பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 12

2

E.Annamalaiபேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

மின்தமிழ் இணையக் குழுமத்தில் complex number என்ற கணிதவியல் கருத்துக்குத் தமிழ்ச் சொல் என்ன என்ற விவாதத்தில் கலப்பெண், செறிவெண், சிக்கலெண் என்ற மூன்று சொற்கள் வழக்கில் உள்ளன என்று சொல்லி, ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த சொல் எது என்று சொன்னார்கள். இந்தச் சொல், கணிதக் கலைச்சொற்களில் அடிப்படை நிலையில் உள்ள ஒன்று. இந்த விவாதத்தில் பங்கெடுத்துக்கொண்ட ஃழான்-லூய்க் செவ்வியார் (Jean-Luc Chevillard) என்னும் பிரெஞ்சுத் தமிழறிஞர் எழுப்பிய கேள்வி:

சொல்லாக்கம் போன்ற சாதாரண விஷயத்திலும் தமிழர்கள் ஏன் ஒருமித்த முடிவுக்கு வரச் சிரமப்படுகிறார்கள்?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

கலைச்சொற்களின் சமூக ஏற்பு பற்றி நான் கள ஆய்வு செய்யவில்லை. கலைச்சொல்லில் இணக்கமின்மைக்கு என்ன காரணம் இருக்கலாம் என்று நான் நினைப்பதைச் சொல்கிறேன். ஒருமித்த முடிவுக்கு வர முடியாமைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருக்கலாம். இவற்றில் சில, வேறு சில மொழிகளுக்கும் – குறிப்பாக நவீனமயமாக்கப்படும்மொழிகளுக்கும் – இருக்கலாம். சில தமிழ் மொழிக்கே உரியவை.

எந்தச் சமூகத்திலும் மாற்றுக் கருத்துக்கு இடம் உண்டு. மாற்றுக் கருத்துகளை வாதிட்டு ஒரு கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்வதும் உண்டு. இது எல்லா விஷயங்களிலும் நடப்பதில்லை; தேவையும் இல்லை. தமிழ்ச் சமூகத்தில் சொல்லாக்கத்தில் ஒருமிப்பு (consensus) இல்லாததைப் பார்க்கிறோம். மொழியின் முன்னேற்றத்திற்கு இதில் ஒருமிப்பு தேவை.

மாற்றுக் கருத்தை மாற்றார் கருத்தாகப் பார்க்கும் வழமை, தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறது. மாற்றார் கருத்து என்னும்போது தன்முனைப்பு வந்துவிடுகிறது; தனிப்பட்ட ஆசாபாசங்கள் வந்துவிடுகின்றன. கணினியில் தமிழ் எழுத்துருவை வடிப்பதில் இருபதுக்கும் மேற்பட்ட குறியீட்டு முறைகள் இருக்கின்றன. ஒருவர் கணினியில் தமிழில் எழுதுவதை இன்னொருவர் படிக்கத் தனி முயற்சிகள் எடுக்க வேண்டும். இருப்பினும், அரசு தலையிடும் வரை, இப்போது ஒருங்குறிக் குழுமம் (Unicode Consortium) வெளியிலிருந்து ஒரு பொதுக் குறியீட்டு முறையைத் தரும் வரை, தமிழ் சார்ந்த கணினிப் பொறிஞர்கள் கலந்து பேசி ஒரு ஒருமித்த குறியீட்டைத் தரவில்லை. ஒருமிப்பு, வெளியிலிருந்துதான் வர வேண்டியிருக்கிறது.
தமிழைப் பொறுத்தவரை மொழிக் கொள்கையில் (language ideology) தமிழர்களிடையே ஒருமைப்பாடு இல்லை. மொழித் தூய்மையில் தொடங்கி, ஆங்கில ஒப்புமை என்று அது பன்முகம் கொண்டிருக்கிறது. சொல்லாக்கத்தில் ஒருமைப்பாடு இல்லாததற்கு இது ஒரு காரணம். கேள்வியில் உள்ள சொல் வேறுபபாட்டுக்கு இது காரணம் அல்ல என்றாலும் கீழே உள்ள அதிகப்படியான காரணங்களில் ஒன்றோ, பலவோ அதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆங்கில ஒப்புமைக் கொள்கை, ‘தமிழ் நவீன மொழியாக ஆங்கிலத்தை ஒட்டி அது மாற வேண்டும்’ என்ற கருத்தை உள்ளடக்கியது. இதன்படி, எந்தப் புதுத் தமிழ்ச் சொல், ஆங்கிலச் சொல்லின் பொருளை – வேர்ப் பொருளை – அப்படியே பிரதிபலிக்கிறது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் பல சொற்கள் உருவாக்கப்பட்டு, அவற்றை உருவாக்கியவர்கள் தங்கள் உருவாக்கமே ஆங்கிலச் சொல்லுக்கு இணை என்று வாதிட்டு, தங்கள் சொல்லை மாற்றுவதில்லை.

தமிழர்களுக்குத் தங்கள் மொழியின் சொற்கள் மீது அறிவு சார்ந்த உறவை விட உணர்வுபூர்வமான உறவு, வன்மையாக இருக்கிறது. அதனால், ஒரு சொல்லைச் செதுக்கிச் செதுக்கி, மாற்றி மாற்றிச் செம்மை பண்ணுவதில் மனநிறைவு காண்கிறார்கள். இதனாலும் புதிதாக வரும் ஒரு சொல் நிலைபெறுவதில்லை.

மொழி வளர்ச்சி பற்றிய சிந்தனையில் தமிழர்களிடம் ஒரு தர்க்க முரண் (logical fallacy) இருக்கிறது. மொழியின் புதிய பயன்பாடு, மொழி தன்னை அதற்குத் தகுதி ஆக்கிக்கொண்ட பின்னரே வர வேண்டும் என்பதே அந்த முரண். ‘தமிழில் கலைச்சொற்கள் உருவான பின்னரே தமிழை அறிவியல் கற்றுக் கொடுக்கப் பயன்படுத்த வேண்டும்’ என்னும் வாதம் இந்தச் சிந்தனையால் வருகிறது. இந்தத் தர்க்க முரணைச் சொல்லாக்கத்திலும் காணலாம். எந்தச் சொல்லாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு, புதிய சிந்தனைகளை வெளிப்படுத்த, தமிழின் பயன்பாட்டை முன்னெடுத்துச் செல்ல விடாமல், உருவாக்கிய சொல்லைச் செம்மைப்படுத்துவதிலேயே காலத்தைச் செலவிடுவதை இந்தச் சிந்தனை நியாயப்படுத்துகிறது.

கடைசியாகச் சொல்லவிருக்கும் காரணம், எனக்கு முக்கியமாகப் படுகிறது. ஆங்கிலம் போன்ற நவீன மொழிகளில், புதிய கருத்துகளையும்  தொழில்நுட்பப் பொருள்களையும் உருவாக்குபவர்களே அவற்றுக்குரிய சொல்லையும் உருவாக்குகிறார்கள். இரண்டின் சொந்தக்காரர்கள் என்ற முறையில் அவர்களுடைய சொல்லுக்கு நம்பகத்தன்மை (authenticity) வருகிறது. அவர்களுடைய சொல்லை மற்றவர்கள் கேள்விக்கு உள்ளாக்குவதில்லை. தமிழ் போன்ற நவீனமாகும் மொழிகளில் கலைச்சொற்கள் அந்தச் சொற்களைத் தந்த கருத்தின் உருவாக்கத்தில் தொடர்பு இல்லாத மூன்றாவது நபர்களால் உருவாக்கப்படுகின்றன. அதனால் அவர்கள் உருவாக்கும் சொற்களுக்கு நம்பகத்தன்மை இருப்பதில்லை; அவற்றை மாற்றி மாற்றி அமைப்பதில் ஒரு தடையையும் இந்த நபர்கள் உணர்வதில்லை. தமிழர்கள் தமிழில் ஆய்வு செய்தாலும், ஆங்கிலத்தில் செய்தாலும் ஆய்வாளர்களே (கற்றுக் கொடுப்பவர்கள் மட்டுமல்ல) கலைச்சொற்களை உருவாக்கும்போது, ‘எது சரியான சொல்’ என்ற கேள்வியின் வலு குறைந்துவிடும்.

தமிழியல் தவிர்த்து மற்ற அறிவுத் துறைகளின் கலைச்சொல் ஆக்கத்தில் தமிழ் அறிஞர்களின், தமிழ் அன்பர்களின் பங்கு இரண்டாம் பட்சமே என்னும் கருத்து வேரூன்றினால் சொல் வேறுபாடு வெகுவாகக் குறையும். இந்தக் கருத்தால் தமிழ் கெடாது. சொல் பற்றி இணக்கம் இல்லாமல், தமிழின் பயன்பாடு குறைந்தாலோ தள்ளிப்போடப்பட்டாலோதான் தமிழ் வளர்ச்சி பாதிக்கப்படும்.

===============================================

(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 12

  1. தமிழரின் மனோபாவத்தைத் துல்லியமாக, மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    1968இல் கலைச்சொல்லாக்கத்தில் ஒருமையை வலியுறுத்தியபொழுது எனக்குத் தமிழகத்தில் தந்த பதிலில் உள்ள அதே கருத்து, உங்கள் பதிலிலும் உள்ளது.
    இதுதான் தமிழ்ச்சொல் வேறல்ல என்ற கலைச்சொல்லாக்கத் தரத்தை வலியுறுத்திய என்னைத் தமிழகம் ஏற்கவில்லை.
    சில மாதங்களுக்கு முன் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அலுவலகம் சென்று இதை வலியுறுத்தி வந்தேன். உலக மொழியாகிய நிலையில் எழுந்தமானமாக வந்து, விவாதித்து, காலத்தின் ஏற்புக்கு விடுவதெனின் இன்றைய வேகத்துக்கு ஒவ்வாது எனச் சொன்னாலும் புரிந்துகொள்ள மறுப்பவரைகளை விட, ஆர்வமில்லாதவர்களையே காண்கிறேன்.

  2. //ஆங்கிலம் போன்ற நவீன மொழிகளில், புதிய கருத்துகளையும் தொழில்நுட்பப் பொருள்களையும் உருவாக்குபவர்களே அவற்றுக்குரிய சொல்லையும் உருவாக்குகிறார்கள். இரண்டின் சொந்தக்காரர்கள் என்ற முறையில் அவர்களுடைய சொல்லுக்கு நம்பகத்தன்மை (authenticity) வருகிறது. //

    இதில்தான் முரண்பாடும் வரலாற்று உண்மை இல்லாமையும் உள்ளன.

    அறிவியல் கருத்துகளைப் பல நாட்டவர்கள் உருவாக்கினார்கள், உருவாக்குகிறார்கள்.
    ஆங்கிலேயராகிய நியூட்டன் கூட ஆங்கிலத்தில் தன் ஆய்வுரையை
    எழுதவில்லை. உருசியர்களும், இத்தாலியர்களும் (கலீலியோ,
    டாரிசெல்லி), பிரான்சியர், இடாய்ச்சு (செருமன்),
    டேனியர், இந்தியர்களும், சீனர்களும் நிப்பானியர்களும் ஆக்கம் தந்துள்ளனர்.

    ஒரு சொல்லின் பயன்பாட்டுக்கு வலு ஏற்படுவதும், நம்பகத்தன்மை
    ஏற்படுவதும் அதனை உற்றறிந்து பயன்படுத்தும் அறிவார்ந்த
    ஒரு குழுமம் இருப்பதுதான்,. அவர்களே அந்த கருத்தை உருவாக்கியவர்களாக
    இருக்க வேண்டியதில்லை.

    இது பேராசிரியர் அவர்களின் மிகவும் தவறான கருதுகோள் என்பது என் கருத்து

    எல்லாவற்றையும் கண்டுபிடித்தவர்கள்ஆங்கிலேயர்கள் அல்லர்,
    ஆனால் இன்றைய நிலையில் ஏறத்தாழ எல்லாவற்றைப்
    பற்றியும் ஆய்வு செய்து, பேசி, அலச ஆங்கிலம் அறிந்தவர்கள் உள்ளனர்.
    இதுவே முகனை (முதன்மையானது). எதைப்பற்றி என்றாலும்
    பல படிநிலைகளில் விரிவாக எடுத்துரைக்கும் கட்டுரைகளும் நூல்களும்
    எழுதுகிறார்கள் (எழுதுவோர் ஆங்கிலேயர்கள் மட்டும் அல்லர், தமிழர்
    முதற்கொண்டு பலமொழியினர்). இப்படைப்புகளைப்பற்றி
    மேலும் உரையாடுகிறார்கள், இன்னும் சிலர் அக்கட்டுரைகளையும்
    நூல்களையும் விரிவாக்கியோ, மேம்படுத்தியோ வெளியிடுகிறார்கள்.
    இப்படி ஆறிவார்ந்த உரையாடு-செயலாடு உலகம் உள்ளது.
    மொழி பற்றியும் பல்வகைத் துறையறிவு பற்றியும் பற்பலவாறு
    சீர்நிறுவுகிறார்கள். இவை மட்டுமல்லாமல் ஆங்கிலத்தின்
    முன்மைக்கும் முன்னாண்மைக்கும் பலவகையான அரசியல்
    பொருளாதாரக் காரணங்களும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *