செண்பக ஜெகதீசன்

 

பார்வைக்கு வருமுன்னே,

பப்பாளிப் பழத்துக்கும்

பலவிதமாய் மாத்திரைக்கும்

கள்ளிப் பாலுக்கும்

கவள நெல்லுக்கும்

தப்பிப் பிழைத்து

தரைக்கு வந்தது

தனிக்கதை…

 

பால வயதினிலே,

படிக்க வைக்க மனமின்றி

பள்ளிக்கு அனுப்பியதும்,

கொள்ளிக்குப் பிள்ளை முன்னே

குறைபட்டு நின்றதும்

குற்றேவல் செய்ததெல்லாம்

வளர்ந்த கதை…

 

வேலைத் தலங்களிலே

வேறுபட்ட பார்வைகளில்

வேதனையில் வீழ்ந்ததுவும்,

காதலெனும் மாயவலையில்

கால்மாட்டி நின்றதுவும்,

மணமேடையை மறைத்திடும்

வரதட்சணை வேலி கண்டு

வெந்து வாடியதும்,

கறுப்பு சிவப்பு

குட்டை நெட்டையெனக்

கழற்றி விட்டதுவும்,

காத்திருந்து காத்திருந்து

முற்றத்து முருங்கையென

முற்றி நின்றதுவும்..

பல இவைபோல்

பருவம் கண்டகதை…

 

மணமேடை மிதித்தவுடன்

மாறாட்டங்கள்..

இல்லறத்தில் இல்லாத

இடர்ப்பாடுகள்..

நேற்றைய மணமகள்களின்

நாட்டாமைகள்-

வெடிக்கும் ஸ்டவ்வாய்

வேறு பலவாய்..

பல்கலைக் கழகங்கள்

பார்த்திராத பட்டங்கள்..

பிள்ளைகள் பெற்றுப்

பெரிதாய் வளர்த்திடும்

பாதையில் சோதனைகள்

கதைகதையாய்…

 

வயது முதிர்ந்தபின்

வந்திடும் வேதனையில்

முதியோர் இல்லங்களும்

முகம்சுழிக்கும்

மௌனகதை…

 

ஆனாலும்,

அடிப்படையில் உயர்ந்த கதை-

அகம்நிறைந்த தாய்மை,

அன்பின் பேரூற்று..

அதுமட்டும் அடைபடுவதில்லை

அழிவதுமில்லை…!

 

படத்திற்கு நன்றி:http://www.scenicreflections.com/download/242432/Native_Woman_Painting_Wallpaper

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அழிவில்லாதது

  1. உமது கவிவரிகளை ரசித்தேன் – 
    தாய்மை எனும் உணர்வு – ஒரு பொறுப்புணர்வு  
    இது ஒவ்வொரு  பெண்ணினுள்ளும் எந்நேரமும் ஊறும் என்கிற 
    சிந்தனை இங்கே வெளிப்படுகிறது – அறிவியல் காட்டும் உண்மையும் இதுவே.
    தாய்மை உணர்வு கொள்ள அவள் தாயாக வேண்டும் என்கிற தேவையில்லை.
     
    தாய்மை எனும் இந்த  பொறுப்புணர்வு  கொண்டு மட்டுமே அவள் எல்லாப் பருவங்களிலும் ஜீவிக்கிறாள் – இந்த உணர்வு அவளுள் ஊற ஊற அவள் வாழ்க்கையெனும் காட்டாற்றை எதிர் கொள்கிறாள் – எதிர்நீச்சல் போட்டுக் கடக்கிறாள் – 
    தன்னை பலவீனம் பற்றும் பல தருணங்களிலும் கூட – அவளே அவளுக்கு தேற்றுதல் தந்து – சுற்றிலுமுள்ள உதாரரணங்கள் அறிந்து – சுயமாய் – சக்தியைத் தானே திரட்டிக் கொள்கிறாள் – 
    இந்தத் தொடர் இயக்கத்தில் அவள் காட்டும் – தத்துவமும் – வாழ்க்கைப் பாடமும்! இலக்கியங்கள் இதுகாறும் சொல்ல முயன்று தோற்றுப் போயின! 
    சிம்ம வாகனமும் – சூலமும் வாளும் – காட்டும் குறிகளில் ஆயிரம் இலக்கணம்!!

    – இல்லமும் – சமுதாயமும் – தானும் என மும்முனைத்தாக்கத்தில் – நியூட்டனின் மூன்றாம் விதியை நிரூபித்தபடி -இது பெண்ணின் இயக்கம் – இது பெண்களின் தனிப்பட்ட பாடு!! 

    தாய்மைப் பெண்ணின் – மாறா இயக்கிவிதி இது – எதிர் நீச்சல்

     

    எங்கும் எதிலும் எதிர் நீச்சல்

    விந்துப்பசையில் கோடிப்பேரை முந்திப்பாய்ந்தேன் முதல் எதிர் நீச்சல்
    சந்துத்தசைக்குள் அண்டம்சினைபட நீந்திச்சேர்ந்தேன் மறுஎதிர் நீச்சல்
    எந்தையும் நன்றெனன் எந்தாயும் முயன்றனள் நஞ்சுக்கலவையில் நான் எதிர் நீச்சல்
    நிந்தைமழையில் ஒன்பதுத்திங்களும் நான் போட்டேன் கடுமெதிர் நீச்சல்
    பந்தய நாளும்வந்தது பனிக்குடம் பிளந்தது உதிரஓடையில் என் உக்கிர நீச்சல்
    அந்தயக்கதவைத்திறந்து வெளியில் குதிக்க நான் போட்டேன் பராக்கிரம நீச்சல்
    முந்தை நீச்சல் முடியா நிலையினில் பிந்தைவீச்சிலும் தொடர் எதிர் நீச்சல்
    கந்தைப் போர்வையில் மோவாய் நீச்சல், மார்பால் நீச்சல், முட்டி நீச்சல், முழங்கால் நீச்சல் தொடர்
    உந்து நீச்சலில் நான்போட்டது தரையில் நீச்சல், தடுக்கில் நீச்சல், மடியில் நீச்சல், மலத்தில் நீச்சல்
    சொந்தக்காலில் இடன்றவாகினில் கபடி நீச்சல், கரடி நீச்சல், வானர நீச்சல் -வலியோர்
    ஆந்தைப் பார்வையில் நடுங்கிவீழ்ந்து நான் விரைந்தது நாட்டிய நீச்சல் – வாழ்க்கைச்
    சந்தைவீதியில் சரிந்தவாகினில் நான் போட்டேன் பராசுரநீச்சல் உளச்
    சிந்தை நிலையில் ஒவ்வொரு கணமும் நான் போட்டது அமில நீச்சல்
    சொந்தமும் பந்தமும் முன்னித்தள்ள நான் பிழைத்தேன் முழு எதிர் நீச்சல்
    வந்ததும் வாய்த்ததும் பின்னித்தள்ள நான் ஏறினேன் உரிமர நீச்சல்
    வெந்த மனதிலும் நொந்த உடலிலும் சொந்தமென்றானது எதிர்நீச்சல் ஒன்றே 
    அந்தமா ஆதியா என்பதில்லாமல் எடுப்பவையாவிலும் எதிர்த்தே நீச்சல் 
    எந்த வழியிலும் எந்த வகையிலும் எந்தன் இயக்கம் எதிர் நீச்சலென்றானதால்
    இந்த நீச்சலா அந்த நீச்சலா எது பெரிதென்பதாய் என் நித்தியப் பாய்ச்சல் 
    இந்த நீச்சலில் நானே மட்டுமா எனத்திரும்பிப்பார்த்தேன் கண்ணின் வீச்சில்
    அந்த வானிலும் மண்ணிலும் கண்டேன் கடும் எதிர் நீச்சல் காட்சிகள்!
    காந்தப்புலமிடை நீச்சல் மறந்தால் விண்ணில் கோள்கள் இயங்கிட முடியுமா?
    கந்தப்புகையிடை அக்கினி நீச்சல் மறந்தால் எரிமலையிருப்பது தெரியுமா? 
    மந்தாரைகள் காற்றில் நீச்சல் மறந்தால் மகரந்தம் பரவிட முடியுமா?
    செந்நாரைகள் விண்ணில் நீச்சல் மறந்தால் வலசை போகிடலாகுமா? இயற்கை
    ஏந்திடும் தெய்வம் காட்டும் குறிகளில் நீச்சலும் பாய்ச்சலும் வெற்றியின் இலக்கணம்
    காந்திடும் உள்ளம் தண்குளிர்வைக்க்காண்பது எதிர் நீச்சலின் மாபெரும் இரகசியம்   
    எந்தத்துறையிலும் சாதனை இருக்கை நேரெதிர்க்கரையின் வழுக்குப்பாறை
    அந்தத்துறையில் ஏறி வழுக்கை வழுக்கி ஓடிடச்செய்தல் சரித்திர முத்திரை 
    இந்த வாழ்வில், சோதனையாவையும் துகளாய் மாற்றிடும் நம் எதிர் நீச்சல்
    மந்த மனதையும் மட்டிலா ஆற்றல் பெய்தாட்டிடும் மகத்துவம் வாய்ந்தது நம் எதிர் நீச்சல்
    விந்தையல்ல வாழ்க்கையின்  உண்மை எதிர் நீச்சலே என்பது வாழ்ந்தவர் சான்று; ஞான
    வேந்தராய், நாம் மாற்றம் பெற்றோங்கிட எதிரிடை நீச்சல் ஒன்றே ஊன்றுகோலாகும்!

    அவ்வைமகள்

  2. இரு சுவையும், சிந்தனையும் மிகுந்த கவிதைகள். ‘பெண்ணாய் பிறந்திருக்கலாகாதா?’ என்ற ஆதங்கம் எனக்கு உண்டு, ஆனால், ஆணாய் பிறந்து, பெண்ணின் பெயரை  அணியாக அமைத்துக்கொண்ட திரு.ஜெகதீசப் பெருமாள் ஒரு பெண்ணின் வலியை புரிந்து கொண்டு, எல்லை மீறாமல், மென்மையான கவிதை படைத்துள்ளார். பாராட்டுக்கள். முனைவர் ஒவ்வைமகளின் நீண்ட பின்னூட்டத்தில், ஒரு சொல் வீணில்லை. ‘தாய்மை உணர்வு கொள்ள அவள் தாயாக வேண்டும் என்கிற தேவையில்லை.’ என்பதும் உண்மை. ‘..நாம் மாற்றம் பெற்றோங்கிட எதிரிடை நீச்சல் ஒன்றே ஊன்றுகோலாகும்!’ என்பதும் ஒரு ‘பளிச்’ உண்மை. இதை விரிவுபடுத்தி, உணர்வுகளை உள்ளடக்கி, வாழ்வியலின் நுட்பங்களை, தாய்மையும், மற்ற நெறிகளும் சம்பந்தமாக, ஒரு வியாசம் வரைக என்று அவரை கேட்டுக்கொள்கிறேன்.

  3. அவ்வைமகள் அவர்களின்
    கவித்துவத் திறனாய்வுக்கும்
    பாராட்டுக்கும் 
    நன்றிகள் பல..
    பராட்டுகளில் பாதி,
    ஆசிரியர்
    பவளசங்கரியைத்தான் சேரும்-
    அவர்களின் ‘பெண்ணாலம்’
    என்னுள் ஏற்படுத்திய
    மின்பொறிதான் இக்கவிதை..

    தாய்மை-
    பெண்ணின் இயக்கிவிதியாம்
    எதிர்நீச்சலை,
    விந்துவில் தொடங்கி
    விதம்விதமாய்க் காட்டியது
    பிரமிப்புமிக்கது..

    இக்கவிதைக்கு 
    இன்னொரு முடிவு-
    தங்கள்கருத்துக்கு ஏற்றதாய்…

    ஆனாலும்,
    கதை இதுதான்
    அடிப்படையில் அற்புதம்,
    அன்புகாட்டும் அதிசயம்,
    தாய்மையெனும் தத்துவம்..
    தாயவள்தான் தோற்றாலும்
    தாய்மை என்றும்
    தோற்பதில்லை…!
                   நன்றி…!
             -செண்பக ஜெகதீசன்… 

  4. வல்லமையின்
    வல்லமைமிக்க ஆலோசகர்,
    இன்னம்பூரான் அவர்களின
    அனுபவபூர்வ வாழ்த்துரைக்கு
    ஆயிரமாய் நன்றி…!
                   -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *