சேவாலயா பொங்கல் விழா – அமைச்சர்கள் பங்கேற்பு – செய்திகள்

0

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் செயல்பட்டுவரும் சேவாலயா அறக்கட்டளையில் 14.01.2012 காலை 10 மணியளவில் பாரம்பரிய பொங்கல் மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.பா.வளர்மதி (மாண்புமிகு சமூகநலத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு), திரு.பி.வி.ரமணா (மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு) கலந்து கொண்டனர்.

மாநில அளவில் சேவாலயா நடத்திய சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு குறித்த தேர்வில் கன்னியாகுமரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருமதி.பா.வளர்மதி (மாண்புமிகு சமூகநலத் துறை அமைச்சர்) சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பைகளை வழங்கி பாராட்டினார். ஆதரவற்றவர்களுக்கு சேவாலயா ஆற்றி வரும் தொண்டைப் பாராட்டிய அமைச்சர், தனது துறையின் மூலமாக சேவாலயாவிற்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க ஆவன செய்வதாக தெரிவித்தார். சேவாலயாவின் விடுதியில் தங்கி கல்வி பயின்ற மகாலட்சுமி என்ற பெண்ணிற்கு அரசின் திருமண உதவித்தொகை ரூ 25,000க்கான காசோலையை வழங்கினார், சேவாலயா பள்ளியில் 15 வருடங்களாக தலைமையாசிரியராகப் பணியாற்றி தற்போது அரசுப் பணியில் சேர்ந்திருக்கும் முன்னாள் தலைமையாசிரியர் திரு.G.சிட்டிபாபு அவர்களுக்கு சேவாலயாவின் சார்பாக சமூக நலத்துறை அமைச்சர் நினைவுப்பரிசை வழங்கினார். மேலும் தமிழரின் பாரம்பரியத்தைக் கொண்டாடும் விதத்தில் பொங்கல் வைத்து மாணவர்களுடன் கொண்டாடினார்.

சேவாலயாவின் சார்பாக புகையில்லா போகியைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நடைபயணத்தில் ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி, தாசர் மேநிலைப்பள்ளி, பாக்கம் உயர்நிலைப்பல்ளி, சுவாமி விவேகானந்தா வித்யாலயா, மேலப்பேடு நடுநிலைப்பள்ளி, சேவாலயா பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். புகையில்லா போகி பற்றிய மாணவர்களின் சிறந்த விழிப்புணர்வு வாசகங்களுக்கு திரு. பி.வி.ரமணா (மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர்) பரிசுகளை வழங்கி பாராட்டினார். சேவாலயா போன்ற பசுமைமிக்க வளாகங்களை ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்க வேண்டுமென்று கூறினார். மேலும் விழாவில் டாக்டர்.பி.வேணுகோபால் (திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்கள் சேவாலயா பணியாளர்களுக்கு பிறந்த நாள் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். திரு.N.S.A.இரா. மணிமாறன்(சட்டமன்ற உறுப்பினர், பூந்தமல்லி) அவர்கள் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணமாக பல்வேறு கட்டுரைகள், கவிதைகள், ஓவியங்கள் இவற்றின் தொகுப்புகளான விடியல் என்ற புத்தகத்தை வெளியிட திரு.புட்லூர் ஆர்.சந்திரசேகர்(ஒன்றிய பெருந்தலைவர், திருவள்ளூர்) அவர்கள் பெற்றுக்கொண்டார். திருமதி.S.ரூத் வெண்ணிலா(மாவட்ட சமூகநல அலுவலர், திருவள்ளூர்), திரு.சையத் ரவூப் (நன்னடத்தை அலுவலர், திருவள்ளூர்) திரு.சக்தி ரமேஷ் (துணை பெருந்தலைவர், திருவள்ளூர்), மாவட்டக்குழு உறுப்பினர்கள் திருமதி.A.செல்வகுமாரி, திருமதி.M.பொம்மி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் திருமதி.V..திருமஞ்சுஅருள்தாஸ், திருமதி.K.தாட்சாயணி, திருமதி.A.மல்லிகா மற்றும் வழக்கறிஞர் திரு.R.S.ராஜராஜன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு.வி.முரளீதரன் அவர்கள் வரவேற்க, அறங்காவலர் திரு.லட்சுமிநாராயணன் அவர்கள் நன்றி நவில விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *