முனைவர் நாகபூஷணம்

சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் – (பகுதி 4)

 

மகளிர் மற்றும் சிறுவர்தம் முன்னுரிமை.

அனைவரும் தன்னுரிமை பெறும் வரை யாரும் உரிமை பெற்றவராகார்.

அனைவரும் ஒழுக்கமுடையவராகும் வரை யாரும் ஒழுக்கமுடையவராகார்.

அனைவரும் மகிழ்வோடிருக்கும் வரை யாரும் முழுமையான மகிழ்ச்சியோடிரார்.

மனித உரிமைக்கான போராட்டம் தொன்று தொட்டு இன்று வரை இனிவரும் காலங்களிலும் , தொடர்ந்து நிகழும் ஒன்றாகும். மனித உரிமை மீதான கடுந்தாக்குதல் ஏதோ ஒருவகையில் தன் கொடூரமான முகத்தை காட்டிக்கொண்டே இருக்கிறது. சின்னஞ்சிறு குடும்பம் தொடங்கி , நகர்ப்புறம் , நகரம் , சமுதாயம் , அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் , எளிய மற்றும் வலிய நாடுகள் என எங்கெங்கும் அதன் கோரத் தாண்டவத்தைக் காணலாம்.

அடிமை வியாபாரம் , கொத்தடிமை முறை சட்டரீதியாக ஒழிக்கப் பட்டு விட்டது. ஆனால் அது வெவ்வேறு வகையில் வெவ்வேறு வடிவம் கொண்டு மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அடிமைத்தொழிலாளி , குழந்தைத்தொழிலாளி , கட்டாயத்தொழிலாளி , உடல் உழைப்பற்ற தொழிலில் குற்றமிழைப்போர் , பொறுப்பற்றுத் தவறிழைத்துத் தப்பித்து ஏதுமறியா எண்ணிறந்த மக்களுக்கு உடலளவிலும் , மனத்தளவிலும் , பொருளாதார அளவிலும் , நிரந்தர ஊறு விளைவித்தல் எனப் பல்வேறு வகையில் தொட்டுத் தொடரும் சமுதாயப் பிணியே மனித உரிமை மீறல் ஆகும்.

உலக நாடுகள் சட்டத்தின் நூன்முகம் , 1948 ஆம் ஆண்டு மனித உரிமைப் பிரகடனம் / அறிக்கை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் என எல்லா அடிப்படைச் சட்டங்களுமே சட்டத்தின் முன் அனைவரும் சமம் ; சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பு ; சட்டத்தின் நேரிய நடைமுறை ; (Due Process) சட்ட ஒழுங்கு முறை (Rule of law) , என பல்வேறு சட்டதிட்டங்கள் உலகமெங்கும் மனித உரிமை காக்கப் பெறுதற்கான பல்வேறு விதிமுறைகளை வகுத்தளிக்கின்றன.எனினும் மனித உரிமை மீறல் பலவகையிலும் பல்வேறு வடிவம் கொள்வதைக் காணலாம்.

1. குழந்தை அவதூறு , புறக்கணிப்பு , வஞ்சித்தல் , பாதுகாப்பற்ற சிறார் , உருக்குலைவுறுத்தப்படும் சிறார் , முதலான வகையில் சிறார் பாதிப்பு.

2. மகளிர் அவதூறு , அவர் தம் அடிப்படை உரிமை மறுப்பு , அரைப்பட்டினி , அவர்தம் துணைவர்களின் வேண்டாத குடிப்பழக்கம் , தாக்குண்ட மதிப்பு , வேண்டுமென்றே தவறு காணல் , திருமணக்கட்டணம் கேட்டுத் துன்புறுத்தல் , முதலிய பலவகையிலும் துன்புறுத்தல் , பணியிடத்தில் அச்சுறுத்தல் , அவதூறு , புறங்கூறல் , சம நீதி மறுப்பு , எனப் பல்வேறு கொடுமைகளுக்காளாதல் மகளிர் மனித உரிமை மீறும் குற்றங்களாகும்.

தங்கள் வீட்டு மகளிரைத் தாங்களே மதிக்காவிடில் மற்றவர் எவ்வாறு மதிப்பர்? தம் வீட்டு மகளிரை மதிக்காதவர் அக்கம் பக்கத்தவர் இயல்பாக அளிக்கும் மதிப்பையும் தம் கீழான சந்தேகக் கண் கொண்டு பார்த்து மென்மேலும் சிக்கலையேச் சேர்ப்பர். முற்றிலும் புதியவர் , அறிமுகமே இல்லாதவர் கூட பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது , அவர்களைப் பற்றி மட்டமாகப் பேசுவது , சாடை செய்வது , வயது , நிலைமை எதுவானாலும் முறைகேடாகப் பேசவும் , நடக்கவும் , கற்பழிக்கவும் கூடத் தயங்காத சழக்கர்கள் நாடு, மொழி , மதம் இனம் போன்ற எந்த பேதமும் இல்லாமல் கூசாமல் குற்றமிழைப்பர்.

மகளிருக்கெதிரான மனித உரிமை மீறல் என்பது மிகச் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றாகும் , கருவறை தொடங்கி கல்லறை வரை வயது வேறுபாடின்றி மனித உரிமை வரம்பு மீறல் தன் கொடூர முகத்தைக் காட்டி அச்சுறுத்துகிறது. வீடு , பணியிடம் , பயணிக்கும் இடம் எங்கு பார்த்தாலும் , படித்தவர் , படிப்பற்றவர் , இளையவர் , முதியவர் , என்று எந்த வேறு பாடும் இந்த மகளிர்க்கெதிரான வன்கொடுமைகளுக்கு இல்லவே இல்லை.

மனித உரிமை மீறல் , வன்கொடுமை இவையெல்லாம் மகளிர்க்கு எதிராக மட்டும் தான் நிகழ்கிறதா? ஆடவர்க்கு இல்லையா? என்றால் மிக மிக அரிதாக அங்கொன்றும் , இங்கொன்றுமாக நிகழக் கூடும். எடுத்துக்காட்டாக அடிமைத் தொழிலாளி , வறுமையில் வாடுபவர் , அறியாமையால் தவிப்பவர் போன்று தவிர்க்க முடியாச் சூழலில் நிகழக்கூடும்.

மனித மாண்பு , மதிப்புத் தெரிந்தால் மட்டுமே மதிப்பு , மரியாதை , தகைமை , தன் மதிப்பு , இவற்றோடு யாவரும் வாழ முடியும். இந்த இலக்கை அடைவதற்கான ஒரே வழி கல்வியறிவைப் பெறுதல் தான். மனதிற்கும் உடலுக்கும் ஒரு சேரப் பயிற்சியளிக்கும் உயர் பணியைச் செய்வது கல்வியே.

கண்ணுடையர் என்போர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையோர் கல்லாதவர்.

தனி மனிதக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை கூட உயர்கல்வி , பல்கலைக்கழக அளவிலான ஆய்வு , கண்டு பிடிப்பு , கலந்தாய்வு , சமுதாயச் சிக்கல்களுக்கான தீர்வு காணும் தகவு ஆகியவை மனித வாழ்விற்கு வளங்கூட்டும். உரிமை மீறல்களைத் தவிர்க்கவும் , அடியோடு அகற்றவும் வழி காட்டக் கூடும்.

உயர்கல்வித்துறைக்கு மட்டுமே தன்னலமற்ற உதவிக்கரம் நீட்டி மக்களுக்கு ஏற்றமிகு நல் வழியை காட்ட இயலும். அரசு நிதியுதவி ஆய்வுப் பணிகளுக்கும் , மக்களிடம் நலத் திட்டங்களைப் பயனுள்ள வகையில் கொண்டு சேர்க்கும் பணிக்கும் இத்தகைய உயர்கல்விக் கூடங்களைப் பயன்படுத்தல் குறைந்த செலவில் அதிக பயன் தரச் செய்யும்.

மனித இனத்தின் அத்தனை கண்டுபிடிப்புகளும் மனித இன மேம்பாட்டிற்காகவேயாகும். இதில் ஒளிவு மறைவோ , தான் வாழப் பிறரைத் துன்புறுத்தல் அவதூறு பரப்புதல் , அவமதித்தல் , அழித்தல் முதலான வரம்பு மீறல்களைச் செய்வோர் நினைவு கொள்ள வேண்டியது ஒன்று :

வலியார் முன் தன்னை நினைக்கத் தான் தன்னின்
மெலியார் மேல் செல்லுமிடத்து.

ஏதிலாராகவும் ,தன்னைக் காத்துக் கொள்ளுமளவு கூட வலிமையற்றவராயிருப்போருக்குக் குடும்பம் , சமுதாயம் , நாடு ஆகிய அனைத்துத் திறத்தினரும் பாதுகாப்பளிக்க வேண்டிய கடப்பாடுடையவர் ஆவர். தங்கள் நலம் கருதியேனும் , மக்கள் பொது நலம் காக்க வேண்டும். நாம் என்ன கொடுக்கின்றோமோ அது தான் பன் மடங்காகித் திரும்பவும் நம்மை வந்தடையும். நல்லதே நினைத்து , நல்லதே பேசி நல்லதே செய்து வரின் நடப்பதெல்லாம் நல்லதாகவே அமையும்.

எதிர்காலத்தை ஏற்று நடத்த வேண்டிய இளம் தோள்களுக்கு வலிமையூட்டுவது எத்தனை இன்றிமையாததோ அத்தனை அளவு , அதற்கு மேலும் கூட , தொட்டிலை ஆட்டும் கை , தொல்லுலகாளும் கை, அன்னமிட்ட கை , உலகை ஆக்குவிக்கும் அன்பு அன்னையர் , மகளிர் ஆகியோர் கைகட்கு வலிமை சேர்ப்பதும் இன்றிமையாததாகும். நாடும் வீடும் நலம் பெற ” வாழு , வாழ விடு ” என்பதே எங்கெங்கும் ஒலிக்கட்டும்.

 தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *