புதுவை எழில் 

நெட்டையும் குட்டையுமாக மலைகள்….

அவற்றின் முதுகுப் பக்கம் சரசரவென இறங்கிக்கொண்டு இருந்தான் சூரியன்.

” போ, போ! என்னைய பாத்த அறுவறுப்பு. அதான் இப்படி மேகத்தாலே மூஞ்ச மூடிக்கிட்டு ஓடற…. இந்த மனுசங்களைப் பாத்துப் பாத்து ஒனக்கும் அவுங்க புத்தியே வந்துருக்சு…..” –

விரக்திச்சிரிப்போடு அவள் கையைத்தூக்கினாள், சூரியனையே சுட்டுவிடும் ஆவேசம்!

அழுகிப்போன வெண்டைக்காய்களாக விரல்கள்.
” அடக் கடவுளே, சுட்டு விரல்ல பாதி; காணலியே, எங்க, எப்போ விளுந்து தொலச்சதோ! ஒரு சொரணையும் தெரியலியே சாமி!” –

அவளைச் சுற்றி ஈக்களின் ரீங்காரம்.
” இம், இம், இப்படித்தான் அப்பெல்லாம் ஈயா மொய்ச்சானுவ. இப்போ? ஈ மொய்க்க வச்சுட்டானுவ…. த்துஉ…!”

எழுத்திலே எழுத முடியாத’ நல்ல’ வார்த்தை அவள் வாயிலிருந்து உதிர்ந்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூடக் காளைகளின் ஏகபோகக் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவள்தான். அப்போது அவள் அழகு என்ன! ஒயில் என்ன! நடை என்ன!

உடை என்ன! அவள் பார்வை பட்டாலே போதும் தாங்கள் பிறந்த பயன் ஈடேறும் என்று துடித்த இருபதுகளையும் அறுபதுகளையும் அலைய வைத்தவள்தான்! இரவைப் பகலாக்கிப் பகலை இரவாக்கி உடலை விலை பேசியவள்தான். ஆடாத ஆட்டம் இல்லை, கூடாத உறவுக்கு ஓய்வே இல்லை. மோகத் தீயில் மூழ்கியவள் முதுகில் மேக நோய் அறிகுறி, அது பெரு நோயாக மாறி வளர்ந்து வருவதை அறிந்ததும் அதிர்ந்துபோனாள். இரகசியமாக வைத்தியம் தொடங்கியது தொடர்ந்தது. ஆனால் பலன்? மாடி மனை மறைந்ததும் கோடி செல்வம் குறைந்ததும்தான் மிச்சம். பாடப் பாட ராகம் மூட மூட ரோகம்! எத்தனை நாளைக்குத் தான் மூட முடியும்? அறைக்குள் இருந்தது அம்பலம் ஆனது! தலை வாழை இலையாகத் தளதளத்தவள் எச்சில் இலையாகிப்போய் வீதியிலே வீசி எறியப் பட்டாள். பதுங்கிப் பதுங்கி வந்து பதம் பார்த்த பணக்காரப் பூனைகளும் இவளோடு நாள்தோறும் சதுராடி மோக ராகம் பாடிக் களித்த இளைஞர்களும் இப்போது கல்லெடுத்து அடித்தனர்:

‘ பாவி பாவி’ என்று சொல்லித் துரத்தினர்! ஊரை எல்லாம் தன் விழியாலே விலை பேசியவள் இன்று ஊருக்குள் தலை காட்ட முடியாத நிலை!

” கடவுளே, கடவுளே ஒனக்கு கண்ணு இருக்கா! அட நான்தான் பாவி அதான் படறேன். ஆனா, இது என்ன பாவம் பண்ணுச்சு? இப்படி சொரித்தவளையா என் வவுத்திலே பெறக்கவச்சுட்டியே!” – முதுகுச் சுமையை, ஈராண்டுக்கு முன்னால் இரவிலே வந்த எவனோ ஒருவன் தந்த ‘பரிசை’, குறைபட்டுப்போன விரல்களால் மெல்லத் தடவினாள்.

” தெய்வமே, ஒனக்கு இரக்கமே கிடையாதா! இதுக்கு, இந்த சொரித்தவளைக்கு என் நோவு மெல்ல மெல்ல தொத்திகிடுச்சே! ஆமா, எங்கள இப்டி நடபொணமா அலைய வச்சுட்டியே, ஏன்? ஒனக்கே இது நல்லா இருக்கா? நீ….” –

சாபங்களை வாரி இறைத்த அவள் கண்களில் நீர்த் திவலைகள். அழுகிய கன்னங்களில் கண்ணீரின் உப்பு எரிச்சல்! விரல் இழந்த பாதங்களை இழுத்து இழுத்து வடம் பிடிக்காத தேராக நகர்ந்து குடிசைக்கு வந்து சேர்ந்தபோது எங்கும் பயங்கர இருள்!

உள்ளே நுழைந்தாள். தேய்ந்து போன கரங்களால் தீக்கல்லைத் தேய்த்துத் தேய்த்து நெருப்பு உண்டாக்குவதற்குள் போதும் போதும் என்றானது.

” மவராசி, நல்லா இருக்கோணும். மூஞ்ச கீஞ்ச சுளிச்சாலும், கந்த துணில கொஞ்சம் கோதும மாவ கட்டித் தூக்கிப் போட்டாளே! அங்க இங்கனு பல தூரம் அலஞ்சதுக்கு எதோ அர கொடம் தண்ணியாவது கெடச்சுதே! சுள்ளி வெறகும் பொறுக்கியாச்சு… இம் இம் இம் நாலஞ்சு நாளைக்கு வெளியே கிளியே கௌம்பாமலே சமாளிச்சுடலாம்.”

” அம்மா, அம்மா!” –
யோசனையில் மூழ்கியவளுக்கு அந்த மெல்லிய குரல் முதலில் கேட்கவில்லைதான்.

” அம்மா, அம்மா, அம்மா!” – திடுக்கிட்டாள் அவள்.

” என்னைத் தேடி? அதுவும் இந்த நேரத்தில்? யாராக இருக்கும்? ஒருகால் பிச்சைகாரியிடமே பிச்சையா?” –
சிரிப்பு வந்தது அவளுக்கு. மறுபடி அந்தக் குரல்.

எரிந்துகொண்டு இருந்த சுள்ளியை எடுத்துக்கொண்டு குடிசையின் கதவைத் திறந்த போது, தாடியும் மீசையும் கைத்தடியுமாக அவன் நின்றுகொண்டிருந்தான்.

” ஷலோம்” சொன்னான். “அம்மா, நாங்க தொலவுல இருந்து வரோம். ரொம்ப தொலவு போகணும். பொழுதோ சாஞ்சிடுச்சு. அக்கம் பக்கத்து ஊர்ல கேட்டோம் எங்களுக்கு எடம் கொடுக்க யாருக்கும் மனசில்லையே! எம்பொஞ்சாதியும் கைக்கொழந்தையும்… பசி குளிர்ல வாடிகிட்டு இருக்….” முடிக்கவில்லை அவன.;

சட்டென அவள் விழிகள் இருளைத் துழாவின. மங்கலாகத் தெரிந்தாள் அந்த இளம்பெண்.
”அது என்ன, அவள் கையில்? ஏதோ கந்தையா பொதி போல?” அவள் பார்வைக்குப் பதில் சொல்வது போல்,
”அம்மா, ராப்பொழுதுக்கு எடம் கொடுத்திங்கன்னா போதும். கருக்கலோட கருக்கல் எழுந்து போய்டுவோம்” என்ற இளைஞனின் குரல் தழுதழுத்தது.

” அட, போயா சர்த்தான். நானே பெரு வியாதிக்காரி! இங்க வந்து எடம் கேட்க வந்துட்ட! போ, போ, வேற நல்ல எடமா பாரு…” –

சொல்ல நினைத்தாள.; அதற்குள், அந்தக் கந்தைப் பொதிக்குள் இருந்து ஒரு புன்னகை மின்னல்!
அந்தச் சின்னஞ் சிறிசின் கண்கள் அவள் கண்களைச் சந்தித்தன.

என்ன நினைத்தாளோ, சட்டெனக் குடிசைக் கதவை அகலமாகத் திறந்துவிட்டாள்.

” சரி, சரி, வாங்க உள்ளே”. அவர்கள் உள்ளே நுழைந்தனர். அந்த இளம் பெண் அவளை நெருங்க முற்பட்டாள்.

”ஐய்யோ, வேண்டாம்மா…. யாருமே தீண்டத் தகாத பாவியா ஆயிட்டேம்மா!” –

பதறிப் போய்ப் பின் வாங்கிப் போர்வைக்குள் ஒடுங்கும் அவளைப் பார்த்த அந்த இளம் பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட இரக்கம்.

சுற்று முன்பு தான் சிரமப்பட்டுக் கொண்டு வந்து சேர்த்த விறகுச் சுள்ளி, கோதுமை மாவு, பாதி நிரம்பிய நீர்க்குடம்… எல்லாவற்றையும் அந்த இளம் பெண் முன் கொண்டு வந்து வைத்தாள்.” ஐயோ, நாலைந்து நாள் சமாளிப்பு போச்சே…!” – மனசின் ஆதங்கத்தை ஒரு பெருமூச்சால் ஒட்டத் துடைத்தாள்.

” எங்கிட்ட இருக்கிறது இவ்வளவு தாம்மா, நீங்களே எதனாச்சும் சமைச்சு சாப்டுங்க. களப்பாறி நாளக் காலைல பொறப்பட்டுப் போவலாம். குடிச்ச தண்ணி போவ, மிச்சத்துல உங்க கொழந்தைக்கு…” – அவள் பார்வை கந்தைப் பொதியில் பதிந்தது. மறுபடி, கந்தையிலிருந்து ஒரு மின்னல் மலர்ந்தது.

”ஒடம்புக்கு ஊத்துங்க, வேற தண்ணி கெடையாதுங்க. மிச்சத்தை அப்படியே வச்சுட்டிங்கன்னா, நா எம்புள்ளக்கு அத வச்சு சமாளிச்சுபூடுவேம்மா!” – அவள் உள்ளத்தைப் புரிந்துகொண்டவள் போல் அந்த இளம் பெண் தலை ஆட்டினாள். நோயின் கொடுமையால் சிதைந்து கொண்டிருக்கும் உடலை மெல்லத் தரையில் சாய்த்த அவள் விழிகள் களைப்பால் மூடிக் கொண்டன.

” எழுந்திரம்மா, நாங்க கௌம்பறோம்” – எங்கோ கிணற்றுக்குள் இருந்து கேட்பதுபோல் கேட்டது குரல். கனவா, நெனவா? யாரோ தன்னையும் தன் குழந்தையையும் வாரி அணைத்துக் கஞ்சியூட்டுவது போல உணர்ந்தாளே – அதுவும் கனவுதானோ?

அவள் சுய நினைவை அடைந்தபோது பறவைகள் உதய ராகம் பாடிக்கொண்டிருந்தன. பொழுது பொலபொலவென விடியும் வேளை. குடிசைக்குள் அவள் விழிகள் சுழன்றன. யாரும் இல்லை. தென்றல் வந்து போனதற்குச் சுவடு உண்டோ! உண்டு என்றது நீர்த் தொட்டி. அதில் எஞ்சிய தண்ணீர் வெதுவெதுப்பாக இருந்தது.

” அட, அப்படியானால், ராத்திரி நடந்தது எல்லாம்? நிசம்தானா!” – தன் குழந்தையை நீர்த் தொட்டி உள்ளே இறக்கி வைத்தாள். அதன் மேல் நீரை வாரி வாரி இறைத்தாள்.

குடிசை ஓட்டை வழியே உல்லாசமாக நுழைந்தது காலைக் கதிர் ஒன்று. அது குழந்தை மேல் பட்டதோ இல்லையோ நெருப்பு சுட்டாற்போல் துள்ளி எழுந்தாள் அவள். என்ன ஆச்சரியம்! அவளால் நம்பவே முடியவில்லை! பின்னே, சொரித்தவளை மேனி சொக்கத் தங்கமாக ஒளிருகிறது என்றால்! முழுக் குழந்தையையும் அலக்காகத் தூக்கி…. வியப்பால் அவள் விழிகள் மலர்ந்தன. குழந்தையைப் பிடித்திருந்த அவள் விரல்கள்… அடடே முந்திய நாள் நாலரை விரல்களே இருந்த கையில் முழுசு முழசாக ஐந்து விரல்கள்! சடாரெனப் போர்வையை விட்டெறிந்து தன் உடலைப் பார்த்தவளுக்கு ஒரே திகைப்பு! நோயின் வடு கூட இல்லாமல்… இது எப்படிச் சாத்தியம்? இது எப்படி……? இது……? யார் தந்த ‘பரிசு’? இப்போது பொன்னாக மின்னிய அவள் கன்னங்களில் கண்ணீர் முத்துகள்.

” ஆண்டவன் வழிகள் அற்புதமானவை…” – அவள் உள்ளத்தில் வேத நூல் வரிகள்.

எகிப்து பாதையில் அவர்கள் சென்றுகொண்டிருந்தனர்.
மெல்லத் திரும்பிப்பார்த்த அந்த இளைஞன் குரலில் பாசம் இழையோடிக் கிடந்தது.

” மரியம், நம்ம மவன் மேல வெயில் படுது பாரு…”
புன்முறுவலோடு, வெயிலை மறைத்துப் போர்த்தினாள் அந்த இளம் பெண்.

ஞானக் குழந்தை முகத்தில் மோனப் புன்முறுவல் :
என்றுமே உலக்துக்குத் தெரியவராத முதல் புதுமையை நிகழ்த்தி விட்ட மகிழ்ச்சியா?

இல்லை, உரியவருக்கு உரிய நேரத்தில் ‘பரிசு’ அளித்துவிட்ட நெகிழ்ச்சியா?

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பரிசு

  1. அன்பின் பெஞ்சமின் 

    அருமையான கதை – வாழ்நாள் முழுவதும் தவறான வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் – உதவி என்று கேட்டு வரும் குடும்பத்திற்கு – தனனால் இயன்றதிக் கொடுத்ததின் பலன் தான் அந்தப் பரிசு. நடை இயல்பு – சொற்கள் அருமை – விவரித்த் விதம் நன்று – வாழ்க வளமுடன் – நட்புடன் சீனா 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *