சென்னையில் பரிபாடல் முதல் இலங்கியங்கள் திருமுறைகளில் உள்ள முருகப்பெருமானின் பாடல்களைத் தொகுத்தார்.

திருமுறைகளை அச்சேற்றி வந்த அவர்க்கு கணினியில் திருமுறைகளை பதிவு செய்யும் பணியை இறைவன் அளித்து மகிழ்ந்தான்.

இன்று தேவாரம் இணைய வலையில் திருமுறைகளையும் சைவசித்தாந்த சாத்திரங்கள் 14ஐயும் உலகெங்கும் உள்ள மக்கள் அவரவர் மொழியிலேயே அறிந்து கொள்ளும் பெரும் புண்ணியம் கிடைக்கத் திரு சச்சிதானந்தன் வழி செய்துள்ளார்.

இப்புண்ணியம் ஒன்றே அவருக்கு சிவோகம் பாவனை நிலையை அளிக்கும் என்பது என் எண்ணம். இதனாலேயே சிவோகம் பாவனை நிலையில் இன்று நம்மிடை வாழும் திரு சச்சிதானந்தன் அவர்களைச் சித்தன் என்றேன். சிவத்தைக் கண்டவர் சித்தர்.

அவ்வாறே தமிழை வாழ்வின் எல்லா நிலைகளிலும் பயன்படுத்த வேண்டுமென்னும் உறுதி கொண்ட திரு சச்சிதானந்தன் அவர்கள் தான் காசோலையில் கையொப்பம் இடுவதும் தமிழில் என்கிற அளவுக்கு தன் வாழ்வில் அதனைக் கடைப்பிடிக்கும் தமிழ்மொழிப்பற்றாளர்.

இவருடைய தந்தை காலண்டர் என்ற சொல்லுக்குப் பதிலாக நாட்காட்டி என்ற தூய தமிழ்ச் சொல்லை அறிமுகம் செய்த பெருமையைப் பெற, மகனோ கணினித் தமிழின் வளத்தைப் பெருக்கும் பல தமிழ்ச் சொற்களை உருவாக்கியவராக உள்ளார்.


இவரின் தமிழ்ப்பணிக்குத் தமிழகத்தில் பல பரிசில்கள் கிட்டியதும் அல்லாமல் தில்லித் தமிழச் சங்கமும் பரிசில் வழங்கி மதிப்பளித்தது. தாயகத்தில் நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டின் சிற்பிகளில் ஒருவராக இவர் இலங்கியதும் அல்லாமல் சுண்டிக்குழி மகளிர் கல்லூரியில் தமிழ் நூல்களின் கண்காட்சி ஒன்றைத் தன் முயற்சியால் மாநாட்டு நேரத்தில் நடாத்திச் சங்க காலம் முதல் நவீனகாலம் வரையான நூல்களில் இயன்றதை எல்லாம் மக்கள் நினைவில் பதிவு செய்தார்.

இந்த அனுபவத்தின் பின்னணியில் தமிழகத்தில் நூற்கண்காட்சிகள் நூற்சந்தைகள் வளர இவர் ஆற்றிய பணிகள் பல.

பழமையின் சிறப்பையும் புதுமையின் பலத்தையும் இணைப்பதில் கைவந்தவர் இவர். சிற்றம்பலத்தைத் தானாடச் சிவன் உருவாக்க, மின்னம்பலத்தை தமிழ் ஆள திரு சச்சிதானந்தன் உருவாக்கினார்.

காந்தளகம் ஈழத்துக்கோர் இலக்கியப்பாலம் என்றால் தமிழ்நூல் மின்னம்பலம் உலகத் தமிழர்களினது தமிழ்நூல் தேவைகளுக்கு ஒரு பாலமாகப் பரிணாமம் பெற்றுள்ளது.

வேல் கொண்டு முருகள் தமிழர்களைக்காக்க திரு சச்சிதானந்தன் தமிழ் நூல் கொண்டு உலகில் தமிழ் மொழியைக் காத்தார் என்றால் மிகையாகாது.
இவ்வாறு பலவழிகளில் திரு சச்சிதானந்தன் அவர்கள் சத்தியம் நிலைபெற நித்தியம் உழைப்பவர் அப்பரின் பின் மற்றொரு அப்பர் என எண்ணும் அளவுக்கு நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்னும் உறுதியுடன், அஞ்சுவது ஒன்றுமில்லை. அஞ்சு வருவதும் இல்லை என மக்கள் பணியும் இறைபணியும் செய்யும் இந்த நூற்றாண்டின் அப்பர் எங்கள் சச்சிதானந்தன் அவர்கள்.


இவர் முதலில் தாசமார்கத்தில் கோயில்களை அமைத்தல் புதுப்பித்தல் அழகுபடுத்தல் என்னும் சரியைத் தொண்டு செய்தார். பின்னர் தேவாரத் தொண்டராகித் திருமுறைகளை உலகின் முக்கிய மொழிகளில் எல்லாம் பெயர்த்து எழுதவைத்து மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் என இறைபணி செய்து இருபத்தியோராம் நூற்றாண்டின் கச்சியப்ப சிவாச்சாரியராக இலங்குகிறார்.

கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணம் என்னும் இன்தமிழ் ஆன்மீகச் சொத்தைத் தந்து முருகப்பெருமான் பெருமையினை தமிழ் உலகறிய வைத்தது போல் திரு சச்சிதானந்தன் ஐயா அவர்களும் பரிபாடல் முதல் இன்றுவரையான திருமுருகன் பாடல்களைத் தொகுத்தளித்து முருகவழிபாட்டுக்குத் தனிச்சிறப்புச் செய்துள்ளார்

இவ்வாறு எத்தனையோ வழிகளில் தமிழ் வாழ – தமிழர் வாழ – தமிழர் தாயகம் மீள அறவழியும் அறிவு வழியும் உழைக்கும் திரு சச்சிதானந்தன் அவர்களைக் கண்டாலே உள்மனதில் ஆனந்தம் தித்திக்கும்.

சத் உள்ளது என்ற பொருள் தரும் சொல். அனாதியாய் என்றும் உள்ளது சிவம் சத். சித் மனதில் அறிவு சிந்தனை என்பவற்றைப் பெருக்கும் ஞானம் என்னும் பொருள் தரும் சொல். ஞானமாய் இருக்கும் சத்தி சித் என்று அழைக்கப்பெறும்.

என்றும் உள்ளதை உணர்கையில் அறிவு சிந்தனை அதில் நிலைக்கையில் அந்த ஆன்மாவுக்கு கவலையற்ற துன்பமற்ற பெருவாழ்வாக ஆனந்தப் பெருநிலையை இறைவன் அனுபவப்படுத்தும் நிலையில் இறைவன் சச்சிதானந்தன் எனப் போற்றப்படுகின்றான்.

எங்கள் சச்சிதானந்தன் அவர்களின் தகப்பன் பொருத்தமான பெயரையே மகனுக்குச் சூட்டியுள்ளார். எந்தப் பொய்மைக்கும் அஞ்சாத உள்ளம். எல்லாம் அவன் செயல் என்று தேறும் எண்ணம். இதனால் கவலை இன்றி என்றுமே சிரிக்கும் முகம்.

கோபம் வந்தால் சங்காரமூர்த்தியாகிச் சொல்லால் சங்காரம் செய்யும் சிவ குணமும் உண்டு. ஆனால் அடுத்ததாக அன்பால் அபிடேகம் செய்து கட்டி அணைக்கும் பண்பும் உண்டு.

எத்துணை பெரியது அவரின் அறிவோ அத்தனை அடக்கம் அவர் பேச்சில் செயலில் காணப்படும். அன்பான உள்ளம் அறிவான செயற்பாடு பண்பான பழக்கவழக்கம் இதனால் என்றும் சதானந்தனாகத்தான் உள்ள எங்கள் சச்சிதானந்த ஐயாவுக்கு 05. 12. 2011ல் அகவை 70.

முதுமையில் இளமை காட்டி தமிழிசையும் இறைத்தமிழும் உயர உழைத்த அப்பர் பெருமான் போல், சத்தியம் நிலைபெற நித்தியம் உழைக்கும் திரு சச்சிதானந்தன் ஐயா அவர்களும் மற்றொரு அப்பர் பெருமானே.

50ல் பொன்விழா. 60ல் அறுபதாம் கல்யாணம் என்னும் பெருவிழா. 70ல் சதாபிடேகம் என்னும் அருள் முழுக்கு. இவ்வாண்டு மார்கழித்திங்கள் 5ஆம்நாளில் சதாபிடேகத்தைக் கோயிலில் பெறும் சச்சிதனாந்தன் ஐயா அவர்களைச் செந்தமிழில் உள்ளத்து அன்பைத் தோய்த்து, வாழ்வாங்கு வாழும் செம்மலே வாழ்க வாழ்க, 75ல் பவளவிழா கண்டு 80ல் ஆயிரம் பிறை கண்டு முத்து விழாவும் ஏற்று நூறாண்டும் கண்டு தமிழுக்கும் சைவத்திற்கும் தொடர்ந்து தொண்டாற்றுகவென எல்லாம் வல்ல இறைவன் திருவடி தொழுது உங்களை வாழ்த்தி வணங்குகின்றோம்.

 

நம் வல்லமை குழுவினரின் சார்பாக அன்பின் ஐயா திரு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கு எங்கள் பணிவான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இன்று போல் என்றும் சுறுசுறுப்பான இளைஞராக தம் சேவையைத் தொடர எல்லாம வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கிறோம். 

படத்திற்கு நன்றி : http://www.interflora.co.uk/catalog/product.xml?product_id=2472166;category_id=4

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சதானந்தன் எங்கள் சச்சிதானந்தன்

Leave a Reply to காமேஷ்

Your email address will not be published. Required fields are marked *