உழைக்கப் பிறந்தவர்களா குழந்தைகள்?

7

ராமலக்ஷ்மி

இந்த உலகத்தில் உண்மையான அமைதி நிலவ வேண்டுமானால் அதைக் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும்’ என்றார் தேசப் பிதா. அவர் சொல்லிச் சென்ற எதைக் கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறோம் இதை மட்டும் விட்டு விட்டதாக வருத்தப்பட?

எந்த சிசுவும் தன் பிள்ளைப் பிராயத்தில் உழைப்பதற்காக இப்பூமியில் ஜனிக்கவில்லை. விடைதெரியாத காலக் கணக்குகளால் துளிர்விடும் மொட்டுகளில் பல, மலர வகையின்றிக் குடும்பமாகிய தாய்ச் செடிகளின், சமூகமாகிய மரங்களின் பாதுகாப்பை இழந்து உதிர்ந்து மிதிபட்டுக் கொண்டேயிருக்கின்றன.

தங்களுக்கான உரிமை எதுவென்றே புரிந்த கொள்ள இயலாத வயதில் வறுமையால் பெற்றோராலோ, வஞ்சனையால் திருட்டுக் கும்பலாலோ பிச்சை எடுக்கவும் உழைக்கவும் நிர்ப்பந்திக்கப்படும் குழந்தைகள் நாட்டில் எத்தனை கோடியோ? கல்வி, பாதுகாப்பு எல்லாமே மறுக்கப்பட்டு சின்ன வயதிலேயே உலகின் மோசமான பக்கங்களைப் பார்க்க நேரும் பிஞ்சுகளின் மனது கடினப்பட்டுப் போவதும், சரி தவறுகளைப் பாகுபடுத்திப் பார்க்கும் வாய்ப்புகளின்றி பின்னாளில் குற்றவாளிகளாக உருவெடுக்க நேருவதும், தங்கள் மனதில் ஏற்படுத்திக் கொள்ளும் நியாயங்களிலிருந்து விடுபட முடியாமல் சமூகத்திடமிருந்து அந்நியப்பட்டுப் போவதும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இவற்றை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் முழுமையான அக்கறை காட்டுகின்றனவா எனும் கேள்விக்கு எதிர்மறை பதிலையே எங்கெங்கும் கண்டு வருகிறோம் குழந்தைத் தொழிலாளர்களாக, குப்பை பொறுக்கும் சிறுவர்களாக, சிக்னல்களில் ரயில்வே பேருந்து நிலையங்களில் கையேந்தும் பிஞ்சுகளாக.

சென்ற மாதம் லால்பாக் மலர் கண்காட்சிக்குச் சென்றிருந்தபோது வழக்கத்துக்கு மாறாகப் பத்து பதினைந்து சிறுவர் சிறுமியர், சில பதின்ம வயது பெண்கள் பலூன்கள் விற்றுக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. வறுமையின் வாட்டம் உடைகளில் தெரிந்தது. இவர்கள் பெற்றோருடனேதான் வசிக்கிறார்களா? அல்லது வேற்றாட்களால் கடத்தப்பட்டு உழைக்க நிர்ப்பந்தப் பட்டவர்களா தெரியவில்லை. புகைப்படங்களுக்கு விரும்பி போஸ் கொடுக்கிறவர்கள் ஏதேனும் கேட்க முயன்றால் விலகி ஓட்டமெடுக்கிறார்கள்.

பால்வடியும் அழகான முகத்துடனான இச்சிறுமியையும், கள்ளமற்ற சிரிப்புடனான பாலகனையும் காணுகையில் மனதினுள் சங்கடமாக இருந்து வந்த வேளையில், சமீபத்தில் தெருக்குழந்தைகள் மீட்பு பற்றிய சில பத்திரிகைச் செய்திகள் ஆறுதல் தருவனவாகவும், ஆனால் எந்த மாதிரியான சூழலிலிருந்து அவர்கள் மீட்கப்பட்டார்கள் என்பது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாகவும் இருந்தன.

ஆறு மாதங்களுக்கு முன் பெங்களூர் போலீஸ் துணை கமிஷனர் பிரணாப் மொகண்டிக்கு உதித்த சிந்தனையில் உருவானதே ‘ஆபரேஷன் ரக்‌ஷனே’. இதன்படி நகர போலீஸ் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு தெருக் குழந்தைகளை மீட்டெடுத்து புனர்வாழ்வு அளிக்கக் கிளம்பினார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

2011 டிசம்பர் முதல் வாரத்தில் மீட்கப்பட்ட சுமார் 300 குழந்தைகளில் 6 குழந்தைகள் குடும்பத்தோடு சேர்க்கப்பட்டு அவர்களின் சொந்தக் கிராமம் இருக்கும் சண்டிகருக்கு அம்மாநில அரசின் பாதுகாப்போடு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சில குழந்தைகளின் சொந்த மாநிலங்கள் தெரியவந்து தொடர்பு கொண்டதில் பதிலே இல்லையாம். சண்டிகர் மாநில அரசு மட்டுமே ஒத்துழைத்திருக்கிறது.

கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களின் பெற்றோர் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு உண்மையில் பெற்றோர்தானா என உறுதிசெய்யப்பட்ட பிறகு ஒப்படைக்கப் பட்டுள்ளார்கள். எலஹங்கா சிக்னலில் மீட்கப்பட்ட அனிதா, லக்ஷ்மி ஆகியோரில் குழந்தைகளின் பெற்றோர் எச்சரிக்கப்பட்டு, பள்ளிகளில் சேர்த்து விடப்பட்டிருக்கின்றனர். அனிதா ஆவலுடன் படிக்க, சூழலுக்கு பொருந்த இயலாமலோ அல்லது குடும்பத்தினரின் வற்புறுத்தலாலோ தன் தந்தையோடு மறுபடியும் லக்ஷ்மி குப்பை பொறுக்கச் சென்று விட்டிருப்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறது தன்னார்வ நிறுவனம்.

பெற்றோர் எங்கென அறிய முடியாத சிறுவர்கள் தொண்டு நிறுவனங்களின் பொறுப்பில் பரவலாக 25 காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டு, ஒன்பது பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களின் நலனைத் தொடர்ந்து தன்னார்வ நிறுவனங்கள் கண்காணிப்பில் வைத்திருக்கும்.

தன்னை விடவும் ஐந்து வயது குறைந்த குழந்தைகளுடன் சந்தோஷமாகக் கல்வி கற்க ஆரம்பித்திருக்கும் சிறுமி சப்னாவின் கடந்த காலம் வலிகள் நிறைந்தது. இவளை தன் கஸ்டடியில் வைத்திருந்தவர் உண்மையில் உறவினரே அல்ல. அதிகாலை 3 மணிக்கு இவளை எழுப்பி விடுவார். எலஹங்காவிலிருந்து கிளம்பி சிட்டி ரயில்வே ஸ்டேஷன் சென்று கையேந்தி 200 ரூபாய் தினசரி கொண்டு வந்தே ஆகவேண்டும். அதற்கும் மேல் கிடைக்கிற சொற்பத்தில்தான் தன் வயிற்றைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு மாதங்களாக செயிண்ட் சார்ல்ஸ் பள்ளியில் தன் புது ஜென்மத்தில் மகிழ்ந்து போய் ஆர்வமாகப் படித்துக் கொண்டிருக்கிறாள், ஆரம்பத்தில் டாக்டர் ஆகவேண்டுமெனச் சொன்னவள் இப்போது ‘ஆசிரியர் ஆவேன்’ என்று சொல்லியபடி.

சப்னாவை பிடித்து வைத்திருந்தது ஒரு தனிமனிதர், அவள் செலுத்த வேண்டியிருந்த தினசரி கப்பம் ரூ 200 என்றால், நூற்றுக்கணக்கான சிறுவர்களைத் தங்கள் பிடிக்குள் வைத்துக் கொண்டு அவர்களுக்கு ரூ 20ல் கிடைக்கிற மட்டமான சரக்கு மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாக்கி, தினசரி ரூ 400 கொண்டுவந்தால் மட்டுமே இரவு போதைப் பொருட்கள் கிடைக்கும் எனும் சூழலுக்குத் தள்ளி விட்டுருந்த கயவர் கும்பல்களை என்னவென்று சொல்ல. வெறிபிடித்தாற்போல அன்றைய சம்பாத்தியத்தை ஈட்ட சிக்னல்களில் அலைந்திருக்கிறார்கள் இச்சிறுவர்கள். சாந்திநகரில் சுற்றித் திரிந்த பத்து வயது பாலகன் மஞ்சுநாத்தின் “வேலை” நேரம் காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணி வரை. இரவில் குழுத்தலைவனின் மரப்பெட்டியில் நானூறை வைக்காத சிறுவர்கள் பட்டினி போடப்படுவது வாடிக்கையாம். அதே கும்பலில் மாட்டியிருந்த இன்னொரு சிறுவன் கிரிஷா இதனாலேயே தாங்கள் விடாமல் பொதுஜனங்கள் பின்னாலேயே சென்று நச்சரிப்பதாகச் சொல்லியிருக்கிறான்.

கொள்ளை அடிப்பவர்களைப் போட்டுத் தள்ளுவது சரியா எனும் வேளச்சேரி என்கவுண்டர் குறித்தத் தன் பகிர்வில், முதலில் போட்டுத் தள்ளப்பட வேண்டியவர்கள் பிள்ளைகளைப் கடத்துகிற கும்பல் தலைவர்களையே எனக் கொதித்திருந்தார் பதிவரும் வக்கீலுமான மோகன் குமார். தண்டனைகள் கடுமையாக்கப்படாத வரையில் இவை தொடரவே செய்யும் என்பதும் கண்கூடாகத் தெரிகிறது. இன்னும் 158 பகுதிகளில் ஆயிரம் சிறுவர்களாவது மீட்கப்பட வேண்டியிருப்பதாக கர்நாடகப் போலிசுக்கு ஆய்வு அறிக்கை கிடைத்திருக்க, முற்றிலும் களைந்து விட்டதாக நினைத்த சிக்னல்களில் மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் புதிது புதிதாய் குழந்தைகள் களம் இறக்கப்படுவது கண்டு தாங்கள் அரண்டு போயிருப்பதாகப் போலீஸே சொல்கிறது. சமூகத்தால் தங்களது எந்த வேதனைகளும் துடைக்கப்படாமலே வளரும் குழந்தைகள் நாளை அதே சமூகத்தை வஞ்சிக்கப் புறப்படுவது காலகாலமாக நடக்க, இப்போது இவர்களை ஆட்டுவிக்கும் முரடர்களின் சிறுவயதுப் பிராயம் குறித்த கேள்விகளும் எழுகின்றன.

கையேந்தும் சிறார்கள், குழந்தைத் தொழிலாளர்களாக அவதிப்படும் பேப்பர் போடும் பையன்கள், கடைகளில் ஓட்டல்களில் எடுபிடியாக இருப்பவர்கள், பத்துப் பனிரெண்டு வயதில் கைக்குழந்தைகளைக் கவனிக்கவும் வீட்டு வேலை செய்யவும் வந்து விட்ட சிறுமிகள் என ஆயிரக் கணக்கில், இலட்சக் கணக்கில் உள்ளனரே. அரசும் பொதுமக்களும் இணைந்து அக்கறை காட்டினால் மட்டுமே இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு பிறக்கும். காந்திஜி சொன்னது போல் உலக அமைதி இவர்களின் வாழ்வு சீராகும் புள்ளியில் இருந்து மட்டுமே உதிக்க முடியும்.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “உழைக்கப் பிறந்தவர்களா குழந்தைகள்?

  1. புரிகிறது. வலிக்கிறது. கட்டுரையை பலமுறை படித்தேன், ஏற்கனவே இந்த கொடூர விஷயத்தை பற்றி ஆய்வு செய்தவன் எந்த வகையில். இது எளிதில் தீரும் பிரச்னை அல்ல. குற்றவாளிகள் பெற்றோர், சமூகம், அரசு. பெங்களூர் போலீஸ் துணை கமிஷனர் பிரணாப் மொகண்டிக்கு உதித்த சிந்தனையில் உருவான ‘ஆபரேஷன் ரக்‌ஷனே’ யை வரவேற்றாலும் எனக்கும் இந்த உத்திகள் மீது நம்பிக்கை குறைவு. சப்னாவை அடிமைபடுத்தி வைத்திருந்தவனுக்கு ஏன் கடும்தண்டனை கொடுக்க முடியவில்லை? சிறார்களை, பொறுப்பில்லாமல் பெற்று விட்டு, வறுமையை நொண்டிச்சாக்காகச் சொல்லும் பெற்றோர்கள், வேலை வாங்கும் கயவர்கள், சட்டத்தை ஒதுக்கும் போலீஸ், கயவனின் எஜமானன் அரசியலர் எல்லார் மீது எனக்கு கிஞ்சித்தும் இரக்கம் கிடையாது. கட்டுரை ஆசிரியரை WEINER, Myron : Child labour in India.(Massachusetts Institute of Technology, New York 1998) என்ற நூலை படித்து விட்டு ஒரு தொடர் கட்டுரை எழதவேண்டும் என்ரு கேட்டுக்கொள்கிறேன்.இன்னம்பூரான்26 02 2012   

  2. இப்பிரச்சினையின் கருவே பொறுப்பில்லாமல்  பெற்றுப் போடும்  பெற்றோர்கள் என்பதுதான் – பின்னவையாவும் இக்கருவின் தொடர் வளர்ச்சி –
    சங்கிலியாய் பலவித சமூகப் பிணிகளின் பின்னூட்டமாய் – பல சமூகக் குற்றங்களின் காரணியாய் அமைவதும் குழந்தைகள் முறையற்று நடத்தப்படும் அவலம் மட்டுமே! 
    மிகச் சிறப்பான கட்டுரை – இன்னமும் இதனை விலாவாரியாக – உள்ளீடாகச் சென்று அலசுவதும் – உண்மையை அப்பட்டமாக வெளியிடவேண்டுவதும் – இன்றியமையாதன. 

  3. திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது….

  4. @ திரு. இன்னம்பூரான் அவர்கள்,

    // ‘ஆபரேஷன் ரக்‌ஷனே’ யை வரவேற்றாலும் எனக்கும் இந்த உத்திகள் மீது நம்பிக்கை குறைவு. சப்னாவை அடிமைபடுத்தி வைத்திருந்தவனுக்கு ஏன் கடும்தண்டனை கொடுக்க முடியவில்லை?//
    இந்த முயற்சிகள் தொடர்ந்து நீடிக்குமா எனப் பல கேள்விகள் எழுந்தாலும் தன்னார்வ நிறுவனங்களின் ஒத்தழைப்பு ஆறுதல் தருவதாக, இவை தொடர வேண்டும் என்பது பிரார்த்தனையாக இருக்கிறது. சப்னாவைப் பிடித்து வைத்தவனுக்குத் தண்டனை கொடுத்தார்களா இல்லையா என்பது குறித்தும் போதைக்குக் குழந்தைகளை அடிமையாக்கி வைத்திருந்த முரடர்களுக்கு என்ன தண்டனை தரப்பட்டது என்பது குறித்தும் எந்த செய்தியிலும் விவரம் தரப்படவில்லை. 
    தெளிவு வேண்டி, நண்பர் மோகன் குமாரைக் கேட்ட போது,
    “இந்தியன் பீனல் கோட் செக்‌ஷன் 364A of IPC [http://www.vakilno1.com/bareacts/indianpenalcode/S364A.htm ]-ன் படி குழந்தைக் கடத்தலுக்கு “அதிக பட்ச” தண்டனையாக ஆயுள் தண்டனை அல்லது மரணத் தண்டனை என சொல்லப்பட்டிருக்கிறது.
    இதில் “upto-அதிக பட்ச” என்பதில்தான் சிக்கல் ஆரம்பமாகிறது. அதிகாரம் இருந்தாலும் நீதிமன்றம்/ சட்டம்/ போலீஸ் இவை பெரும்பாலும் கொடும் குற்றமாகக் கருதி அதிக பட்சத் தண்டனையை வழங்குவதில்லை என்பதே நிதர்சனம்” என்றார்.
    // கட்டுரை ஆசிரியரை WEINER, Myron : Child labour in India.(Massachusetts Institute of Technology, New York 1998) என்ற நூலை படித்து விட்டு ஒரு தொடர் கட்டுரை எழதவேண்டும் என்Ru கேட்டுக்கொள்கிறேன்.//
    முயன்றிடுகிறேன். கருத்துக்கு நன்றி சார்.

  5. இப்பிரச்சினையின் கருவே

    1.பெற்றுப் போடும் பெற்றோர்கள்..!
    2.வறுமையை சாக்காகச் சொல்லும் பெற்றோர்கள்.
    3.குழந்தைக் கடத்தலுக்கு “அதிக பட்ச” தண்டனையாக ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை எனச் சொல்லப்பட்டிருக்கிற தண்டனையை வழங்குவதில்லை .
    4.அரசும் பொதுமக்களும் இணைந்து அக்கறை காட்டினால் மட்டுமே இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு பிறக்கும்.

Leave a Reply to ராமலக்ஷ்மி

Your email address will not be published. Required fields are marked *