பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 13

E.Annamalaiபேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

கணேசனின் கேள்வி:

கிரந்த எழுத்துகளை ஒருங்குறியில் (Unicode) சேர்ப்பது பற்றி அரசு தலையிடும் அளவுக்குச் சர்ச்சை எழுந்துள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

பிராமி எழுத்து முறையிலிருந்து சிங்கள, திபேத்திய, பர்மிய, தாய் எழுத்துகளோடு, தமிழ் உள்ளிட்ட பெரும்பான்மையான இந்திய மொழிகளின் எழுத்துகள் தோன்றியது போல கிரந்த எழுத்துகளும் தோன்றின. தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் சமஸ்கிருதத்தை எழுதவும் சமஸ்கிருதம் மிகைபடக் கலந்த மணிப்பிரவாளத் தமிழ் நடையை எழுதவும் கிரந்த எழுத்துகள் பயன்பட்டன. இன்று தமிழில் ஆங்கிலச் சொற்களைக் கலந்து எழுதும் (இது கடன் சொற்களைச் சேர்த்து எழுதுவதிலிருந்து வேறுபட்டது) சிலர் அந்தச் சொற்களை ஆங்கில எழுத்துகளிலேயே எழுதுவது போன்றது இந்தப் பழக்கம்). தமிழ்க் கல்வெட்டு ஆவணங்களிலும் கிரந்த எழுத்துகளை மிகுதியாகப் பார்க்கலாம்.

தமிழ் இலக்கியத்தில், தொல்காப்பியரும் பின்வந்த இலக்கண ஆசிரியர்களும் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்ற சொற்களைத் தமிழில் தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுத விதித்த நெறிமுறையைப் பின்பற்றி, பதினெட்டாம் நூற்றாண்டு வரை, கிரந்த எழுத்துகள் இடம் பெறவில்லை. பின்னால் ஐந்து கிரந்த எழுத்துகள் (ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ) தமிழ் அரிச்சுவடியின் விரிவாக இடம் பெற்றன. கவிதை உட்பட இன்றைய நவீனத் தமிழ் இலக்கியத்தில் இந்தக் கிரந்த எழுத்துகள் தயக்கமின்றிப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எழுத்துகள் பல, தமிழர்களின் பெயர்களில் உள்ளன, முன்னாள், வருநாள் முதல் அமைச்சர்களின் பெயர்கள் உட்பட. தமிழ்ச் சொற்களிலும் தமிழர் பெயர்களிலும் இடம் பெற்றுள்ள இந்த ஐந்து கிரந்த எழுத்துகளுக்கும் (இன்னும் இரண்டு குறியீடுகளுக்கும்), பழைய தமிழ் எண்களைப் போலவே, ஒருங்குறியில் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், தமிழ் எழுத்துகளின் குறியீட்டு எண்களின் (code points) தொடர்ச்சியாக, இடம் தரப்பட்டிருக்கிறது. இந்த ஏற்பாடு தொடர்ந்து இருக்கும்; இருப்பது தேவை.

ஒருங்குறி, உலக மொழிகள் எல்லாவற்றின் எழுத்துகளுக்கும் இடம் தருகிறது. உலக வழக்கிலிருந்து போய்விட்ட எழுத்துமுறைகளுக்கும் இடம் தருகிறது. ஏனென்றால் அந்த எழுத்துகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் ஆய்வுலகிற்கு முக்கியம். அந்த முறையில் கிரந்த எழுத்துகளுக்கும் தேவை உள்ளது. அதை ஏற்று, இந்திய அரசு ஒருங்குறி ஆணையத்திற்கு எழுதியிருக்கிறது. தமிழைப் பொறுத்த வரை, மணிப்பிரவாள நடையில் உள்ள வைணவ உரைகளையும் பல கல்வெட்டு ஆவணங்களையும் எண்வயமாக்கி (digitize) ஆய்வுக்குப் பயன்படுத்த இந்த முடிவு உதவும். இதிலும் சர்ச்சை இருக்க முடியாது.

சர்ச்சை கிளம்பியிருப்பது கிரந்த எழுத்துக்களைப் பற்றி, உலகளாவிய ஒருங்குறி ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள புதிய வரைவுத் திட்டத்தைப் பற்றித்தான். இதை எழுதி அனுப்பியிருப்பவர் டாக்டர் ஸ்ரீரமண சர்மா என்பவர். இவர் காஞ்சி சங்கர மடத்தோடு தொடர்புடையவர் என்று சொல்லப்படுகிறது. இந்த வரைவுத் திட்டம் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டதா, அல்லது ஒரு நிறுவனத்தின் சார்பில் அனுப்பப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. இந்த வரைவுத் திட்டத்தை http://www.tamilnet.com/img/publish/2010/11/20100710-extended-tamil-proposal.pdf என்ற பக்கத்தில் பார்க்கலாம். இது, சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளில் எழுத உதவும் பொருட்டுத் தயாரிக்கப்பட்டது. தமிழ் எழுத்துகளில் வடிக்க முடியாத சமஸ்கிருத ஒலிகள் உண்டு என்பது பலரும் அறிந்த உண்மை. அவற்றில் வல்லினத்தின் வர்க்க எழுத்துகளும், உயிர்ப்பொலி ஏறிய (vocalic) ரகர, லகரமும் அடங்கும். சமஸ்கிருத எழுத்துகளில் – அதாவது தேவநாகரி எழுத்து முறையில் – வடிக்க முடியாத தமிழ் ஒலிகளும் உண்டு. அவை எ, ஒ, ழ, ற, ன.

இந்த ஐந்து எழுத்து வடிவங்களையும் கிரந்த எழுத்துகளோடு சேர்க்கும்படி சர்மா பரிந்துரைத்திருக்கிறார், அப்படிச் சேர்ப்பது தமிழுக்கு ஆபத்து என்பதே சர்ச்சையின் சாராம்சம். இணைப்பில் உள்ள அவருடைய வரைவுத் திட்டத்தில் இந்தப் பரிந்துரை இல்லை. மேலே சொன்ன கிரந்த எழுத்துகளுக்கு ஒருங்குறியில் தனி இடமும் குறியீட்டு எண்ணும் தர வேண்டும் என்ற இந்திய அரசின் பரிந்துரையின் திருத்தமாக, கிரந்த எழுத்துகளோடு மேலே சொன்ன ஐந்து தமிழ் எழுத்துகளையும் சேர்க்க வேண்டும் என்று அவர் வேறு இடத்தில் சொல்லியிருக்கலாம்; அல்லது வேறு யாராவது சொல்லியிருக்கலாம். அது பற்றி எனக்குத் தெரியவில்லை.

தமிழைக் கிரந்த எழுத்துகளில் எழுதுவதற்கு இந்தப் பரிந்துரை உதவும்; சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளில் எழுத, இந்தப் பரிந்துரை தேவை இல்லை. ஏனென்றால், சமஸ்கிருதத்தில் இந்த எழுத்துகள் குறிக்கும் ஐந்து ஒலிகளும் இல்லை. இந்தப் பரிந்துரை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. அதைப் பார்க்காமல் ஊகமாகத்தான் பதில் சொல்ல முடியும். தமிழைக் கிரந்த எழுத்துகளில் எழுத, எந்த நடைமுறைத் தேவையும் இல்லை. இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரு வரிவடிவத்தை உருவாக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு மொழிக்கும் உரிய தனி ஒலிகளுக்கான எழுத்துகள் பொது வரிவடிவில் இடம் பெற வேண்டும். தமிழில் தனி ஒலிகளுக்கான எழுத்துகள் மட்டும் இடம் பெற்றால் போதாது. மேலும், பொது வரிவடிவுக்குச் சிலர் தேவநாகரி எழுத்துமுறையையும் சிலர் ரோமன் எழுத்துமுறையையும் அவ்வப்போது பரிந்துரைத்திருக்கிறார்கள். அவையே ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கும்போது, கிரந்த எழுத்துமுறையில் அமைந்த பொது வரிவடிவம், தேவை இல்லாத ஒன்று. இதைத் தேவையற்றது என்ற அடிப்படையிலேயே ஒருங்குறி ஆணையம் ஏற்றுக்கொள்ளாது என்று நினைக்கிறேன். தமிழை அழிக்கும் சதி என்றெல்லாம்  குரலெழுப்பத் தேவை இல்லை.

ஒருங்குறி ஆணையத்திற்குச் சர்மா அனுப்பியுள்ள வரைவுத் திட்டம், ஒருங்குறியில் தமிழ்ப் பகுதியில் சில கிரந்த எழுத்துகளை விரிவாக்கிய தமிழ் (Extended Tamil) என்று சேர்ப்பதன் அவசியத்தையும் கிரந்த எழுத்துகளை எப்படி வடிவமைக்கலாம் என்பது பற்றியும் பேசுகிறது. நடைமுறைப் பிரச்சினை சார்ந்த இரண்டாவதைப் பற்றி இங்கே நான் பேசவில்லை. எழுத்து வடிவின் அழகு, எழுதும் எளிமை முதலான எண்ணங்களின் அடிப்படையில் எது உகந்தது என்று தனியே எழுதப்பட வேண்டியது அது. முதலாவது கொள்கை சார்ந்தது; நோக்கம் சார்ந்தது. கிரந்த எழுத்துகளின் அவசியத்திற்குச் சர்மா இரண்டு காரணங்கள் தருகிறார். ஒன்று, சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளில் எழுத, கிரந்த எழுத்துகள் வேண்டும். உயர் சாதிகளில் நாமகரணம் போன்ற சடங்குகளில் சமஸ்கிருத சுலோகங்களைத் தமிழ் எழுத்துகளில் எழுதிப் படிக்கும் பழக்கம் இன்னும் இருக்கிறது. சமஸ்கிருதம், இந்தி முதலான மொழிகளைத் தமிழ் எழுத்திலேயே படிக்கும் முறையும் இருக்கிறது.

இரண்டு, தமிழ்நாட்டில் வழங்கும் சௌராஷ்டிரம் போன்ற மொழிகளுக்குத் தமிழ் எழுத்துகளோடு கிரந்த எழுத்துகளைச் சேர்த்து ஒரு எழுத்துமுறை உருவாக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை எழுத வழங்கும் ரோமன், தேவநாகரி ஆகிய எழுத்துமுறைகளுக்கு ஒருங்குறியில் விரிவாக்கப்பட்ட எழுத்துகள் உண்டு.

சர்மா சொல்லவில்லை என்றாலும், தமிழ் எழுத்துமுறையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் வழங்கும் பழங்குடி மொழிகளுக்கும் பிற மொழிகளுக்கும் எழுத்துமுறை அமைக்கும்போது கிரந்த எழுத்துகள் தேவைப்படும். தமிழ்நாட்டில் பேசும் மொழிகளைத் தமிழ் எழுத்துமுறையை ஒட்டி எழுதுவதைத் தமிழர்கள் ஒப்புக்கொள்வார்கள். அந்த மொழிகளை தேவநாகரி, ரோமன் எழுத்துமுறைகளில் எழுதுவதை விட, தமிழ் எழுத்துமுறையில் எழுதுவதைத் தமிழர்கள் விரும்புவார்கள். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் தமிழ் எழுத்துகளோடு சில கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும். தமிழின் தூய்மையைக் காப்பதும் தமிழ் எழுத்துமுறையைப் பரப்புவதும் ஒருசேர நடக்க முடியாது.

கிரந்த எழுத்துகளால் தமிழுக்கு ஆபத்து என்ற வாதம் ஏன் முன்வைக்கப்படுகிறது? கிரந்த எழுத்துகள், தமிழர்கள் சமஸ்கிருதத்திலிருந்தும் பிற மொழிகளிலிருந்தும் சொற்களைக் கடன் வாங்குவதை ஊக்குவிக்கும்; தமிழின் தூய்மை கெடும் என்பது ஒரு வாதம். இந்த பயத்திற்கு ஆதாரம் இல்லை. எழுத வசதி இருக்கிறது என்பதால் எந்த மொழியும் அதிகமாகச் சொற்களைக் கடன் வாங்குவதில்லை. ஒரு மொழி பேசுபவர்கள் பிற மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்குவதற்கு கலாச்சார – அரசியல் அதிகாரம், சமூக மாற்றத்தின் தேவைகள், புதிய சிந்தனைகள், பொருள்கள் முதலான பல காரணங்கள் இருக்கின்றன. எழுதும் வசதி, அவற்றில் ஒன்று அல்ல.

தமிழில் உள்ள சொற்களையே கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதுவது அதிகமாகும் என்பது மற்றொரு வாதம். பள்ளி ஆசிரியர், இதழாசிரியர், பதிப்பாளர் போன்ற தமிழை மேலாண்மை செய்வோரின் இடையீடு இல்லாமல், இணையத்தளம், வலைப்பூ போன்ற புதிய ஊடகங்களில் தமிழர்கள் எழுதும்போது பாயஸம், ஸன் டிவி என்று எழுதுவதைப் பார்க்கலாம். புதிய கிரந்த எழுத்துகள் ஒரு சொடுக்கில் கிடைத்தால், அவை தமிழ்ச் சொற்களில் வருவது அதிகமாகலாம். இது ப்ரியம், பத்ரிக்கை என்று இரண்டு மெய்யெழுத்துகளை இடையில் உயிரெழுத்து இல்லாமல் எழுதுவது போன்றது; இதற்கும் கிரந்த எழுத்து கைக்குக் கிடைப்பதற்கும் சம்பந்தம் இல்லை. இப்படி எழுதுவது தமிழைப் பற்றிய ஒரு மனநிலை; மரபை மீறும் மனநிலை. கல்லூரியில் படிக்கும் மகள், பையன்களோடு கைபேசியில் பேசுகிறாள் என்று அந்தச் சாதனத்தைக் கைக்குக் கிடைக்காமல் செய்தால், மனநிலை மாறப் போவதில்லை. தமிழ் தன் சனாதனத்தைக் கொஞ்சம் விட்டுக் கொடுத்து, மரபை நெகிழ்ச்சியாக்கி, அதன் ஈர்ப்புத்தன்மையைக் கூட்ட வேண்டும்.

ஒருங்குறியில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பதைத் தடுத்துவிட்டாலும், தமிழ்ச் சொற்களில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பதைத் தடுக்க முடியாது. ஒருங்குறியில் தனிப் பகுதியில் கிரந்த எழுத்து இருக்கப் போகிறது. தமிழ், ஆங்கில எழுத்துகளைப் போல, தமிழ், கிரந்த எழுத்துகளை ஒருத்தி தன் கணினியில் இறக்கிவைத்துக்கொண்டால், கிரந்த எழுத்துகளை வேண்டும்போது விசைப் பலகையை மாற்றும் சொடுக்கை உபயோகித்து எழுதலாம். தொழில்நுட்பம் மொழியின் மீது சமூகம் செலுத்தும் கட்டுப்பாட்டில் கீறல் ஏற்படுத்துகிறது. இது உலக நியதி.

தமிழின் முன் உள்ள ஒரு முக்கியமான கேள்வி இது. இலங்கைத் தமிழர்களையும் சேர்த்து, இன்று தமிழர்கள் உலகின் பல நாடுகளில் வாழ்கிறார்கள். அங்குள்ள சுற்றுச்சூழலில் உள்ளவற்றையும் உள்ளவர்களையும் அங்குள்ள வாழ்க்கை அனுபவங்களையும் தமிழில் தரத் தமிழ் எழுத்துமுறைக்கு நெகிழ்ச்சி தேவைப்படுகிறது. வெளிநாடுகளில் பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் மீது நம்பிக்கை வர வேண்டுமென்றால் இந்த நெகிழ்ச்சி மிகவும் தேவை. இல்லையென்றால், அவர்களுடைய வாழ்க்கைக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு நைந்துபோகும். தமிழ்நாட்டிலேயே தமிழர்களுக்கு பொருளாதாரக் காரணங்களால் உலகத் தொடர்பு கூடக் கூட, அந்த வாழ்க்கை முறைக்குத் தமிழைப் பொருத்தத் தமிழுக்கு நெகிழ்ச்சி தேவைப்படும்.

தமிழ் எழுத்துக்கும் உச்சரிப்புக்கும் இடையே வேறுபாடு கூடிவருகிறது. பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இங்கே கூறவில்லை. தமிழ்ச் சொற்களிலேயே – இவை கடன் சொற்கள் மட்டுமல்ல – வல்லெழுத்துகளில் ஒலிப்புள்ள (voiced) உச்சரிப்பு இருக்கிறது. குரு, தோசை, பூரி ஆகிய சொற்கள் சில உதாரணங்களே. இந்த உச்சரிப்பு, படித்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவியிருக்கிறது. இந்த மாதிரி புதிய உச்சரிப்புகளைத் தமிழை எழுதும் முறையில் காட்டப் புது வரிவடிவங்கள் தேவை. எப்படிக் காட்ட வேண்டும் என்பது வேறு கேள்வி. காட்ட வேண்டுமா என்ற கேள்வியை ஒருங்குறியில் கிரந்த எழுத்துகள் பற்றிய சர்ச்சையில் எழுப்பி விவாதித்தால் அது தமிழுக்கு நல்லது. இந்த விவாதத்தைத் தமிழைப் பாதுகாக்கும் அரசியல் விவாதமாக ஆக்காமல், தமிழின் வன்மையைப் பெருக்கும் அறிவு விவாதமாக மாற்றினால், அது உலகமயமான அறிவுச் சமுதாயத்தின் புதிய சவால்களைச் சமாளிக்கத் தமிழ் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள உதவும்.

இந்தச் சர்ச்சை இன்னொன்றையும் வெளிக்கொணருகிறது. தமிழ் வளரும் பாதை, அரசிடமிருந்தும் பழைய சமூக நிறுவனங்களிலிருந்தும் விலகி, தமிழ்ச் சமூகத்திற்கு அப்பால் இயங்கும் தொழில்நுட்பம், அவற்றைக் கையாளும் உலகம் சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றின் பாதையில் சேரும் போக்கு தோன்றியிருக்கிறது.

===============================================

(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

பதிவாசிரியரைப் பற்றி

27 thoughts on “பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 13

  1. அண்ணாமலை சொல்கிறார்: “வெளிநாடுகளில் பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் மீது நம்பிக்கை வர வேண்டுமென்றால் இந்த நெகிழ்ச்சி மிகவும் தேவை. இல்லையென்றால், அவர்களுடைய வாழ்க்கைக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு நைந்துபோகும்.”

    இதற்கு எந்த அடிப்படையும் இல்லை. யான் 22 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்கிறேன். என்னவோ இதுவரை இந்த அயல்நாட்டுப் பிள்ளைகள் இன்றைய எழுத்துகள் அனுமதிக்கும் வரம்புவரை மலை மலையாகத் தமிழ்மொழியில் எழுதிக் குவித்திருப்பதாகவும், இன்னும் நுணுக்கமாகத் தங்கள் அயல்நாட்டுச் சூழலைத் தெரிவிக்க இந்தச் சில கூடுதல் ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் கிட்டாததால் அவர்கள் தமிழ்மொழியில் இனிமேல் குவிக்கும் படைப்புகள் உடனே குன்றிப் போகும் நிலை இருப்பதாகவும் ஒரு மாயத் தேவையைத் தோற்றுவிக்கிறார். தமிழ் மொழிக்கு அப்படி ஒரு நெருக்கடி ஏற்படும் அளவு ஒன்றும் அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்குத் தமிழில் பயிற்சியில்லை. பெற்றவர்களுக்கும் அக்கறையில்லை. கடவுளைப் போற்றும் வடமொழிச் செய்யுள்களைத் தப்பும் தவறுமாகப் பாடக் காட்டும் அக்கறைகூட இதில் இல்லை. வீட்டுப் பேச்சையே பிள்ளைகள் பலர் ஊமைகள் போல் பேசுகிறார்கள். அவர்களுக்கு இன்றைய எழுத்துகள் கொண்டு என்ன எழுத முடியுமோ அதை எழுதக் கோடியிலொரு பங்கும் திறமையில்லை. எனவே திரு.அண்ணாமலை இப்படி ஒரு மாயைப் பேச்சுப் பேச அடிப்படையில்லை. இவர் தாம் நினைக்கும் ஆய்வக நோக்கத்திற்காக மொழியில் விளையாட நினைக்கிறார். மேலும் சமுதாயப் பிடியில் தமிழ் மொழி சிக்கியிருப்பதாகப் பேசுவதும் உண்மையில்லை.

    – பெரியண்ணன் சந்திரசேகரன். அற்றலான்றா

  2. பேராசிரியர் அவர்களுடைய பல கருத்துகளுக்குத் தக்க சான்றுகளோ பின்புலமோ இருப்பதாகத் தெரியவில்லை.
    எடுத்துக்காட்டாக,

    //கிரந்த எழுத்துகளால் தமிழுக்கு ஆபத்து என்ற வாதம் ஏன் முன்வைக்கப்படுகிறது? கிரந்த எழுத்துகள், தமிழர்கள் சமஸ்கிருதத்திலிருந்தும் பிற மொழிகளிலிருந்தும் சொற்களைக் கடன் வாங்குவதை ஊக்குவிக்கும்; தமிழின் தூய்மை கெடும் என்பது ஒரு வாதம். இந்த பயத்திற்கு ஆதாரம் இல்லை. எழுத வசதி இருக்கிறது என்பதால் எந்த மொழியும் அதிகமாகச் சொற்களைக் கடன் வாங்குவதில்லை.//

    இதற்கு ஏதேனும் அடிப்படை உள்ளதா? ( இந்த பயத்திற்கு ஆதாரம் இல்லை. எழுத வசதி இருக்கிறது என்பதால் எந்த மொழியும் அதிகமாகச் சொற்களைக் கடன் வாங்குவதில்லை). எஞ்சின் என்று கடன்வாங்கி எழுத வசதி இருக்கும் பொழுதே வேண்டுமென்றே என்ஜின் என்று எழுதுகின்றன சில புகழ்பெற்ற ஊடகங்கள். கட்டுரையில் பொறியியல் என்று பல முறை எழுதும் ஊடகம் வேண்டுமென்றே இன்ஜினீயரிங் (இஞ்சினீரிங் கூட இல்லை).
    பஞ்சு என்னும் தமிழ்ச்சொல்லை பன்ஜு என்றும் காட்சி என்னும் தமிழ்ச்சொல்லைக் காக்ஷி என்றும் வலிந்து எழுதும் மக்களும் உள்ளனர். எடுத்துக் கூறினாலும் வேண்டுமென்றே கிரந்தம் கலந்தே கலந்து எழுதுகின்றனர்.
    இவை எழுத்துப்பிழை இல்லை என்பதைப் பல கோணங்களில்
    நிறுவ முடியும்.

    உலகத்தில் உள்ள அத்தனை மொழியையும்,, மொழி நுணுக்கங்களையும் தமிழ் எழுத்தின் அடிப்படையாக எழுதி
    அலச வேண்டும் என்று எண்ணுபவன் நான். ஆனால் இதற்காகத் தமிழின் நெடுங்கணக்கை மாற்ற வேண்டும் என்பது அறிவுடைமை ஆகாது என்று கூறுவேன்.

    பல கருத்துகளோடு ஒப்ப முடியவில்லை!!

  3. <> எனச் சொல்லும் பொழுதே பேராசிரியர் அறிந்ததை மறைத்தோ, அறியாமையாலோ சொல்கிறார் என்பது புரிகின்றது. தமிழின் தூய்மை கெட்டதற்கு அறிஞர்கள் பலர் பல சான்றுகளை அளித்திருந்தும் ஆதாரம் இல்லை என நெஞ்சறிந்த பொய் ஏன் என்றும் புரியவில்லை. நல்ல ஆராய்ச்சி அறிஞர் ஏன் தடம் புரள்கிறார் என்று தெரியவில்லை. மதிப்பிற்குரிய பெரியண்ணன் அவர்களும் செல்வா அவர்களும் மறுத்தமைக்குப் பாராட்டுகள்.

    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

  4. பேராசிரியர் தமிழ் எழுத்துகளைப் புதிய கோணத்தில் பார்ப்பதற்கான காரணங்களை அலசியிருப்பது அருமை. எல்லாக் கருத்துகளும் ஒப்புதல் அளிக்கக் கூடியவை, ஒப்புதல் அளிக்கத் தேவையானவை. தமிழுலகில் மக்களுக்க்குப் பீதி உண்டாக்கியே ஆக்கபூர்வமான, தேவையான மாற்றங்கள் வராமல் இருக்கச் சில சக்திகள் முயல்கிறன. இது வருந்தத்தக்கது.

    – விஜயராகவன்

  5. “தமிழின் தூய்மை” என்பது தனி மனிதர்களின் உணர்ச்சிகர கற்பனையே தவிர, மொழியியல் ரீதியில் அப்படி ஒன்றும் இல்லை. தமிழ் காலந்தோறும் மாறுகிறது, மாறிக்கொண்டு இருக்கிறது. அதை சரியாக எடை போட்டு, பொதுப் பயனர்களுக்குக் குழப்பமற்ற முறையில் தமிழை எழுதுவதற்கும் பேசுவதற்கும் சகாயமாக நீட்சித் தமிழைப் பேராசிரியர் பரிந்துரை செய்வது தேவையானது. இந்தக் காரணங்களை உள்வாங்காமல், அதில் ‘பொய்’, ‘தடம் புரள்வது’ எனக் குற்றமிடும் வகையில் ஓரம் கட்டுவது, ஆரோக்கியமான விவாதம் அல்ல.

    விஜயராகவன்

  6. தொல்காப்பியர், நன்னூலார் போன்றவர்களையும் தமிழறிஞர்களையும் மிகக் கீழ்த்தரமாகச் சில குழுமங்களில் பேசும் விசயராகவன் போன்றவர்கள் கூறுவதைக் கண்டு பேராசிரியர் அண்ணாமலை அவர்கள் மயங்கக் கூடாது என்பது என் வேண்டுகோள். தமிழ் மன்றம் என்னும் கூகுள் குழுவிலோ, வேறு பொது மன்றத்திலோ முறையுடன் கருத்தாட வாருங்கள். தமிழைப் பற்றிய பொய்யுரைகளை மறுக்க முடியும். தமிழ் எழுத்துகளில் எழுதுவதைத் தமிழ்த் தூய்மை என்னும் பொய்ப் பரப்புரை செய்யும் சிலரும், நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினாலோ, தமிழ் இலக்கணத்தைப் போற்றி எழுதினாலோ தனித் தமிழ் என்று சாடும் திணிப்பாளர்களும் பொதுவில் வந்து கருத்தாடட்டுமே. மொழியியல் அறிவு வேறு மொழியியலை அரசியலாகப் பயன்படுத்துவது வேறு. தமிழைக் கிள்ளுக்கீரையாக நினைத்து அவரவர் கண்டபடியெல்லாம் எழுதுவதும் பேசுவதும் அது தங்கள் உரிமை என்போரும் ஆங்கிலத்திலே எழுதும்பொழுது மட்டும் முறைப்படியும், தக்கக் கலைச்சொற்களளப் பயன்படுத்தியும் எழுதுவது ஏனோ?

  7. இப்படி பெயரைக் கூட கொலை செய்யும் திரு.செல்வக்குமார் அவர்கள், இந்த இழையில் சம்பந்தமில்லாத, ஆதாரமற்ற குற்றச்சாற்றுகளை வைப்பது திசை திருப்புவதாகும். மொழி / எழுத்து விவாதங்கள், இந்தத் தனிமனிதத் தாக்குதல் அளவில் இருப்பது ஆரோக்கியமன விவாத முறை அல்ல.

    – விஜயராகவன்

  8. பேராசிரியர் அவர்களுக்கு

    இன்னொரு விஷயம் ஸ்ரீரமண சர்மாவின் பிரபோசல், நீட்சித் தமிழில் கிரந்த எழுத்துகளைப் புகுத்துவது அல்ல. அது க, ச, ட, ப முதலிய எழுத்துகள் பின்னால் துணை எண்ணை வைத்து (2,3,4) சரியான ஒலிகள் கொடுப்பதாகும். உதாரணம் க3 என்பது G ஒலியை கொடுப்பது.

    நீட்சித் தமிழின் காரணகர்த்தாக்களில் ஒருவரான விநோத் (ஸ்ரீரமண சர்மாவின் நண்பர்) எழுதுகிறார்:

    http://www.tamilhindu.com/2010/11/extended-tamil/

    “தற்சமயத்தில் இணையம் எங்கும் தமிழ் யூனிகோடு கோடு சார்ட்டில் (Unicode Code Chart) தமிழில் கூடுதலாக 26 கிரந்த எழுத்துகள் சேர்க்கப்படுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகச் சில தேவையற்ற குழப்பங்கள் நிலவி வருகின்றன. “விரிவாக்கப்பட்ட தமிழ்” என்பது ஒரு தனி விஷயம். இதற்கும் கிரந்தத்துக்கும் சம்பந்தமே இல்லை. இது போன்ற குழப்பங்களுக்கு, “விரிவாக்கப்பட்ட தமிழுக்கான” யூனிகோடு முன்மொழிவைத் திறந்து கூட பார்க்காதது தான் காரணம் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதில் மிகத் தெளிவாகவே, முன்மொழியப்பட்ட “விரிவாக்கப்பட்ட தமிழ்” அட்டவணையில் துணை எண்களுடன் கூடிய தமிழ் எழுத்துகள்தான் உள்ளன.”

    ஸ்ரீரமண சர்மாவின் கிரந்த பிரபோசல் வேறு. அது தனியான யூனிகோட் கிரந்தக் கொத்தை ஆக்குவது. அதற்கும் நீட்சித் தமிழுக்கும் தொடர்பில்லை.

    – விஜயராகவன்

  9. திரு விசயராகவன், உங்கள் பெயரை இடாய்ச்சு மொழியர் வியயராகவன் என்றாலோ, எசுப்பானியர் (español)
    விஃகயராகவன் என்றாலோ வாளாவிருப்பீர் ஆனால் தமிழ் மொழியில் விசயராகவன் என்றால் உங்கள் பெயரைக்
    கொலை செய்வதா? ஒவ்வொரு மொழியும் அந்தந்த மொழியில் உள்ள எழுத்துகளைக் கொண்டும், அந்தந்த மொழியின் இயல்பை ஒட்டியுமே எழுதவியலும். ஆங்கிலத்தில் vaள்ளி என்று எழுத முடியாது, ஞாnasambaந்தn என்று எழுத முடியாது, aண்ணாmalai என்று எழுதமுடியாது. kaண்ணn என்று எழுதமுடியாது. உங்கள் கூற்றுப்படியே பார்த்தாலும், ஏன் நீங்கள் ஜெயமோகன் என்னும் பெயரை ஜயமோகன் என்றும் ஜெயலலிதா என்னும்
    பெயரை ஜயலலிதா என்றும் எழுதுகின்றீர்கள்?
    தமிழில் அப்பெயர்கள் கிரந்தமில்லாமல் எழுதும்பொழுது
    செயமோகன், செயலலிதா.
    தமிழ்மொழியின் அறிஞர்களையும் அறிவார்ந்த முன்னோர்களையும் தரக் குறைவாகவும், இழித்தும் பழித்தும் தூற்றும் நீங்கள்,
    மொழியையே சிதைத்துச் சின்னாபின்னமாக்கத் துடிக்கும் நீங்கள் உங்கள் பெயரை எப்படித் தமிழில் எழுத வேண்டும் என்று கற்றுக்கொள்ளாதது வியப்பில்லை.
    இது தனி மனிதத் தாக்குதல் அல்ல, சில கருத்துப் போக்குகளையும் அதன் பின்புலமான கருதுகோள்களையும் முரண்பபாடுகளையும் சுட்டுகின்றன. தனி மனிதத் தாக்குதலால்
    எனக்கு எந்தப் பயனும் இல்லை. பிறழ் உணர்வைத் தவிர்க்கவும்.

  10. பேராசிரியர் அண்ணாமலை அவர்களுக்கு,

    நீங்கள் “நெகிழ்ச்சி தேவைப்படுகின்றது”, நெகிழ்ச்சித் தேவைப்படுகின்றது என்று கூறுகின்றீர்களே உங்களிடம் சில கேள்விகள் கேட்கின்றேன். மறுமொழி கூற வேண்டுகிறேன். பிரான்சு மக்களுடனும், அவர்கள் மொழியுடனும் மிகவும் நெருக்கமாகவே ஆங்கிலேயர்கள் உறவாடியிருக்கின்றார்கள். அப்படி இருக்கும்பொழுது ஆங்கிலேயர்கள் ஏன் Paris என்னும்
    நகரின் பெயரைக்கூட பிரான்சியர்கள் போல் ஒலிப்பதில்லை?
    ஏன் அவர்களின் அடித்தொண்டை றகரத்தைக் குறிக்க
    ஓர் எழுத்தை உள்வாங்கி ஏற்றுகொள்ளவில்லை?
    பாரிசு நகரத்தை அவர்கள் பாஃறி (/paʁi/) என்று ஒலிக்கின்றார்கள் அல்லவா?

    நான் வாழும் கனடாவில் எங்கள் முன்னாள் தலைமை அமைச்சர் இழ்சான் கிரேட்ஃசியன் (Jean Chrétien) அவர்களின்
    பெயரில் உள்ள முதற்பெயராகிய Jean என்பதனில் Jean
    (ஒலிப்பு: /ʒɑ̃/ ) என்பதில் வரும் முதல் ஒலியையோ, முடியும்
    மூக்கொலியையோ ஏன் ஐயா ஆங்கிலேயர்கள் எழுத்தாக்கிக் கொள்ளவில்லை? ஏன் Chrétien (ஒலிப்பு: kʁetjɛ̃) என்பதில் உள்ள
    ஒலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை? ஏன் அவர்களுக்கு நெகிழ்ச்சி தேவை இல்லையா? தமிழுக்கு மட்டும் தேவையா? ஏன் ஆங்கிலேயர்கள் இடாய்ச்சு (செருமன்) மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிதானே? அவர்களைபோல் ஏன் Ja என்பதை ய என்று ஒலிக்கவில்லை, ஏன் உம்லௌட்டு (umlaut) உள்ள உயிரொலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை? சுருங்கச் சொன்னால் உங்கள் “நெகிழ்ச்சி தேவை” என்னும் கூற்றில் நேர்மையான பொருள் இருப்பதாகத் தெரியவில்லை.

    எல்லா ஒலிகளையும் எழுத்தாகக் காட்ட வேண்டும் எனில்
    ஏன் மற்ற மொழிகள் அப்படிச் செய்யவில்லை? ஏன் ஆங்கிலம் பிரான்சியச் சொற்களில் உள்ள பல ஒலிகளைக் குறிக்க எழுத்துகளை உள்வாங்கிக்கொள்ளவில்லை? ஏன் பிரழ்னேவ் (Brezhnev) என்பதில் உள்ள உருசிய ஒலி ж-கரத்தை உள்வாங்கிக்கொள்ளவில்லை?

    ஆங்கிலத்திலேயே உள்ள எத்தனையோ ஒலிகளைக் குறிக்க
    ஏன் எழுத்துகள் இல்லை? the, this, that, then, there, their, path என்று பலசொற்கள் இருந்தும் மது என்னும் பெயரை ஆங்கிலத்தில் ஒலிக்க முடியாது. ஆகவே அவர் தன் பெயரை மாத்யூ (Mathew) என்று மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மொழியியல் பேராசிரியர் ஒருவர் கூறுகின்றார். ஆனால் அதே பேராசிரியர் கூறுகின்றார், தமிழ் மட்டும் மாறவேண்டுமாம்?! மொழியியல் அறிவைத் தாறுமாறாகப் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும். பொறியியல், மருத்துவம்
    ஆகிய துறைகளிலும் அறமுறை (ethics) என்பது உண்டு. மொழியியலிலும், தொடர்பான துறைகளிலும் இது தேவை.

  11. Dear Prof.Annamalai

    The proposal for Extended Tamil as given by Shri.Ramana Sharma was torpedoed by a several people, including the four other gentlemen who have posted in this thread . The gist of arguments against Extended Tamil is that Tholkappiyar has defined Tamil letters for all time to come .

    This anti-historical, anti-empirical, non-practical , ridiculously idealized , view of Tamil has prevented any kind of useful debate which you hoped for. Any kind of debate on “existing Tamil” (நடைமுறைத் தமிழ், தற்காலத் தமிழ்) provokes violent responses, a small sample of which you are seeing here.

    The ironical thing is most of them have come up in life passing University exams in English and their work is conducted in English, their livelihood is through English and many times live in an English speaking audience. Whether Tholkappiyam existed or not , makes no difference to their lives.

    Regards

    Vijayaraghavan

  12. திரு.செல்வக்குமார்

    உங்கள் திசை திருப்பும் வாதங்களில் ஈடுபட நான் விரும்பவில்லை. உங்கள் செய்திக்கு, என் பெயரை ஜெர்மானியரும் ஸ்பானியரும் விஜய் என்று உச்சரிக்கின்றனர், எழுதுகின்றனர். அவர்களிடம் பண்பு, நாகரீகம் உள்ளது. அதற்கு மேல் இதைப் பற்றி எழுதப் போவதில்லை.

    மதிப்புடன்

    விஜயராகவன்

  13. திரு விசயராகவன்,

    ஒன்று உங்களுக்கு இடாய்ச்சு மொழியும் (செருமன் மொழியும்) எசுப்பானியமும் (español) தெரியவில்லை, அல்லது நீங்கள் நேர்மையில்லாமல் எழுதுகின்றீர்கள். எசுபானியத்தில் வகரம்
    கூட கடினம். அடிப்படை என்னவென்றால் எல்லா மொழிகளிலும் எல்லா ஒலியன்களும், ஒலியன் கோவைகளும்
    வரல் இயலாது, இயல்பும் அல்ல. பல மொழிகளில் பல மெய்யொலிக்கூட்டங்கள்
    (consonant cluster) வர இயலாது. இதெல்லாம் மொழியியல்
    படித்தவர்கள் நன்கு அறிவார்கள். அறிந்தும் நேர்மையின்றி
    வேண்டுமென்றே தமிழைப் பற்றித் தவறாக எழுதுகின்றார்கள். எழுதும் மொழியின் முறைமைகளைப் போற்றி எழுதவேண்டும் என்னும் அடிப்படட நாகரிகம் அறிந்தவர்கள்
    தமிழின் முறைமைகளைப் புரிந்துகொள்வர்.

    செல்வா

  14. ஆங்கிலத்திலே giant, jam என்பதில் முதல் எழுத்தாக வரும் ஒலியை அனைத்துலக எழுத்துக்குறி முறையில் dʒ என்று குறிக்கின்றனர். கிரந்தத்தில் ஜ். இவ்வொலி எசுப்பானியத்தில் இல்லை என்பதை http://en.wikipedia.org/wiki/IPA_chart_for_Spanish
    என்னும் பக்கத்தில் பார்க்கலாம். இடாய்ச்சு (செருமன்) மொழியில் இவ்வொலி இல்லை என்பதை பலரும் அறிவர்.
    திரு விசயராகவன் மாக்ஃசுமுல்லர் பவனில் இடாய்ச்சு படித்தார் என்று ஒரு குழுமத்தில் எழுதியுள்ளதை நான் அறிவேன். எனவே நேர்மையின்றி அவர் பொய் உரைக்கின்றார் என்பது தெள்ளத்தெளிவு.
    நானும் மாக்ஃசுமுல்லர் பவனில் இடாய்ச்சு படித்தவன்,
    எனவே இடாய்ச்சு மொழியில் ஜ இல்லாததை அறிவேன்.

    செல்வா

  15. செல்வா

    தமிழை விட்டு விட்டு ஜெர்மன், ஸ்பானியம் மொழிகளைப் பற்றி ப்ரஸ்தாபம் செய்கின்றீர்கள் . கையிலிருக்கும் வேலையை விட்டு இப்படி மையமில்லாமல் போக வேண்டாம். ஒருவர் கையொப்பம் இடும் பெயரை அப்படியே ஆளாமல் இருப்பது பண்புக்குறைவு. அதை எந்த ஜெர்மானியர், ஸ்பானியரிடமும் பார்த்ததில்லை. நான் அவர்கள் மத்தியில் வேலை செய்பவன்.

    You are rude and you keep justifying your rudeness with more rudeness.

    விஜயராகவன்

  16. விசயராகவன்,

    கையொப்பம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அது மொழி எழுத்துகளால் ஆனதாக இல்லாததாகவும் இருக்கலாம். அது ஒவ்வொருவருடைய தனி அடையாளம். ஆனால் ஒருவர் பெயரை ஒரு மொழியில் எழுதும்பொழுது அம்மொழியின் முறைப்படி எழுதுதல் வேண்டும். என் கையொப்பத்தைத் தமிழில்தான் இடுகின்றேன், ஆனால் ஆங்கிலத்தில் எழுதும்பொழுது Selvakumar என்றும் இந்தியிலும் மராத்தியிலும் எழுதும்பொழுது चेल्वकुमार
    உருசிய மொழியில் எழுதும்பொழுது СельваКумар
    என்றும் எழுத வேண்டும். கண்ணன், வள்ளி, ஞானசம்பந்தன் என்னும் பெயர்களை kaண்ணn, vaள்ளி, ஞாnasambaந்தn
    என்று எழுதமுடியாது. இப்படி எழுதிக்காட்டுவதால் ஆங்கிலேயர் ஏற்றுக்கொள்வார் என்று கூற இயலாது.

    பொய் உரைப்பது அடிப்படை பண்பே அல்ல. கூறியுள்ள கருத்துகளை நேர்மையுடன் எதிர்கொள்ள இயன்றால்
    எதிர் கொள்ளுங்கள், ஆனால் “rude” என்பதைப் பற்றி நீங்கள் கூறுவது மிகுந்த வேடிக்கை, முரண்நகை!

    செல்வா

  17. விசயராகவன், அறிந்தே பொய் உரைக்கின்றார் என்பதற்குச்
    சான்று (மறந்துவிட்டது, அது வேற ஆளு என்று இன்னும்
    பல பொய்களையும் கூறினால் வியப்படைய மாட்டேன்):
    _____________
    From: விஜயராகவன்
    Date: Wed, 18 Nov 2009 17:20:33 -0800 (PST)
    Local: Wed, Nov 18 2009 8:20 pm
    Subject: Re: ஜெர்மன் மொழி – சில தகவல்கள் – பகுதி 2

    Herr Innamburan

    Ich auch habe studiert unter Herr Sharma

    Vijayaraghavan
    ____________________

    இடாய்ச்சு மொழி மொழியில் Vijayaraghavan என்று எழுதினால் ஃபியயராகஃபன் அல்லது Wiyaraghawan என்று
    எழுதினால் வியயராகஃபன் ஒலிக்க இடம் உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள J ஒலி
    /dʒ/ ஒலி இடாய்ச்சு மொழியில் கிடையாது. வேண்டுமென்றே, அறிந்தே பொய் உரைக்கின்றார்.

    செல்வா

  18. Dear C.R.Selvakumar

    You cut a sorry figure with your intemperate rudeness. Bit of அவையடக்கம் will go a long way in helping you.

    Get well soon
    Happy X-mas and New Year

    Regards

    Vijayaraghavan

  19. திரு விசயராகவன்,
    இங்கு எழுப்பிய கருத்துகளை மறுக்காமல்,
    நீங்கள் பொய் உரைத்ததை ஒப்புக்கொண்டு
    மன்னிப்போ, (காரணம் இருந்தால்)
    அமைதியோ சொல்லாமல்,
    ஏதேதோ சொல்கிறீர். பிற குழுமங்களில்
    “silly” என்றெல்லாம் கூறி ஆற்றுப்படுத்திக்
    கொள்கிறீர்களோ! பண்பாடைப் பற்றிப்
    பேசுகின்றீர்!
    உங்கள் கருத்துகள் செல்லாதன
    என்பது தெளிவு! நேர்மையற்ற முறையில்
    உரையாடுகின்றீர் என்பதும் தெளிவு!

    செல்வா

  20. செல்வா

    பெயர்களையே மாற்றும் அளவுக்கு செருக்கு கொண்டவர்கள் கண்ணாடி அறையிலிருந்து, கல் வீசுபவர்கள் . அதனால்தான் உங்கள் குழுமத்திலேயே பெரியவர் ஜெயபாரதன் உங்கள் செயல்களை தாலிபானியம் என கூறிவிட்டார்.

    http://groups.google.com/group/tamilmanram/browse_frm/thread/19c9c6dc26a116d1

    ” உங்கள் பெயரை *Chelvakumar *என்று ஏன் ஆங்கிலத்தில் எழுதாமல் *Selvakumar* என்று எழுதுகிறீர் ?

    என் பெயரைச் செயபாரதன் என்றுதான் எழுதுவேன் என்பது *தாலிபானிசம்*என் கருத்துப்படி.

    நீங்கள் மெல்லோசைக்குக் குறியிட்டு எழுதுவதும் ஜெர்மனி என்பதை இடாய்ச்சுலாந்து என்பதும் ஸ்பெய்னை எசுமானியா என்பதும் தாலிபானிசமே.”

    உங்கள் திசை திருப்பி, நேரத்தை வீண் செய்யும் வார்த்தை சண்டைகளில் நான் ஈடுபட விரும்பவில்லை . நாம் இங்கு பேரா. அண்ணாமலையின் கருத்துகளை படித்து, அலச இருக்கின்றோமே தவிர, ஒருவரை ஒருவர் சாடுவதில் அல்ல. இந்த இழையின் குறிக்கோளுக்கு வெளியே போக வேண்டாம்.

    விஜயராகவன்

  21. விசயராகவன்,

    வசைமொழியை யார் வேண்டுமானாலும் வீசலாம்.
    கருத்தை கருத்தால் மறுத்துரைக்க வேண்டும்.

    இங்கு கேள்வி கிரந்த எழுத்துகள் பற்றியது
    என்பதால் இது பற்றிப் பேசலாம்.
    நான் தந்த மறுமொழியை இங்கு பதிவு
    செய்துவிட்டு நிறுத்திக்கொள்கிறேன்.
    பெயரை மாற்றவில்லை, மற்ற மொழிகளில்
    நிகழ்வது போல தமிழ் முறைப்படி
    எழுதுதல். நீங்கள் முயல்வது மொழியையே
    மாற்றுவது, புதிய கிரந்தங்கள் 26 ஐ நுழைப்பது.
    அவற்றோடு உயிர்மெய்களையும் சேர்த்தால்
    நூற்றுக்கணக்கான எழுத்துகளை நுழைப்பது.
    இதை என்னவென்று கூறுவது?!
    ====என் மறுமொழியில் ஒரு பகுதி========
    தமிழ்த் தாலிபானிசம் என்பது என்ன?
    ஐசக் நியூட்டன், ஐதரசன், ஈலியம் என்று எழுதினால்
    தமிழ்த் தாலிபானிசமா? “ஆங்கிலவழி, சமசுக்கிருதவழி” நீங்கள்
    அறிந்த சொற்களை உங்கள் நோக்கில் “ஒலிப்புத் தூய்மையுடன்”
    எழுதினால் அது தாலிபானிசம் ஆகாதா?
    அதனை ஆரியத் தாலிபானிசம் என்பீரா?
    ஆங்கில-சமசுக்கிருதத் தாலிபானிசம் என்பீரா?
    திணித்தாலிகளா? இப்படியெல்லாம் பேசுவதால்
    உண்மையான நற்பயன் யாதும் விளையுமா?
    எண்ணிப்பாருங்கள்!
    ஐயா, பண்புடன் கருத்துகளை எதிர்கொள்ளுங்கள்.
    கருத்துகளால் எதிர்கொள்ளுங்கள். இப்படியான
    வசைமொழிகளால் ஏதும் பயன் இல்லை. உங்களை
    நீங்களே தாழ்த்திக்கொள்வீர்கள்.
    ===============
    செல்வா

  22. தாமஸ் என்ற பெயரை தாமசு என்று எழுதுவதாலோ
    அல்லது சொல்லுவதாலோ தமிழ் வளர்ந்துவிடாது
    மாறாக, தாமஸின் மனம் புண்படும் என்பதே உண்மை.
    ஹல்வா என்பது தமிழ்ப் பெயராக இல்லை என்பதால்
    அதை உண்ணாமல் விட்டுவிடுவார்களா! ராஜாஜியின்
    பெயரை ஒரு பத்திரிக்கை இராசாசி என்று எழுதியது.
    அதற்கு ராஜாஜி அப்பத்திரிக்கைக்கு” எம் ஜி ஆர் என்பதையும்
    எம் சி ஆர் என்று எழுதுங்கள் ” என்று எழுதியதும் அதன்
    பிறகு அப்பத்திரிக்கை ராஜாஜி என்றே எழுதியது.
    இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.

  23. எனக்குச் சர்ச்சையில் ஈடுபாடு கிடையாது. பல நாடுகளில் வாழ்ந்ததன் பயனாகவும், சில மொழிகளைக் கற்றுக்கொண்டதாலும், நான் சொல்ல விரும்புவது:

    இது உண்மை, யதார்த்தம், மொழி வளர உதவுவது:

    “…வெளிநாடுகளில் பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் மீது நம்பிக்கை வர வேண்டுமென்றால் இந்த நெகிழ்ச்சி மிகவும் தேவை…’

  24. இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.எல்லோரும் வடையை விட்டு விட்டு பொத்தலை எண்ணுவதாகக் காண்கிறது.

  25. It is awell known fact that English did not stagnate with chaucers language.It freely borrowed and adopted wholesale words not only from european languages but also from others including tamil Itis difficult to understand the nuaqnces of a language where phoneticall the sound and meaning of aparticular word denotes a different thing. eg, Kanthi, Gandhi etc. the grandha letters supplied the needed letters to depict he sese and diifferentian in the writtten word without the help of audio assistance.

Comments are closed.