ஏம்பா! குவைத் துபாய்ல தான இருக்குது

6

இரா. சதீஷ் குமார்

உலக வரைபடத்தைச் சற்று சிறிய அளவில் பார்த்தால் கண்ணுக்கே புலப்படாத ஒரு சிறிய நாடு தான் குவைத். மூர்த்தி சிறியது ஆனால் அதன் கீர்த்தி பெரியது என்று சொல்வார்களே அது போல் இந்த நாடுதான் சிறியது ஆனால் இதனுடைய பணமோ உலகின் அதிகபட்ச மதிப்புக் கொண்ட ஒன்று.

வடிவேல் ஒரு திரைப் படத்தில் சொல்வாரே “ஷார்ஜாவா, அபுதாபியா, பஹ்ரைனா ?” என்பது போல் என்னிடமும் ‘ஏம்பா! குவைத்து துபாய்ல தான இருக்குது’ என்று கேட்டது உண்டு. ஏன் நானே வடிவேலின் நகைச்சுவையைப் பார்த்து துபாயில் பேருந்து நிலையம் எல்லாம் இருக்காதோ என்று நினைத்ததுண்டு துபாய்க்குச் செல்லும் வரை. குவைத் அமைந்திருப்பது சவுதிக்கும் ஈராக்கிற்கும் இடையில் மற்றொரு பக்கம் அராபிய வளைகுடா. இந்த வளைகுடாவிற்கு எதிர்ப்புறம் இருப்பது ஈரான்.

முதலில் என்னை இங்கு அனுப்புவதற்காக அலுவலகத்தில் கேட்டவுடன் சற்றுப் பயம் இருந்தது, அப்பொழுது எனக்குத் தெரிந்தவரை யாரும் குவைத்தில் இருப்பதாய்க் கேள்விப் படவில்லை. அது மட்டுமல்ல எங்களுடைய அலுலவலகத்தில் இருந்து பல பேர் இங்கு வந்து சென்றிருந்தாலும், இங்கேயே தங்கியிருந்தவர் யாருமில்லை, முதல் ஆளாகத் தங்க வந்தவன் நான்தான். விக்கியில் பார்த்திருந்தாலும், இங்கு வந்த பின்பு தான் தெரிந்தது அதிக பட்ச வெளிநாட்டவர் மக்கள் தொகையே இந்தியருடையதுதான் என்று! எங்கு சென்றாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி பேசுபவரைக் காணலாம், அப்படியெனில் மலையாளம் இல்லையா என்று கேட்டுவிட வேண்டாம் அவர்கள் இல்லாத அரபு நாடே கிடையாதல்லவா!

எனக்குத் தெரிந்தவரை தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதி சால்மியா, பஹாஹீல், பர்வானியா மற்றும் மங்காப். இந்த இடங்களில் ஏராளமான சிறிய தமிழ் உணவகங்களும் உண்டு. உடுப்பி உணவகம் ஐந்து இடங்களில் இருக்கிறது, ஆனால் இதன் சுவைதான் உடுப்பியா, தமிழா, ஆந்திராவா, கேரளமா என்று இன்னமும் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை! ஆனாலும் சுவையாகத்தான் இருக்கும் (வேறு வழியில்லை.. பாலைவனத்தின் ஒரு சோலை போலல்லவா!). இந்த நாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும், தேன் மதுரத் தமிழோசையையும், சுந்தரத் தெலுங்கையும், நாச்சுழட்டும் மலையாளத்தையும் கேட்க முடியும். அதனால் நாம் இருப்பது ஏதோ ஒரு வேற்றிடம் என்கிற எண்ணம் அவ்வளவாகத் தோன்றாது. திரையரங்குகளில் தமிழ்த் திரைப்படங்களும் திரையிடப்படுவதால், நல்ல பொழுது போக்கும் உண்டு.

“குவைத் என்டர்டைன்மென்ட் நகரம்” என்று பொழுது போக்கிற்காகத் தனி நகரம் ஒன்றை நிர்மாணித்திருக்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.பொழுது போக்கிற்கு மேற்சொன்னதை விட வேறு சில தீவுகளும் இங்கு உண்டு. இதெல்லாமே காசு பார்க்கும் ஒரு உத்திதான். அது மட்டுமின்றி கிராண்ட் மசூதி, விலங்கியல் பூங்கா, லிபரேசன் டவர் (ஈராக்கிடம் இருந்து மீண்டு வந்ததன் நினைவாகக் கட்டியது), குவைத் டவர் போன்ற இடங்களும் இங்கே பிரசித்தி. அதிலும் குவைத் என்றாலே இரண்டு கோபுரங்கள் உள்ள படங்கள் நிறையக் காணலாம். அந்த இரட்டைக் கோபுரங்கள் தான் குவைத் டவர். இந்தக் கோபுரங்களில் உணவகங்களும் உண்டு, இதில் ஒரு பெரிய நீர்த் தேக்கமும் உண்டு.

துபாய் (U.A.E), கத்தார், பஹ்ரைன் போல் அல்லாமல், இந்த நாட்டில் மது தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால் இவை கிடைக்காததும் அல்ல. ஊரை விட்டு வந்து தனியாக இயந்திரத் தனமாய் வெற்று வாழ்க்கை வாழும் மனிதனுக்கு இந்த மது ஒரு தேவையாய் மாறுவதால் தடையையும் மீறி அனைத்தையும் கொண்டு வந்து காசு பார்க்கிறது ஒரு கூட்டம். அவென்யூஸ், 360 டிகிரி என்ற மிகப் பெரிய வணிக வளாகங்கள், திரையரங்குகளுடன் உண்டு. இவை மட்டுமின்றி எல்லா பகுதியிலும் சிறிய சிறிய வணிக வளாகங்களும் உண்டு. இவை எல்லாம் இருந்தாலும், வாரக் கடைசியிலாவது ஒரு நாள் செல்ல வேண்டும் என்றாலே மலைப்பாகத்தான் இருக்கும்.

பொதுவாக எண்ணெய் மற்றும் எரிவாயு அல்லது அது தொடர்பான பணிகளிலேயே ஈடுபட்டுள்ள அனைவருக்கும், வாழ்க்கை ஓட்டம் இங்கு மிகவும் வேகமாகத்தான் இருக்கும். அந்த ஓட்டத்தின் நடுவே நின்று திரும்பிப் பார்ப்பதென்பது அரிதாகத் தான் நிகழும். தாய்நாட்டுக்கு விடுமுறை செல்லும் முன்னர் பெரும்பாலானவர்கள் நிச்சயம் இந்த வணிக வளாகங்களுக்குச் சென்றுதான் உற்றார் உறவினர்களுக்குப் பொருட்கள் வாங்கிச் செல்வர். அதைத் தவிர அன்றாடத் தேவைகளுக்கெல்லாம் அருகில் இருக்கும் சிறிய கடைகள் (பக்காலா என்று உள்ளூர் மொழியில் கூறுவார்) மற்றும் சூப்பர் மார்க்கெட் தான்.

பொதுவாக மத்தியக் கிழக்கு நாடுகளில் வேலை செய்து திரும்பியவர் என்றாலே பெரும் பணக்காரர் என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் அவ்வாறு எல்லோருக்குமே அமைவதில்லை என்பது மிகச் சிலருக்கே தெரியும். வெறும் ஐந்தாயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய்க்குப் பணியில் இருக்கும் தொழிலாளர்கள்தான் அதிகம். இந்தத் தொலைவில் உள்ள நாட்டிற்குச் சொந்த பந்தங்களை எல்லாம் விட்டு வந்து இவ்வளவு சொற்பமான ஊதியத்துக்காக இவ்வளவு சிரமப்பட வேண்டுமா என்று நினைக்கத் தோன்றும்! ஆனால் என்ன செய்வது ஏதோ ஒரு உந்துதலால் இங்கு வரும் பணியாளர்கள் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை முகவர்களிடம் கொடுத்துவிட்டு வந்து அந்தக் கடனை அடைப்பதற்காகவே சிரமப் படுகின்றனர். ஒரு பக்கம் இப்படியென்றால் மறுபக்கம் மாதத்திற்கு ஐந்து முதல் பத்து லகரம் ரூபாய் வரை ஊதியம் பெறும் ஆட்களும் உண்டு. ஆனால் தற்சமயம் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இங்கு வந்து பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருப்பதால், நம்முடைய நாட்டவருக்கு இது வரை கிடைத்து வந்த சலுகைகள் குறைய அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொழுது போக்கு வேண்டாம் ஆனால் அதே சமயம் அதிகக் கட்டுப்பாடுகளும் வேண்டாம், அதிக சேமிப்பில் விரைவில் சம்பாதிக்க வேண்டும் என்றால் குவைத் ஒரு அருமையான நாடு. நமது நாட்டில் இருப்பது போன்றே இங்கும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு ஏற்றாற் போல் நல்ல ஊதியம் கிடைக்கும். அதுவே ஓர் உள்நாட்டு நிறுவனம் எனில், இருபது முதல் முப்பது சதவிகிதம் குறைவாகத்தான் இருக்கும். துபாய் போல் இங்கு வீட்டுக்கும், போக்குவரத்துக்கும் அதிகம் செலவாகாது. உணவுக்கு ஆகும் செலவு கூட இந்தியாவில் ஆவதை விட மிகச் சிறிய அளவே அதிகம். இதனால் தானோ என்னவோ இங்கு ஒரு முறை வருபவர் நாட்டிற்குத் திரும்பிச் செல்வதைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை!

இங்கு இருக்கும் ஒரு குறை, கோடை காலத்தில் 60 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் அதே போல் குளிர் காலத்தில் இந்த வருடம் -1 டிகிரி செல்சியஸ் வரை சென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இயற்கை அல்லவா, நம்மால் ஒன்றும் செய்ய இயலாது, நம்மைக் காத்துக் கொள்ளக் குளிரூட்டும் சாதனங்கள் மற்றும் வெப்பமூட்டும் சாதனங்களை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். அதே போல் கோடையில் வீசும் மணற்காற்று கொடூரமானது, கண், காது, மூக்கு, வாய் என்று சகல துவாரங்களிலும் சென்று அடைத்துக் கொள்ளும். இதனாலே பல பேருக்கு ஒவ்வாமை வந்து அவதிப்படுவது உண்டு. கோடை காலத்தில் வெளியே பயணிப்பதென்றால், வானிலை அறிக்கையைப் படித்துச் செல்வது சாலச் சிறந்தது. இல்லையேல் இப்படி ஒரு மணற்காற்றில் மாட்டினால் அதோ கதிதான்.

ஈராக்கிடம் இருந்து மீண்ட ‘லிபரேசன் டே கொண்டாட்டம்’ மிகவும் சிறப்புதான். ஆனால் அதில் மாட்டினால் அவ்வளவுதான், நுரையும், வண்ணங்களும், காகிதக் குப்பைகளும் உங்களின் மீது அடிக்கப்படும். யாரையும் கேள்வி கேட்க முடியாது, இதில் இருந்து தப்பிப்பது அவரவர் சாமர்த்தியம்.

சில விஷயங்களைப் பொறுத்த வரை நம் நாடே பரவாயில்லை என்று தான் தோன்றும். திருட்டுப் பயம் மிகவும் அதிகம், அதிக ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் கவனம் தேவை. இவ்வளவு ஏன்? ஒரு முறை எங்களது வாகனத்தின் கதவை உடைத்து உள்ளிருந்தவற்றை எடுத்துச் சென்ற நிகழ்வு, நண்பர் ஒருவரின் பணமும் அவரது பிலாக்பெர்ரியும் அடித்துப் பிடுங்கிய நிகழ்வும் எங்களை அதிர வைத்தது! லஞ்சம் ஒரு பெரிய விஷயமே இல்லை. போக்குவரத்து விதிகள் என்றால் என்ன என்று உள்நாட்டவருக்குத் தெரியாது. இதனாலேயே உலகில் அதிக விபத்துச் சாவுகள் அதிகம் உள்ள நாடுகளில் குவைத் முதன்மையாக இருக்கிறது . ஈராக் போரின் பொழுது துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவந்ததாகச் சொல்லும் சில பேர் மீண்டும் இங்கு வந்து பணி புரிகின்றனர். அமெரிக்க நாட்டின் படைத்தளம் உள்ள இந்த நாட்டில் மீண்டும் ஒரு போர் அருகாமையில் எங்கேனும் வந்தால் என்ன ஆகும்! கடவுளுக்கே வெளிச்சம்!!!

 

குவைத் படத்திற்கு நன்றி: http://www.lonelyplanet.com/maps/middle-east/kuwait

குவைத் இரட்டைக் கோபுரங்கள் படத்திற்கு நன்றி:http://www.touristspots.org/kuwait-towers-kuwait

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “ஏம்பா! குவைத் துபாய்ல தான இருக்குது

  1. அழகாகவும் அளவாகவும் எழுதிவுள்ளீர்கள். தங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்.

  2. கட்டுரை அருமை இவருடைய முகநூல் லிங்க் வேணும் அல்லது வலைதள முகவரி தேவை 

  3. அருமையான கட்டுரை… வாழ்த்துகள்…!!! ஒரு வேண்டுகோள்… தன தாய் நாட்டையும் குடும்பத்தையும் விட்டுவிட்டு இங்கு வேலை செய்யும் நம் மக்களை பற்றி ஒரு கட்டரை எழுதலாமே…!

  4. தங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி திரு. சுந்தர், திரு. புஷ்கரன்

    @kader நன்றி, எனது பெயருக்கு அருகிலேயே தொடர்புக்கான லிங்குகள் உள்ளன.

    @சத்தியராஜ் நன்றி, நிச்சயம் முயற்சி செய்கிறேன்.

  5. You have dwelled only on the positives. I fully agree on what you have written in your column. Very cultured of you to have shied away from all the neagtives of Kuwait. Liquor, Prostitution , Rash driving and Corruption are rampant in Kuwait. The stringent laws of the land does not apply to Kuwaitis. Employees are paid based on their Natianality and passports and not on the skillsets. Kuwaiti Kids and ladies are generally arrogant and are a spoilt lot – Not all but most of them are. Indians are always looked down upon in this part of the world and can never gain a status at par with the westerners or the GCC Arabs irrespective of their acheivements, skillsets and Hardwork. You can very well see the bias starts in the immigration counter in the Kuwait Airport where the Westerners / Gorras are called in a seperate Que along with the GCC citizens for their clearance.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *