இராஜராஜேஸ்வரி

ஓம் நமச் சிவாய நமஹ: 

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்

சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்

சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்

சிவ சிவ என்னச் சிவகதி தானே! – திருமூலர்  

ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாதேவாய தீமஹி

தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்  

வட்ட வடிவமான ஸ்ரீகண்டேஸ்வரர்  கோவிலின் மேற் கூரை செம்பால் வேயப்பட்டுள்ளது.  இங்கே கோவில் கொண்டுள்ள சிவபெருமான் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். கோவிலின் கிழக்கிலும் மேற்கிலும் வாயில்கள் இருந்தாலும், பெரும்பாலானோர் மேற்குப்புற வாயிலையே பயன் படுத்துகின்றனர். கிழக்கு வாயிலுக்கு எதிரே திருக்குளம் அமைந்துள்ளது.

இக்கோவிலில் பூஜை செய்பவர்களை திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவிலின் மேல்சாந்திதான் (தலைமை அர்ச்சகர்) தேர்ந்தெடுக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கொரு முறை இந்த அர்ச்சகர் மாற்றப் படுவார். அந்த மூன்று ஆண்டுகளும் அந்த அர்ச்சகர் வீட்டுக்குச் செல்ல மாட்டார்; ஆலயத்தில்தான் தங்குவார். அதனால் அவரை “புறப்படா சாந்தி’ என்றும் அழைப்பர்.

இந்த ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் அர்ச்சகர், பத்மநாப சுவாமி கோவில் அர்ச்சகர், திருவட்டாறு (தமிழ்நாடு) ஆதிகேசவப் பெருமாள் கோவில் அர்ச்சகர், வர்க்கலை கோவில் அர்ச்சகர், திருவல்லம் கோவில் அர்ச்சகர் அனைவரும் திவாகர முனிவரின் வழி வந்தவர்களாம்.

முற்காலத்தில் இரண்டு திவாகர முனிவர்கள் இருந்தனராம். ஒருவர் குஜராத்திலும் மற்றொருவர் கர்நாடக மாநிலத்திலும் வாழ்ந்ததாகச் சொல்வர். கர்நாடகத்தில் வாழ்ந்த திவாகர முனிவர் இப்பகுதிக்கு வந்தபோது அவருக்குப் பத்மநாப சுவாமி காட்சி அளித்தாராம். 

அந்த இடம்தான் திருவனந்தபுரம். அத்தகைய திவாகர முனிவரின் வழி வந்தவர்கள்தான் மேற்சொன்ன ஆலய அர்ச்சகர்கள். இதன் காரணமாகவே இவர்களை “அக்கரை தேசி’ என்றும் அழைப்பர். இவர்கள் அணியும் ஆடைகள் கர்நாடகத் துளு அந்தணர்கள் அணிவது போல இருக்கும்.

ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலுக்கும், அங்கிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோவில்விளா சிவன் கோவிலுக்கும் தொடர்பு உண்டு. கோவில்விளா ஆலயத்தைத் தூய்மை செய்யும் பணியைச் செய்து வந்த பெண்மணி ஸ்ரீகண்டேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் வசித்து வந்தாள். தினமும் இங்கிருந்து துடைப்பமும் ஒரு மண்பானையில் நீரும் எடுத்துக் கொண்டு கோவில்விளா சென்று, அங்கு நீர் தெளித்துப் பெருக்கிச் சுத்தமாக்கி விட்டு, பிறகு தன் இல்லத்துக்கு வந்து பானையையும் துடைப்பத்தையும் வைப்பாள். இது தினமும் நடக்கும்.

ஒருநாள் அதிகாலை எழுந்து குளித்து விட்டுத் துடைப்பத்தையும் மண்பானையையும் எடுக்கும் போது மண் பானையை எடுக்க முடியவில்லை. மண் பானை சிவலிங்கமாக மாறி இருந்தது. உடனே அவள் எல்லாரையும் அழைத்துக் காண்பிக்க, வியப்படைந்த மக்கள் அங்கு கோவில் கட்டினார்கள். அதுவே இந்த ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில்.

கோவிலுக்கு தென்மேற்குப் பகுதியில் கிழக்கு நோக்கிய தர்ம சாஸ்தா சந்நிதி உள்ளது. வடமேற்குப் பகுதியில் நடராஜர் விக்ரகம் உள்ளது. நடராஜருக்குக் காப்பிடும் வழிபாடு தினமும் உண்டு. இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். வெளியே வடகிழக்குப் பகுதியிலுள்ள அரச மரத்தடியில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. 

தென்கிழக்கில் ஒரு அரச மரத்தின் கீழ் பூதத்தான் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கிய கணபதி சந்நிதி, அருகில் நாக யட்சி, நாகராஜா பிரதிஷ்டை உள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரம் உள்ளது. சிவராத்திரியும் பிரதோஷமும் இங்கு விசேஷம்.

பூஜைகள் எல்லாம் வெகு விரிவாக நடத்தப்படும். மிருத்தியுஞ்ஜய ஹோமம் இங்கு சிறப்பு. தினமும் காலை 10.00 மணிக்குத் தொடங்கும் இந்த ஹோமத்தில் நிறையப் பக்தர்கள் ஐம்பது ரூபாய் கொடுத்துத், தங்கள் பெயர், நட்சத்திரம் கூறிக் கலந்து கொள்ளுகிறார்கள்.  

இந்த ஹோமத்தின்போது சிவ பெருமானே நேரில் வந்து, இந்த மிருத்தியுஞ்ஜய ஹோமத்தில் கலந்து கொண்டு பக்தர்களை ஆசீர்வதிப்பதாகப் பிரசன்னத்தில் தெரிய வந்ததாம். உயிர் காக்கும் சிவபெருமானைத் தொழுது, இங்கு நடக்கும் மிருத்தியுஞ்ஜய ஹோமத்தில் கலந்து கொண்டால் பூரண ஆயுளைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை! 

 கேரள மாநிலம், திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில்.  

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *