வெங்காயம் – கார்கில் ஜெய்

2

நமஸ்காரம். உபய குசலோபரி. மஹாகணம் பொருந்திய

தேவரீர் சௌக்யமா ? இங்கே நியு ஜெர்சீயில் எல்லாரும் க்ஷேமம்.

இந்த லிகிதத்தின் தாத்பர்யம் என்னவென்றால், அதாகப்பட்டது என் பால்ய ஸ்நேகிதன் ஸ்ரீமான் நாமக்கட்டி நரஸிம்ஹ பட்டாத்ரி ஜாகைக்கு, அடியேன் விஜயம் பண்ணியிருந்த சமயத்திலே நடந்த சம்பவத்தை தேவரீரிடம் பரிவர்த்தனை பண்ண வேண்டும் என்பதுதான்.

விவாஹத்திற்கு முன்னால் ஓக் ட்ரீரோடு அல்ஹசாரி ஹோடேலில், தினமும் வாயிலே ஜலப் பிரவாஹமெடுக்க பரோட்டா சாப்பிடுவதை சந்த்யா வந்தனத்துக்கு நிஹராக அனுசரித்தவன், இந்த நரஸிம்ஹ பட்டாத்ரி; அவன் விவாஹமான காலத்திலிருந்து திடீரென்று ‘பூண்டு, வெங்காயம்’ ரெண்டும் அபச்சாரம் என்று விட்டு விட்டதனாலே, அதைப் பற்றி முதலில் எழுதிவிட்டுத்தான், இடுப்பிலேர்ந்து அங்கவஸ்திரம் அவிழ்ந்தாலும் கட்டுவேன் என சங்கல்பம். போன சஷ்டியன்று ஏக நடையாக, கேம்ரி காரை ஒட்டிக்கொண்டு பமோனா ரங்கநாதர் கோவில், பிரின்ஸ்டன் துர்கா கோவில், மோர்கன்வில் குருவாயூரப்பன் கோவில், பிரிட்ஜ்வாட்டர் பாலாஜி கோவில், பிளஷிங் பிள்ளையார் கோவில் என்று ஷேத்ராடானம் பண்ணி திரும்பிக் கொண்டிருந்தேன்.

கிரகத்துக்கு போய் தளிகை பண்ணி போஜனம் ஆரம்பிக்க நாழியாகும் என்பதனாலே, ஒரு நடை நரஸிம்ஹ பட்டாத்ரி ஜாகைக்குப் போய் பிரசாதம் கொடுத்துவிட்டு, அங்கேயே சிரம பரிகாரம் பண்ணிவிடலாம் என்று முடிவு பண்ணினேன்.

அங்கே அவன் பார்யாள் எனக்கு கூஜா நிறைய திருக்கண்ணமுதும், சம்படத்தில் உளுந்து வடையும் கொடுத்து உள்ளே போனவுடன், “வடைல வெங்காயம் இருந்தால் நன்னா இருக்குமே” என்றேன். அவன் பதறிப்போய் என்னை ஆலிங்கனம் பண்ணி, தாழ்வாரத்துக்குத் தர தரவென்று இழுத்துண்டு போய், பகவான் சத்யுகத்திலே ஹிரண்யகசிபுவை வதம் பண்ணின மாதிரி வாசக்காலில் நிக்கவைத்து  ரஹஸ்யமாக, “வெங்காயம், பூண்டெல்லாம் அறவே விட்டுட்டேன்” என்று, அவனே ஹிரண்யகசிபு போல் வெலவெலத்துப் போய்ச் சொன்னான்.

அவனை ஆசுவாசப்படுத்தி, திரும்ப அஹத்துலே அழைச்சிண்டு போய், “ஏண்டா, நீயோ துணில கெட்டவன் வச்ச ஹோடெல்ல, தின்னு கெட்டவன்கறதுக்கு ஏத்தமாதிரி திதி பாக்காம சாப்பிடறவன்.. உனக்கென்னடா திடீர்னு?”, ன்னு விசாரித்தத்திலே அகப்பட்ட சுவாரஸ்யமான விஷயம் இதுதான்:

அவன் போன சதுர்த்தியன்று வாங்கி வந்திருந்த வெங்காய பஜ்ஜியை, மோகத்துடன், அவன் ஆம்படையாள் வாயிலே ஊட்ட பிரயத்தனம் பண்ண, மகாலக்ஷ்மி மாதிரி இருந்த அவள், க்ஷணத்திலே பத்ரகாளியாகி அவன் குமட்டில் குத்தி, “என் தோப்பனார் ஸ்ரீவில்லிபுத்தூர் அக்னிஹோத்ரம் விஜய வேங்கட சேஷாத்ரி கனபாடிகள் மருமகன் வாயில் இனிமே ‘அது’ வரவேப்படாது” என்று சொல்லிவிட்டாளாம்.

அதனால் நாமக்கட்டி நரஸிம்ஹ பட்டாத்ரி, பந்துக்கள் எல்லாரிடத்திலும் , “பஞ்சமி திதியிலேர்ந்து, ஆத்துல சாளகிராமம் இருக்கறதாலே நான் ‘அதை’ விட்டுட்டேன்” என்று சொல்லிவிட்டதாகச் சொன்னான். நான் “என்னது சாலிக்கிராமம் உங்க ஆத்துல இருக்கா? வடபழனி பக்கத்திலே தானேடா இருக்கு”-ன்னேன்.

அதற்கு அவன் “டேய் அசமஞ்சம், ..சாலிகிராமம் இருக்குன்னா சொன்னேன்? ‘சாளக்கிராமம் இருக்கறதுனாலே’-னுதானே சொன்னேன்..ஸ்மார்த்தன் அப்பிடில்லாம் பேசறது மகா பாபம் ” என்று ப்ரசங்கம் பண்ணினான்.  லேசான குழப்பத்திலே “சாளகிராமம்-கிறது யார்? உன் மாமியாரா?” என்று அடியேன் விகல்பம் இல்லாமல் கேட்டேன்.

அப்படிக் கேட்டது ஒன்றும் உங்களிடம் ப்ரஸ்தாபிக்க வேண்டிய விஷயமில்லைதான்; ஆனால் ஜனன காலந்தொட்டு என் வாக்கு ஸ்தானத்துலே, ராஹு பகவான் ஸ்திரமா எழுந்தருளி இருக்கறதுனாலே இந்த வெங்காயம் பற்றி கங்கணம் கட்டிண்டு ஆராய்ச்சி பண்ணினேன்.

என் சிநேகிதாளுக்கெல்லாம் டெலிபோன் செய்து, ஏன் வெங்காயம் சாப்பிடப்படாதுன்னு விசாரித்ததிலே அநேக பதில்கள் கிடைத்தன.

சத் யுகத்திலே, கர்ப்பமாக  இருந்த  ஒரு ரிஷி பத்தினி  பசி தாளாமல், அப்போதைக்கு கிடைத்த ஒரே ஆகாரமான  யாகத்தில் யக்ஞம்  பண்ணின  குதிரை மாமிசத்தை எடுத்து ஒளித்து வைத்ததாகவும், பின் தாமச குணங்கொண்ட  அதை சாப்பிடாமல்  தூக்கி எறிய அதிலிருந்து முளைத்தவைதாம் இந்த வெங்காயம், பூண்டு. ஆகையினாலே  அதை சாப்பிடப்படாது என்று என்  கார்யாலய மித்திரன் சொன்னான்.

மகாவிஷ்ணு அனங்க மோகினியாய், தேவாளுக்கு அமிர்தம் பரிமாறும் போது ராஹுவை சம்ஹாரம் பண்ண,  வெட்டிய கழுத்திலேர்ந்து  இருந்து சிதறிய மாமிச பிண்டங்கள் பூமியிலே விழுந்து  வெங்காயம், பூண்டாக முளைத்து  வளர்ந்ததனாலே, தமோகுணம் பெருக்கும். அவற்றைச் சாப்பிடலாகாது”ன்னான் என்று அம்மங்காவின்  ஜேஷ்ட புத்திரன்.

இஷா யோகாவில் சங்கமமான, ஒண்ணு விட்ட அண்ணா பையன், ஏதோ ருத்ராக்ஷ மாலையைப் பூண்டு, வெங்காயத்தின் மேல் பிடிச்சிண்டால் அது இடம்புரியாக சுத்துமென்றும் , வலம்புரியாகச் சுத்தினால் பிராண சக்தி, ஆனால்  இடம்புரியாக  சுத்துவதால் அது உயிருக்கு கேடான அப்பிராண சக்தி. ஆகையாலே பூண்டு, வெங்காயம் கூடாது-ன்னான். டேய் அபிஷ்டு,  இடம்புரியா சுத்தினாலும், வலம்புரிய சுத்தினாலும் பரவால்லை  அதை சாப்டா நம்ம தலை சுத்தாம இருந்தா போதும்னேன்  நான் .

கொஞ்சம் அரைசமத்து கேசான என் அத்தங்காளோட ஓரகத்தி “அது கெட்டதுங்கறதுனாலதானே  நறுக்கரப்பவே கண்ல ஜலம் வர்றது? அப்பவே புரிஞ்சுக்க வேணாமோ?” என்றாள் அப்பாவியாக.  ‘ஞான சூன்யம் .. நீ பேசின பேச்சுலயே, என் கண்ல ஜலம் வர்றது’ன்னு  மனசிலேயே வைதுகொண்டு போனைக் கட் பண்ணினேன்.

தமிழ்ப் பற்றுள்ள ஒரு சிநேகிதர் “‘உரித்து பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் கிடையாது’ என்ற கண்ணதாசன் வரிகள் தான் ஞாபகம் வர்றதே தவிர, வேறேதும் யான் அறியேன் பராபரமே” ன்னார்.

அடுத்து ஷட்டகரோட மாமா பேத்தியிடம், வெங்காயம் பத்தின இந்த விஷயமெல்லாம் சொல்லிக் கேட்டேன். அவளோ “அதெல்லாம் விடுங்கோ.. ப்ரிட்ஜுல வச்சு எடுத்த வெங்காயத்த நறுக்கினேள்னா கண்ல ஜலமே வராது.. இதுலேர்ந்து என்ன தெரியறது? நாம்போ கஷ்டமில்லாம யாரோட வாலையாவது நறுக்கணும்னா அவாள நன்னா ஐஸ் வச்சு கூல் பண்ணனும்.. புரியறதா?”  என்று  மூக்கோட்டை பெறாத விஷயத்தைச் சொல்ல,  ‘உளறினது அத்தனையும் திராபை’ன்னு மனசிலே சபிச்சுண்டே, அவள் புத்தி சொன்னதைச் சிரமேற்கொண்டு  “நன்னா விஞ்ஞானக் குறிப்பு கொடுத்தேடி கொழந்தை.. உனக்குத்தான் எத்தனை ஞானம்”னு சொல்லி போனை வைத்தேன்.

நான் வேலை மெனக்கெட்டு பல புராணம், அதர்வண வேதம், ஆயுர் வேதம் என அலசியதில், இந்தப் பூண்டும் வெங்காயமும் மதுமேகம், ரத்தக் கொதிப்புக்கு ஏக மூலிகைப் பிரயோகமாய் தோதுப்படுமென்றும் மற்றபடிக்கு இந்திரியங்களை தூண்டக் கூடியவை, ரத்த ஓட்டத்தை பெருக்கி, தமோ குணத்தில், லௌகிக விஷயத்தில் ஈடுபாடு உண்டாக்கி, பிரம்ம மார்க்கத்தை, சத்வத்தை விட்டு தவற வைக்க ஏதுவாகும் என்று பல இடங்களில் வேதக் குறிப்புகள் கிடைத்தன.

அதோடு நான் ஆராய்ச்சியை  நிறுத்தியிருக்கலாம் தான். ஆனால் சனியன் பிடித்த ராகு பகவான்தான் விடலையே!! அதனாலே, நான்  என் கார்யாலய மேலதிகாரியையும்  விடாமல், அவர் ஏழேழு தலைமுறைக்கு மாமாங்கத்திலே ஸ்நானம் பண்ணின மஹாபுண்யம் கட்டிப்பாரென்று  சொல்லி,  நிர்ப்பந்தம் பண்ணி யார்க்க்ஷையர் கவுண்டி புஸ்தகாலயத்துக்கு அழைச்சிண்டு போய், நான் பூண்டு பற்றியும், அவர் வெங்காயம் பற்றியும்  புஸ்தகங்களில் தேடினோம்.

ரொம்பவே பிரயத்தனம் பண்ணி அவர் தேடினதுலே ஔஷதப் புஸ்தகத்திலேர்ந்து இந்த வெங்காயத்தின் குறுக்கு நெடுக்கு வெட்டு புகைப்படத்தை சேகரம் பண்ணி கொடுத்ததோடு , விளக்கெண்ணெய் ஜம்பக் கேஸான அவர் அதிகாரி என்ற மிடுக்கைக் காண்பிக்க, ‘union is onion’என்று பெர்னார்ட் ஷா சொன்னதாக தன் ஓட்டைக் காலணா பெறாத இங்கிலீஷ் ஞானத்தை  தாராளமாகவே பீத்திக்கொண்டார்.

அந்த புஸ்தகத்தை எடுத்துண்டு, புஸ்தகாலயத்தில் இருந்து ஜரூராக நரஸிம்ஹ பட்டாத்ரி ஆத்துக்கே போனேன். அவனைப் பிரஸ்தாபிக்க விடாமல், ‘அது’ பெருமாளுக்கு  எவ்வகையில்  உன்னதமானதுங்கிறதை வியாக்கியானம் பண்ணி, வெங்காயத்தின் அதே குறுக்கு நெடுக்கு வெட்டுப் புகைப்படத்தை எடுத்துக் காட்டினேன்; ” ‘அதை’ எப்படி நறுக்கி தீட்சண்யம் பண்ணினாலும் சாட்சாத் எம்பெருமாள் சங்கு சக்கரம் போல திவ்யமா இருக்கே” என்று சொல்லி படத்தைப் ப்ரோஷித்து, ஔஷதப் புஸ்தகத்திற்கு  சாஷ்டாங்க  நமஸ்காரம் பண்ணி, அவனைப் பரிகாசம் பண்ணினேன் .

இவ்வாறாக அவன் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கொண்டதிலே ரசாபாசமாகி ஒரு கட்டத்தில் உக்கிரமான அவன், ‘உன்னைப் பாத்தாலே பிரம்மஹத்தி தோஷம் கையோட வரும்”-னு சொல்லி, என்னுடன் சம்பாஷனையையே அடியோடு நிறுத்தி இப்போ திருவாதிரை வந்தால் மாசம் நாலாகிறது . அது எப்படியோ போகட்டும், வெங்காயம் பற்றிய அடியேன் அபிப்ராயம் சரியா என இந்தப் படத்தை நீங்களே பார்த்து முடிவுக்கு வரணுமாய் பிரியப் படுகிறேன்:

வாசக தோஷம்  க்ஷந்தவ்யக.

வெங்காயம்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வெங்காயம் – கார்கில் ஜெய்

  1. Fantastic !

    //“ஏண்டா, நீயோ துணில கெட்டவன் வச்ச ஹோடெல்ல, தின்னு கெட்டவன்கறதுக்கு//

    😛

  2. வெங்காயம் பத்தின ஆராய்ச்சி பிரமாதம் போங்கோ….ரொம்ப பேஷா இருக்கு. இத்தனை ஹாஸ்யமா எழுதற நீங்க ஏன் தொடர்ந்து எழுதாம இருந்துட்டேள் ஜெய். இதுமாதிரி நெறய ஆராய்ச்சி (?!) கட்டுரைகள் எழுதி வாசகாள சந்தோஷப்படுத்தப் படாதோ?

    — மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *