அவ்வை மகள்

முதல் வெட்டு கணக்காய் கணக்கின் மீது விழுந்தது!

கல்வியில் வெகுகாலமாக ஒரு போக்கு நிலவி வந்திருக்கிறது. அது என்னவென்றால்: மாணவர்கள் என்பவர்கள் வெற்றுப் பாத்திரங்கள்! இந்த வெற்றுப் பாத்திரங்கள் ஒரு ஆசிரியரின் முன்வந்து அமருவன – அவ்வாறு அமர்ந்த அப்பாத்திரங்களுக்கு, ஆசிரியரானவர் கல்வி வார்த்து அவற்றை இட்டு நிரப்புவார்!!
கல்விக்குத் தரப்பட்ட இந்த வடிவமைப்பை ஒரு மாபெரும் அறிவார்ந்த அறிவாக – அசைக்கமுடியாத விதியாக – வழக்கமாக்கி – அச்சேற்றி – அரசாணை செய்த கதையாய் – ஆசிரியர்கள் யாவரும் உயர் பீடத்திலேயே வைக்கப்பட்டு காலம் காலமாக ஆராதிக்கப்பட்டு வருவதானார்கள்.
இப்போக்கு, எவரும் குறையொன்றும் சொல்லாமலேயே பலகாலமாய் வழக்கில் நின்று வருகிறது என்றால் ஆசிரியர்கள் யாவரும் உண்மையிலேயே அத்தனை உயர்வானவர்களா? குற்றம் குறை அற்றவர்களா?

பலதுறைகளிலே இதே மாதிரியான நிலைமை தான்!!

உண்மையான மதிப்பு எவர் மீதோ எதன் மீதோ இருக்க, நடைமுறை மதிப்பு வேறு எவர் மீதோ எதன் மீதோ இருக்கும்!
மருத்துவம் – மருத்துவர்கள்!
அரசாங்கம் – அதிகாரிகள்!!
நீதி – நீதிபதிகள்!
காவல்துறை – காவல் அதிகாரிகள்!
அதிகாரிகள் – அடிமட்ட ஊழியர்கள்
அமைச்சர்கள் – அவர்களது உதவியாளர்கள்
அதற்காக-
அனைத்து காவல் அதிகாரிகளும், அனைத்துப் பிற அரசு அதிகாரிகளும், அனைத்து நீதிபதிகளும், அனைத்து மருத்துவர்களும், மதிப்புத்தரத்தக்கவர்கள அல்லர் என்பதல்ல.

எந்த ஒரு துறையிலும் கண்ணியமும், கடப்பாடும், தொழில் நேர்மையும் – சேவை மனப்பான்மையும் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் யாவரும் மக்களது மதிப்பிற்கும் வணக்கத்திற்கும், ஏன் பக்திக்கும், வழிபாட்டிற்கும் கூட உகந்தவர்கள் தாம்! அவர்களை வாழ்த்துவதோடல்லாது, அவர்களது சொல்லை மறுபேச்சில்லாமல் கேட்பதுவும் “நம் கடனே!” என மக்கள் எண்ணுவதும் சரியான செயல்தான்!
கல்வி –ஆசிரியர் இந்த ஜோடியின் நிலைமையும் மேற்தகையதே!!
எனினும், கல்வி என்பது மற்றவற்றைக் காட்டிலும் அத்தனைப் பிரியமான – அத்தனை வீரியமான – அத்தனை முக்கியமான ஒரு வாழ்க்கைப் பொருளாய் இருப்பதால் – அதனின் பணியாளர்களான ஆசிரியர்கள் மிக முக்கியமானவர்களாகிறார்கள்.
கல்விப் பணியாளர்களான ஆசிரியர்கள் பிற துறைகளில் இருக்கக் கூடிய பிற பணியாளர்களைக் காட்டிலும் கூடுதலான முக்கியத்துவம் பெறுவதன் காரணம், கல்வியின் நேரிடைப் பெறுமானர்களான (receiving end) மாணாக்கர்கள் ஆசிரியர்களோடு மட்டுமே நேரிடையாகப் பழக வேண்டிய பரிவர்த்தனை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. பிற துறைகள் என்றால் ஒரு பணியாளைரை விட்டு/விடுத்து மற்றவர்களோடு பரிவர்த்தனை செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனால் கல்விக் கூடங்களில் மாணாக்கர்களுக்கென கல்விப் பரிவர்த்தனைக்கு உள்ள ஓரே நபர்கள் ஆசிரியர்கள் மட்டுமே. கல்வித்துறையின் – கல்விக்கூடங்க்ளின் – தனித்துவ அமைப்பு அவ்வாறானது!

இத்தகு ஒரு வித்தியாசமான அமைப்புக்கு அச்சாரமாய் வருவன:
(1) கல்விகூடங்களிலே வகுப்பறைக் கல்விக்காக இருக்கக் கூடிய கால நெருக்கடி (சென்ற இதழில் இதுபற்றிப் பேசினோம்)
(2) பெற்றோர்களின் உயிரினும் மேலான மக்கள் செல்வம் ஆசிரியர்களது ஆக்கினையின் கீழ் வருதல்

(3) பெற்றோர்களுக்கு இருக்கின்ற கால நெருக்கடி.

(4) பிரச்சினையென ஒன்று வந்து விட்டால், ஒரு கல்வியாண்டின்போது ஒரு குழந்தையை ஒரு பள்ளியிலிருந்து / கல்லூரியிலிருந்து விடுவித்து இன்னொரு பள்ளிக்கு/கல்லூரிக்கு அனுப்பவியலாத நடைமுறைச் சிக்கல்கள்.

(5) அந்தக் கல்வி ஆண்டை எப்படியோ “பல்லைக் கடித்தபடி” ஓட்டிவிட்டாலும், அடுத்த ஆண்டு வேறொரு நல்ல பள்ளியில் இடம் கிடைக்காது எனும் நிலைமை.
(6) ஆசிரியர்கள் நடத்தும் தேர்வுகளும் அதில் அவர்கள் வழங்கும் மதிப்பெண்களும் மட்டுமே மாணாக்கர்களின் கல்வித் தலைவிதியை முடிவு செய்வதான நிலை.

(7) ஆசிரியர் தரப்பிலிருந்து மாணவர்களுக்கு வருவதான பெரும்பாலான பிரச்சினைகள் உணர்வு நிலையில் – மன நிலையில் – குழந்தைகளின் எதிர்காலத்தில் – என நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மையன என்பதால் – நீதி கிடைக்காத இடத்தில் முட்டி மோதிக்கொள்வதை விட – பொறுத்துக் கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்வதையே உயர்ந்த கோட்பாடாய்க் கொள்ளும் நடுத்தர்வர்க்கத்தினரே அதிக எண்ணிக்கையில் இருப்பதான நிலைமை!

இந்நிலையில், வாழ்க்கையில் எத்தனையோ சிக்கல்களுடன் உழன்று கொண்டிருக்கும் பெற்றோர்கள், கல்விக்கூடங்களில் தமது குழந்தைகளுக்கு இழைக்கப்படும் எத்தனையோ அநீதிகளை நிதமும் உள்வாங்கிய படிதான் காலம் தள்ளிவருகிறார்கள். பள்ளிகளிலிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் தினசரி வருகின்ற இவ்வாறான பிரச்சினைகள் பெற்றோரின் நிம்மதியைக் குறைத்தும், குலைத்தும் வருவது இவர்களது ஆளுமையையே பாதிக்கின்ற தீவிரத் தன்மையுடையது என்றால் அது மிகையில்லை.

மேலும் சில பிரச்சினைகள் உண்டு:

(8) மாணாக்கர்கள் செலுத்துகின்ற கல்விக் கட்டணத்திற்கு இணையானதாக வழங்கப் படுகின்ற கல்வியின் தரம் இருக்கின்றதா என்பதைக் கண்காணிக்கவும், குறையிருப்பின் அதனைக் கண்டிக்கவும், செப்பனிடவும் முறையான ஏற்பாடுகள் இல்லாதிருத்தல்.

(9) ஆசிரியப் பணிக்கு அமர்த்திவிட்டதாலேயே, ஆசிரியர்கள் அனைவரும் நன்றாய்க் கற்பிக்கிறார்கள் என்பதான முடிவுடன் கல்விக்கூடங்கள் – கல்வித்துறை மேலிடங்கள் இயங்குவது ஒரு வாடிக்கையாகிப்போன வேடிக்கை நிலவுதல்.

(10) “Teacher Effectiveness” எனும் ஆசிரியத்தொழில் திறமை வகுப்பில் வெளிப்படுகிறதா என்பதனை எடைபோட்டுச் சரிபார்க்கும் முறைமைகளும் – விருப்பமும் இல்லாத கல்வி நிறுவன நிர்வாகங்கள் – கல்வித்துறை அதிகாரங்கள் என, சட்ட ஓட்டைகளில் ஜீவிக்கும் யதார்த்தங்கள்.

(11) நுகர்வோர் தொடர்பிலே நேரடியாக இருக்ககூடிய அனைத்துப் பணியாளர்களும், சுய ஆளுமையிலும், பழகு பாங்கிலும், “ethics” என்று சொல்லக்கூடிய பணிசார் ஒழுங்கிலும் தேர்ச்சி பெற்றவர்களாக – இவற்றில் பிசகற்றவர்களாக – நடை, உடை, சொல், தொனி, முகபாவங்கள், உடல் அசைவுகள், கண்ணோட்டம் ஆகியனவற்றில் மிகுந்த கண்ணியம் உடையவர்களாக, ஒழுங்குவிதிகளைக் கடைபிடிப்பவர்களாக இருக்கவேண்டிய அவசியம் உள்ள சூழ்நிலையில், நுகர்வோர் தொடர்பிலே இருக்கக்கூடிய ஆசிரியர்கள் இவற்றுக்கெல்லாம் தள்ளுபடி பெற்ற நிலைமை.

(12) நுகர்வோர் எனும் நிலையில் இல்லையென்றாலும், கற்பவர்கள் என்ற நிலையிலாவது மாணாக்கர்கள், ஆசிரியரின் – கற்பித்தல் – ஆளுமைத்திறன் – கற்பிக்கும் பாடத்திலே அவருக்கு இருக்கக் கூடிய பாண்டித்தியம் ஆகியனவற்றை மதிப்பீடு செய்யும் உரிமையும், அந்த மதிப்பீட்டை “Teacher Effectiveness” ன் அளவீடாக எடுத்துக் கொள்ளும் ஏற்பாடும் இல்லாத நிலவரம் இருப்பது.

இன்னமும் பலவற்றைச் சேர்க்கலாம்! பட்டியலை நீட்டுவது நமது குறிக்கோளல்ல. சமுதாயத்தின் முக்கியமானதொரு சேவைப் பணியும், அதில் சேவை செய்யும் முக்கியமான பணியாளர்களும் “accountability” என்று சொல்லக் கூடிய “பதிலிறுக்கும் – பொறுப்பேற்கும்” நிர்ப்பந்தத்திலிருந்து எவ்வாறு விடுபட்டு வாழ்ந்து வருகிறார்கள் என்பதை நாம் உணரும் போது சமுதாய வியாதிகளுக்கு மருந்தாய் அமைய வேண்டிய கல்வியே ஒரு சமுதாய வியாதியாக மாறி விட்டிருக்கிற ஆபத்தை உணருகிறோம்.

ஆக, சமுதாயத்திலே ஆசிரியர்களது “மதிப்பு” என்பது காலம் காலமாக மக்கள் கல்வியின் பால் வைத்திருக்கின்ற மதிப்பால் ஏற்பட்டதுதான் தானே ஒழிய ஆசிரியர்களின் பால் வைத்திருக்கிற மதிப்பு அல்ல எனத் தெரிய வருகிறது.

மாணவர்கள் வெற்றுப் பாத்திரங்கள் – அப்பாத்திரங்களுக்கு, ஆசிரியரானவர் கல்வி வார்த்து இட்டு நிரப்புதல் என்கிற “மாடல்” கல்வியிலும் சமுதாயத்திலும் நன்மைகளை விடுத்து பெரும் தீமைகளையே செய்வதானது! அறிவுச் செல்வம் என்பது ஆசிரியர்களின் தனிப்பட்ட சொத்தாய் மாறி, கல்வி, ஆசிரியர்களை மையமாய் வைத்து எழும்பியது! இவர்களை மையமாய் வைத்து கல்விக்கூடங்கள் எழும்பின காளான் முளைத்த கணக்காய்!!

வெற்றுப் பாத்திரங்களை நாங்கள் தாமே இட்டு நிரப்புகிறோம் என்கிற கல்வியாளர் மனோநிலையினால் – பல பாத்திரங்கள் காலியாகவே அனுப்பப்பட்டன. இவர்கள வீசிப்போட்ட கல்விப் பிச்சையை பிடித்துக்கொள்ள முடியாத பாத்திரங்கள் ஓட்டைப் பாத்திரங்களாக ஒதுக்கப் பட்டன.
பள்ளியின் வகுப்பறையில் மறுக்கப்பட்ட கல்வியை ட்யூஷன் மையங்களில் கூடுதல் காசையும் – கூடுதல் நேர்த்தையும் ஒதுக்கி – மாணவர்கள் பெறவேண்டியதாயிற்று. இந்த கல்வித் தேடல் ஒவ்வொரு இல்லத்திலும் எதிரொலிக்கலானது.
இவ்வகையில் முதல் வெட்டு கணக்காய் கணக்கின் மீது விழுந்தது!

வகுப்பில் கணக்குப் புலிகள் கண்டு மாணவர்கள் அணுக முடியாத அச்சம் கொண்டனர்!

பிதாகரஸ், இவர்களது காதில் மட்டுமே ரசியமாய் தனது தியரத்தை ஒதிவிட்டுச் சென்ற கதையாய் இவர்கள் சூத்திரங்களை விளக்கச் சுணங்கினார்கள்!

எப்போதும் வேறு ஏதோ ஒரு எண்ண ஓட்டத்துடன் இவர்கள் ஒட்டுதல் இல்லாமல் பள்ளியில் உலா வரலானார்கள்! பிற ஆசிரியர்களுடன் ஓரிரு வார்த்தைகள் கணக்காய்த்தான் பேசலானார்கள்!
மாலையில் மணியடிக்கும் போதே பள்ளியை விட்டு வெளியேறிய முதல்வர்கள் இவர்களே!

காலையில் மணியடித்து ஓய்ந்த பின்பு துல்லியக் கணக்கில் பரபரவென நுழைபவர்களும் இவர்களே!
டியூஷன் தாட்கள் பள்ளியிலேயே திருத்தப்பட்டன!

முடிபவர்கள் சாப்பாட்டு இடைவெளியிலும் கூட பள்ளியில் காணாமல் போனார்கள்!
பள்ளியில் வகுப்பறையில் கணிதம் கற்பிக்கும் பணி பார்ட் டைம் ஆகவும் – டியூஷன் பணி முழுநேரமுமானது!
மொத்தத்தில் கணித ஆசிரியர்கள் பள்ளியில் கணக்காய் அவ்வப்போது தென்பட்டார்கள்!

மேலும் பேசுவோம்

படத்திற்கு நன்றி :

http://www.123rf.com/photo_2369978_young-high-school-students-in-a-modern-and-bright-home-environment.html

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “செரியாத கல்வியின் சுமை..! (4)

  1. உண்மையான மதிப்பு எவர் மீதோ எதன் மீதோ இருக்க, நடைமுறை மதிப்பு வேறு எவர் மீதோ எதன் மீதோ இருக்கும்! 
    ~ வாஸ்தவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *