வி.டில்லிபாபு

(08.01.2012 அன்று பெங்களூரூ தமிழ்ச்சங்க அரங்கில் நிகழ்ந்த கருத்தரங்கில் ஆற்றிய உரை)

தமிழுக்கும் தொழிற்நுட்பத்திற்குமான உறவு நீண்ட நெடியது.

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,

ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

பெண்பாற் புலவராக அறியப்படுகிற பொன்முடியார் எழுதிய பாடல் இது. பிள்ளையைப் பெற்றெடுத்தல் என் கடன், சான்றோனாக்குதல் தந்தையின் கடன் என ஒவ்வொருவரின் கடமையையும் பட்டியலிடுகிறாள் பண்டைய தமிழ்த்தாய்.

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

என்கிற வரியில் வேலின் தொழிற்நுட்பமும் பேசப் பட்டிருக்கிறது. வடித்து என்பது Forging என்று அறியப்படுகிற உருவாக்கு முறை. Forging என்ற உருவாக்கு முறையைப் பற்றிய ஆங்கிலக் குறிப்புகள் 12 ஆம் நூற்றாண்டில் தான் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன, முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டிலேயே தமிழில் இத்தொழிற்நுட்பம் ஆவனப்படுத்தப்பட்டிருக்கிறது.

கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரத்திற்குப் பிறகு அணுப்பிளவு (Nuclear Fission) தொழிற்நுட்பத்தைப் பற்றிய விவாதங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. Nuclear என்ற அணுப்பிளவை 1939 ஆம் ஆண்டு ஓட்டோ ஹான் மற்றும் ஃபிரிட்ஸ் ஸ்ட்ராஸ்மேன் ஆகியோர் கண்டறிந்தனர். ஆக 20 ஆம் நூற்றாண்டில் தான் அணுப்பிளவு உலகறியப்பட்டது.

கி,பி, முதலிரண்டு நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஔவையார் திருக்குறளை இவ்வாறாக விளிக்கிறார்.

‘அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்’

உலகம் அறிவதற்கு 18 நூற்றாண்டுகளுக்கு முன்பே அணுப்பிளவைப் பதிவு செய்த மொழி தமிழ் மொழி.

இன்னொரு செய்தி, முன்னேறிய மேற்கத்திய நாடுகளின் ஆடவர்களால் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் பேசப்பட்ட தொழிற்நுட்பங்கள் சங்க கால பெண்பாற் கவிஞர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது தமிழ்ச்சமூகத்தின் தொழிற்நுட்ப ஆளுமைக்குச் சான்று
உலகின் பிற மொழிகளைப் பின்னுக்குத் தள்ளி தொழிற்நுட்பம் பொதிந்த நம் தமிழின் இன்றைய நிலையென்ன?

ரஷ்ய, ஜெர்மானிய, சீன மற்றும் ஜப்பானிய மொழிகளோடு ஒப்பிட்டால் தமிழில் வெளிவந்திருக்கிற தொழிற்நுட்பப் படைப்புகள் மிகக்குறைவு.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட செந்தமிழ், தொழிற்நுட்பப் பதிவுகளைப் பொருத்த வரையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே தான் வாடி நிற்கிறது.

அழகியலையும் வாழ்வியலையும் மட்டுமே பேசிக் கொண்டிருப்பது ஒரு ஆழமான மொழிக்கு அழகல்ல.

உலகத்தமிழர்களின் முன் உட்கார்ந்திருக்கிற மிகமுக்கிய கேள்விகள் இரண்டு.

ஒன்று, தமிழை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்வது எப்படி? இது மொழி சார்ந்தது, மொழியை முன்னேற்றுகிற முயற்சி.

இரண்டாவது, தமிழை அடுத்த தலைமுறையினர்க்கு கொண்டு செல்வது எப்படி? இது மொழியின் பயன்பாடு அல்லது உபயோகம் சார்ந்தது.

முதல் கேள்விக்கு வருவோம். தமிழை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்வது எப்படி?

விமான எஞ்சினை ஆராய்ச்சி செய்யும் எங்கள் ஆய்வுக் கூடத்தின் தொழிற்நுட்ப நூலகத்தில் ஒரு தமிழ் நூலுமில்லை. ஒரு குறிப்பிட்ட விமான தொழிற்நுட்பத்தகவலை தேடிய போது, அது குறித்த புத்தகத்தை கண்டுபிடித்தோம், ஆனால் அது ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட புத்தகம், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பயன்படுத்தினோம்.

இது போல தமிழில் உயர் தொழிற்நுட்ப நூல்கள் எழுதப் பட வேண்டும். உலக நாடுகள் தமிழ் நூல்களைத் தேடிப் பிடித்து மொழிபெயர்க்கும் நிலை வேண்டும். இதுவே தமிழ் மொழியின் அடுத்த அத்தியாயம்.

மிக முக்கியமான கருத்தை இம்மேடையில் பதிவு செய்கிறேன். தமிழின் எதிர்காலம் தமிழ் சாராத துறைகளைச் சார்ந்த தமிழர்களிடமிருக்கிறது. இயல், இசை, நாடகத்தைத் தொடர்ந்து நான்காம் தமிழாக தொழிற்நுட்பத் தமிழ் துவங்கப் பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

விண்வெளி நிபுணர்களும், கண்வலி மருத்துவர்களும் தங்கள் துறை சார்ந்த தகவல்களை தமிழில் எழுத வேண்டும். மென் பொருள் பொறிஞர்களும் தின்பொருள் வல்லுனர்களும் தங்களின் தொழிற்நுட்பங்களைத் தமிழில் பதிவு செய்ய வேண்டும்.

இரு தளங்களில் இந்நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம். அமைப்பு சார்ந்த பதிவுகள் மற்றும் அமைப்பு சாராத பதிவுகள்.

அரசின் ஆதரவோடு பல்கலைக்கழகங்களும், பிற அமைப்புகளும் தொழிற்நுட்பத் தமிழ்த்துறையை உருவாக்கி தமிழில் தொழிற்நுட்ப நூல்களையும், கட்டுரைகளையும் தகுந்த படைப்பாளிகளைக் கொண்டு எழுதி வெளியிட வேண்டும்.

இரண்டாவது, உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு துறைகளில் பணிபுரிகிற தமிழர்கள், தத்தமது துறை சார்ந்த தகவல்களை தமிழில் பல்வேறு ஊடகங்களில் பதிவு செய்யத் துவங்க வேண்டும்.

இப்பணியில் தமிழ்த்துறையினரின் பங்களிப்பு என்ன? இவ்விரு முயற்சிகளுக்கும் தோள் கொடுத்து புதிய கலைசொற்களை ஆக்கித் தந்து, பதிவுகளை செப்பனிடும் அரும்பணியை தமிழறிஞர்களும், தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் செய்ய வேண்டும்.

தமிழை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்கிற கனமான பணி படைப்பாளிகளிடமும், பெற்றோரிடமும், பிள்ளைகளிடமும் இருக்கிறது.

படைப்பாளிகள் மாறி வருகிற அறிவியல், பொருளாதார, சமூக, சமுதாய மாற்றங்களை மனதிற்கொண்டு, கால மாற்றத்திற்கேற்ற ஊடக வாகனங்களில் தமிழை வாசகனுக்கு ஊட்டி விடவேண்டும்.

ஐபாட் தலைமுறைக்கு ஐயப்பாடு இல்லாமல் தமிழைக் கொண்டு சேர்க்கும் புதிய தலைமுறை படைப்பாளிகள் புறப்பட்டு வர வேண்டும்.

பெற்றோர்களுக்குச் சில வார்த்தைகள்:

அழகிய பிள்ளைகளை உலகுக்கு அறிமுகம் செய்த நீங்கள், தமிழை உங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்.

தமிழ்த்திரைப்படங்களைப் பார்ப்பதும், செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் குடும்பமாக அர்த்தமற்ற நகைச்சுவைக் காட்சிகளைக் கண்டு ரசிப்பதும் தமிழுக்கு நீங்கள் செய்கிற சேவையாகக் கருத வேண்டாம்.

தூய தமிழில் பேச பிள்ளைகளைப் பழக்குங்கள். தரமான தமிழ் படைப்புகளையும், படைப்பாளிகளையும் உங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி, வாசிக்கும் பழக்கத்தை சுவாசிக்கும் வழக்கமாக மாற்றுங்கள்.

மாணவர்களுக்கு சில வார்த்தைகள்:

தமிழ் கூறும் நல்லுலகும், தமிழைக் கூறுபோடும் நல்லுலகும் சமவிகிதத்தில் சேர்ந்தியங்கும் இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ்ப் பூக்களே!

பல கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த சூரியனையும், சந்திரனையும், இது என் வீட்டுச் சூரியன், என் குடும்ப நிலவு என நம்மால் பெருமை பாராட்ட இயலாது. இவை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால், தொன்மையும் சிறப்பும் வாய்ந்த தமிழை ‘என் தமிழ்’ என மார் தட்ட நமக்கு மட்டுமே உரிமை.

இது பாரதி பாடிய மொழி, வள்ளுவன் பேசிய மொழி…தமிழர்களின் தேசிய மொழி. எந்தப் படிப்பு படித்தாலும் தூய தமிழ் பேசுவதில் பெருமைப் படுங்கள்.

மாதம் ஒரு தமிழ் நூலைக் கட்டாயம் வாசியுங்கள்.

தமிழ் வழியில் படித்தால் வாழ்வில் முன்னேற முடியாது என்பது வெறும் மாயை.

இன்னொரு மகாத்மாவாக, அக்னி சிறகுகள் சூடிய அதிசய மனிதராக வலம் வரும் பாரத ரத்னா. டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் தமிழ் வழியில் படித்தவர்.

நண்பரை சந்திக்கும் போது ‘வணக்கம்’ சொல்கிறீர்கள். ‘வணக்கம்’ என்ற சொல் உங்கள் உதடுகளிலிருந்து நண்பரின் காதுகளுக்கு எவ்வளவு வேகமாக சென்றடைகிறதோ அதை விட ஐந்து மடங்கு வேகமாக பறக்கக்கூடிய பிரமோஸ் ஏவுகணையை உருவாக்கிய பத்மஸ்ரீ டாக்டர் சிவதாணுபிள்ளை அவர்கள் தமிழ் வழியில் படித்தவர்.

‘எந்திரன்’ படத்திற்கு சீட்டு வாங்க முண்டியடித்தது ஒரு கூட்டம். எந்திரனுக்கு வரிசையில் நின்ற மனிதர்களுக்கு மத்தியில் சந்திரனுக்கு ஓடம் விட்ட டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை தமிழ்வழியில் படித்தவர்.

ஆக, தமிழ் வழியில் படித்தால் வாழ்வில் முன்னேற முடியாது என்பது வெறும் மாயை.

தமிழர்களின் கேள்வி ஞானமும், அறிவுத்திறனும் உலக அரங்கில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த அல்லது இந்திய வம்சாவளியைச் சார்ந்த 9 பேர் இது வரை நோபல் பரிசு பெற்றுள்ளனர். இந்த 9 பேரில் அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்றவர்கள் 5 பேர். இந்த ஐவரில் மூவர் தமிழர்.

சி.வி.ராமன், சுப்ரமணியம் சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.

அறிவார்ந்த இத்தமிழ்க்குடும்பத்தின் நீட்சி தான் நீங்களும் நானும்.

உயிரான தமிழிருக்கிறது. செழித்த பாரம்பரியம் இருக்கிறது, சாதித்த தமிழர்களின் சரித்திரமிருக்கிறது. வேறேன்ன வேண்டும்?

வாருங்கள் தமிழை அடுத்த தளத்திற்கும், அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம்.

சிம்புட் பறவையே சிறகை விரி

சிங்க இளைஞனே திருப்பு முகம், திற விழி

கைவிரித்து வந்த கயவர் நம்மிடையே

பொய் விரித்து நம் புலங்கள் மறைத்து

தாயகம் பற்றி

தமிழுக்கு விலங்கிட்டு

நமக்குள்ள உரிமை தமக்கென்பாரெனில்

வழி வழி வந்த உன் மறத்தனம் எங்கே?

மொழிப்பற்றேங்கே?

விழிபுற்றெழுக!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *