விசாலம்

பள்ளியில் ஒரு தடவை திரு.அம்பேத்கர் தினம் கொண்டாடினோம்.அப்போது புதுமையாக ஏதாவது செய்யலாம் என்று, மாணவ மாணவிகளுக்கு “சாதி இல்லையடி பாப்பா” என்ற தலைப்பைக் கொடுத்தோம், அவர்களும் புது மாதிரியாகத் தயாரித்திருந்தனர்.

அந்தத் தினமும் வந்தது. முதல் மாணவன் வந்தான், ஒரே இருட்டின் நடுவில் அவன்  சட்டையின் மேல் ஒளி  வீச “ஒன்றே குலம் ஒருவனே தேவன் ” என்று எழுதப் பட்டிருந்தது அதற்குப் பின்னால் ஒரு மாணவி வர அவள் மேல் ஒளி நகர்ந்தது, அவள் மேலங்கியில் “பிறப்பால் அனைவரும்   சமம்” என எழுதப்பட்டிருந்தது, மூன்றாவதாக ஒரு சிறுமி வந்தாள், அவள் கையில் ஒரு தேசியக் கொடி,”எம்மதமும் சம்மதமே”என்று தன் மழலைச் சொல்லால் கோஷமிட்டாள்.

பின் இருவர் வந்தனர் “சாதிமத பேதம் சகிக்கமுடியாத பாவம்” இவர்களது கோஷம் கூரையைத் தொட்டது. கடைசியில் எல்லோரும் வந்தனர் “நாம் இந்தியர். ஒற்றுமையே வலிமை ” என்று தேசியக்கொடியுடன் நடனம் ஆடினர். இந்த மாணவர்கள் “சாதிகள் இல்லையடி பாப்பா” என்பதை எவ்வளவு அழகாக அருமையாக விளக்கி விட்டனர்.

பெரும்பாலான மக்கள் உண்பதும், உறங்குவதும், குடிப்பதும், களிப்பதும் என்பதிலேயே  காலத்தைக் கழிக்கின்றனர், அற்ப விஷயங்களிலேயே சிந்தனையைச் செலுத்தினால் ஆக்கச் செயலில்  சிறப்பாக எப்படிப் பணி செய்ய முடியும்? எத்தனை அறிவாளிகள், மேதைகள். சாதி மதம் ஒழிக்க வேண்டும் என்று விண் அதிரக் கர்ஜித்தாலும் மனிதன் மனம் கடுகளவேனும்   விரியவில்லையே ! புரட்சிக் கவிஞர் திரு பாரதிதாசன் சொல்கிறார்;

“அறிவை விரிவு செய் அகண்டமாக்கு
விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை ,
அணைந்து கொள், உன்னைச் சங்கமாக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு
பிரிவில்லை எங்கும் பேதமில்லை “

எவ்வளவு அழகாகக் கூறி இருக்கிறார்? விசாலப் பார்வையினால் தான் அறிவு விரிந்து நாம் எல்லோரும் ஒருதாய் மக்களே என்று உணரமுடியும் என்கிறார், பிரிவில்லை எங்கும் சாதிமத பேதமும் இல்லை என்கிறார். பலர் இது போல் எடுத்துரைத்தாலும் அது எல்லாம்  அடுப்பங்கரையில் ஓதினது போல் எடுபடுவது இல்லை, பிராமணர் மனம் மலரவே இல்லை.

வாயில் எத்தனை மந்திரங்கள் வந்தாலும் வேதாந்த ஒருமைப்பாடு கொட்டினாலும் போதனைச் செய்தாலும் தான் மட்டும் மாறாமல் இருக்கிறார், போதனைச் செய்கிறார். ஆனால் சாதனைச் செய்வதில்லை சாதனை செய்கிறவர்கள் தான் போதுக்கும் உரிமைப் பெறுகிறார்கள். “படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்” என்று இருந்தால் எப்படி உடன்பட முடியும்?

பிறப்பில் யாவரும் ஒன்றே! இரத்தத்தின் நிறமும் ஒன்றே! மனிதனை மனிதன் பிரிக்கும் எண்ணம் போகவேண்டும்.எல்லாவற்றுக்குள் உறைவது அந்த ஆன்மாதான்.விவசாயிக்குள்ளும் மலைசாதிக்குள்ளும் பிராமணனுக்குள்ளும் நாய் பூனை மற்ற சந்துக்களுக்குள்ளும் அந்த ஆன்மாதான் இருக்கிறது அது அழியாதது.

தேசக் கவிஞர் பாடுகிறார் “ஏழை என்றும் அடிமையென்றும், எவரும் இல்லை ஜாதியில் இழிவுக் கொண்ட மனிதென்பது இந்தியாவில் இல்லையே”

உண்மையாகவே சாதி தீண்டாமை என்ற பெரும் கறை மிகவும் ஆழமாகப் படிந்துள்ளது, அதைப் போக்கும் சோப்பு அன்பு ஒன்றுதான், அன்பால் எல்லோரைம் அணைத்துக் கொள்ளல் வேண்டும், ஒதுக்கப்பட்டவர் யார் என்றால்,

தன்னலம், செருக்கு, அகம்பாவம் கொண்டுள்ளவன் ஒதுக்கப்பட்டவன், நயவஞ்சகன், புகழுக்காக எது வேண்டுமானாலும் செய்பவன் ஒதுக்கப்பட்டவன், பிறர் பொருளை அபகரிப்பவன் ஒதுக்கப்பட்டவன்,   சூதாடுபவன், மாதரின் கற்பழிப்பவன் ஒதுக்கப்பட்டவன்.ஒழுக்கங் கெட்ட வாழ்வை வாழ்பவன் தீண்டத்தகாதவன், இப்படி நாம் அடுக்கிக் கொண்டே போகலாம், கடவுள் நம் எல்லோருக்கும்  தந்தை.   நாம் எல்லோரும் அவன் குழந்தைகள்.

தீண்டப்பாடதவர் என்று ஒதுக்கப்பட்ட திரு நந்தனார் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்தாரே அந்தத் தந்தை. காட்டில்  இருந்த வேடன் எச்சிலைத்துப்பியும் மாமிசத்தைக் கொடுத்தும் அவனுக்குக் கண்ணையும் அளித்துத் தரிசனம் தந்து “கண்ணப்ப நாயனாராக ஆக்கினாரே! தோற்றத்தில் அமைப்பில் மாறுதல் இருக்கலாம், சிவப்பாகவோ கறுப்பாகவோ இருக்கலாம், குட்டையாகவோ நெட்டையாகவோ    இருக்கலாம், அறிவாளியாகவோ முட்டாளாகவோ இருக்கலாம். ஆனால் அவனிடம் இருக்கும்   ஆன்மா ஒன்று. வான்புகழ் வள்ளுவன் யார்?அரசியல் தலைவர் திரு ஜகஜிவன்ராம் யார்? திருவள்ளுவர் சொல்கிறார்,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழிலே வேற்றுமை யான்”

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லவர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல்லவர் “

சாதி இல்லை என்பதை “ஆசியஜோதியில் நன்கு விளக்கப்பட்டிருக்கிறது, ஒரு ஆயற்குலச் சிறுவன் வழியில் ஒருவர் மயங்கி விழுந்ததைப் பார்த்துச் செய்வது அறியாது அவர் வெயிலில் வாடாமல் இருக்க பலத் தழைகள் அருகில் நடுகிறான்,

“தெய்வக் குலத்தவனை எளியேன்
தீண்டலும் ஆகாதினிச்
செய்வதும் யாதெனவே -சிறிது
சிந்தை தயங்கி நின்றான் “

பின் அவன் வெள்ளாடு ஒன்றை அழைத்து வந்து அவரின் மயக்கம் தீர மடுவை வாயில் கறந்து விட்டான்.  அவரும் மயக்கம் நீங்கிக் கண் விழித்து “இன்னும் கொஞ்சம் பால் பாத்திரத்தில் தருவாயா?” என்று கேட்கிறார்,

“ஐயயோ ஆகாதென்றான் -சிறுவன்
அண்ணலே யானும் உனைக்
கையினால் தீண்ட வொண்ணா இடையன் ஓர்
காட்டு மனிதனென்றான் “
புத்தர் சொல்கிறார் ,,,,,,,
இடர் வரும் போதும் -உள்ளம்
இரங்கிடும் போதும்
உடன் பிறந்தவர் போல் -மாந்தர்
உறவு கொள்வர் அப்பா,

ஓடும் உதிரத்தில் -வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப்பார்த்தாலும்-சாதி
தெரிவதுண்டோ அப்பா
எவர் உடம்பினிலும் -சிவப்பே
இரத்த நிறமப்பா !
எவர் விழி நீர்க்கும் -உவர்ப்பே
இயற்கைக் குணமப்பா “

கவிமணி திரு தேசிக வினாயகம் பிள்ளையின் இந்தக் கவிதை சாதி இல்லை என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த இந்தச் சாதிஅமைப்பு ஏற்பட்டு அதனால் துன்பமடைந்தவர் பலர். பலர் கோவிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை குடிக்கும் தண்ணீரைக் கூட குளத்திலிருந்தோ மற்ற நீர் நிலையிலிருந்தோ எடுக்க அனுமதி இல்லை, சிலரைத் தாழ்ந்தவர் என்றும் சிலரைத் தீண்டத் தகாதவர் என்றும் சமூகம் ஒதுக்கி வைத்தது. பல தடைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலை மாறப் போராடியவர் திரு. அம்பேத்கர்,  திரு. காந்திஜி தன் பள்ளியில் உயர்ஜாதி மாணவனுக்குப் பலகையும் ,தாழ்ந்த ஜாதி மாணவனுக்கு கீழே ஒரு கோணிப்பை அமரக் கொடுப்பதும் கண்டு அம்பேத்கர் மனம் வெதும்பினார், ஆனால் ஒரு அந்தணர், ஆசிரியர் மிகவும் அன்பொழுகப் பழகி எல்லோரும் ஒன்றாகப் பாவித்து தன் உணவு சிற்றுண்டி எல்லோருக்கும் கொடுத்து எல்லோர் மதிப்பையும் பெற்றார், அவர் ஞாபகமாக அவர் பெயரை பீமராவ் என்று சேர்த்துக் கொண்டார். அவர் தன் வாழ்வில் தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காக ஒரு கழகம் ஆரம்பித்து அதில் படிப்புடன் விளையாட்டு என்று எல்லாம் சேர்த்தார் அவருக்குப் பாராட்டாகக் கிடைத்த பணமெல்லாம் தாழ்த்தப்பட்டவர் கழகத்திற்கு வழங்கி விட்டார்.  அவர்களைக் கோவிலுக்குள் செல்லும் அனுமதிக்கு போராட்டம் நடத்தி வெற்றியும் கண்டார்.

“சாதி இல்லையடி பாப்பா என்று உணர்த்தியதில் இவருக்கு  அதிகம் பங்கு உண்டு, எந்தச் சாதி உயர்ந்தது என்ற சர்ச்சை உண்டாகுமானால் சமுதாயம் சீர் குலையும்,  நாட்டில் கலகம் பிளவு தலை தூக்கும், ஒரு அரசன் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒரு நாவிதனும் தான் இதில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பேச்சுக்கே இடமில்லை,

ஒருவனுக்குச் சாதி முக்கியமில்லை, சீலமே முக்கியம். ஒரு அந்தணர் தூய்மை இல்லாமல் சிற்றின்பத்தில் ஈடுபட்டு ஒழுக்கமின்மையாய் இருந்தால் அவனை விடச் சீலமிக்க தாழ்த்தப்பட்டவர்   மிகவும் மேல் படியில் உயர்ந்து பிராம்மணனின் இடத்தைப் பிடிக்கிறார்,  சாதி என்பது குணத்தைப் பற்றிய பிரச்சனைதான் என்று நினக்கிறேன். சாதி என்ற ஏற்பாட்டின் படி சில பிரிவுகள் வகுப்பு வாதங்களை வளர்த்து, பொறாமை, துவேஷம் போன்ற வேண்டாத விதையையும் விதைத்து, அதனால் தனக்கு ஆதாயம் தேடிக் கொள்கின்றனர். பலப் பிரிவுகள் பயத்தினால் அடிமை போன்று வேலைகளும் செய்கின்றனர், பரந்த நோக்கம் இல்லாமல் சிலர் பிரிவினையை அதிகமாக்குகின்றனர். உயர்ந்த சாதி என்ற பிராம்மணர்களும் தங்கள் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டு ஏமாற்று வேலை செய்கின்றனர்.

மற்றப் பிரிவுகளும் லஞ்சம் பேராசை போன்ற குழிகளில் விழுகின்றனர், கண்ணியமான வழிகளில் பொருள் ஈட்டாமல் எளிதாக ஏமாற்றிப் பொருள் சேர்க்கும் எண்ணம் கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்கின்றனர், பொருள் ஈட்டினாலும் அறவழியில் செலவழிக்காமல் தன்னலத்திற்காக மட்டும் செலவு செய்கின்றனர்

இந்தப் பிரிவினை மனப்பான்மை ஒழிய வேண்டும். ஒற்றுமை, தியாகம், சேவை, அன்பு, பண்பு பக்தி கொண்ட புதிய யுகம் படைக்க வேண்டும்.  இறைவன் முன் எல்லோரும் சமம்   என்பதை உணர வேண்டும். ஒருவருக்கொருவர் மதிப்பு தர வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் அதற்கு ஒரு கௌரவமும் மரியாதையும் தர வேண்டும். தேசக்கவி பாரதியார் பாட்டுடன் இதை நிறைவு செய்கிறேன்,


“எல்லோரும் ஒர் குலம் எல்லோரும் ஓர் இனம்

எல்லாரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ,
பாரத சமுதாயம் வாழ்கவே, வாழ்க வாழ்க, பாரத சமுதாயம் வாழ்கவே”

 

 

படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathi 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “சாதிகள் இல்லையடி பாப்பா

  1. //பெரும்பாலான மக்கள் உண்பதும், உறங்குவதும், குடிப்பதும், களிப்பதும் என்பதிலேயே  காலத்தைக் கழிக்கின்றனர், அற்ப விஷயங்களிலேயே சிந்தனையைச் செலுத்தினால் ஆக்கச் செயலில்  சிறப்பாக எப்படிப் பணி செய்ய முடியும்? எத்தனை அறிவாளிகள், மேதைகள். சாதி மதம் ஒழிக்க வேண்டும் என்று விண் அதிரக் கர்ஜித்தாலும் மனிதன் மனம் கடுகளவேனும்   விரியவில்லையே ! //

    Superb!  

  2. “சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி
    சொல்லல் பாவம்” என்று பாரதியார் குழந்தைகளைப்
    பார்த்துச் சொன்னதன் காரணம், பெரியவர்களை
    இனிமேல் திருத்த முடியாது என்ற எண்ணம் தான்.
    “மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.” என்ற குறளில்
    கல்வியைவிட, வெறும் குடிப்பெருமையை விட
    ஒழுக்கமே உயர்ந்தது என்று சொன்ன வள்ளுவர்
    வேறு ஒரு குறளில் ஒழுக்கமே உயிரைவிட
    உயர்வானது என்றும் சொல்லியுள்ளார். அப்படி
    ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் உன் குடி உயரும்
    என்றும் சொல்லுவதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
    இரா.தீத்தாரப்பன், ராஜபாளையம்.

  3. ஆசிரியருக்கு என் அன்பான வாழ்த்துக்கள் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *