அமெரிக்க செல்லப் பிராணிகள் – 2

நாகேஸ்வரி அண்ணாமலை

செல்லப் பிராணிகள் வளர்க்கும் அமெரிக்கர்களில் ஜேசன் டுபின் என்பவரும் ஒருவர்.  எம்மி என்னும் ஜெர்மன் ஷெப்பர்ட் என்னும் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றை க்ரேஃப்ட்வெர்க் கே9 என்னும் கம்பெனியிடமிருந்து இன்டெர்நெட் மூலம் 7500 டாலருக்கு அவர் வாங்கியிருந்தார்.  ஆன்லைனில் சாமான்கள் வாங்குவது போல் செல்லப் பிராணிகளையும் அமெரிக்கர்கள் வாங்குகிறார்கள்.  இந்தக் கம்பெனி இருப்பது அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் ராசெஸ்டர் என்னும் ஊரில்.  ஜேசன் வசிப்பது கிழக்குப் பகுதியில் நியுயார்க்கில்.  அதனால் அவர் வாங்கியிருந்த நாயை விமானம் மூலம்தான் நியுயார்க்கிற்கு அனுப்ப வேண்டியிருந்தது.  அக்டோபர் ஒன்றாம் தேதி அந்தக் கம்பெனிக்குப் பணத்தைக் கட்டி ஒரு வேளை அந்த நாய் அவருக்குப் பிடிக்கவில்லையென்றால் அதை 72 மணி நேரத்திற்குள் திருப்பி அனுப்பி விடலாம் என்ற பேரத்தையும் முடித்துக் கொண்டார்.  நான்காம் தேதி விமான நிலையத்திற்குச் சென்று அந்த நாயைக் கூட்டி வந்தார்.

வீட்டிற்குக் கூட்டி வந்த பிறகு அந்த நாயை இவருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஜெர்மனியில் பிறந்து அங்கு வளர்ந்து அதன் உரிமையாளரோடு எப்படி நடந்து கொள்ள  வேண்டும் என்று பயிற்சியும் பெற்ற பிறகு இவர் ஜெர்மன் மொழியில் பேசியது அதற்குப் புரியவில்லையாம்.  ‘போ’, ‘வா’, ‘உட்கார்’ என்று உரிமையாளர் சொன்ன எதையும் அது செய்யவில்லையாம்.  மேலும் இவர் எதிர்பார்த்த மாதிரி எம்மி மனிதர்களிடமும் மற்ற பிராணிகளிடமும் சாதுவாக நடந்து கொள்ளவில்லையாம். ஒரு முறை இவர் ஏற்கனவே வளர்த்து வந்த ஒரு பூனையை மிகவும் பயமுறுத்தி விட்டதாம். இரு முறை அவருடைய மகனைக் கடிக்கப் போய் விட்டதாம்.  ஒரு முறை இன்னொரு நாயைக் கடித்தே விட்டதாம். 

இதனால் எல்லாம் அதைத் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்த ஜேசன் அதை ஒப்பந்தத்தின்படி திருப்பி அனுப்புவதென்று முடிவு செய்து அந்தக் கம்பெனியின் சொந்தக்காரரை ஒப்பந்த நேரம் முடிவதற்குள் தொலைபேசியில் கூப்பிட முயன்றிருக்கிறார்.  அவர் கிடைக்கவில்லையாதலால் அந்த அலுவலகத்தில் இருந்த இன்னொருவரைக் கூப்பிட முயன்று அவரும் கிடைக்காமல் போகவே மூன்றாவதாக இன்னொருவரைக் கூப்பிட்டுச் செய்தியைச் சொல்லியிருக்கிறார்.  கம்பெனிச் சொந்தக்காரர் கூப்பிடுவார் என்று எதிர்பார்த்தார்.  ஆனால் அவர் கூப்பிடவே இல்லையாதலால் எம்மிக்கு விமான டிக்கெட் வாங்கி அதை அந்தக் கம்பெனிக்கே திருப்பி அனுப்பி விட்டார். 

ஆனால் கம்பெனி சொந்தக்காரர், ஜேசன் தங்கள் அலுவலகத்தைக் கூப்பிட்டபோது எம்மி அவருடைய பூனையோடு ஒத்துப் போகவில்லை என்று கூறினாரேயொழிய அதைத் திருப்பி அனுப்புவது பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்றும் எழுபத்தி இரண்டு மணி நேரக் கெடு முடிந்தவுடன்தான் ஜேசன் எம்மியை விமானத்தில் அனுப்பினார் என்பதால் தன்னால் எம்மியை விமான நிலையத்திற்குச் சென்று கூட்டி வர முடியாது என்றும் அது தன்னுடைய நாய் இல்லை என்றும் ஜேசன்தான் தன்னுடைய செல்லப் பிராணியை அம்போ என்று விட்டு விட்டார் என்றும் வாதிட்டார்.  

இந்தச் செய்தியை விமானக் கம்பெனியின் தலைமையகம் ஜேசனுக்குத் தெரிவித்திருக்கிறது.  ஆனால் அதற்குள் விமானம் கிளம்பி விட்டதால் ஜேசனால் எதுவும் செய்ய முடியவில்லை.  எம்மியை அழைத்துச் செல்ல யாரும் வராததால் விமானக் கம்பெனி நான்கு மணி நேரம் காத்திருந்துவிட்டு எம்மியை விமான நிலையத்தில் இருந்த செல்லப் பிராணிகளுக்குரிய ஓட்டலில் தங்க வைத்திருக்கிறது.  எம்மி ஒரு இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்திருக்கிறது.  விமானக் கம்பெனி, ஜேசனுக்கு யாரும் எம்மியை அழைத்துச் செல்ல வராததால் ஓட்டலில் தங்க வைத்திருக்கும் செய்தியைச் சொல்லியிருக்கிறது. 

என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ஜேசனுக்கு கம்பெனிச் சொந்தக்காரரிடமிருந்து “நீங்கள் எம்மியைக் கை விட்டு விட்டதால் நாங்கள் எம்மியை அழைத்துச் செல்கிறோம்.  இனி நமக்கிடையே எந்தப் பண பரிவர்த்தனையும் இல்லை” என்ற செய்தி மின்னஞ்சல் மூலம் வந்தது.  பணம் போனதைப் பற்றிக் கூட ஜேசன் கவலைப்படவில்லை.  “எம்மி ஏதாவது கைவிடப்பட்ட மிருகங்களுக்கான இடத்தில் போய்ச் சேர்ந்து கஷ்டப்படவில்லையே என்று நிம்மதியாக இருக்கிறது.  அதுதான் எனக்கு வேண்டியது” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார். கம்பெனிச் சொந்தக்காரரும் “நல்ல வேளை எம்மி பத்திரமாக வந்து சேர்ந்து விட்டது என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்காவில் பெரிய பணக்காரர்கள் தங்களுடைய செல்லப் பிராணிகளுக்கு நிறையப் பணத்தை தங்கள் உயில் மூலம் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.  லியோனா ஹெல்ம்ஸ்லி என்ற பணக்காரப் பெண் தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு தனக்குப் பின்னால் பன்னிரண்டு மில்லியன் டாலர் விட்டுச் சென்றிருக்கிறார்.  (கார்ஃபீல்ட் (Garfield)  படம் பார்த்தவர்கள் அதை இங்கு நினைவு கூரலாம்.)  அந்த நாயின் பெயர் ட்ரபிள் (Trouble – ஆங்கிலத்தில் இதற்குத் தொந்தரவு என்று அர்த்தம்.  செல்லமாக அதற்கு அந்தப் பெயரை இட்டார் போலும்.)  லியோனாவின் கணவர் இறந்த பிறகு லியோனா அதை ஒரு செல்லப் பிராணிகள் விற்கும் கடையில் வாங்கினாராம்.  லியோனாவிற்கு பேரப் பிள்ளைகள் உட்பட பல உறவினர்கள் இருந்தும் தன் செல்லப் பிராணிக்கு இவ்வளவு பணம் விட்டுச் சென்றிருக்கிறார்.  தன்னுடைய செல்லப் பிராணியைக் கவனித்துக் கொண்டதற்காக தன்னுடைய சகோதரனுக்கு ஐந்து மில்லியன் டாலர் பணம் கொடுத்திருக்கிறார்.  அவர் இறந்த பிறகு அவருடைய சகோதரர் நாயைப் பார்த்துக் கொள்ளவில்லையாதலால் அதை ஒரு தனி விமானத்தில் நியுயார்க்கிலிருந்து ஃப்ளோரிடா மாநிலத்திற்கு அனுப்பினர்.  அங்குள்ள ஒரு ஓட்டலில் அதற்கு தனியான கவனிப்பு கொடுக்கப்பட்டது.  அதைக் கவனித்துக் கொண்டவர் அதன் உரோமத்தை வாரி சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும் உணவிற்கும் செலவழித்த பத்தாயிரம் டாலர் உள்பட ஒரு லட்சம் டாலர் செலவழித்தார்.  அது இறந்த பின் அதைத் தன்னுடைய கல்லறைக்கு அருகிலேயே புதைக்க வேண்டும் என்றும் உயிலில் கூறியிருந்தாராம்.  நாய் இறந்த பிறகு மீதியிருந்த பணம் ஒரு அறக்கொடை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் உயிலில் இருந்ததாம்.

நியுயார்க்கைச் சேர்ந்த புரூக் ஆஸ்டர் என்னும் பணக்காரப் பெண் தன்னுடைய 105-வது வயதில் இறந்த போது இரண்டரை லட்சம் டாலர்களை நியுயார்க்கிலுள்ள மிருக ஆஸ்பத்திரிக்கு விட்டுச் சென்றார்.  அந்தப் பணம் வயதானவர்கள், ஏழைகள் ஆகியோர்களுடைய செல்லப் பிராணிகளைக் கவனித்துக் கொள்ளப் பயன்பட வேண்டும் என்றும் தன் உயிலில் கூறியிருந்தார். 

அமெரிக்காவில் இப்படிப் பலர் இருந்தாலும் சிலர் பூனை, நாய் போன்ற மிருகங்களை செல்லப் பிராணிகளாக வளர்த்தாலும் அவற்றை நன்றாக நடத்துவதில்லை. நிறைய செல்லப் பிராணிகளை சிறிய அறைகளில் வளர்ப்பார்கள்.  சரியாக அவற்றிற்கு உணவளிக்காமல் அவை வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கும்.  அல்லது வளர்ச்சி குன்றியிருக்கும்.  காவல் துறையினர் அந்த மிருகங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடமிருந்து மீட்டு வந்து விடுவார்கள். அந்தப் பிராணிகளை சரியான முறையில் கவனித்துக் கொள்ளாததற்கு அவர்களுக்குத் தண்டனையும் உண்டு!

ஏற்கனவே குறிப்பிட்டது போல் இங்குள்ள மிருக ஆஸ்பத்திரிகள் மிகவும் தரமாகக் காணப்படும்.  பல மிருகங்களுக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்வார்கள்.  ஒரு முறை ஒரு பாம்பிற்கு அறுவை சிகிச்சை நடந்தது!

 

படத்திற்கு நன்றி: http://www.best-dog-photos.com/German-Shepherd.html

பதிவாசிரியரைப் பற்றி