தமிழறிஞர் ஈழத்துப் பூராடனார் மறைந்தார்

0

முனைவர் மு.இளங்கோவன்

pooraadanaarதமிழீழத்தில் பிறந்து கனடாவில் வாழ்ந்து வந்த தமிழ்ப் பேரறிஞர் ஈழத்துப் பூரடனார் 21.12.2010 அன்று இயற்கை எய்தினார்.

ஈழத்து அரசியல் போராட்டம் காரணமாகக் கனடாவில் வாழ்ந்து வந்த ஈழத்துப் பூராடனார் தமிழீழத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சார்ந்த செட்டிப்பாளையம் என்னும் ஊரில் வாழ்ந்த நாகமுத்து சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மை அம்மாளுக்கும் மகனாக 13.12.1928 இல் பிறந்தவர். இவர்தம் இயற்பெயர் செல்வராசகோபால் ஆகும். செட்டிப்பாளையம் என்னும் ஊரில் பிறந்தாலும் தேற்றாத்தீவில் வாழ்ந்தவர்.

ஈழத்துப் பூராடனார் 1985இல் கனடாவிற்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அங்கே சென்ற பிறகு தமிழர்கள் பலரும் குடிபெயர்ந்து வசிக்கத் துணையாக இருந்தார். தமிழ் மக்கள் பயன்பெறும்வண்ணம் பல்வேறு நிறுவனங்களை ஏற்படுத்திப் பல பணிகளையும் செய்தார். அவற்றுள் ரிப்ளக்சு அச்சகம், சீவா பதிப்பகம், நிழல் என்னும் பெயரில் இதழ் நடத்தியது, தமிழ் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டமை, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்-கிளை ஏற்படுத்தியமை, இவர்தம் மகன் ஜார்ஜ் இதயராஜ் வழியாகத் தமிழ்மகன் என்னும் திரைப்படம் உருவாக்கியமை, தம் மக்களுடன் இணைந்து தமிழ்க் கணிப்பொறி எழுத்துகளைப் பயன்படுத்தி முதன்முதல் தமிழ்நூல் வெளியிட்டமை (பெத்லேகம் கலம்பகம்)(1986) முதலியன இவர்தம் பணிகளுள் குறிப்பிடத்தக்கன.

ஈழத்துப்பூராடனார் இளம் அகவையிலே எழுதத் தொடங்கிவிட்டார். தம் பெயரிலும், கதிர், கதிர்வள்ளிச் செல்வன், பூராடனார், ஈழத்துப் பூராடனார் என்னும் பெயர்களிலும் பல்வேறு கதை, கட்டுரை, திறனாய்வு, கவிதை, மொழிபெயர்ப்புகள் எனப் படைத்துள்ளார். இவர்தம் எழுத்தாளுமை, பதிப்பு, படைப்பு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு, தொகுப்பு என்று பன்முகத்தன்மை கொண்டது.

ஈழத்துப் பூராடனார் சிற்றிலக்கியங்கள் பலவற்றை இயற்றியுள்ளார். புயற்பரணி என்னும் பெயரில் 625 செய்யுட்கள் கொண்ட நூலையும், ஈழத்துப் போர்ப்பரணி என்னும் பெயரில் 525 செய்யுள் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார். இவை தவிர வறுமைப் போர்ப் பரணி என்னும் நூலையும் இயற்றியுள்ளார். விபுலானந்தர் பிள்ளைத் தமிழ்(1984), ஈழத்து இரட்டையர் இரட்டை மணிமாலை (1984), புலவர்மணிக்கோவை (1984) முதலான நூல்களை இயற்றியுள்ளார்.

ஈழத்துப் பூராடனார் எழுதிய நூல்களுள் அறிஞர் உலகம் ஏற்றுப்போற்றும் நூல்கள் அவர் மட்டக்களப்பு தொடர்பில் இயற்றப்பட்டவற்றை எனில் மிகையன்று. ஏனெனில் இந்நூல்கள் மட்டக்களப்பு வரலாறு அறிவிப்பதோடு அமையாமல் அங்கு வழக்கிலிருக்கும் பழந்தமிழ்ச் சொற்கள், வாழ்க்கை முறைகள், பண்பாடு எனப் பல்துறைப் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் அந்நூல்கள் வெளிவந்துள்ளன. அவ்வகையில்,

1.மட்டக்களப்புப் பிரதேசத்தின் வழக்கு மரபுச்சொற்கள் சொற்றொடர்களினதும் அகராதி(1984)

2.மட்டக்களப்பு மாநிலப் பழமொழிகள் அகரவரிசை(1984)

3.நீரரர் நிகண்டு(1984)

4.மட்டக்களப்புச் சொல்வெட்டு(1984)

5.மட்டக்களப்புச் சொல்நூல்(1984)

6.மட்டக்களப்பு மாநில உபகதைகள்(1982)

7.சீவபுராணம் நெடுங்கதை(1979)

8.மட்டக்களப்பு மக்களின் மகிழ்வுப் புதையல்கள்(1978)

9.மட்டக்களப்புப் பனையோலைச் சுவடிகள்(1980)

10.மட்டக்களப்பியல்

11.மட்டக்களப்பு உழவர்மாட்சிக் கலம்பகம்

12.கன்னங்குடா உழுதொழிற்பள்ளு

13.மீன்பாடும் தேன்நாடு

14.வசந்தன்கூத்து ஒருநோக்கு

15.வயலும் வாரியும்

16.மட்டக்களப்பில் இருபாங்குக் கூத்துக்கலை

முதலியன குறிப்பிடத்தக்கன.

ஈழத்துப்பூராடனார் ஈழத்தின் வரலாற்றை அறிவதற்குப் பயன்படும் வண்ணம் யாரிந்த வேடர்(1965), ஈழத்தின் வரலாறு(1986) என்னும் நூல்களை எழுதியுள்ளார்.

ஈழத்துப் பூராடனார் தமிழின் ஒரு பிரிவான நாடகத் துறை சார்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். இவை உரையாகவும், செய்யுளாகவும் அமைகின்றன. மதங்க சூளாமணி என்னும் நூலினை விபுலானந்த அடிகளார் இயற்றினார். இதில் வடமொழிச் சொற்கள் மிகுதியும் கலந்து கிடந்தன. இவற்றின் கருத்தைத் தழுவி ஈழத்துப் பூராடனார் மதங்க சூளாமணியின் மறுபதிப்பாகவும் ஆய்வாகவும் கருதும்படி கூத்துநூல் விருத்தம் என்னும் பெயரில் 320 செய்யுள் கொண்ட நூலினை வெளியிட்டுள்ளார். இந்நூலின் சிறப்பு என்னவெனில், பாடல்களுக்கு உரை வரையும் போக்கே தமிழ் உலகில் காணப்படுவது. நம் ஈழத்துப் பூராடனார் விபுலானந்தரின் உரைக்குப் பாடல் எழுதியுள்ளார்.

ஈழத்துப் பூராடனார் கூத்தர் வெண்பா (821 செய்யுள்), கூத்தர் அகவல், நாடகத் தமிழ், மணிமேகலை(தென்மோடி). சிலப்பதிகாரம் (வடமோடிக்கூத்து), கனடாக் குறவஞ்சி நாடகம், கிழக்கு ஈழ மரபுவழி இருபாங்குக் கூத்துக் கலை ஆய்வுக்கான தகவல் திரட்டு முதலான நூல்களை இயற்றியுள்ளார். மேலும் பிற எழுத்தாளர்களுடன் இணைந்து பல நூல்களை நாடகத் துறையில் உருவாக்கியுள்ளார்.

ஈழத்துப் பூராடனாரின் தமிழழகி காப்பியம் என்னும் நூல், ஒன்பது காண்டங்களாக 12000 செய்யுள்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காண்டமும் 300 பக்கங்களைக் கொண்டது. ஈழத்துப் பூராடனார் இசைத்தமிழ் குறித்த நூலொன்றையும் வெற்றிலை(பக்.80) என்னும் பெயரில் இசைப் பாடலாக எழுதியுள்ளார்.

ஈழத்துப் பூராடனார் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுபவர். இச்சமயம் சார்ந்து பல நூல்களை இயற்றியுள்ளார். இவர்தம் வாழ்க்கை முறை என்பது அனைத்துச் சமயத்தாரையும் ஆரத் தழுவிப் போற்றும் வகையினது. இவர் கணிப்பொறி வழி அச்சிட்ட முதல்நூல் பெத்லேகம் கலம்பகம்(1986) கிறித்தவ சமயம் சார்ந்த நூலாக இருப்பினும் சைவ சமயம் சார்ந்த பல நூல்களுக்கு உரை வரைந்துள்ளார்.

ஈழத்துப் பூராடனார் உரைநடை எழுதுவதில் வல்லவர் என்பதுபோல் பிற நூல்களுக்கு உரை வரைவதிலும் வல்லவர். அவ்வகையில் இவர் சீமந்தனி புராணம் (வித்துவான் பூபாலபிள்ளை), கதிர்காம சதகம் (இ.வ.கணபதிப்பிள்ளை) முதலான நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

ஈழத்துப் பூராடனார் பல்வேறு நூல்களை எழுதியதுடன் அந்நூல்கள் யாவும் இன்று கிடைக்காமையை உணர்ந்து ஒவ்வொரு நூல்பற்றிய விவரங்களை அறிவிக்கும் அமைப்பில் நானும் எந்தன் நூல்களும் என்னும் பெயரில் மூன்று தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இந்நூல்கள் பதிப்புத் துறை சார்ந்தும், தமிழக, ஈழத்து, கனடா சார்ந்த பல்வேறு தகவல்களைத் தருகின்றன.

இவர்தம் பணியைப் பாராட்டிப் பல்வேறு அமைப்பினரும், நிறுவனங்களும் பாராட்டிச் சிறப்புச் செய்துள்ளன. இவற்றுள் இந்து பண்பாட்டு அமைச்சின் நாடக சேவை விருது(1982), மட்டக்களப்பு கலை பண்பாட்டு அவை வழங்கிய இலக்கிய மணி விருது, கனடாவில் வழங்கப்பட்ட பாராட்டுப் பதக்கம் (1994), தொரன்றோ சேக்கம் நிறுவனத்தின் கேடயமும் (1987), மொரீசியசில் வழங்கப்பட்ட தமிழ்நெறிப் புலவர் விருதும், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் இவர்தம் தமிழ் இலக்கியப் பணியைப் பாராட்டி வழங்கிய முனைவர் பட்டமும் (Doctor Of Letters)(2000), தமிழர் தகவல் விருது (1992), தாமோதரம் பிள்ளை விருது(1998) முதலியன குறிப்பிடத் தக்கன.

ஈழத்துப் பூராடனார் மறைவுக்கு வல்லமை, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *