சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் – பகுதி – 3

1

முனைவர் நாகபூஷணம்

சென்ற முறை பிறக்க இருக்கும் குழந்தையின் உரிமைகளைப் பற்றிப் பேசினோம். இம்முறை மண்ணில் பிறந்த பிறகு குழந்தைகளுக்கு உண்டான உரிமைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

பிறக்க இருக்கும் குழந்தையின் உரிமை , மண்ணில் கண் மலரும் வரை , மண்ணில் மலர்ந்த பின் வயதுத் தகுதி அடையும் வரை (அதாவது 18 வயது முடியும் வரை age of majority) குழந்தையின் இயற்கையான பாதுகாவலரை அதாவது பெற்றோரை (natural guardian) சார்ந்திருத்தல் இயல்பு . சில வேளைகளில் பெற்றோர் கவனிக்க இயலா நிலை நேரலாம். உதாரணமாக இரு பெற்றோரும் இயற்கை எய்தல் , பொறுப்பேற்க மறுத்தல் (divorces , single parent etc) குழந்தையைப் பராமரிக்கும் வசதி வாய்ப்பற்றோர் , மன நலக் குறைபாடுடையவர்கள் போன்ற சூழ்நிலைகள் நேரலாம்.

அந்த சமயங்களில் குழந்தையின் நெருங்கிய உறவினர்கள் , பெற்றோரின் உடன் பிறந்தோர் , தத்து எடுத்தோர் என்று இவருள் எவரேனும் சட்டப்பூர்வமாகப் பொறுப்பு ஏற்க வேண்டியவராவர். குழந்தையின் நல்ல வளர்ச்சிக்கேற்ற உணவு , உடை உறையுள் அறிவு மலர்ச்சிக்குத் தேவையான கல்வி , தனித்தனமை , மனித மதிப்பு , மனித மாண்பு இவற்றை அடையத் தேவையான வாய்ப்பு ஆகியவையும் படிப்படியாகக் கிடைக்கத் தம்மால் இயன்ற அளவு ஊக்க சக்தியாகவும் , உந்து சக்தியாகவும் , பெற்றோர்/பாதுகாவலர் இருக்க வேண்டும்.

1948ஆம் ஆண்டு மனித உரிமை பொது இணக்க ஒப்பந்த விதிப்படி குறைந்த அளவு ஆரம்பக் கல்வி அளவிலாவது கட்டணம் ஏதுமில்லாக் கல்வி உரிமையைப் பெற வேண்டும். அது கட்டாயக் கல்வியாகவும் ஆக்கப் பெற வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்நாட்டு குடி மக்கள் அனைவரின் நலனும் , காக்கப்பெறத் தேவையானவற்றை நாடு மேற்கொள்ள வகை செய்யும் விதிமுறைகள் வகுக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் பிஞ்சுப் பருவத்தினர் , சிறார் மற்றும் இளைஞர் ஆகியோர் தன்னுரிமை , மன உயர்வு , முதலியவற்றைக் காத்துக் கொள்ளும் வசதி வாய்ப்புகளோடு கூடிய வளமையடையச் செய்ய வேண்டும். மேலும் இவர்கள் சுரண்டப் படுவதிலிருந்து காக்கப் பெற வேண்டும் , பொது அடிப்படையிலோ , மன நலத்தாலோ புறக்கணிக்கப் படுவதிலிருந்தும் காக்கப் பட வேண்டும்.
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது தடை செய்யப் பட்டுள்ளது.

குற்றவியல் சட்டமும் குழந்தைகளும் :

1. 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் செயல்கள் குற்றமாகக் கருதப் படாது.

2. 7 முதல் 12 வயது வரை வயிதிலான குழந்தைகள் தாம் செய்வதன் விளைவுகளை அறியுமளவு போதுமான பக்குவப்படாத நிலையில் , தம் செயலின் பின் விளைவுகள் குறித்துப் புரிந்து கொள்ளாமல் செய்வதேதும் குற்றமாகக் கொள்ளப்படுவதில்லை.

3. கருச்சிதைவு , பிறக்க இருக்கும் குழந்தைக்கு காயம் விளைவிப்பது , பிஞ்சு குழந்தைகளைக் கவனிப்பின்றிக் கை விடுவது , பெற்ற குழந்தையை மறைத்தல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

4. தவறான நோக்கத்தோடு குழந்தையைக் கடத்துதல் குற்றம். குழந்தைகளைக் கடத்திச் சென்று பெருந்தொகை கேட்டு மிரட்டுவது குற்றம். அங்கக் குறை பாடுள்ளதாக்கி இரந்துண்ணச் செய்வதும் , அதில் பொருளீட்டித் தரச் சொல்வதும் குற்றம்.

5. பாலியல் குற்றத்திற்கு வலியுறுத்த , பெண் குழந்தையைக் கடத்தி இத்தகைய நோக்கில் பணத்திற்காகக் கை மாற்றுவது , வியாபாரம் செய்வது முதலியவையும் குற்றம்.

வருங்காலத்தை வளம் கூட்ட வரும் வழித்தோன்றல்களை , எதிர்காலத் தூண்களை, நிகழ்கால நியாயமற்ற தேவைகட்காக விலை பேசுவது அடிமைத் தொழிலாளியாக்குவது , அறிவாற்றல் , நல் வாய்ப்பு , மனித நேய மனப்பாங்கு , ஆகியவற்றை வளர்க்க வேண்டிய இளம் வயதில் அவர்கட்குரிய வாழ்வை அமைத்துக் கொடுக்கத் தவறிய சமூகம் அறிந்தோ அறியாமலோ அவர்களைச் சமுதாய காழ்ப்புணர்வோடு வளரச் செய்யும் கொடுமையைச் செய்து விடுகிறது.

வாழையடி வாழை என வழித் தோன்றல் வேண்டி நோன்பிருந்து மக்கட்பேறு பெறுவோர் தம் அறியாமையாலோ , வேண்டாத பழக்கங்கட்கு அடிமையாகியோ தம் மழலைச் செல்வத்தை மாண்பிழக்கச் செய்யும் கொடுமையே பல தீய விளைவுகளுக்கு அடித்தளம் அமைத்து விடுகிறது என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

மீண்டும் வருவேன்.

 

படங்களுக்கு நன்றி : https://www.google.com/search?aq=f&sourceid=chrome&ie=UTF-8&q=children+photo

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் – பகுதி – 3

  1. Very interesting article about Laws dealing with Children. Very informative and interesting. Please continue.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *