திவாகர்

நாடகம்-4 – விசாகப்பட்டினமும் முதல் தமிழ் நாடகமும்

 

விஜயவாடாவில் நாங்கள் போட்ட ‘ஒரு பெண் தேடுகிறோம்’ நாடகத்தைப் பற்றி அடுத்தநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் விமர்சனம் எழுதினார் திரு வி.எஸ்.எஸ் (இவர் பிரபல விமர்சகர். அந்தக் கால கட்டத்தில் ஆனந்த விகடனில் வெளிவரும் நாடகங்கள், இசைக் கச்சேரிகள் பற்றிய இவரது விமர்சனங்கள் பிரபலமானவை) இவர் அன்று எங்கள் நாடகத்துக்கு வந்திருந்து, பார்த்து விட்டு பத்திரிக்கையில் எங்களை கிண்டலாக, குற்றம் சாட்டியிருந்தார். நிறைய நாடகங்கள் பார்த்த அனுபவஸ்தரானவர் எங்களை அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் எனப் பார்க்காமல் ப்ரொஃபெஷனல் ஆர்டிஸ்ட் போல, அதுவும் மனோகர் நாடகம் போடுவது போல அவர் நினைத்து வந்திருக்க வேண்டும். அவர் கிண்டலில் ஒரு பகுதி தமிழில் தருகிறேன்.

‘நாடகம் காமெடி நாடகம்தான் என்பதை அவ்வப்போது நிரூபித்துக்காட்ட வேண்டுமென்பதற்காகவே அந்த புதிய கார்ப்பொரேஷன் ஆடிட்டோரியத்தை திவா தேவா தேர்ந்தெடுத்தார்கள் போலும்.. இங்கு மெயின் கர்டெய்ன் கிடையாது. லைட்டை அணைத்துவிட்டு சீனுக்கு சீன் நடுவில் இவர்கள் இருக்கைகளை மாற்றுவதும், அப்படியும் இப்படியும் குறுக்காக ஓடுவதும் கூட தமாஷாக இருந்தது. இவர்கள் அமெச்சூர் ஆர்டிஸ்ட் என்பதைக் காட்டிவிட்டார்கள்”

பெரிய ஆடிட்டோரியமான தும்மலபள்ளி கலாக்‌ஷேத்திரத்தில் ஒரு மெயின் கர்டெய்ன் இன்னமும் கார்பொரேஷன் நிர்வாகத்தார் போடவில்லை என்பது ஒரு புறமிருக்க, பகல் வேளை நாடகம் என்பதால் என்னதான் லைட்டை ஆடிட்டோரியம் முழுதும் ஆஃப் செய்து கதவுகளை எல்லாம் மூடினாலும், மேல்பக்கமாக ஏராளமாக சிறு சிறு (காற்று வருவதற்காக) ஜன்னல்கள் வைக்கப்பட்டு இருந்ததால் உள்ளுக்குள் மட்டுமல்ல, மேடையிலும் நன்றாகவே வெளிச்சம் தெரிந்ததால் எங்களின் சீனுக்கு இடைப்பட்ட இந்தக் கூத்தும் நன்றாகவே அவர் கண்ணில் பட்டது எங்களின் துரதிருஷ்டம்தான். இவர் எங்கள் நாடகம் பார்க்க வருவார், அதைப் பற்றி எழுதுவார் என முன்பே தெரிந்திருந்தால் எங்கள் ’பசங்க’ளை வைத்து எப்படியாவது வெளியே இழுத்து ரிக்‌ஷாவில் ஏற்றி இவரது ரயில்வே க்வார்ட்டர்ஸ் வீட்டுக்கு அனுப்பியிருப்போம் (இவருக்கு ரயில்வேயில் உத்தியோகம்).

இதை ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால் பின்னாளில் ஒரு மேடைக்கான அலங்காரமே இல்லாமல், ஏன் ஒரு அரங்கமே இல்லாமல், ஷாமியானா துணிகளை வைத்துக் கட்டிய ஒரு பாகத்தில் ஒரு நாடகம் போட்டதை இந்த மனுஷர் (வி.எஸ்.எஸ்) பார்த்திருந்தால் ‘ஆஹா.. நாடகக கலையையே அழித்துவிட்டு நாசமாக்கி விட்டார்கள்’ என்று கூட எழுதியிருக்கலாம்.

1994 ஆம் வருடம் – விசாகப்பட்டினத்தில் தமிழ் கலை மன்றம் புத்துயிர் பெற்று தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர ஒரு வாய்ப்பளிக்கப்பட்ட வருடம். அந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் 14ஆந் தேதி தமிழ்ப் புத்தாண்டு விழாவாகவும் தமிழ் கலை மன்றத்தின் மறு பிறப்பு விழாவாகவும் கொண்டாட தீர்மானித்தபோதுதான் நாடகம் போட்டால் நன்றாக இருக்கும் என்ற நினைப்பு வந்தது. விழாவுக்கு ஒரு வாரம் முன்பு வந்த இந்த எண்ணம் மிகவும் ஸ்ட்ராங்காக எழுந்ததால் உடனடியாக நாடகம் போட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டோம்.

விஜயவாடாவில் நண்பர் பட்டாளம் அதிகம். ஆனால் விசாகப்பட்டினம் புதுசு. அத்தோடு இங்கு எனக்கு மிக நெருங்கிய அளவில் நண்பர்கள் என்ற முறையில் அந்தச் சமயத்தில் மனோகர் உட்பட மூன்று நான்கு பேர்தான் இருந்தனர். இங்கு தமிழ் கலைமன்றம் மறுபடி உருவாக முழுமுதற்காரணம் எம் வழிகாட்டி திரு சம்பத் அவர்கள்தான். நானும் அவரும் விஜயவாடாவிலிருந்தே நண்பர்கள் ஆதலால் விசாகப்பட்டினத்தில் அவ்வப்போது சந்திக்கும்போது விஜயவாடா நினைவுகளை சந்தோஷத்துடன் அலசுவோம். திடீரென ஒரு நாள் சந்திப்பில் ’ஏன் இங்குள்ள தமிழ்ச் சங்கத்தை நாம் கையில் எடுத்து நடத்தக் கூடாது’ என்று கேட்டார். எனக்கும் அது உவப்பாகப் படவே ’ஓ செய்யலாமே’ என்றதோடு மளமளவென வேலையில் இறங்கினோம். தெய்வ அனுக்கிரஹ வேளை போலும்.. தெய்வ சங்கல்ப்பத்தோடு கடகடவென ஒரே எண்ணமுள்ள நல்ல நண்பர்கள் குவிந்தனர். தமிழ் கலைமன்றம் ஒரே மாதத்தில் வலுப்பட்டு எல்லோரும் சேர்ந்து செயல்படுவது என முடிவாகி அதன் படி முதல் திருவிழாவாக தமிழ்ப் புத்தாண்டு விழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த புது முயற்சியில் என்னுடைய நாடகம் நல்வரவாக இருக்க்ப் போகிறதா அல்லது திருஷ்டிப் பரிகாரமாக ஆகப்போகிறதா என்ற கவலை ஏற்பட்டுவிட்டது.

நாடகம் என்றால் நடிக நடிகைகள், விதம் விதமான் செட்டுகள், ம்யூசிக், ஸ்டேஜ் சமாச்சாரங்கள், இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாடகத்துக்கான கதை-வசனம் (அடுப்பு எரிந்தால்தானே ஆக்கிப் போடமுடியும்!) அத்தனையும் ஒரே ஒரு வாரத்திற்குள் செய்ய வேண்டிய கட்டாயம்…

விஜயவாடாவில் இருந்தபோது நான் என் நண்பன் தேவாவுடன் சேர்ந்து எழுதிய நாடகங்கள் ஏற்கனவே இருந்தாலும் அத்தனையும் பதினைந்து வருடப் பழசுகள். அந்த நாடகங்கள் எல்லாம் இரண்டு மணி நேரத்திற்கான முழு நீள நாடகங்கள். தற்போதைய தேவையோ குறுநாடகம் – 45 நிமிடங்கள் மட்டுமே!. ரிகர்சலுக்கான கால அவகாசமோ மிக மிகக் குறைவு. இங்கு இருக்கும் தமிழர்களில் எனக்கும் (ஏதோ), நண்பன் மனோகரனுக்கும் (ஏற்கனவே டெல்லி கணேஷ் ட்ரூப்பில் நடித்தவர்) மட்டுமே நாடகப் பரிச்சயம் இருந்த காலம்.. நடிக்க வரும் மற்றவர்களை நன்றாக பழக்க வேண்டிய சூழ்நிலை. தெரிந்த பெண்கள் அவ்வளவாகக் கிடையாது. ஆனாலும் நாடகம் என்றதும் ஒரு நப்பாசை.. ஏன் போட்டுதான் பார்ப்போமே..

ஆகையினால் கடகடவென ஒரு புது குறுநாடகம் ஒன்று எழுதி கடகடவென ஆட்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை கடகடவென கதாபாத்திரங்களாக ஆக்கி, கடகடவென நாடகத்தைப் போட்டுவிட்டு, நாடகம் முடிந்த கையோடு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கடகடவென வீட்டுக்கு ஓடி விடுவது என்று முடிவெடுத்தேன் (உண்மையில் அப்படியெல்லாம் ஓடுவது முடியாது, காரணம் அடியேன் சங்கத்தின் செயலாளர் கூட).

இப்படித்தான் என் முதல் குறுநாடகம் ‘டாக்டர்..டாக்டர்’ உருவாக ஆரம்பித்தது. நாடகம் எழுதி முடிக்கப்பட்டதும் அடுத்த நாள் நானும் நண்பர் மனோகரனும் தமிழ் கலைமன்றத்தின் பொருளாளரான நண்பர் திரு சிவராமன் அவர்கள் இல்லத்தில் அமர்ந்து கொண்டு யார் யாரை இந்த நாடகத்திற்கு நடிகர்களாக தேர்வு (?) செய்யலாம் என்று டிஸ்கஷன் செய்தோம். அப்போது எதற்காகவோ அங்கு வந்த நண்பர் இளங்கோ (நல்ல களையான முகம், சுறுசுறுப்பு) எங்கள் கண்களில் பட்டார். உடனடியாக அவரையே டாக்டர் வேடத்திற்கு போட்டியில்லாமல் ஒருமனதாக (?) தேர்ந்தெடுத்தோம்.

காமெடி நாடகமென்றாலும் சீரியஸ் நாடகமென்றாலும் ஒரு ஆஸ்பத்திரியும் டாக்டரும் என இருக்கும்போது நர்ஸ் என்கிற பெண்மணி வேஷம் கண்டிப்பாக இருக்கவேண்டும். ஆனால் பெண் கேரக்டருக்கு அந்தக் குறுகிய காலத்தில் எங்கே கிடைப்பார்கள். ஆதலால் நர்ஸ் வேஷம் என்றிருந்ததை ஆண் கம்பவுண்டராக மாற்றி (காமெடியில் பெரும்பங்கு இந்தப் பாத்திரத்தில் உண்டு என்பதால்) மனோகரனை அந்த வேடத்தில் போடுவதும் முடிவாகி விட்டது. கடகடவென நாடகத்தில் பங்கு கொள்ள நண்பர்களும் அவ்வளவாக இல்லை. ஒரு தெலுங்கு நண்பரும் கன்னட நண்பரும் துணை வந்து பாத்திரங்களை நிரப்பினர்.

ஆண்பாத்திரத்துக்கே இவ்வளவு சிரம திசையில் நாங்கள் இருக்கும்போது, பெண் வேடதாரிகள் நாடகத்தில் இல்லை என்பது கூட அப்போதைக்கு சற்று சந்தோஷமாகவே பட்டது…

நாடகக்கதை ரொம்ப சிம்பிள். ரொம்ப புத்திசாலியான டாக்டர் காரெக்டர்தான் – ஆனால் மற்றவர் கண்களுக்கு ஏனோ படு முட்டாளாகத் தெரிபவர்; அவருக்கு எல்லாமே தெரியும்

– ஆனால் ஒன்றுமே செய்யத்தெரியாதவர். ரத்தத்தைப் பார்த்தாலே பயப்படும் இந்த டாக்டர் கொஞ்சம் சீரியஸ் டைப் கூட. அப்படி நினைத்துக் கொண்டு காமடியாகப் பேசுபவர். துரதிருஷ்டக்காரரான இந்த டாக்டரை அதிருஷ்ட தேவதை வீடு தேடி வந்து அழைக்கும்போது, அவருக்குப் பதிலாக கம்பவுண்டர் அதிருஷ்டசாலியாக மாறி விடும் சூழ்நிலை உருவாகி முடிவில் டாக்டர் மனநோய் வாய்ப்படுவதாக நாடகம் முடிகின்றது.

நான்கே நாள் ரிகர்ஸல். ஓரிருவர் தவிர அனைவருமே மேடைக்குப் புதிது. ரிகர்ஸல் நடக்க நடக்க என் கான்பிடன்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து விலகிக் கொண்டே இருந்தது. ஒருவேளை அவசரப்பட்டு விட்டோமோ.. இன்னமும் கால அவகாசம் எடுத்து செய்ய வேண்டிய ஒரு நிகழ்ச்சியை, நன்றாக ஒத்திகை நடத்திப் பார்த்து நடத்த வேண்டிய ஒரு நாடகத்தை ‘எடுத்தோம்-கவிழ்த்தோம்’ பாணியில் செய்து கொண்டிருக்கிறோமோ………’ என்ற பயம் உள்ளூற இருந்தாலும் வெளியே ‘ரொம்ப நல்லாப் பண்றீங்க’ என்று சொல்லி அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டுதான் இருந்தேன்.

திடீரென ஒரு தமிழ் விழா நகரத்தில் நடக்கப் போகிறது என்ற ஆவலிலோ குஷியிலோ விசாகப்பட்டினத்து தமிழ் மக்கள் அனைவரும் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் கூடியிருந்தார்கள். எதிர்பார்த்ததற்கும் மேலாக தமிழ் மக்கள் வந்தார்கள் என்றாலும் கூடவே நம் நாடகமும் வேறு இருக்கிறதே.. நாடகம் மட்டுமே நடத்தினால் பரவாயில்லை. நாடகத்தை விட முக்கிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆந்திரத்து ஆன்மீகப் பெரியவர் ஸ்ரீபாஷ்யம் அப்பளாச்சார்யுலு அவர்களை தமிழ்க் கலை மன்றம் சார்பில் கவுரவப்படுத்தும் விழா, தலைவர்கள் உரை மற்றும் விழாவில் பங்கு கொள்ள வந்த அனைவருக்கும் சுவையான விருந்து ஏற்பாடு. இவையெல்லாம் நாங்களே முன்னிருந்து செய்து கொண்டிருந்தோம். அப்படியே நாடகத்திற்குத் தேவையான சிறிய பலகை மேடை, ஷாமியானா கவரேஜ் ஏற்பாடுகளையும் செய்து கொண்டு அத்தோடு கூடவே மேக்கப் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம். நாடக நடிகர்கள் அனைவரிடமும் ஒரு விதமான டென்ஷன் வேறு. இவை அத்தனையையும் மீறி நாடகம் சிறப்பாகவே நடைபெற்றது.

நாடகத்தில் நடித்த அத்தனை பேருமே – இளங்கோ, மனோகரன், ரவிக்குமார், சிவராமன், வாஸ், தீனதயாள், லொக் லொக் பெண்டாராவ் – வெகு சிறப்பாக செய்து எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தனர். ஏனோதானோ என இருக்கும் என எதிர்பார்த்த எனக்கு பாராட்டுதல்கள் கிடைத்தன. (ஒருவேளை சிவராமனும் இளங்கோவும் ஏற்பாடு செய்திருந்த சுவை மிகுந்த விருந்து சாப்பாட்டினால் நாடகக் குறைகளை மக்கள் அலட்சியப்படுத்தியிருக்கலாம்). இருந்தாலும் ஒரு முழுநீள நாடகம் போட்டாலும் மக்கள் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையை டாக்டர்-டாக்டர் நாடகம் ஏற்படுத்திக் கொடுத்தது. அதுவும் நண்பன் தேவா இல்லாமல் தனியாக செய்கிறேன் என்பதில் முதலில் வெகுவாக தயக்கம் இருந்தது என்னவோ உண்மைதானே.. பின்னர் இதே நாடகத்தை மூன்று முறை வைசாக்லேயே போட்டு தமிழரை அலுப்புத்தட்ட வைத்துவிட்டதோடு, சில வருடங்கள் கழித்து இந்த நாடகத்தையே டெலி சீரியலுக்காக படம் பிடித்ததும் தனிக்கதை.

அதே சமயத்தில் இந்த நாடகத்தைக் காண திரு வி.எஸ்.எஸ் இல்லை என்ற குறையும் வேறு வகையில் தீர்ந்து போனது. அடுத்த நாள் ’தி ஹிண்டு’ பேப்பரில் உற்சாகமான வகையில் விமரிசகர் திரு ராமலிங்க சாஸ்திரி இந்த நாடகத்தைப் பாராட்டி இருந்தார். அவருக்கு நாடகப் பரிச்சயம் மிகவும் அதிகம் உண்டு என்றாலும் அவருக்கு அப்போது சுத்தமாக தமிழ் வராது என்ற ரகசியத்தை மட்டும் இங்கு போட்டு உடைத்து விடுகிறேன்.

(தொடரும்)

 

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “டாக்டர்.. டாக்டர்..!!

  1. சுவையான பதிவு! டாக்டர்களை ரொம்ப கிண்டல் அடிக்கலைன்னு நம்புகிறேன்! :-))

  2. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் அல்லவா…!

    மனதிற்குள் விருப்பம் ஒன்று தோன்றிவிட்டால் அதை நிறைவேற்றுவதற்கான உந்துதலை இயற்கையே அளித்து விடுகிறது போலும்!

    தங்களுடைய அனுபவங்கள் இளைய தலைமுறைக்கு நல்லதொரு ஆக்கச் சக்தியை அளிக்குமென நம்புகிறேன்.

  3. சுவாரசியமான அனுபவங்கள். தொடரட்டும் உங்கள் அனுபவப் பகிர்வு.

  4.    அனுபவங்களை அள்ளி ,தந்தது ,ஏராளம் ,வீட்டை கட்டிப்பார் ,கல்யாணம் பண்ணிப்பார் ,இதையும் ,சேர்த்தல் நன்றாக இருந்திருக்கும் என்பது ,என் எண்ணம் ,நாடகமும் நடத்திப்பார்  ,என்பதே அது ,அவ்வளவு கஷ்டத்தையும்  தங்களுடன் சேர்ந்து பகிர்ந்துகொண்ட அந்த திரு தேவா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் ***தேவா****  

  5. பழைய நினைவுகளை கண்முன் நிறுத்திவிட்டாய் நண்பா. தொடரட்டும்.

  6. இன்னிக்குத் தான் டாக்டரைப் பார்க்க வர முடிஞ்சது.  அப்படின்னா உடம்பு நல்லா இருக்குனு தானே அர்த்தம்! :))))) நல்ல அனுபவங்கள். தொடருங்கள். 

  7. இந்த captch code தொல்லை தாங்கலை. :(((( பலமுறை முயல வேண்டியுள்ளது. பாதுகாப்புக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது எனப் புரிந்தாலும் ஒரே முறையில் பின்னூட்டம் செல்வதில்லை.

Leave a Reply to Geetha Sambasivam

Your email address will not be published. Required fields are marked *