தமிழ்த்தேனீ

இன்று மார்கழி மாத அமாவாசை,அதுவும் தவிர ஹனுமத் ஜெயந்தி எப்படிப்பட்ட விசேஷமான நாள்!

ஹனுமன் என்று நினைத்தாலே அவருடைய கம்பீரமும், கூடவே பக்திகலந்த அவரது பணிவும் கண்ணுக்குள் நிறைகிறது.

அசாத்ய சாதக ஸ்வாமின் அசாத்யம் தவகிம்வத:
ராமதூத க்ருபா சிந்தோ மத்கார்யம் சாதயப் ப்ரபோ”

ஹனுமனை நினைத்தாலே எப்படிப்பட்ட காரியமானாலும் அதில் ஜெயம் கிடைத்துவிடும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒரு அபூர்வ தெய்வம் அல்லவோ ஹனுமன்?

ஶ்ரீ ராமனால் இயலாத காரியம் இந்த ஈரேழு லோகத்திலும் இருக்கிறதா என்ன?ஆனாலும் அந்த ஶ்ரீ ராமனே தன் காரியத்தை, அதாவது சீதா தேவியை தன்னோடு இணைத்து வைக்க ஹனுமனைத்தானே நியமித்தார்! அப்படியானால் ஹனுமனால் இயலாத காரியம் இல்லவே இல்லை ஏன்று வானவர்க்கும் மண்ணுலகத்தாருக்கும் முப்பது முக்கோடி தேவர்களுக்கும் உணர்த்தவே ஶ்ரீ ராமன் ஹனுமனை அவ்விதம் பணித்தார்! என்ன ஒரு ஆச்சரியமான கருணை ஶ்ரீ ராமனுக்கு.

அஞ்சனையின் கருவில் வாயுதேவனால் பதிக்கப் பெற்று அஞ்சனையின் வயிற்றில் கருவாகி உருவாகி வளர்ந்த அஞ்சனை மைந்தன் ஹனுமான்.

சிறு வயதிலேயே வானில் பறக்கும் சக்தி பெற்றிருந்த ஹனுமான் சூரியனை ஒரு சிவப்புப் பழம் என்று எண்ணி அதைப் பிடிக்க வானிலே உயர்ந்து சூரியனின அருகிலே சென்றார். அப்போது சூரிய சக்தியின் வெப்பம் தாங்காமல் தலைகீழாக பூமியிலே வந்து விழுந்ததனால் அவருடைய முகமும் அப்படி ஆனது என்பர். ஆனால் இதிலே ஒரு மறைபொருள் இருக்கிறது!

சூரியனின் அருகிலே செல்ல முடியுமா? அப்படி யாராலும் செய்ய முடியாத காரியத்தை குழந்தைப் பருவத்திலேயே செய்த மஹா பராக்கிரமசாலி ஹனுமன். அவரின் வீரத்தையும் பராக்ரமத்தையும் கண்டு வியந்து சூரிய பகவானே தன் அருளை ஹனுமனுக்கு அளித்தார் என்பர் பெரியோர், அப்படிப்பட்ட ஹனுமான் மிகச் சிலருக்கே கிடைத்த காடாலிங்கனம் என்னும் ஆலிங்கனத்தை அடைந்தார். ஆமாம் பரம்பொருளான ஶ்ரீ ராமனின் அணைப்பு அவ்வளவு எளிதில் கிடைத்திடுமா.கிடைத்ததே ஹனுமனுக்கு. அதுதான் காடாலிங்கனம்

ஆமாம் சீதாதேவியை கண்டுபிடித்து தன்னோடு சேர்த்து வைத்த ஹனுமனுக்கு என்ன பரிசளித்தால் பொருத்தமாயிருக்கும் என்று யோசித்து ஶ்ரீராமன் ஹனுமனை அழைத்து கருணையோடு அவரை தன் மார்போடணைத்து ஆலிங்கனம் செய்து கொன்டாராம். இதைவிடப் பேறு வேறென்ன இருக்க முடியும், இதைவிட உயர்ந்த பரிசு வேறென்ன இருக்கமுடியும்?

அப்படிப்பட்ட திவ்யமான பரிசை பெற்ற , இறைவன் ஶ்ரீராமச்சந்திரமூர்த்தியின் காடாலிங்கனத்தைப் பெற்ற ஹனுமனுக்கு திவ்ய மங்களம். ஹனுமனை மனதாரநேசிப்போம், மனதார வணங்குவோம். அவன் தாளில் 1008 முறையோ, 108 முறையோ அல்லது ஒரே ஒரு முறையோ ஶ்ரீ ராம ஜெயம் என்று எழுதி வைத்தாலே நம் வாழ்வில் எல்லா மங்களங்களும் உண்டாகும். ஏனென்றால் ஹனுமனுக்கு மிகவும் பிடித்தது ஶ்ரீ ராமநாமம் மட்டுமே.

அதனால் ஶ்ரீராமச்சந்திரமூர்த்தியின் அருள் பெற்ற ஹனுமனுக்கு உகந்த துளசி மாலையை அணிவித்து அவருடைய பாதாரவிந்தங்களில் அவருக்கு மிகவும் பிடித்தமான ஶ்ரீ ராமஜெயம் எழுதி வைத்து அவரை வணங்கி வாழ்வில் எல்லா வளங்களையும், எல்லா நலங்களையும் நாமும் பெறுவோம்

ஜெய் ஆஞ்சனேயா!
ஜெய் ஶ்ரீராம்

படத்திற்கு நன்றி: 

http://jselvi.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *